தற்போதைய பொருளாதார பிரச்சினைகள் குறித்த பிரதமர் மஹிந்த ராஜபக் தலைமையில் கலந்துரையாடல்
தற்போதைய பொருளதார பிரச்சினைகள் தொடர்பான கலந்துரையாடலொன்று பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அவர்களின் தலைமையில் 30.03.2022 அன்று அலரி மாளிகையில் நடைபெற்றது.
மக்களின் இயல்பு வாழ்க்கையை மீட்டெடுக்கவும் நீண்ட கால பொருளாதார மறுமலர்ச்சியை ஏற்படுத்தவும் பொருளாதார மறுமலர்ச்சிக்குத் தேவையான நடவடிக்கைகளை அடையாளம் கண்டு பொருளாதாரத் துறையில் நிபுணர்களின் பங்களிப்புடன் ஒரு அறிவார்ந்த ஏற்பாடுகளை மேற்கொள்வதே இதன் நோக்கமாகும்.
இதன்போது கருத்து தெரிவித்த நிதிக் கொள்கை திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் கலாநிதி கபில சேனாநாயக்க,
‘மார்ச் 2020க்குப் பின்னர் 2020 மற்றும் 2021ல் ஏற்பட்ட கொவிட் தொற்றுநோய் காரணமாக அரசாங்க மருத்துவச் சேவைக்கான செலவு அதிகரித்தது. அதிகரித்து வரும் வேலையில்லாத் திண்டாட்டத்திற்கு தீர்வு காணவும், நாட்டின் உணவுப் பாதுகாப்பை உறுதி செய்யவும் அரசு நடவடிக்கை எடுத்தது. கடந்த இரண்டு ஆண்டுகளில், சிறு வணிகங்களைப் பாதுகாக்கும் செலவையும், சமூகப் பாதுகாப்புச் செயல்முறையையும் அரசே ஏற்க வேண்டியிருந்தது.
கொவிட் தொற்றிலிருந்து மக்களைப் பாதுகாப்பதற்காக அரசாங்கம் 2020 ஆம் ஆண்டில் 138 பில்லியன் ரூபாவையும் 2021 ஆம் ஆண்டில் 166 பில்லியன் ரூபாவையும் செலவிட வேண்டியிருந்தது. கொவிட் தொற்றுநோயின் போது மக்களுக்கு தலா 5,000 ரூபாய் வழங்க 2020 ஆம் ஆண்டில் 56.5 பில்லியனும், 2021 ஆம் ஆண்டுக்கு 18.6 பில்லியனும் அரசாங்கம் ஒதுக்கியது.
2021 ஆம் ஆண்டிற்கான குறிப்பாக தடுப்பூசி செயல்முறைக்காக அரசாங்கம் 130 பில்லியன் ரூபாயை செலவிட்டுள்ளது. பிற நாடுகளுடன் ஒப்பிடுகையில், இலங்கை மொத்த உள்நாட்டு உற்பத்தியில் கிட்டத்தட்ட 2 வீதத்தை கொவிட் நோயை எதிர்த்துப் போராடுவதற்கு ஒதுக்கியுள்ளது. கொவிட் தொற்றுநோய் பொது நிதியில் பாரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளதாக தரவுகள் காட்டுகின்றன.
இதன் காரணமாக 2020 ஆம் ஆண்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 9.1 வீதமாக குறைந்துள்ளது. 2021ல் இது 8.7 ஆக குறைந்துள்ளது. இதன் காரணமாக 2021ல் வரவு செலவுத்திட்;ட பற்றாக்குறை 12.2 வீதமாக அதிகரித்துள்ளது.
2015 முதல் 2019 வரை, வரவுசெலவுத்திட்ட பற்றாக்குறை 9.6 வீதம் ஆகும். கடந்த அரசாங்க காலப்பகுதியில் சுமார் 420 பில்லியன் ரூபாய் பணம் செலுத்தப்படாமல் இருந்தமையே இதற்குக் காரணம்.
2020 இல் செலுத்தப்படாத பட்டியல்களை செலுத்த தற்போதைய அரசாங்கத்திற்கு நேர்ந்தது. இது நிதி நிர்வாகத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. 2019 ஆம் ஆண்டை விட 2020 ஆம் ஆண்டில் வரி வருவாய் 518 பில்லியன் ரூபாவால் குறைந்துள்ளது.
கடந்த அரசாங்கத்தின் போது 41.7 வீதமாக இருந்த வெளிநாட்டுக் கொள்கைக் கடன் 2021 இல் அரசாங்கக் கொள்கைகளில் 39 வீதமாக குறைக்கப்பட்டுள்ளது. 2010-2014 காலகட்டத்தில், வெளிநாட்டுக் கடன்கள் 70 வீதத்திற்கும் குறைவாகவே பராமரிக்கப்பட்டன. எனினும் 2015-2018 காலப்பகுதியில் வெளிநாட்டு கடன்கள் 86 வீதமாக அதிகரித்தது. 2030 ஆம் ஆண்டளவில் அரச கடனை 60 வீதம் வரை குறைக்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளது.
2015 இல் 5 வீதமாக இருந்த பொருளாதார வளர்ச்சி விகிதம் 2019 இல் 2 வீதமாகக் குறைக்கப்பட்டது. வர்த்தக நடவடிக்கைகள் சரிவடைந்துள்ளன’ எனத் தெரிவித்தார்.
இலங்கை மத்திய வங்கியின் பணிப்பாளர் கலாநிதி அனில் பெரேரா,
‘2022 ஆம் ஆண்டளவில் உலகளாவிய பொருளாதார வளர்ச்சி சற்று குறைந்துள்ளது. இது இலங்கையின் ஏற்றுமதி, சுற்றுலா வருவாய் மற்றும் ஆராய்ச்சியை பாதித்துள்ளது. இதற்கு மேலதிகமாக ஏற்பட்ட பல சவால்களும் உள்ளன. ரஷ்ய-உக்ரைன் போர் மற்றும் சர்வதேச சந்தையில் பொருட்களின் விலை உயர்வு ஆகியவை நமது பொருளாதாரத்தையும் பாதித்துள்ளன.
இருப்பினும், நமது ஏற்றுமதி தற்போது அதிகரித்து வருகிறது. அதே நேரத்தில், பொருளாதாரத்தின் நேர்மறையான வளர்ச்சிக்கு இறக்குமதியை ஓரளவு கட்டுப்படுத்துவது முக்கியம். அதேவேளை, தற்போதைய புவிசார் அரசியல் பிரச்சினைகள் நமது பொருளாதாரம் மீண்டு வருவதற்கு தடைகளை உருவாக்குகின்றன.
இந்த வருடத்தின் கடந்த மூன்று மாதங்களில் சுமார் 275,000 சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகை தந்துள்ளனர். அது ஒரு நேர்மறையான அம்சம்.
நாட்டுக்கு அந்நியச் செலாவணியைக் கொண்டு வருவது என்பது அவசரத் தேவையாகிவிட்டது. அதைத் தவிர, இதைத் தீர்ப்பது எளிதல்ல. பணமோசடியை தடுக்கவும் இலங்கைக்கு பணம் அனுப்பும் நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் நடவடிக்கை எடுப்பது முக்கியம்’ என்றார்.
பொருளாதாரத்தில் தற்போதைய நெருக்கடி மற்றும் சாத்தியமான மாற்று வழிகள் குறித்தும் நிபுணர்கள் கருத்து தெரிவித்தனர்.
நாட்டின் பொருளாதார நெருக்கடிக்கு முக்கிய காரணம், சில காலமாக நீடித்து வரும் இறக்குமதி – ஏற்றுமதி இடைவெளியே. நமது நாடு ஏற்றுமதி செய்வதை விட அதிகமாக இறக்குமதி செய்கிறது. ஈஸ்டர் தாக்குதல் மற்றும் கொவிட் தொற்றுநோயால், சுற்றுலாத் துறை வீழ்ச்சியடைந்துள்ளது.
மேற்கத்தேய நாடுகளும் சர்வதேச நாணய நிதியமும் இறக்குமதியைக் கட்டுப்படுத்த வேண்டாம் என்று கூறுகின்றன. ஆனால் இலங்கையின் பெரும்பாலான இறக்குமதிகள் இந்தியா, சீனா போன்ற நாடுகளில் இருந்து வருகின்றன. அவர்களிடம் பேசி முடிவெடுத்தால் நிவாரணம் கிட்டும்.
குறுகிய, நடுத்தர மற்றும் நீண்ட கால முறைகளின்படி இந்த நாட்டிற்கு அனுப்பும் பணத்தை சட்டப்பூர்வமாக கொண்டு வருவதும் அவசியம். இந்த நாட்டிற்கு முதலீட்டைக் கொண்டுவர தூதரகங்களை ஊக்குவிப்பதும் முக்கியம்.
புதிய வரிக் கொள்கையை அறிமுகப்படுத்துவதன் முக்கியத்துவம் குறித்தும் வலியுறுத்தப்பட்டது. உற்பத்தித் துறையை வலுப்படுத்த நிவாரணம் வழங்க வேண்டியதன் அவசியத்தையும் நிபுணர்கள் சுட்டிக்காட்டினர்.
74 வருடங்களாக உருவாகி வந்த பொருளாதார நெருக்கடி ஈஸ்டர் தாக்குதல் மற்றும் கொவிட் தொற்றுடன் அதிகரித்துள்ளதையும் அவர்கள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவிடம் சுட்டிக்காட்டினர்.
பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ ஜனாதிபதியாக இருந்த காலத்தில் அமைக்கப்பட்ட வாழ்க்கைச் செலவுக் குழுவின் தேவை தற்போதும் காணப்படுவதாக நிபுணர்கள் சுட்டிக்காட்டினர்.
அரசியல் காரணங்களால் நாட்டில் நிலவும் நிலைமை குறித்து மக்கள் மத்தியில் தவறான அணுகுமுறையை உருவாக்கி தேவையற்ற பொது அமைதியின்மையை ஏற்படுத்துவது தற்போதைய நெருக்கடியை அதிகப்படுத்தியுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.
வெளிநாட்டு சந்தைகளில் அதிக தேவை உள்ள உள்ளூர் தயாரிப்புகளை ஊக்குவிப்பதன் முக்கியத்துவத்தையும் அவர்கள் சுட்டிக்காட்டினர். அரசாங்கத்தினால் அமுல்படுத்தப்படும் அரசாங்கத்தின் உள்ளூர் உற்பத்தியாளர்களை பலப்படுத்தும் வேலைத்திட்டத்தை அவதானிக்க வேண்டியது அவசியமானது எனவும் அரசாங்கத்தினால் வழங்கப்பட்டு வரும் நிவாரணங்கள் கிராமிய மட்டத்திற்கு முறையாக பகிர்ந்தளிக்கப்படுகின்றதா என்பதை கண்காணிக்க அவசர நடவடிக்கை தேவை எனவும் இதன்போ சுட்டிக்காட்டப்பட்டது.
ஏற்றுமதியை ஊக்குவிப்பதற்காக ஏற்றுமதி அபிவிருத்திச் சபை மற்றும் உற்பத்தியாளர்களுடன் துரித வேலைத்திட்டத்தை உருவாக்குவதன் முக்கியத்துவம் குறித்தும் வலியுறுத்தப்பட்டது.
குறித்த சந்தர்ப்பத்தில் பிரதமரின் செயலாளர் அனுர திஸாநாயக்க, பொருளாதாரக் கொள்கைகள் மற்றும் திட்டச் செயற்படுத்துகை அமைச்சின் செயலாளர் அனுஷ பெல்பிட்ட, பிரதமரின் மேலதிக செயலாளர் மஹிந்த குணரத்ன, சிரேஷ்ட உதவி செயலாளர் நளினி கொஹொவல, மக்கள் தொகைக் கணக்கெடுப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் பீ.எம்.பீ.அனுரகுமார, வர்த்தகம் மற்றும் முதலீட்டுக் கொள்கைத் துறையின் பணிப்பாளர் நாயகம் கே.ஏ.விமலேந்திராஜா, நிதிக் கொள்கைகள் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் கலாநிதி கபில சேனாநாயக்க, இலங்கை மத்திய வங்கியின் பணிப்பாளர் கலாநிதி அனில் பெரேரோ, ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் உபவேந்தர் பேராசிரியர் சுதந்த லியனகே, கொள்கை கற்கைகள் நிறுவகத்தின் நிறைவேற்று பணிப்பாளர் கலாநிதி துஷ்னி வீரகோன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
இது அரசியல் செய்யும் நேரமல்ல நாட்டைப் பற்றி சிந்தித்து உழைக்க வேண்டிய தருணம்
நாட்டு மக்களுக்கு பிரதமர் மஹிந்த அழைப்பு
இது அரசியல் செய்யும் நேரம் அல்ல. அனைவரும் நாட்டைப் பற்றி சிந்தித்து உழைக்க வேண்டிய தருணம் என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷதெரிவித்தார்.
5,000 குளக்கட்டுகளை புனரமைக்கும் இரண்டாம் கட்டப் பணிகளில் கலந்து கொண்டு 30.03.2022 அன்று அலரிமாளிகையில் வைத்து உரையாற்றுகையிலேயே பிரதமர் இவ்வாறு குறிப்பிட்டார். குருநாகல்
நிகவெரட்டிய தேர்தல் தொகுதியில் கொபெய்கனே மீகஸ்வௌ பிரதேசத்தில் உள்ள குளத்தின் புனரமைப்பு பணிகள் பிரதமரினால் இணையவழி ஊடாக ஆரம்பித்து வைக்கப்பட்டது. இந்நிகழ்வில் நீர்ப்பாசனத்துறை அமைச்சர் சமல் ராஜபக்ஷ மற்றும் இராஜாங்க அமைச்சர் அனுராத ஜயரத்ன ஆகியோர் கலந்துகொண்டனர்.
பொல்பித்திகம கந்தகொல்ல குளம், பெமினிகல்ல மசுரன்கோட்டே குளம் மற்றும் கிரிபாவ நிக குளம் ஆகியவற்றின் புனரமைப்பு பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதுடன், அக்குளங்கள் உள்ளிட்ட 5000 குளக்கட்டுகளை புனரமைக்கும் வேலைத்திட்டத்தின் இரண்டாம் கட்டத்தின் கீழ் இன்று நாடு முழுவதிலும் உள்ள 100 குளங்களின் புனரமைப்புப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
நிகழ்வில் பிரதமர் மேலும் உரையாற்றுகையில்,
‘ஒரு நாடாக நாம் ஒரு தொற்றுநோய்க்கு முகங்கொடுத்து வருவதுடன், வரலாற்றில் மிகவும் சவாலான நேரத்தை எதிர்கொள்கிறோம். உள்ளூர்வாதத்திற்கு முன்னுரிமை அளிக்கும் பொருளாதார மேம்பாட்டுத் திட்டமே எங்கள் நோக்கம். இந்த அமைப்பு சீரமைக்கப்படும் போது, கிராமப்புற மக்கள் விவசாயத்தில் படும் பல சிரமங்கள் நீங்கும். அதுமட்டுமின்றி, குளங்கள் புனரமைக்கப்படும் போது, அது பல தொழில்களுக்கு இடமளிக்கும். இத்திட்டம் யதார்த்தமாகும்போது விவசாயப் பொருளாதாரத்தை மட்டுமன்றி கிராமியப் பொருளாதாரத்தையும் பலப்படுத்த முடியும். இதன் மூலம் நாட்டின் பொருளாதாரத்தை நாளுக்கு நாள் வலுப்படுத்துவதே எமது தேவை.
இன்று மக்கள் பல சிரமங்களை எதிர்நோக்கி வருவதை நாம் அறிவோம். இவை நமக்குத் தெரியாதா அல்லது அறிந்தும் அறியாதது போன்று உள்ளார்களா என்று சிலர் கேட்கிறார்கள். அதனால்தான் அனைத்துக் கட்சி மாநாட்டைக் கூட்டி நாட்டைப் பற்றி சிந்திக்கவும், அனைவரின் கருத்துக்களை கேட்டறிந்து, இந்த நிலையிலிருந்து மீண்டெழுவதற்கான தளமொன்றை நிர்மாணித்தோம்.
கொவிட் தொற்று நம்மால் உருவாக்கப்பட்டது அல்ல. நாங்களே அதனை செய்தோம் என்று மக்களைத் தூண்டிவிட சிலர் முயற்சிப்பதைப் பார்த்தேன். எதிர்கட்சியில் இருந்தாலும் நல்ல யதார்த்தமான யோசனைகளை முன்வைக்க தயாராக உள்ளோம். இது அரசியல் செய்யும் நேரம் அல்ல. ஒவ்வொருவரும் நாட்டைப் பற்றி சிந்தித்து உழைக்க வேண்டிய தருணம் இது. எனவே, அனைத்துக் கட்சி மாநாட்டில் கலந்து கொள்ளாதவர்களை அடுத்த முறை கலந்து கொள்ளுமாறு அழைப்பு விடுக்கிறோம்.
புத்தாண்டு காலம் நெருங்குகிறது. உண்மையான பிரச்சினையை தெரிந்துகொண்டே நாளை எரிபொருள் இருக்காது, உணவு தட்டுப்பாடு ஏற்படும் என்று பொய்யான மாயைகளை உருவாக்குகிறார்கள். சில பிரச்சினைகள் சிலரின் நலனுக்காக மக்களுக்குத் தெரியாமல் உருவாக்கப்பட்டன. நெருக்கடி இருப்பதை ஏற்றுக்கொள்கிறோம். ஒரு அரசாங்கம் என்ற வகையில், உங்களின் சிரமங்களை போக்கவும், உங்கள் அன்றாட வாழ்க்கையை கட்டியெழுப்பவும் தேவையான ஆதரவை வழங்குவோம்’ என்று பிரதமர் கூறினார்.