மிகை கட்டண வரி சட்டமூலம் திருத்தங்களுடன் நிறைவேற்றம்

மிகை கட்டண வரி (surcharge tax) சட்டமூலம் இன்று (07.04.2022) பாராளுமன்றத்தில் திருத்தங்களுடன் நிறைவேற்றப்பட்டது.

அதற்கமைய, மிகை கட்டண வரி சட்டமூலம் தொடர்பான 2ஆம் வாசிப்பு மற்றும் 3ஆம் வாசிப்பு வாக்கெடுப்பு இன்றி திருத்தங்களுடன் நிறைவேற்றப்பட்டது.

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ இந்த சட்டமூலத்தை பாராளுமன்றத்தில் இரண்டாம் வாசிப்புக்காக முன்வைத்திருந்தார் என்பதுடன், பின்னர் குழுநிலை வேளையில் திருத்தங்கள் எடுத்துக் கொள்ளப்பட்டது.

இதன்போது கருத்துத் தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா, ஊழியர் சேமலாப நிதியம் உள்ளிட்ட பல நிதிகளுக்கு இந்த வரி விதிக்கப்படுவதற்கு தமது தரப்பு எதிர்ப்பு தெரிவித்ததாகவும், அதற்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளதாகவும் தெரிவித்தார். இந்த மிகை கட்டணத்தை வசூலிப்பதில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என்று தனது கட்சி முன்மொழிந்த நிறுவனங்களின் பட்டியலையும் அவர் முன்வைத்தார்.

இந்த சட்டமூலத்திற்கு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ மற்றும் ஏனைய எதிர்க்கட்சிகளுக்கு ஆட்சேபனை இல்லை என எதிர்க்கட்சியின் பிரதம கொறடா லக்ஷ்மன் கிரியெல்ல இதன்போது பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

வருடாந்தம் ரூ. 2,000 மில்லியன் வருமானம் ஈட்டும் தனிநபர்கள் அல்லது நிறுவனங்களுக்கு ஒரு தடவை 25% வரி விதிப்பது தொடர்பில் மிகை கட்டண வரி சட்டமூலம் முன்வைக்கப்பட்டது.

2020/2021 நிதி ஆண்டுக்கான ரூ. 2,000 மில்லியனுக்கும் அதிகமாக வரி அறவிடக்கூடிய வருமானத்தை ஈட்டும் நபர்கள் அல்லது நிறுவனங்களுக்கு ஒரு தடவை மாத்திரம் அறிவிடப்படும் 25% வீதமான மிகை வரியை விதிப்பதற்கு 2022 ஆம் ஆண்டு வரவு செலவுத் திட்டத்தில் முன்மொழியப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இதில் ஊழியர் சேமலாப நிதியம் (EPF) மற்றும் ஊழியர் நம்பிக்கை நிதியம் (ETF) உள்ளிட்ட 13 நிதியங்கள் உள்ளடக்கப்பட்டுள்ளமை அரசியலமைப்புக்கு முரணானது என உயர் நீதிமன்றில் மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

இதனைத் தொடர்ந்து, EPF, ETF உள்ளிட்ட 13 நிதியங்களை தவிர்த்து மிகைவரி சட்டமூலம் திருத்தப்படுமென சட்ட மாஅதிபர் உச்ச நீதிமன்றத்திற்கு அறிவித்திருந்தார்.

அதனையடுத்து, மிகை கட்டண வரி சட்டமூலத்தை சாதாரண பெரும்பான்மை மூலம் பாராளுமன்றத்தில் நிறைவேற்றலாமென, உயர் நீதிமன்றம் பாராளுமன்றத்திற்கு அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Tags: