யூரி ககாரின்: புவியின் நிறத்தைச் சொன்ன முதல் மனிதர்

-ஆதி

யூரி ககாரின்Yuri Gagarin

விண்வெளியில் முதலில் பறந்தவர் ரஷ்யாவைச் சேர்ந்த யூரி ககாரின். 1961ஆம் ஆண்டில் வாஸ்டாக். என்ற விண்கலம் மூலம் உலகைச் சுற்றி வந்து அவர் சாதனை படைத்தார். அவர் விண்வெளி சென்ற ஏப்ரல் 12ஆம் தேதி, மனிதன் விண்வெளியில் பறந்த சர்வதேச நாளாக இப்போது கொண்டாடப்படுகிறது.

அவர் விண்வெளிக்குச் செல்வதற்கு முன்னதாக ஒரு நாய், ஒரு பூனை போன்றவை அனுப்பப்பட்டுப் பரிசோதிக்கப்பட்டிருந்தன. அவர் பங்கேற்றது மிகவும் ஆபத்தான பரிசோதனை. ஆனால் அது வெற்றிகரமாக நிகழ்ந்தது. 20ஆம் நூற்றாண்டின் வரலாற்றில் அவர் விண்வெளியில் பறந்தது மிகப் பெரிய திருப்புமுனை.

வயிற்றுக்குள் சிறகடித்த பட்டாம்பூச்சிகள்

விண்ணில் பறந்த முதல் மனிதனான அவர், அப்படிப் பறந்தபோது, பதற்றமாக இருந்த நேரத்தில் தனது “வயிற்றுக்குள் பட்டாம்பூச்சி சிறகடித்தது” போல இருந்ததாகக் கூறினார். அப்போது அவர் கூறிய அந்தப் பிரபலமான உவமைதான், இப்போது வரை பலராலும் எடுத்தாளப்பட்டு வருகிறது. ‘பூமி ஒரு நீல நிறக் கோள்’ என்பதை முதலில் சொன்னவரும் அவர்தான். இதற்குக் காரணம், அவரால் தானே முதன்முதலில் புவியை வெளியிலிருந்து பார்க்க முடிந்தது.

ஏன் யூரி ககாரின் தேர்ந்தெடுக்கப்பட்டார்?

20ஆம் நூற்றாண்டின் இரண்டாவது பாதியில் கம்யூனிஸ்ட் ஆட்சி நடந்து வந்த ரஷ்யா, முதலாளித்துவ ஆட்சி நடந்து வந்த அமெரிக்காவுக்கு இடையே விண்வெளி ஆராய்ச்சியில் மிகப் பெரிய போட்டி நிலவியது. (ககாரின் வானில் வெற்றிகரமாகப் பறந்ததற்குப் போட்டியாகத்தான் நீல் ஆம்ஸ்ட்ராங்கை அமெரிக்கா நிலவுக்கு அனுப்பிவைத்து, பரிசோதனை நடத்தியது. நீல் ஆர்ம்ஸ்ட்ராங் நிலவில் கால்பதித்தது ஜூலை 20, 1969இல்). அந்தப் பின்னணியில் சோவியத் விண்வெளித் திட்டத்தின் கீழ் விண்வெளியில் பறப்பதற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டவர்தான் யூரி ககாரின்.

இந்தத் திட்டத்துக்கு ககாரின் தேர்ந்தெடுக்கப்பட்டதற்கான காரணம், அவர் அடக்கத்துடன் இருந்ததும், சிக்கலான கணிதக் கோட்பாடுகளைக் கையாளத் தெரிந்திருந்ததும், சட்டென்று எதிர்வினை ஆற்றியதும், இதற்கெல்லாம் மேலாக உடலை உறுதியுடன் வைத்திருந்ததும்தான்.

உடல் எடையற்று இருந்தது

அவரைச் சுமந்து சென்ற வாஸ்டாக் . விண்கலம் வெறும் 108 நிமிடங்களில் உலகை வலம் வந்தது. அப்படியானால் அது எவ்வளவு வேகத்தில் சுற்றியிருக்கும்? அப்படிச் சுற்றியிருந்தால், வயிற்றுக்குள் பட்டாம்பூச்சி என்ன, ஹெலிகாப்டரே பறந்திருக்கும்! ககாரின் அதை அழகாகச் சொல்லியிருக்கிறார் என்று வேண்டுமானால் வைத்துக்கொள்ளலாம்.

விண்வெளியில் பறந்துவிட்டுத் திரும்பிய பிறகு, உடல் எடையற்று இருந்ததுபோல உணர்ந்ததை, முக்கியமான வேறுபாடாக ககாரின் கூறியிருக்கிறார். “ஒரு நபர் அந்தரத்தில் கைவிடப்பட்டால் எப்படியிருக்குமோ, அப்படியிருந்தது,” என்று கூறியிருக்கிறார். அந்தரத்தில் உதிர்ந்து காற்றில் கீழே மிதந்து தரையிறங்கி வரும் ஒரு இலையைப் போல இருந்திருக்கும். இந்த அனுபவத்தை முதலில் பெற்ற மனிதர் அவரே.

சோவியத் யூனியனின் ஹீரோ

வெற்றிகரமாக விண்வெளியில் பறந்த யூரி ககாரின். அதற்குப் பிறகு ஒரு நாயகனாகக் கொண்டாடப்பட்டார். உலகம் முழுவதும் உள்ள நாளிதழ்கள் அவரது கதையையும், அவர் பறந்த விதத்தையும் பற்றிக் கட்டுரைகளை வெளியிட்டன. ரஷ்யாவில் மதிப்புக்குரியதாக மதிக்கப்படும் கிரெம்ளின் மாளிகைக்கு ககாரின் ஊர்வலமாக அழைத்துச் செல்லப்பட்டார். ‘சோவியத் யூனியனின் ஹீரோ’ என்ற உயரிய பட்டத்தை அப்போதைய சோவியத் அதிபர் நிகிதா குருஷ்சேவ் அவருக்கு வழங்கினார்.

கைவிட்ட விமானம்

அதற்குப் பின், ககாரின் ஓர் உலக சுற்றுப்பயணமும் மேற்கொண்டார். இது அவருக்கு மேலும் புகழைத் தேடித் தந்தது. சில நாடுகள் அவரை கௌரவிக்கும் விதமாக அஞ்சல்தலைகள், அஞ்சல் உறைகள், நினைவுக் காசுகள் போன்றவற்றை வெளியிட்டுள்ளன.

ஆனால் விண்வெளியில் வெற்றிக்கொடி நாட்டிய ககாரினைப், பிற்காலத்தில் ஒரு விமானம் கைவிட்டுவிட்டது. 1968இல் மார்ச் 27இல் ராணுவ விமானம் ஒன்றை ஓட்டிச் சென்றபோது, விபத்தில் சிக்கி அவர் இறந்தார்.

ஐ.நாவின் தீர்மானம்

2011 ஏப்ரல் 7ஆம் தேதி ஐ.நாவின் 65வது பொது அவை அமர்வு, ஏப்ரல் 12ஆம் தேதியை விண்வெளியில் மனிதன் பறந்ததற்கான சர்வதேச நாளாக அறிவித்தது. “நீடித்த வளர்ச்சியை எட்டுவதற்கு உதவும் வகையில் விண்வெளி அறிவியல், தொழில்நுட்ப வளர்ச்சியை எட்டுவதிலும், மக்கள், நாடுகளின் வளங்களை அதிகரிப்பதில் விண்வெளி அறிவியல் துறை அளித்துவரும் பங்களிப்பின் முக்கியத்துவத்தை உணர்த்தும் வகையிலும், இந்த நாள் அனுசரிக்கப்படும் என்று தீர்மானத்தில் கூறப்பட்டிருக்கிறது.

ககாரினின் ஆசை

“அமைதிக்கான காரணங்களுக்காகவே விண்வெளி ஆராய்ச்சி மேற்கொள்ளப்பட வேண்டும்,” என்பது ககாரினின் ஆசை. இன்றைக்கு விண்வெளி ஆராய்ச்சியை நடத்தி வரும் சர்வதேச விண்வெளி நிலையத்தில் வெவ்வேறு நாடுகளைச் சேர்ந்தவர்கள் கூட்டாக பணியாற்றி வருகிறார்கள்.

ககாரின் விண்ணில் பறந்த பிறகுதான் விண்வெளியில் நடப்பது, விண்வெளி நிலையம் அமைப்பது போன்ற மற்ற முன்னேற்றங்கள் ஏற்பட்டன. இன்றைக்கு ‘விண்வெளிக்குப் பறப்பது’ என்பது ஆச்சரியத்துக்கு உரிய ஒரு விஷயமாக இல்லை. இப்போது விண்வெளி சுற்றுலா பற்றியும் பேசப்பட்டு வருகிறது.

1961 ஏப்ரல் 12ஆம் தேதி வெறும் 108 நிமிடங்களில் (2 மணி நேரத்துக்கு 12 நிமிடங்கள் குறைவு) உலகம் தலைகீழாக மாறியது. அது யூரி ககாரினுக்கு மட்டுமல்ல, ஒட்டுமொத்த உலகத்துக்கும்தான்.

Tags: