நான் செய்யும் அனைத்துமே நடனம்தான்: சார்லி சாப்ளின் பேட்டி

எஸ்.அப்துல் மஜீத்

சார்லி சாப்ளினின் நடிப்பாற்றல், அதன் மூலம் அவர் ஈட்டிய பணம், புகழ் ஆகியவற்றைப் பற்றிப் பேசப்படும் ஒவ்வொரு முறையும், அவர் சிறுவயதில் எதிர்கொண்ட வறுமையைப் பற்றியும் மக்கள் நினைவுகூர்வது உண்டு. சாப்ளின் 1889இல் லண்டனில் மிக வறுமையான குடும்பத்தில் பிறந்தார். அவரது பெற்றோர் இருவருமே நடிப்புத் துறையைச் சேர்ந்தவர்கள். அப்பா சிறுவயதிலே குடும்பத்தைவிட்டுப் பிரிந்துச் சென்றுவிட்டார். அம்மா மிக மோசமான உடல்நலம் மற்றும் மனநலம் பாதிப்புக்கு உள்ளானார். அதனால், அவர் காப்பகத்தில் சேர்க்கப்பட்டார். சாப்ளினுக்கு சிட்னி என்ற சகோதரர் உண்டு. பெற்றோரின் அரவணைப்பு இல்லாத இந்தச் சகோதர்கள், சிறுவயதிலே தங்கள் வயிற்றுப்பாட்டைத் தாங்களே கவனித்துக்கொள்ள வேண்டிய நிர்பந்தத்துக்கு ஆளாகினர்.

சாப்ளினுடைய பெற்றோர் நடிப்புத் துறையைச் சேர்ந்திருந்ததால் என்னவோ, சாப்ளினுக்கு இயல்பிலேயே  நடிப்புத் திறமை இருந்தது. சாப்ளினுக்கு 12 வயதிலேயே மேடை நாடகங்களில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது.  சாப்ளினுக்குள் இருந்த நடிப்பாற்றல் அவருக்கான பாதையை உருவாக்கித் தந்தது. 1910 வாக்கில் நடிப்புப் பயணமாக அமெரிக்கா செல்லும் வாய்ப்பு வந்தது. அதையொட்டி, 1913ஆம் ஆண்டு அமெரிக்காவில் உள்ள சினிமா நிறுவனம் ஒன்று சாப்ளினுடன் ஒப்பந்தம் செய்துகொண்டது. இந்த ஆண்டுதான் அவரது வாழ்வின் திருப்புமுனை. சாப்ளினின் திரைப் பயணமும் ஆரம்பமானது. அப்போது இவருக்கு வயது 25. 

சாப்ளினின் முதல் திரைப்படமான ‘கிட் ஆட்டோ ரேஸ் இன் வெனிஸ்’ (Kid Auto Race at Venice) 1914இல் வெளியானது. இந்தப் படத்தில்தான் ‘ட்ராம்ப்’ எனும் பெயர் கொண்ட – தொள தொள பேன்ட், இறுக்கமான சட்டை, நீண்ட தொப்பி, சிறிய மீசையுடனான – பாத்திரத்தில் தோன்றினார். இன்றளவும் அந்தப் பாத்திரம் வழியாகவே உலகம் சாப்ளினை நினைவுகொள்கிறது.

தன்னுடைய 25வது வயதில் திரைத் துறைக்குள் நுழைந்த சாப்ளின், 30வது வயதுக்குள் சொந்தமாக ஸ்டுடியோ ஆரம்பிக்கும் அளவுக்கு வளர்கிறார். இயக்கம், இசை, தயாரிப்பு எனப் பல தளங்களிலும் அவர் உச்சம் தொடுகிறார். சாப்ளினின் காலத்தில் திரைத் துறையில் உச்சபட்ச ஊதியம் பெறும் நடிகராக அவரே  விளங்கினார். ‘சிட்டி லைட்ஸ்’ (1931), ‘மார்டன் டைம்ஸ்’ (1936), ‘தி கிரேட் டிக்டேட்டர்’ (1940) போன்ற படங்கள்  சாப்ளினை அழியாக் கலைஞனாக வெளிப்படுத்தின. நடிப்புத் துறை என்று பார்த்தால் 1903 – 1967 வரையில், அதாவது 64 ஆண்டு காலம் சாப்ளின் இயங்கியுள்ளார்; 1977ஆம் ஆண்டு, தனது 88-வது வயதில் காலமானார். 

இந்தப் பேட்டி  சாப்ளின் ஊடகங்களுக்கு வெவ்வேறு காலகட்டங்களில் அளித்த பேட்டிகளிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட சிறுபேட்டி ஆகும்.

உங்களுடைய ‘ட்ராம்ப்’ (Tramp) பாத்திரம் உருவான தருணத்தைப் பற்றிச் சொல்ல முடியுமா? 

அவசர நிலையில் உருவானதுதான் அந்தப் பாத்திரம். ஏதாவது வேடிக்கையான மேக்கப்பைப் போட்டுக்கொண்டு வருமாறு கேமராமேன் என்னிடம் கூறினார். என்ன செய்வது என்று எனக்கு எந்தத் திட்டமும் இல்லை. நான் ஆடைப் பிரிவுக்குச் சென்றேன். ஆடைகளைக் கொண்டே ஏதாவது செய்யலாம் என்று போகும் வழியில் எனக்குத் தோன்றியது. அப்படித்தான் தொளதொள பேன்ட், இறுக்கமான கோட், நீண்ட தொப்பி என்ற தோற்றம் உருவானது. கந்தல் கோலம் அதேசமயம் கண்ணியவான்தன்மை. எனக்கு சோகமான, தீவிரமான முகம். என் முகத்தின் இந்தத் தன்மைகளை மறைத்து, நகைச்சுவைத் தன்மையைக் கொண்டுவர வேண்டும் நினைத்தேன். அப்படியான முயற்சியில்தான் சிறிய மீசையைக் கண்டுபிடித்தேன். அந்த மீசையானது கதாபாத்திரத்தின் குணாதிசயத்தைக் குறிப்பதில்லை. வேடிக்கைத்தன்மையை மட்டும் குறிக்கக் கூடியது.

குழந்தைமைச் சுதந்திரம் மீதான ஏக்கத்தின் வெளிப்பாடா ‘ட்ராம்ப்’ பாத்திரம்?

இல்லை. அது எந்த ஏக்கத்தின் வெளிப்பாடும் இல்லை. ஒரு நகைச்சுவை நடிகருக்குக் குழந்தைத்தனமான விஷயங்களைச் செய்ய வேண்டும் என்ற ஏக்கம் இருப்பதாக நான் நினைக்கவில்லை. மக்களைப் பொருத்தவரையில், குழந்தைத்தனமான செயல்பாடுகளை வெளிப்படுத்த முடியாத நிலையில் அவர்கள் இருக்கிறார்கள். நாகரீகம் அவர்களைக் கட்டுப்படுத்துகிறது. அப்படியான சூழலில்தான் அவர்கள் கோமாளியைக் கண்டால் அனுபவிக்கிறார்கள். அது அவர்களுக்குள் அடைபட்டிருந்த சுதந்திரத்தை வெளிகொணர்கிறது. அதை நான் ஏக்கமாகப் பார்க்கவில்லை. அதையும் தாண்டிய ஒன்று அது.

தற்போதைய நவீன காலகட்டத்தில் ட்ராம்புக்கு என்ன இடம் என்று நினைக்கிறீர்கள்?

அப்படியான ஒரு நபருக்கு இப்போது எந்த இடமும் இல்லை. தற்போது உலகம் கூடுதல் ஒழுங்கு அடைந்திருக்கிறது. ஆனால், உலகம் மகிழ்ச்சியாக இருக்கிறது என்று நான் நினைக்கவில்லை. கச்சிதமான ஆடை அணிந்து, நீள முடி வைத்திருக்கும் சிறுவர்களை நான் பார்க்கிறேன். அவர்களில் சிலர் ட்ராம்பாக ஆக விரும்பலாம். ஆனால், ட்ராம்ப் காலகட்டத்தில் இருந்த பணிவு இப்போது இல்லை. இப்போதைய தலைமுறைக்குப் பணிவு என்றால், என்னவென்றே தெரியாது. ட்ராம்ப் இப்போது பழமையான பாத்திரமாக மாறிவிட்டது. அந்தப் பாத்திரம் வேறொரு காலகட்டத்தைச் சேர்ந்தது. அதானல்தான் அதைப் போல் இப்போது என்னால் செய்ய முடியவில்லை.

தற்போதைய காலகட்டத்தில் ட்ராம்ப் பாத்திரத்துக்கு இடம் இல்லை என்று சொல்வதற்கு இன்னொரு காரணமும் உண்டு. அது சப்தம். பேசும் படங்கள் வந்துவிட்டன. பேச்சு வந்த பிறகு என்னுடைய கதாபாத்திரம் அங்கு இருக்க முடியாது. ஏனென்றால், ட்ராம்புக்கு என்ன மாதிரியான குரல் இருக்கும் என்று எனக்குத் தெரியாது. அதனால், அது இங்கிருந்து போக வேண்டியதாயிற்று.

ட்ராம்பின் சிறந்தத் தன்மை என்று எதை நினைக்கிறீர்கள்?

அதில் ஒருவித மென்மையான, அமைதியான வறுமை இருக்கிறது. எல்லாவற்றிலும் மிக வேகமாகவும் மிக நுட்பமாகவும் செயல்படும் தன்மையும் அதில் உண்டு. டிராம்ப் என்பதை வெறும் தோற்றமாக மட்டும் நான் பார்க்கவில்லை. அது என் உள்ளுக்குள் இருக்கும் ஒன்றின் வெளிப்பாடு. பார்வையாளர்களின் எதிர்வினையால் நான் உந்தப்பட்டேன் என்றாலும், அவர்கள் பொருட்டு நான் ட்ராம்பை உருவாக்கவில்லை. என்னுள் இருக்கும் ஏதோ ஒன்றுதான் என்னை அவ்வாறு வெளிப்படுத்தத் தூண்டியது.

உங்களுடைய படைப்பைப் பற்றி நீங்கள் விவரிக்கையில் அதை நடனம் என்று கூறுகிறீர்கள். ஏன்?

நான் செய்யும் அனைத்தும் நடனம்தான். ‘சிட்டி லைட்ஸ்’ (City Lights) படத்தில், பார்வையற்ற பெண்ணுடனான என் சந்திப்பு ஓர் அழகான நடனம்தான். நான் நடனம் என்றுதான் அழைக்க விரும்புகிறேன். பூ விற்றுக்கொண்டிருக்கும் அந்தப் பெண் பார்வையற்றவள் என்று ட்ராம்புக்குத் தெரியாது. இதை ‘எடுத்துக்கொள்கிறேன்!’ என்கிறான். ‘எதை?’ என்கிறாள் அவள். ‘என்ன ஒரு முட்டாள் பெண்!’ என்று அவன் பார்க்கிறான். அப்போது அந்தப் பூ தரையில் விழுகிறது. அவள், ‘அது எங்கே விழுந்தது?’ என்று தடுமாறுகிறாள். அப்போது அவன் அதைக்  குனிந்து எடுத்து சில விநாடிகள் அதைப் பிடித்திருக்கிறான். அப்போது அவள் கேட்கிறாள், ‘நீங்கள் கண்டுபிடித்துவிட்டீர்களா சார்?’ பிறகுதான் அவனுக்கு புரிகிறது, அவள் பார்வையற்றவள் என்று. அவன் அந்தப் பூவை அவள் முகத்துக்கு நேராக நீட்டி பாவனை செய்கிறான். இது நடனம்தான்.

சுற்றிச் சுற்றி திரும்பத் திரும்ப நிகழும் காட்சிகள் உங்கள் படத்தில் உண்டு. அப்படியான கற்பனை எப்படி உங்களுக்குத் தோன்றியது? திடீரென்று தோன்றியதா அல்லது திட்டமிட்டு உருவாக்கப்பட்டதா?

இல்லை. அது திட்டமிட்டு உருவாக்கப்படவில்லை. சிறந்த ஐடியாக்கள் சூழ்நிலையிலிருந்து பிறக்கும். ஒரு நல்ல நகைச்சுவையான சூழல் இருந்தால் அதிலிருந்து பல திறப்புகள் புதிதாக கிடைக்கும். ‘தி ரிங்’ (The Ring) படத்தில் ஸ்கேட்டிங் காட்சிகளை எடுத்துக்கொள்வோம். எனக்கு ஸ்கேட்டிங் ஸூ கிடைக்கிறது. அதை மாட்டிக்கொண்டு ஸ்கேட்டிங் நிகழ்வில் நான் கலந்துகொள்கிறேன். சுற்றிக்கொண்டே இருக்கிறேன். வேகம் அதிகம் ஆகிறது. தடுமாற்றம் நிகழ்கிறது. பார்வையார்கள் அனைவரும் நான் விழுந்துவிடுவேன் என்றே எதிர்பார்ப்பார்கள். ஆனால், அவர்களது எதிர்பார்ப்புக்கு மாறாக நான் கீழே விழாமல் சிறப்பாக சமாளித்துவிடுவேன். ஒரு ட்ராம்பிடமிருந்து அத்தகையை திறமையை பார்வையாளர்கள் எதிர்பார்த்திருக்க மாட்டார்கள்.

யதார்த்தம் என்பது நகைச்சுவையின் ஓர் அங்கமா?

நிச்சயமாக. ஓர் அபத்தமான சூழ்நிலையை நீங்கள் யதார்த்தம்போல் அணுகும்போது அது உண்மைபோல் தோன்றுவிடுகிறது. அதேசமயம், அது அபத்தமானது என்பது பார்வையாளர்களுக்கும் தெரியும். அதுதான் அவர்களுக்கு மகிழ்ச்சியை அளிக்கிறது.

குரூரமும் ஓர் அங்கம்தானே? 

குரூரம் என்பது நகைச்சுவையின் அடிப்படைக் கூறு. புத்திசாலித்தனமாகத் தெரிவது உண்மையில் முட்டாள்தனமானது என்பதை நீங்கள் உணர்த்திவிட்டால் பார்வையாளர்கள் அதை ரசிக்கத் தொடங்கிவிடுவார்கள். ஒரு வயதானவர் வாழைப்பழத்தை மிதித்து கீழே விழுந்து தடுமாறுகிறார் என்றால், நாம் சிரிக்க மாட்டோம். அதுவே, மிகையான பெருமிதம் கொண்ட ஒரு செல்வந்தர் வழுக்கி விழுந்தால் நாம் சிரிப்போம். எல்லாச் சங்கடமான தருணங்களும் வேடிக்கையானவை – அவை நகைச்சுவையாக அணுகப்பட்டால். தன்னைப் புத்திசாலியாக நினைத்துக்கொள்ளும் ஒருவர் உணவு விடுதிக்குச் செல்கிறார். ஆனால், அவருடைய பேன்டில் பெரிய ஓட்டை இருக்கிறது. இது நகைச்சுவையாக அணுகப்பட்டால் வேடிக்கையான நிகழ்வாக மாறிவிடும். குறிப்பாக, கண்ணியத்துடன் பெருமிதத்துடனும் செய்யப்பட்டால்.

உங்கள் நகைச்சுவை காட்சிகள் பெரும்பாலும் உடல் அசைவுகள் சம்பந்தப்பட்டது. படப்பிடிப்பு நிகழ்வின்போது யாருக்கேனும் காயங்கள் ஏற்பட்டு இருக்கிறதா?

எங்கள் படங்களில் அப்படியான விபத்துகள் நடந்ததில்லை. ‘ஈஸி ஸ்ட்ரீட்’ (Easy Street) படத்தின்போது மட்டும் எனக்கு காயம் ஏற்பட்டது. மூக்கில் மூன்று தையல்கள் போட வேண்டியதாக இருந்தது.

நீங்கள் ஒரு நடிகர் என்பதைவிடவும் சிறந்த இயக்குநர் என்று உங்களை நீங்கள் கருவதுவதாகக் கூறியுள்ளீர்கள். ஏன் அப்படி நினைக்கிறீர்கள்?

ஏனென்றால், நான் அப்படி உணர்கிறேன். ஒவ்வொரு நடிகருக்கும், ஒரு பாத்திரத்தைச் சரியாக நடித்துவிட முடியுமா இல்லையா என்ற அச்ச உணர்வு இருக்கும். நடிப்பு என்பது ஒரு காட்சியின் யதாரத்தப் புள்ளியை நோக்கிப் பயணிப்பதும் அதைக் கண்டடைவதும் ஆகும். நீங்கள் சில தருணங்களில் அதை அடைந்துவிடுவீர்கள். சில நேரங்களில் அது கைக்கூடாமல் போகும். ஆனால், ஓர் இயக்குநராக அந்த யதார்த்தப் புள்ளியை நோக்கிப் பயணிக்கையில், அதை அடைந்துவிட முடியும். ஒருவருக்கு நடிக்கத் தெரியும் என்றால், நீங்கள் அவருக்கு நடிப்பதற்கு ஏற்ற பாத்திரத்தை வழங்கினால், அவர் நடித்துவிடுவார். ஆனால், இயக்கம் என்பது அப்படியானது அல்ல. எனக்கு இயக்கம் என்பது உணர்வுப்பூர்வமான ஒரு செயல்பாடு.

முகபாவனை, குரல், அங்க அசைவுகள் என எல்லாம் புறவயமான விஷயங்கள்தானா?

இல்லை. புறவயம் என்று ஒன்று இல்லை. எல்லாம் அகவயமானது என்றே நான் நம்புகிறேன். ஓர் இயக்குநர் நடிகர்கள் வழியே அந்த அகவயமான உணர்வை வெளிப்படுத்த முயற்சிக்கிறார். அந்த இயங்குமுறைதான் புறவயமானது.

தொழில்முறை நடிகருக்கும், சிறந்த நடிகருக்கும், ஏனைய நடிகர்களையும் எது வேறுபடுத்துகிறது என்றால், தொழில்முறை நடிகரானவர் தான் என்ன செய்கிறோம் என்பதை துல்லியமாகத் தெரிந்திருப்பார். அதை அவர் அதிகாரத்துடன் செய்வார். ஒரு நடிகர் இப்படி தான் செய்வதில் அதிகாரத்துடன் இருந்தால் பார்வையாளர்கள் அவரைக் கவனிப்பார்கள். இல்லையென்றால், அவரைப் பார்வையாளர்கள் கவனிக்க மாட்டார்கள். ஆனால், இயக்கத்தைப் பொருத்தவரையில், ஒரு பாத்திரத்தை எப்படி வெளிப்படுத்துவது என்பதை நடிகரிடம் சொல்லத் தெரிந்திருக்க வேண்டும்; நடிகரிடம் அதை நடித்துக்காட்ட தெரிந்திருக்க வேண்டும். அதேசமயம், அவர்களின் ஆளுமையில் இடையீடுசெய்யக் கூடாது. இது மிக அடிப்படையானது.

நீங்கள் கதை எழுதும் முறையானது, நீங்கள் சொல்லச்சொல்ல ஒருவர் எழுதுவார்… அப்படித்தானே?

ஆமாம். எனக்கு தோன்றும் கதையை, முதலில் நான் சொல்லச்சொல்ல ஒருவர் எழுதவார். அதன் பிறகு நான் அதைக் கவனமாகப் படித்துத் திருத்துவேன். கவித்துமான மற்றும் உணர்வுப்பூர்வமான காட்சிகளை நான் தனியாக அமர்ந்துதான் எழுதுவேன்.

அதை உங்களுக்கு நீங்களே நடித்துப்பார்ப்பீர்களா?

கண்டிப்பாக. நான் உற்சாகம் ஆகிவிட்டால் என்னால் என்னைக் கட்டுப்படுத்த முடியாது. நான் நடித்துப் பார்க்க ஆரம்பித்துவிடுவேன்.

அதாவது, எழுதிக்கொண்டிருப்பீர்கள், ஒரு தருணத்தில் உந்தப்பட்டு அந்தக் காட்சியை நடித்துப்பார்ப்பீர்கள், அதன் பிறகு மீண்டும் மேஜைக்குச் சென்று எழுதுவீர்கள்? இப்படி உங்கள் உதவியாளர் முன்னால், அவர்களுக்குக் கதையைச் சொல்லிக்கொண்டிருக்கும்போது நடித்துக்காட்டி இருக்கிறீர்களா?

இது அந்த உதவியாளர்களின் இயல்பைப் பொருத்தது. சில நேரங்களில் அவர்கள் சிறந்த பார்வையாளர்களாக இருப்பார்கள். சில சமயங்கள் தீவிரமான வேலையாட்களாக இருப்பார்கள். பொதுவே, உணவூர்பூர்வமான தருணங்களை நான் தனியே அமர்ந்துதான் எழுதுவேன்.

தொழில்நுட்பரீதியாக எடுத்துக்கொண்டால், நீங்கள் ஒளி அமைப்பு, கேமரா கோணம் குறித்து அதிகம் கவனம் செலுத்துவீர்களா?

ம்ம்ம்… ஆம். குறைவாகவோ, அதிகமாகவோ வெளிச்சம் இருக்க வேண்டும் என்று நான் விரும்புவேன். நிழல்களை நான் விரும்புவதில்லை. ஆனால், இவையெல்லாம் ஒரு படத்தில் முக்கியமான விஷயங்கள் இல்லை என்று நினைக்கிறேன். நீங்கள் ஒளி அமைப்பிலேயே கவனம் செலுத்திக்கொண்டிருந்தால் வேறு முக்கியமான விஷயங்களை தவறிவிடக்கூடும். கேமராவை எடுத்துக்கோண்டால், நீங்கள் எங்கே  இருக்கிறீர்கள் என்பதை காட்டும் வகையில் கேமரா கோணத்தை வைப்பதில் கவனம் செலுத்துவேன். முதலில் கேமரா பின்னால் இருக்கும். அதன் பிறகு க்ளோஸ்அப் நோக்கி நகரும்.  நான் க்ளோஸ்அப் காட்சிகளை இயந்திரத்தனமாகப் பயன்படுத்துவதில்லை. கமா, அடைப்புக்குறிகள் போன்ற நிறுத்தற்குறிகளைப் பயன்படுத்துவதுபோல் காட்சிகளுக்கான அழுத்தத்தை உணர்த்தும் வகையிலே க்ளோஸ்அப் காட்சிகளைப் பயன்படுத்துகிறேன். நாம் கடத்த விரும்பும் உணர்வுகளை கேமரா வழியாகத் துல்லியமாகக் கடத்துவதற்கான வழிமுறைகளைத்தான் தொழில்நுட்பம் என்பதாகப் பார்க்கிறேன். தொழில்நுட்பங்களைவிடவும், நடிகரின் நடிப்பிலேயே நான் அதிகம் கவனம் செலுத்துவேன்.   

கத்தரிப்புகளை மிக முக்கியமானது என்று நீங்கள் நினைக்கிறீர்களா?

ஆமாம், ஆனால், சிறிய அளவிலான கத்தரிப்புகளைத்தான். தந்திரமான கத்தரிப்புக் காட்சிகள் எனக்கு ஆர்வமூட்டுவது இல்லை. ஏனென்றால், எனக்கு மனித உணர்வுகள் மீதுதான் அதீத ஆர்வம். கல்லைக் காட்டுவது, ரத்தத் துளி விழுவதைக் தனிக் காட்சியாகக் காட்டுவதில் ஆர்வம் இல்லை. நான் நடிப்பை விரும்புகிறேன்.  நடிப்பின் வழியே உணர்வைக் கடத்துவதுதான் எனக்கு விருப்பமானது. முகம்தான் எனக்கு முக்கியம். பிறர் இந்த அணுகுமுறையைத் தொய்வான ஒன்றாகக் கருதக் கூடும். ஆனால், திரைப்படம் குறித்த என்னுடைய அணுகுமுறை இதுதான்.

நீங்கள் ‘தி கிரேட் டிக்டேட்டர்’ (The Great Dictator) படத்தை உருவாக்கியதற்கான காரணம் என்ன?

அது மிக வெளிப்படையானது. ஜெர்மன் சிறைக்கூடங்களில் கைதிகள் மிக மோசமான சித்திரவதைக்கு உள்ளாக்கப்பட்டனர். அதுதான் ஹிட்லரைப் பற்றிய நமது முதல் அறிதல். அடுத்ததாக, சிறுபான்மை மக்கள் மீதும் அவருடன் உடன்படாத மக்கள் மீதும் தாக்குதல் நடத்தினார். அவர் வென்றிருந்தால், உலகம் இன்னும் ஆயிரம் ஆண்டுகளுக்கு நாஜிக்களின் பிடியில் இருந்திருக்கும். அதை நீங்கள் நினைத்துக்கூடப் பார்க்க முடியாது. 

ஒவ்வொரு நாள் காலையிலும் வேலையைத் தொடங்கும்போது எப்படி உணர்வீர்கள்?

உண்மையில் அது சவாலான விஷயம். நான் இரவு நேரத்தில் வேலைசெய்வது இல்லை. மறுநாள் செய்ய வேண்டிய வேலையைக் குறித்துப் படுக்கை நேரத்தில் யோசிப்பதும் இல்லை. நாளை என்ன செய்யப்போகிறோம் என்பது குறித்த திட்டங்களை அன்றைய பணி முடிவில் பேசிவிட்டு கலைந்துவிடுவோம். சில சமயங்களில் நான் மிகவும் களைப்பு அடைந்துவிடுவேன். இதனால், மறுநாள் குறித்த திட்டம் எதுவும் இருக்காது. ஆனால், எனக்குத் தெரியும், தூங்கி எழுந்து மறுநாள் ஸ்டுடியோவுக்குச் செல்லும்போது நான் உற்சாகமாகிவிடுவேன் என்று! ஒரு புதிய ஐடியா உற்சாகத்தை ஏற்படுத்திவிடும். என்னுடைய உற்சாகம்தான் என்னைச் செயல்பட வைக்கிறது. அதுதான் என்னுடைய ரகசியம்.

இத்தனை ஆண்டுகள் உங்களை தாக்குப்பிடிக்கச் செய்தது எது?

என்னுடைய ஆற்றல்தான் என்னை இத்தனை ஆண்டுகள் தாக்குப்பிடிக்கச் செய்துள்ளது என்று நினைக்கிறேன். அடிப்படையில் நான் ஒரு நம்பிக்கைவாதி. அதுதான் என்னை முன்னகர்த்திச் செல்கிறது.  என்னுடைய அந்த இயல்பை நான் மிகவும் ரசிக்கிறேன்.

மேதமை என்று ஒன்று இருப்பதாக நீங்கள் நம்புகிறீர்களா?

மேதமையைப் பற்றி எனக்குத் தெரியாது. திறமையுள்ள ஒரு நபர், தன் துறையின் மீது உணர்வுரீதியாகக் கூடுதல் பற்றுடன் இருக்கும்போது தன் துறை சார்ந்த தொழில்நுட்பத்தில் கூடுதல் நிபுணத்துவம் பெற முடியும் என்று  நினைக்கிறேன். ஒவ்வொருவரும் ஏதோவொரு விதத்தில் பரிசளிக்கப்பட்டவர்கள்தாம். சராசரி மனிதன் தினமும் செய்யும் கற்பனையற்ற வேலைகளை இந்தக் கணக்கில் சேர்க்கக் கூடாது. மேதை என்பவன் அந்த வேலையை வித்தியாசமாகச் செய்பவன். நன்றாகவும் செய்பவன். அதுதான் வேறுபாடு.

இதுவரையில் யாரும் செய்திராத ஒன்றை நீங்கள் செய்திருக்கிறீர்கள். இனியும் அதைப் போல் ஒன்றை மற்றொருவரால் செய்ய முடியாது. அது முற்றிலும் தனித்துவமானது…

ஆமாம். தனித்துவமானதுதான். ஆனால், அதை மேதமை என்று சொல்ல வேண்டாம். மேதமை என்பது பசாங்குத்தனமான சொல்லாகும். அது எதையும் குறிப்பதில்லை. நீங்கள் ஓவியத் துறையில் பல மேதைகளைப் பார்த்திருப்பீர்கள். அவர்கள் அவர்களது வேலையை நன்றாகச் செய்திருக்கிறார்கள். அடிப்படையில் அவர்கள் கலைஞர்கள். மேதை என்று குறிப்பிடக் கூடியவர்கள் மற்ற கலைஞர்களைவிட சற்று சிறந்தவர்கள். அவ்வளவுதான்.

உங்கள் வாழ்க்கைப் பயணம் சார்ந்து என்ன மாதிரியான பயம் உங்களுக்கு இருந்தது?

நான் இளமையாக இருந்தபோது எனக்கு எந்த பயமும் இருந்ததில்லை. வாரத்துக்கு ஐந்து டாலர்கள் இருந்தால், நான் வெளியே சுற்றுவேன். பப்புகளில் வயலின் வாசித்து பணம் ஈட்டுவேன்.

உங்கள் கற்பனையைத் தூண்டும் விஷயங்கள் எவை?

என் கற்பனையைத் தூண்டும் விஷயங்கள் நிறைய உள்ளன. ஆனால், அவற்றையெல்லாம் கதையாக எழுதிவிட மாட்டேன். வாழ்க்கையில் நிறைய துக்கம் இருக்கிறது, உலகில் நிறைய பிரச்சினைகள் இருக்கின்றன. ஆனால், வாழ்க்கைக்கு வேறோர் அம்சமும் இருக்கிறது என்பதைக் காட்டும் ஒரு படத்தை உருவாக்குவதுதான் எனக்கு விருப்பமானது. வாழ்க்கை என்றால் என்ன என்ற கேள்வியை அல்ல, வாழ்க்கையின் சாத்தியங்களையே நான் காட்ட விரும்புகிறேன்!

Tags: