நமது வரலாற்று மாற்றங்களும் பூகோள அரசியலும் – பகுதி 1

பாஸ்கர் செல்வராஜ்

மெரிக்காவில் அதிக பணத்தை அச்சடித்து வெளியிட்டதால் நமது நாட்டு பங்குச்சந்தை உச்சத்தைத் தொட்டது. இன்று அதைக் குறைப்பதால் ரூபாய் மதிப்பு வீழ்கிறது. பொருட்களை இறக்குமதி செய்ய டொலர் இல்லாததால் இலங்கை பற்றி எரிகிறது. உக்ரைன் போரினால் எண்ணெய் விலை உயர்ந்து நமது ஊரில் மளிகை காய்கறிகள் விலை உயர்கிறது. இன்று ஒரு நாட்டின் பணத்தில் ஏற்படும் மாற்றம், மற்ற நாட்டில் நடக்கும் போர் நமது ஊரில் எதிரொலிக்கிறது என்றால் அன்று வரலாற்றில் இப்படியான மாற்றம் நடைபெற்றபோது இப்படியான எதிரொலிப்புகள் இருந்திருக்கும் அல்லவா! எல்லா இடங்களிலும் இப்படியான பிரச்சினை எழுவதில்லை. எண்ணெய் உற்பத்தியாகும் மத்தியக் கிழக்கு, ரஷ்யா அது செல்லும் பாதையில் உள்ள உக்ரைன், துருக்கி, ஈரான், எகிப்து, எத்தியோப்பியா, சோமாலியா, சூடான், பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், இலங்கை ஆகிய பகுதிகளில்தான் பிரச்சினை வெடிப்பதைப் பார்க்கிறோம். இந்தப் பகுதிகள் இன்று மட்டுமல்ல; அன்று முதலே பிரச்சினைகளை சந்தித்தே வந்திருக்கின்றன. அப்படியான மாற்றங்கள் நமது ஊரில் எதிரொலித்தே வந்திருக்கிறது. இன்று உலகமயம், நவீன உற்பத்தி, கப்பல் போக்குவரத்து, தொலைதொடர்பு இருக்கிறது. இவற்றின் மூலம் இதெல்லாம் சாத்தியமாகிறது. அன்று எப்படி?

நமது வரலாறும் வணிகமும்

வரலாற்று மாற்றங்களை உந்தித் தள்ளும் உற்பத்தி, வர்த்தகம், போக்குவரத்து, இதை சாத்தியமாக்கும் மக்கள் தொடர்பைக் கொண்டு இன்றைய மாற்றங்களுக்கும் அன்றைய வரலாற்று வளர்ச்சிக்குமான தொடர்பை புரிந்துகொள்ள முயற்சி செய்வோம். ஆரியர்கள் வருவதற்கு முன்பே ஈரானிய பகுதியைச் சேர்ந்தவர்கள் நம்முடன் வந்து ஒன்று கலந்து திராவிட வேளாண்குடிகளாய் மாறியதாக மரபணு ஆய்வு சொல்கிறது. இதன்மூலம் நாம் சிந்து சமவெளி பகுதியின் வழியாக (இன்றைய பஞ்சாப்) மத்தியக் கிழக்குடன் தொடர்பில் இருந்ததை இது காட்டுகிறது. பொ.ஆ.மு (பொது ஆண்டுக்கு முன், Before Common Era – BCE) 2000-1600இல் ஆப்கானிஸ்தான் வழியாக இந்தியாவுக்குள் நுழையும் ஆரியர்கள், சிந்து சமவெளி பகுதியில் தங்கி இந்த துணைக்கண்டத்தில் வேளாண்குடிகள், மேய்ச்சல்குடிகள் என இருவேறு சமூகக்கட்டமைப்பு உருவாக வித்திடுகிறார்கள். பொ.ஆ.மு 1213இல் இறந்த எகிப்தின் ரம்செஸ் II (Ramses II) இன் பதனம் செய்யப்பட்ட உடலோடு (Mummy) மிளகு இருந்ததைப் பதிவு செய்யும் வரலாறு அவர்கள் ஆப்பிரிக்காவின் நுழைவுக் கொம்பாக (Horn of Africa) விளங்கும் சூடான், சோமாலிய பகுதியில் இருந்த துறைமுகம் வழியாக இந்தியாவுடன் கடல்வழி வாணிபத் தொடர்பில் இருந்ததாகச் சொல்கிறார்கள். இது அன்றே நாம் ஆப்பிரிக்காவுடன் கடல்வழி வர்த்தகத் தொடர்பில் இருந்ததை உறுதி செய்கிறது.

ஆரியர்களைப் போன்ற நாடோடிக் குழுவாகச் சென்று பொ.ஆ.மு 1600-1000இல் ஈரானில் குடியேறும் பாரசீகர்கள் பொஆமு 500இல் அங்கே பேரரசைக் கட்டுகிறார்கள். ஈரானில் இருந்து ஐரோப்பாவின் நுழைவு வாயிலாக விளங்கும் அனடோலியா (இன்றைய துருக்கி) வரையிலான 2699 கிலோமீட்டர் நீளம் கொண்ட ஒரு விரைவு அரச பாதையை (Royal Road) ஏற்படுத்துகிறார்கள். துருக்கியில் இருக்கும் போஸ்பரஸ் நீரிணை நில வழியாக ஆசியாவையும் ஐரோப்பாவையும் இணைக்கும் பாலமாக இன்றும் விளங்கி வருவதில் இருந்து இப்படியான முயற்சிக்கு காரணம் தகவல் தொடர்பு மற்றும் வர்த்தகமாக இருந்திருக்கலாம் என ஊகிக்கலாம். தனியொருவராக கடந்தால் மூன்று மாதங்கள் எடுக்கும் இந்த தொலைவை, தொடர் ஓட்டப் பந்தயத்தை (Relay Race) ஒத்த முறையில் ஒருவரிடம் இருந்து மற்றொருவர் பொருளையும் செய்தியையும் பெற்று ஒன்பது நாட்களில் சென்றடையும் அட்டகாசமான முறையை உருவாக்கி நில வழியாக ஆசியாவும் ஐரோப்பாவும் வர்த்தகம் செய்யும் சாத்தியத்தை ஏற்படுத்துகிறார்கள்.

பொ.ஆ.மு (பொது ஆண்டுக்கு முன்) 535-518இல் இந்திய சிந்து சமவெளி மீதான அவர்கள் படையெடுக்கிறார்கள். அங்கு வேர்விட்டு வளர்ந்து கங்கைச் சமவெளிவரை பரவியிருந்த மேய்ச்சல் உற்பத்தியின் ஈடுபடும் இறைச்சியுண்ணும் பழக்கமுடைய ஆரியர்களின் உணவு உற்பத்தியிலும், அவர்களின் வேள்வியில் விலங்குகளை பலியிடும் வேதமத சமூக கட்டமைப்பிலும் இது உடைப்பை ஏற்படுத்தி இருக்க வேண்டும். கிட்டத்தட்ட இதேகாலத்தில் இவர்களின் ஆதிக்கம் இல்லாத அல்லது தளர்வாக இருந்த கிழக்கு கங்கைச் சமவெளி பகுதியில் இருந்து கொல்லாமையை வலியுறுத்தும் புதிய மாற்று சமண, பௌத்த கருத்தியல் எழுவதில் இருந்து இந்த உணவு உற்பத்தியில் உடைப்பு ஏற்பட்டிருந்ததை நாம் உறுதிசெய்து கொள்ளலாம். பொ.ஆ.மு நான்காம் நூற்றாண்டிலேயே மிளகு பயன்பாடு இருந்த கிரீஸின் அலெக்ஸாண்டர் வர்த்தக முக்கியத்துவம் வாய்ந்த எகிப்தில் அலெக்ஸாண்ட்ரியா நகரை உருவாக்குவது மட்டுமல்ல; பாரசீகர்கள் உருவாக்கிய அதே அரச பாதையின் வழியாகப் படையெடுத்துச் சென்று அவர்களை வீழ்த்தி பொ.ஆ.மு 323இல் இந்தியாவை அடைகிறார். அவர் இந்தியா வரை வரவேண்டிய தேவை இங்கிருந்து சென்ற சரக்குகளாகத்தான் இருந்திருக்க வேண்டும்.

கிழக்கு கங்கை சமவெளியைச் சேர்ந்த சந்திரகுப்த மௌரியர் அவரை சென்று சந்திக்கிறார். சிந்து சமவெளியை மையமாகக்கொண்டு எழுந்த ஆரிய மேய்ச்சல்குடிகளின் ஆதிக்க சமூக கட்டமைப்புக்கு மாற்றான புதிய பௌத்த-சமண மத வேளாண்குடிகளின் அரசு எழுகிறது. இவர்களின் இந்த தொடர்பும் ஒத்துழைப்பும் இந்தப் பொருட்களைப் பெறும் வழிமுறையாக நாம் கருதலாம். இப்படியான வர்த்தகம் பணக்காரன், ஏழை என்ற வர்க்க வேறுபாடுகளை உருவாக்கி போட்டி பொறாமைக்கு இடமளிக்கும். பொ.ஆ.மு 184இல் மௌரிய பிருஹத்ரதனை பார்ப்பன படைத்தளபதி புஷ்யமிங்கன் கொலைசெய்து ஆட்சியைப் பிடிக்கும் முனைப்பு, அந்த மௌரிய கூட்டரசை உடைக்கிறது. அது ஆசியாவில் இருந்து ஐரோப்பா வரையான வர்த்தகச் சங்கிலியில் நிச்சயம் உடைப்பை ஏற்படுத்தி இருக்கும். இப்போது பொஆமு 130இல் சீனாவை ஐரோப்பாவுடன் இணைக்கும் பழைய பட்டுச்சாலை உருவாக்கம் முழுமையடைவதைப் பார்க்கிறோம்.

சீனர்கள் உடைந்த இந்த வர்த்தக வாய்ப்பை அடைவதாக நாம் இதைப் புரிந்துகொள்ளலாம். கிரேக்கர்களைத் தொடர்ந்து பொ.ஆ.மு 30இல் எகிப்தை வெல்லும் ரோமானியப் பேரரசு தென்னிந்தியாவின் மேற்கு கடற்கரைப் பகுதி வழியாக தொன் கணக்கில் மிளகை இறக்குமதி செய்கிறது. அதுவரையிலும் விலைமதிப்பு மிக்கதாக இருந்த மிளகின் விலை அங்கே வீழ்ச்சியடைகிறது. இதன்மூலம் அன்றைய வர்த்தகப் பெருக்கத்தின் அளவையும் அதன்மூலமான செல்வப் பெருக்கத்தையும் நாம் ஊகித்துக் கொள்ளலாம். இந்தக் காலத்தில் தெற்கே முற்கால சோழர்களின் எழுச்சியைப் பார்க்கிறோம். இவை எல்லாம் நமது வரலாற்று மாற்றங்கள், இந்தப் பகுதியில் மட்டுமே வாழ்ந்த மக்கள் சமூக வளர்ச்சியின் ஊடான விளைவு மட்டுமே அல்ல; இதற்கு வெளியில் ஏற்பட்ட மக்கள் சமூக வளர்ச்சியும் அதன் தாக்கமும் இங்கே பெருமளவு வினையாற்றி இருக்கிறது; வரலாற்று மாற்றங்களை உந்தித்தள்ளும் நமது பொருளாதாரமும் வணிகமும் ஆசியா, ஆப்பிரிக்கா, ஐரோப்பா ஆகிய மூன்று கண்டங்களுடனும் தொடர்புடையது என்பதை தெளிவாகக் கோடிட்டுக் காட்டுகின்றன. நீர்வழி வர்த்தகத்தில் இந்தியாவின் மேற்கு, கிழக்கு கடற்கரைப் பகுதிகளும் ஆப்பிரிக்காவின் சோமாலியா, சூடான், எகிப்து பகுதிகளும், நில வழி வர்த்தகத்தில் பஞ்சாப், ஆப்கானிஸ்தான், ஈரான், ஈராக், சிரியா, துருக்கி உள்ளிட்ட மத்தியக் கிழக்குப் பகுதிகளும் முக்கிய பங்கு வகித்திருக்கின்றன என்பதை ஆணித்தரமாக நிறுவுகின்றன.

மத்தியக் கிழக்கும் நமது மாற்றங்களும்

இந்த வர்த்தக முக்கியத்துவம் வாய்ந்த பகுதிகளில் ஏற்பட்ட அரசியல் மாற்றங்கள் நமது அரசியல் மாற்றங்களிலும் எதிரொலித்திருக்கின்றன. பொ.ஆ (Common Era – CE) நான்காம் நூற்றாண்டுக்குப் பிறகு ரோமப் பேரரசு உடைப்பை சந்தித்து அனடோலியாவை (துருக்கி) மையமாகக் கொண்ட பைசன்டைன் பேரரசு (அல்லது கிழக்கு ரோமப் பேரரசு) எகிப்து மற்றும் மத்தியக் கிழக்கு முழுவதையும் தனது கட்டுப்பாட்டில் கொண்டுவந்து ஆசிய – ஐரோப்பிய நீர்-நில வழி ஒற்றைத் தலைமையின்கீழ் வருகிறது. குறிப்பிட்ட காலத்தில் வீசும் பரவக்காற்றை பயன்படுத்தி நடக்கும் கடல் வழியைவிட தடையற்ற நில வழி போக்குவரத்து அப்போது அதிகம் நடந்திருக்கும். இப்போது கடல் வழியுடன் தொடர்புடைய முற்கால சோழர்கள் வீழ்ந்து தெற்கில் பௌத்த – சமணத்தைப் பின்பற்றும் களப்பிரர்களும் நில வழியுடன் தொடர்புடைய வடக்கில் பார்ப்பனியத்தை நிறுவும் குப்தர்களும் எழுவதைப் பார்க்கிறோம்.

ஆறாம் நூற்றாண்டில் ஸ்லாவியர்களின் தாக்குதலும் ஏழாம் நூற்றாண்டில் மத்தியக் கிழக்கில் எழும் இஸ்லாமும் ஆசிய மைனர் என்றழைக்கப்பட்ட இன்றைய துருக்கியை ஒட்டிய பகுதிகளுக்குள் பைசன்டைன் ஆட்சியைச் சுருக்கி நீர் மற்றும் நிலவழி ஆகிய இரண்டும் உடைப்பைச் சந்திக்கும்போது வடக்கில் பார்ப்பனிய குப்தர்களின் ஆட்சி வீழ்ச்சியைச் சந்திக்கிறது. தெற்கில் பாண்டிய, பல்லவ சோழர்களின் ஆட்சி எழுகிறது. முகமதிய ஆட்சியாளர்களும் வணிகர்களும் இந்தியாவை நோக்கி படையெடுக்கிறார்கள். மத்தியக் கிழக்கு பல காலிஃபேட்டுகளாக உடையும்போது தென்னிந்தியாவின் கிழக்கு, மேற்கு கடற்கரைப் பகுதியைக் கைப்பற்றும் பிற்கால சோழர்கள் சீனப் பொருட்களுக்கான கடல்வழி வாணிப முக்கியத்துவம் வாய்ந்த தென்கிழக்கு ஆசிய பகுதி வரை தனது ஆதிக்கத்தை ஏற்படுத்துகிறார்கள். பன்னிரண்டாம் நூற்றாண்டில் பொருள் உற்பத்தியாகும் சீனா முதல் அவை ஐரோப்பாவுக்குச் செல்லும் பழைய பட்டுச்சாலை வரை பெரும் பரப்பை உள்ளடக்கிய மாபெரும் மங்கோலிய பேரரசு எழுந்து நில வழி மீண்டும் முழுமையடையும்போது இங்கே பரந்து விரிந்திருந்த பிற்கால சோழப் பேரரசின் வீழ்ச்சி தொடங்குகிறது.

புதிய கடல்வழியும் கூடுதல் வேதனையும்

1453இல் ஓட்டோமான் பேரரசு ஆசியாவையும் ஐரோப்பாவையும் இணைக்கும் முக்கியமான போஸ்பரஸ் நீரிணையை பைசன்டைன் அரசிடம் இருந்து கைப்பற்றி இரு கண்டத்துக்கும் இடையிலான நில வழி வர்த்தகத்துக்குத் தடையை ஏற்படுத்துவது மேற்கு ஐரோப்பியர்களை மாற்று கடல்வழிகளை கண்டறிவதை நோக்கி தள்ளுகிறது. அது அட்லாண்டிக் பகுதியில் இருக்கும் போர்ச்சுகளைச் சேர்ந்த வாஸ்கோடாகாமா தென்னாப்பிரிக்காவில் உள்ள கேப். ஆப். குட். ஹோப் (Cape of Good hope) வழியாக 1497-99இல் கோழிக்கோட்டை அடைய வைக்கிறது. 1517இல் எகிப்தையும் ஓட்டோமான் பேரரசு கைப்பற்ற இந்த மூன்றாவது புதிய கடல்வழி ஆசிய – ஐரோப்பிய வர்த்தக வழியின் முக்கியத்துவத்தைக் கூட்டி இந்தியாவில் பார்ப்பனிய ஆதிக்கத்தோடு ஐரோப்பிய காலனியாதிக்கமும் ஏற்பட காரணமாகிறது.

முதல் உள்ளூர் ஆதிக்கம் வேளாண்குடிகளை நிலத்தில் இருந்து வெளியேற்றி அவர்களைப் பிற்படுத்தப்பட்ட, பஞ்சம மக்களாக மாற்றியதும், இவர்களுடன் இணைந்த இரண்டாவது வெளியூர் ஆதிக்கம் இவர்களை உலகம் முழுக்க அடிமைகளாக ஏற்றுமதி செய்ததும் கடந்தகால வரலாறு மட்டுமல்ல; நிகழ்கால கசப்பான மனித அவலமாக இன்றும் நம் கண்முன்னே சாதிவெறி ஆதிக்கமாகவும் இலங்கை இனவெறிக் கொடுமையாகவும் நிற்கிறது. இந்த வர்த்தகத் தொடர்பும் வரலாற்று மாற்றங்களும் நமது உற்பத்தி இயல்பான வளர்ச்சியை அடையாமல் தடுத்திருப்பதையும் இந்த மண்ணில் வாழும் மக்களின் தேவைக்கானதாக இருக்க வேண்டிய உற்பத்தியை மற்றவரின் தேவைக்கு அளிக்கும் ஏற்றுமதிக்கானதாக மாற்றி இருப்பதையும் கேள்விக்கிடமின்றி நம்மால் உறுதிசெய்து கொள்ள முடிகிறது. அப்படியான பொருளாதார தேவைக்கேற்ற அரசியல், மக்களைப் பிரிப்பதாகவும் பிளவுபடுத்துவதாகவும் மாறி சமூக முன்னேற்றத்தைத் தடுத்து தேங்கச் செய்திருப்பதற்கு நிகழ்கால யதார்த்தமே சாட்சியாக நிற்கிறது. பொஆமு 2200இலேயே இரும்பின் பயன்பாடு இருந்தது என்றால் நமது சமூகம் மேற்குலகத்தைப் போல ஏன் மேற்கொண்டு நாம் பொருளாதாரத்தில் வளர்ந்து புதுமைகள் செய்து முன்னேறி வளர்ந்த சமூகமாக மாறவில்லை?

உலகப்பிளவும் இந்திய சுயசார்பும்

இந்தியாவையும் தென்கிழக்கு ஆசிய நாடுகளையும் காலனியப்படுத்தியதன் மூலம் மற்றுமோர் உற்பத்தி மையமான சீனாவை சுற்றிவளைத்த ஐரோப்பியர்கள் அதை ஓபியம் போரின் வாயிலாக வீழ்த்தி, தங்களின் உற்பத்திக்குத் தேவையான கூலியற்ற அடிமைகளையும் மூலப்பொருட்களையும் மற்ற ஆசிய பகுதிகளில் இருந்து பெற்றுக் கொண்டார்கள். இதன்மூலம் குவிந்த மூலதனத்தின் மூலம் முழுமையான முதலாளித்துவ நாடுகளாக மாறிய அவர்கள் அதன் உச்சமாக உற்பத்தியும் மூலதனமும் ஒருசிலரிடம் குவிந்து கிடக்கும் ஏகாதிபத்தியங்களாக மாறி தங்களது செல்வத்தை மேலும் பெருக்க உலகப்போர்களில் அடித்துக் கொண்டார்கள். முன்பு 1453இல் ஏற்பட்ட அனடோலியா வர்த்தக உடைப்பில் கிழக்கு ஐரோப்பிய நாடுகளை பலவீனப்படுத்தி மேற்கு ஐரோப்பிய நாடுகள் எழுந்தன. பிந்தைய உலகப் போர்ச்சூழலை பயன்படுத்தி ஆட்சிக்கு வந்த ரஷ்ய போல்ஷெவிக்குகளின் இறையாண்மையுள்ள சுயசார்பு புரட்சிகர மக்கள் அரசியல் கிழக்கு ஐரோப்பா மற்றும் ஆசியாவுக்கு பரவி மேற்கை பலஹீனப்படுத்துகிறது.

ஐரோப்பிய கண்டத்துக்கு வெளியிலும் விளிம்பிலும் இருக்கும் அமெரிக்கா, இங்கிலாந்து, பிரான்ஸ், ஜெர்மனி ஆகிய இந்நாள், முன்னாள் ஏகாதிபத்திய மேற்கு ரஷ்யா தலைமையிலான கிழக்கை பனிப்போரின் மூலம் எதிர்கொள்கின்றன. ஆசிய கண்ட நிலத்துக்கு வெளியில் இருக்கும் தீவு நாடுகளான ஜப்பான், தைவான், தென்கொரிய நாடுகளில் தங்களுக்கு தேவையான மலிவான தொழிலாளர்கள் மற்றும் தொழிற்துறை உற்பத்தி பொருட்களையும் அந்த உற்பத்திக்குத் தேவையான மலிவான எரிபொருளை அரேபிய நாடுகளில் இருந்தும் பெற்றுக் கொள்கிறார்கள். நடுநிலை வகித்த இந்தியா இருபுறமும் பலன்களைப் பெற்ற அதேவேளை, தனது (பார்ப்பன) சுயசார்பை தக்கவைத்துக் கொண்டது. எண்பதுகளில் அரேபிய எண்ணெய் வளத்தை ஆயுதமாக்கி உற்பத்தியைப் பெருக்கி எரிபொருள் விலையை வீழச்செய்து சோவியத்தை பலஹீனமாக்கும் மேற்கு அதனை வீழ்த்தி உலக நாடுகள் அனைத்தையும் மேற்கின் தலைமையிலான ஒரு துருவ உலகமயத்தை உருவாக்குகிறது.

தொடரும்

Tags: