மாமேதை மார்க்ஸ் ஒரு சமரசமற்ற போராளி!

-என். குணசேகரன்

மார்ச் 14 அன்று மதியம் 3.15 மணியளவில் மகத்தான சிந்தனையாளர் தனது சிந்தனையை நிறுத்திக் கொண்டார்” என்று, மார்க்ஸ் மறைந்த செய்தியை ஏங்கெல்ஸ் இரங்கல் கூட்டத்தில் தெரிவித்தார். மார்க்ஸ் வாழ்நாள் முழுவதும் சிந்தித்தது மட்டுமல்ல; தவறான கருத்துக்களுக்கு எதிராக தத்துவார்த்த, சித்தாந்தப் போராட்டத்தை இடைவிடாது நடத்தி வந்தார். இளம் வயதிலேயே “அனைத்தின் மீதான ஈவிரக்கமற்ற விமர்சனம்” என்ற  துணிவான நடைமுறையை அவர் பின்பற்றி வந்தார்.

மார்க்ஸ், முதலாளித்துவத்தின் இயக்கத்தை ஆராய்கிற போது, அரசியல், பொருளாதாரம், தத்துவம், சமூகம் என பல துறைகளில் ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட எழுத்துக்களை விமர்சன ரீதியாக ஆராய்ந்தார். பல அறிஞர்களோடு கருத்து ரீதியில் போராடினார். இந்தப் போராட்டங்களின் வழியாக கம்யூனிச இலட்சியத்தை வளர்த்தெடுத்தார்.

தத்துவார்த்தத் துறையில் ஹெகல், பாயர்பாக் போன்றவர்களின் கருத்துக்களோடு போராடி, இயக்கவியல், வரலாற்றுப் பொருள்முதல்வாதத்தை கண்டறிந்தார்.அதேபோன்று, பொருளாதாரத்துறையில் ஆடம் ஸ்மித், டேவிட் ரிக்கார்டோ போன்றவர்களோடு போராடி, உபரி மதிப்பு உள்ளிட்ட கோட்பாடுகளை கண்டறிந்தார். சோசலிசக் கோட்பாடுகளுக்காக சார்லஸ் பூரியே, ராபர்ட் ஓவன் உள்ளிட்ட பலரின் கற்பனாவாத சோசலிசக் கருத்துக்களோடும் போராடினார்.விஞ்ஞான சோசலிசக் கோட்பாடுகளை உருவாக்கினார்.

மேலான புரட்சிக்காரர்!

“மார்க்ஸ் எல்லாவற்றுக்கும் மேலாக ஒரு புரட்சிக்காரர். போராடுவது அவரது வாழ்க்கையின் பிரிக்க முடியாத அங்கம்” என்று ஏங்கெல்ஸ் தனது இரங்கல் உரையில் குறிப்பிட்டார்.பெரும் கருத்துப் போராட்டங்களை நடத்தி மானுட விடுதலைக்கான தத்துவத்தை உருவாக்கிய உன்னதமான  வாழ்க்கையை மார்க்ஸ் வாழ்ந்தார். இதற்கு ஒர்  எடுத்துக்காட்டை குறிப்பிடலாம். மார்க்ஸ் எழுதிய ‘கோதா செயல்திட்ட விமர்சனம்’ என்ற ஒரு சிறு நூல் மகத்தான சிறப்புக்கள் கொண்டது. ‘அணுவைத் துளைத்து ஏழு கடலை புகட்டி  குறுகத் தரித்த’ படைப்பாக அந்த நூலை காரல் மார்க்ஸ் உருவாக்கினார். சுமார் 150 ஆண்டுகளுக்கு முன்பு 1875 ஆம் ஆண்டு இந்த  நூலினை மார்க்ஸ் எழுதினார். ‘கோதா திட்டம்’ என்ற செயல் திட்டம் ஜெர்மானிய சமூக ஜனநாயக தொழிலாளர் கட்சி, ஜெர்மன் தொழிலாளர் கூட்டமைப்பு ஆகிய இரண்டு அமைப்புகளின் இணைப்பு மாநாடு கோதா எனும் நகரில் நடந்த போது நிறைவேற்றப்பட்ட தீர்மானம். இந்தத் திட்டத்தையே மார்க்ஸ் தனது கூரிய தாக்குதலுக்கு உள்ளாக்கினார்.

ஜெர்மன் தொழிலாளர் கூட்டமைப்பின் தலைவரான லேசெல் மேற்கண்ட திட்டத்தில் சோசலிச அடிப்படைக் கருத்துக்களை நீர்த்துப் போகச் செய்யும் வகையில் பல கருத்துக்களை இணைத்திருந்தார். லேசல் மார்க்சின் சீடராக தன்னை வெளிப்படுத்திக் கொண்டாலும் உண்மையில் மார்க்சிய அடிப்படைக் கோட்பாடுகளுக்கு எதிராகவே நிலைபாடுகள் எடுத்து  வந்தார். அவற்றை எதிர்த்த கருத்துப் போராட்டம் தான் மார்க்சின் “கோதா செயல்திட்ட விமர்சனம்” எனும்  நூல். 

கூரிய விமர்சனங்கள் 

கோதா வேலை திட்ட நகல் மார்க்சின் கூரிய விமர்சனத்தினால் பகுப்பாய்வு செய்யப்பட்டது. மிகக் கடுமையாக ஈவிரக்கமற்ற விமர்சனங்களை முன்வைத்து தனது கருத்தாக்கங்களை மார்க்ஸ் வெளிப்படுத்தியுள்ளார். லேசல்  இயக்கத்தைச் சார்ந்தவர்கள் கோதா திட்டத்தில்,“சமமான பகிர்வு”, “சுதந்திரமான அரசு” என்றெல்லாம் பேசினர். உண்மையில் அவர்கள் முதலாளித்துவ ஜனநாயகம்,முதலாளித்துவ சமூக நியதிகளை பரிந்துரைக்கின்றனர் என்பதை மார்க்ஸ்  அம்பலப்படுத்தினார். “அனைத்துச் செல்வங்களுக்கும் மூலாதாரம் உழைப்பே” என்று அவர்கள் கோதா திட்டத்தின் துவக்கத்தில் குறிப்பிடுவது, தொழிலாளர்களை ஏமாற்றுவதற்கே என்பதை மார்க்ஸ் தெளிவு படுத்துகிறார். உண்மையில் இயற்கையும் செல்வங்களுக்கு மூலாதாரமாக அமைந்துள்ளது என்பதை மார்க்ஸ் விளக்குகிறார்.

துல்லியமான, அறிவியல் ரீதியான பார்வையை கைவிட்டு, முதலாளித்துவ முழக்கங்களை உயர்த்திப் பிடிக்கும் போக்கினை மார்க்சிய மூலவர்கள் கடுமையாக எதிர்த்துப் போராடி வந்துள்ளனர். உழைப்பு, வர்க்கங்கள், கூலி, தொழிலாளி வர்க்க விடுதலையில் அரசின் பங்கு, முதலாளித்துவத்திலிருந்து கம்யூனிசத்திற்கு மாறுகிற புரட்சிகர மாற்றம் போன்ற கருத்தாக்கங்களை மார்க்ஸ் அந்த நூலில் விவரிக்கிறார். 

  • பாட்டாளி வர்க்க சர்வாதிகாரம்
  • முதலாளித்துவத்திலிருந்து கம்யூனிசத்திற்கு செல்வதற்காக இடைப்பட்ட நிலை
  • கம்யூனிச சமுதாயத்தின் இரண்டு கட்டங்கள்
  • சமூக உற்பத்தி பொருட்களை உற்பத்தி செய்வது மற்றும் அவற்றின் விநியோகம்
  • பாட்டாளி வர்க்க சர்வதேசியம்
  • தொழிலாளி வர்க்கத்தின் கட்சி

போன்ற மார்க்சியக் கருத்தாக்கங்களை புரிந்து கொள்ள இந்த நூல் வழிகாட்டுகிறது. இந்த உயரிய தத்துவார்த்தக் கருத்துக்கள் அனைத்தையும் இந்த சிறுநூலில் மார்க்ஸ் அழுத்தமாக விளக்கியுள்ளார்.  தொழிலாளர்கள் ஆதரவைத் திரட்ட கோதா திட்டத்தில் ஒரு ‘கவர்ச்சியான’ கருத்து முன்வைக்கப் பட்டது. தொழிலாளி வர்க்கம் மட்டுமே புரட்சிகரமானது; மற்ற வர்க்கங்கள் அனைத்தும் பிற்போக்கானவை என்று அந்த திட்டத்தில் சொல்லப்பட்டது. விவசாயிகள், நடுத்தர வர்க்கங்கள், கைவினைஞர்கள் உள்ளிட்ட பல வர்க்கப் பிரிவுகள், மூலதனக் குவியல் காரணமாக பாட்டாளி வர்க்க நிலைக்குத் தள்ளப்படுவதும், அவர்கள் புரட்சிகர அணிச் சேர்க்கைக்கு வருகிற வாய்ப்புகளை மறுக்கும் வகையிலும்  இந்தக் கருத்து முன்வைக்கப்பட்டது. இதனை மார்க்ஸ் கடுமையாக விமர்சித்தார்.

சந்தர்ப்பவாதமும், துரோகமும் 

லெனின் இந்த நூலை மிக முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதினார். இயக்கவியல் பொருள் முதல்வாதம், சமூக வளர்ச்சி விதி ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு தனது கருத்தாக்கங்களை மார்க்ஸ் இந்த நூலில் விளக்குவதாக லெனின் குறிப்பிட்டார். கம்யூனிசம் பற்றி இட்டுக் கட்டிய பல விளக்கங்கள், வரையறைகளை அளிப்பதற்கு மாறாக முதலாளித்துவத்தில் இருந்து கம்யூனிசம் எப்படி வளர்கிறது என்கிற அந்த வளர்ச்சியையும் கம்யூனிசத்தை நோக்கிய பொருளாதார வளர்ச்சிக் கட்டங்களையும் இது விளக்குவதாக லெனின் குறிப்பிட்டார். சந்தர்ப்பவாத, சமரசக் கருத்துக்களை கொண்ட ஒரு வேலைத் திட்ட ஆவணத்தின் மீதான கடுமையான விமர்சனக் கணைகளைத் தொடுத்து, அதனை தோலுரித்துக் காட்டும் வாதங்களை உள்ளடக்கியதாக இந்த நூல் உள்ளது. இந்த வாதப் போரின் ஊடாக, மார்க்சிய கட்சியின் வேலைத்திட்டம் எவ்வாறு இருக்க வேண்டுமென்ற புரிதலை இந்த நூல் ஏற்படுத்துகிறது. ஒரு கம்யூனிஸ்ட் கட்சி சந்தர்ப்பவாத, துரோகக் கருத்துக்களை சமரசமின்றி எதிர்த்துப் போராடி மார்க்சியக் கோட்பாடுகளை பாதுகாக்க வேண்டுமென்பது இந்த நூல் எடுத்துரைக்கும் பாடம்.

சோசலிச இயக்கத்தில் மார்க்சியத்தை திரித்து, அதன் புரட்சிகரத் தன்மையை குலைத்திடும் போக்கு  நீண்ட காலம் இருந்து வந்துள்ளது. சோசலிசம் அல்லது பொதுவுடைமை பற்றி இனிக்க, இனிக்கப் பேசி உழைக்கும் மக்களை ஈர்த்து, அவர்களை சோசலிச இலட்சியத்திலிருந்து தடம் மாறச் செய்திடும் பல நிகழ்வுகளை  உலக சோசலிச இயக்கம் கண்டுள் ளது. இந்த போக்குகள் அனைத்தும் முதலாளித்துவ ஏற்றத்திற்கே உதவியுள்ளன.

“என்றும் நிலைத்திருக்கும்!”

பல அரசியல் சக்திகளோடு ஒன்றுபட்ட செயல்பாட்டை மேற்கொள்கிற போது உருவாக்கப்படுகிற பொது செயல் திட்டம் பாட்டாளி வர்க்கப் புரட்சி இலட்சியத்தின் அடிப்படைகளை கைவிடுவதாகவும் சமரசம் செய்து கொள்வதாகவும் அமைந்து விடக்கூடாது. இதனை மார்க்சிய வழியில் நின்று லெனினும் வழி காட்டியுள்ளார். வரலாற்றில் பல அறிஞர்கள், தலைவர்கள் பல காரணங்களால் போற்றப்படுகின்றனர். ஆனால் மார்க்ஸ் காலம் வரை மானுடம் சேகரித்த அறிவுச் செல்வங்களை தனது கூரிய பருந்துப் பார்வையால் பகுத்தறிந்து மானுட விடுதலைக்கான தத்துவம் கண்டவர் கார்ல் மார்க்ஸ். இவை ஏங்கல்ஸ் தனது இரங்கல் உரையில் குறிப்பிட்ட பொன்னான சொற்றொடர் இது: “…அவரது பெயரும், அவரது எழுத்துக்களும் காலம் காலமாக நீடித்திருக்கும்.” ஏங்கெல்சின் இந்தக் கூற்று இன்றளவும் மெய்யானதாகத் திகழ்கிறது. 

கட்டுரையாளர் : சி.பி.ஐ.(எம்), மாநில செயற்குழு உறுப்பினர் 

Tags: