பிரதமர் அலுவலக ஆக்கிரமிப்பு குறித்து சட்டத்தரணிகள் சங்கத்தின் அவசர கோரிக்கை!

ன்று (13.07.2022) கொழும்பில் உள்ள பிரதமர் அலுவலகத்தை ஆக்கிரமித்து ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டமை குறித்து, இலங்கை சட்டத்தரணிகள் சங்கம், தமது அதிருப்தியை வெளியிட்டுள்ளது.

எனவே போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்கள், உடனடியாக பிரதமர் அலுவலக வளாகத்தை அதிகாரிகளிடம் ஒப்படைக்கவேண்டும் என்று சட்டத்தரணிகள் சங்கம் அழைப்பு விடுத்துள்ளது.

அரச அலுவலகங்களை ஆக்கிரமிக்க முயற்சிப்பது மற்றும் சொத்துக்களை சேதப்படுத்துவது அமைதியான போராட்டமாக இருக்காது என்று சங்கத்தின் அறிக்கை ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேநேரம் சபாநாயகர், பிரதமர் மற்றும் நாடாளுமன்றத்தில் உள்ள அனைத்து அரசியல் கட்சிகளின் தலைவர்கள் மற்றும் பொதுமக்கள் நாட்டின் நிலையை சூழ்நிலையை புரிந்துகொண்டு மிகுந்த பொறுப்புடனும், தியாக உணர்வுடனும் செயற்படவேண்டும் என்றும் சங்கம் கோரியுள்ளது.

இதேவேளை இந்த நாட்டின் அரசியல் தலைவர்கள் உறுதியளித்த அமைதியான அதிகார மாற்றத்திற்கு இடமளிக்குமாறு இலங்கை மக்களிடம், குறிப்பாக போராட்டங்களில் ஈடுபட்டுள்ளவர்களிடம் கோருவதாக சங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

ஜனாதிபதி கோத்தபய ராஜபக்சவின் பதவி விலகல் குறித்த அறிவிப்பு இன்று வெளியிடப்படும் என்ற எதிர்பார்ப்பு மக்கள் மத்தியில் இருந்தது

எனினும், ஜனாதிபதி நாட்டை விட்டு வெளியேறியுள்ள நிலையில், அவரின் பதவி விலகல் கடிதம் தொடர்பில், பொதுமக்களுக்கு எதுவும் தெரிவிக்கப்படவில்லை.

இதற்கிடையில், பொது பாதுகாப்பு கட்டளைச் சட்டத்தின் கீழ் மேல் மாகாணத்தில் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டதாகவும் செய்திகள் வந்தன.

அத்துடன் அரசியலமைப்பின் கீழ் பிரதமரை பதில் ஜனாதிபதியாக நியமித்ததாக சபாநாயகர் அறிவித்தார்.

இந்த மாறுபட்ட தகவல்தொடர்புகள் பொதுமக்களிடையே குழப்பத்தையும் நிச்சயமற்ற தன்மையையும் ஏற்படுத்தியுள்ளன என்றும் சட்டத்தரணிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

அமைதியை பேண ஒத்துழைப்பு வழங்குமாறு படைகளின் தலைமை அதிகாரி கோரிக்கை!

டுத்த ஜனாதிபதி நியமிக்கப்படும் வரை நாட்டின் அமைதியையும் பாதுகாப்பையும் பேணுவதற்கு முப்படையினருக்கும் காவல்துறையினருக்கு ஒத்துழைப்பு வழங்குமாறு, பாதுகாப்புப் படைகளின் தலைமை அதிகாரி ஜெனரல் ஷவேந்திர சில்வா வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இது தொடர்பில் விசேட அறிக்கையொன்றை விடுத்துள்ள அவர், தற்போதுள்ள அரசியலமைப்பின் பிரகாரம், காவல்துறையினரும், முப்படையினரும் செயற்பட்டதாக தெரிவித்தார்.

ஜனாதிபதியின் பதவி விலகல் இடம்பெறுமென சபாநாயகர் தமக்கு அறிவித்ததாகவும் ஷவேந்திர சில்வா குறிப்பிட்டுள்ளார்.

ஜனாதிபதியின் பதவி விலகலின் பின்னர் நியமிக்கப்படும் அடுத்த ஜனாதிபதியை நியமிக்கும் வரையான காலப்பகுதியில், மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பிலும் சபாநாயகருடன் கலந்துரையாடியதாக பாதுகாப்புப் படைகளின் தலைமை அதிகாரி தெரிவித்தார்.

கட்சித் தலைவர்களின் கூட்டத்தை கூட்டி அடுத்த ஜனாதிபதி நியமிக்கப்படும் வரையில் எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து சபாநாயகரிடம் தெரிவிக்குமாறு முப்படைத் தளபதிகள் மற்றும் காவல்துறைமா அதிபர் ஆகியோர் சபாநாயகரிடம் கேட்டுள்ளனர்.

இது தொடர்பான கட்சித் தலைவர்கள் கூட்டம் இன்று மாலை 5 மணிக்கு ஆரம்பமானது. அதில் எடுக்கப்படும் முடிவுகள் மக்களுக்கு தெரிவிக்கப்படும் என்றார்.

உரிய தீர்மானத்தை அறிவித்ததன் பின்னர்,  ஜனாதிபதியொருவர் நியமிக்கப்படும் வரை நாட்டின் அமைதிக்கு ஆதரவளிக்குமாறு படைகளின் தலைமை அதிகாரி கோரிக்கை விடுத்துள்ளார்.

அரச அல்லது தனியார் சொத்துக்களை அழிக்காமல் அமைதியை நிலைநாட்ட உதவுமாறு பாதுகாப்புப் படைகளின் தலைமை அதிகாரி அறிவுறுத்தியுள்ளார்.


Tags: