இந்தியக்குடியரசுத் தலைவராகிறார் திரௌபதி முர்மு

Droupadi Murmu

ந்தியக்குடியரசுத் தலைவர் தேர்தலில், பாரதிய ஜனதாக்கட்சி தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியின் வேட்பாளர் திரௌபதி முர்மு (Droupadi Murmu), நாட்டின் 15-ஆவது குடியரசுத் தலைவராகிறார். தற்போதைய குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் பதவிக்காலம் ஜூலை  24-ஆம் தேதி முடிவடையவுள்ள நிலையில்,  புதிய குடியரசுத் தலைவரைத் தேர்ந்தெடுப்ப தற்கான தேர்தல் கடந்த ஜூலை 18 அன்று நடைபெற்றது.  இதில், ஒட்டுமொத்தமாக 99.18 சதவிகித வாக்குகள் பதிவானதாக தேர்தல் ஆணையம் அறிவித்தது. 

776 எம்பிக்கள், 4,033 எம்எல்ஏக்கள் என குடியரசுத் தலைவர் தேர்தலில் 4,809 உறுப்பினர்கள் வாக்களித்தனர். தமிழ்நாடு, புதுச்சேரி, கர்நாடகா, கேரளா உள்ளிட்ட 12 சட்டப்பேரவைகளில் நடைபெற்ற வாக்குப் பதிவுகளில் 100 சதவிகித வாக்குகள் பதிவாகின.  பா.ஜ.க எம்.பி.க்கள் சன்னி தியோல்,  சஞ்சய் தோத்ரே ஆகியோர் வாக்களிக்கவில்லை. சிவசேனா கட்சியை சேர்ந்த 2 எம்.பி.க்கள் வாக்களிக்கவில்லை. பகுஜன்  சமாஜ், காங்கிரஸ், சமாஜ்வாதி, மஜ்லீஸ்  கட்சிகளை சேர்ந்த தலா எம்.பி. என மொத்தம் 8 எம்.பி.க்கள் வாக்களிக்கவில்லை. குடியரசுத் தலைவர் தேர்தலில் எம்எல்ஏ-க்களின் வாக்கு மதிப்பு 5 லட்சத்து 23 ஆயிரத்து 231 ஆகும். மொத்த எம்.பி.க்களின் வாக்கு மதிப்பு 5 லட்சத்து  43 ஆயிரத்து 200 ஆகும். ஒட்டுமொத்த வாக்கு களின் மதிப்பு 10 லட்சத்து 86 ஆயிரத்து  431 ஆகும். இதில் 50 சதவிகிதத்திற்கு அதிகமான வாக்குகளை பெறுபவர் குடியரசுத் தலைவராக தேர்ந்தெடுக்கப்படுவார்.  அந்த அடிப்படையில், வாக்கு எண்ணிக்கை முன்பே அறிவித்தபடி வியாழனன்று (ஜூலை 21) காலை 11 மணிக்கு, நாடாளுமன்றத்தின் 63-ஆவது அறையில் வாக்கு எண்ணிக்கை  துவங்கியது.

முதலில் எம்.பி.க்களின் வாக்குகள் எண்ணி, அதன் நிலவரத்தை தோ்தல் அலுவலர் பி.சி. மோடி அறிவித்தார். குடியரசுத் தலைவர் தேர்தலில் பதிவான 748 நாடாளுமன்ற உறுப்பினர்களின் வாக்குகளில், திரௌபதி முர்மு 540 வாக்குகளையும், எதிர்க்கட்சிகளின் கூட்டணி சார்பில் போட்டியிட்ட யஷ்வந்த் சின்ஹா 208 வாக்குகளையும் பெற்றிருந்தனர். திரௌபதி முர்மு பெற்ற வாக்குகளின் மதிப்பு 3 இலட்சத்து 78 ஆயிரமாகவும், யஷ்வந்த் சின்ஹா பெற்ற வாக்குகளின் மதிப்பு 1 இலட்சத்து 45 ஆயிரமாகவும் இருந்தது. 15 எம்.பி.க்களின் வாக்குகள் செல்லாது என அறிவிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து, 2-ஆவது சுற்றில் அகர வரிசைப்படி முதல் 10 மாநிலங்களில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு, அதன் முடிவுகள் அறிவிக்கப்பட்டன. இதில்,  திரௌபதி முர்மு 1349 வாக்குகளையும், எதிர்க்கட்சிகளின் வேட்பாளர் யஷ்வந்த் சின்ஹா 537 வாக்குகளையும் பெற்றனர். திரௌபதி முர்மு பெற்ற வாக்குகளின் மதிப்பு 4 இலட்சத்து 83 ஆயிரத்து 299 ஆகவும், யஷ்வந்த் சின்ஹா பெற்ற வாக்குகளின் மதிப்பு 1 இலட்சத்து 89 ஆயிரத்து 876 ஆகவும் இருந்தது. அடுத்த 20 மாநிலங்களின் நிலவரம் வெளியான பிறகு இறுதியாக தேர்தல் முடிவு வெளியிடப்படும் என்று கூறப்படுகிறது. எனினும் தற்போதைய முன்னிலை அடிப்படையில் திரௌபதி முர்மு இந்தியாவின் 15-ஆவது குடியரசுத் தலைவராக தேர்ந்தெடுக்கப்படுவது உறுதியாகி இருக்கிறது. நாட்டின் உச்ச பட்ச அரசியலமைப்பு பதவியை  அலங்கரிக்கும் முதல் பழங்குடியினர் வகுப்பைச் சேர்ந்த பெண்  எனும் பெருமையை திரௌபதி முர்மு பெறுகிறார். அவர் ஜூலை 25-ஆம் தேதி  முறைப்படி குடியரசுத் தலைவராக பொறுப்பேற்றுக் கொள்வார்.

Tags: