எரிபொருள் விநியோகம்: தேசிய எரிபொருள் அட்டை ஆரம்பம்

– ஜூலை 26 முதல் National Fuel Pass முறை ஆரம்பம்
– நடைமுறைப்படுத்தும் எரிபொருள் நிலையங்களுக்கு முன்னுரிமை
– அனைவரும் பதிவு செய்து கொள்ளவும்
– வார இறுதிக்குள் ஒன்றுக்கு மேற்பட்ட வாகனங்களை பதிய வசதி
– மின்பிறப்பாக்கி உள்ளிட்டவற்றுக்கு பிரதேச செயலகம் மூலம் பதிவு
– முச்சக்கர வண்டிகளுக்கு தனியான எரிபொருள் நிரப்பு நிலையம்
– சுகாதாரம், விவசாயம், மீன்பிடி உள்ளிட்ட துறைகளுக்கு வசதி
– ஓகஸ்ட் 01 முதல்
QR தவிர்ந்த ஏனைய முறைகள் இரத்து
– தினசரி தேவையை பூர்த்தி செய்ய முடியாமையே QR திட்ட அறிமுகத்திற்கு காரணம்

26.07.2022 முதல் நாடளாவிய ரீதியில் உள்ள CEYPETCO மற்றும் LIOC எரிபொருள் நிலையங்களில் தேசிய எரிபொருள் அட்டை (National Fuel Pass) அடிப்படையில் எரிபொருள் விநியோக திட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக, மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.

தினசரி தேவையை பூர்த்தி செய்ய முடியாமையே QR திட்ட அறிமுகத்திற்கு காரணம்
நாளாந்த எரிபொருள் தேவையை பூர்த்தி செய்ய முடியாமை காரணமாகவே QR திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டதாகவும், அந்நியச் செலாவணி சிக்கல்கள் காரணமாக, எதிர்வரும் ஒரு வருடத்திற்கு (12 மாதங்களுக்கு) எரிபொருள் இறக்குமதியை கட்டுப்படுத்தப்பட வேண்டியுள்ளதாக, அமைச்சர் கஞ்சன குறிப்பிட்டுள்ளார்.

வழக்கமாக, பெற்றோலிய கூட்டுத்தாபனத்தினால் (CPC) ஒவ்வொரு எரிபொருள் நிலையத்திற்கும் தினமும் எரிபொருள் விநியோகிக்கப்படுவதில்லை. மிகையான எரிபொருள் கையிருப்பு இருக்கின்ற நிலையிலும் அதற்கு சாத்தியமில்லை என கஞ்சன தனது ட்விட்டர் கணக்கில் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதேவேளை, வாகன இலக்கத் தகட்டின் கடைசி இலக்கத்திற்கு ஏற்ப எரிபொருள் வழங்குதல் உள்ளிட்ட ஏனைய முறைகள், எதிர்வரும் ஓகஸ்ட் முதலாம் திகதியுடன் செல்லுபடியற்றதாக்கப்படுவதாக மின்சக்தி வலுசக்தி அமைச்சு விடுத்துள்ள அறிவித்தலில் இது தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த ஊடக அறிக்கை வருமாறு…

National Fuel Pass
இலங்கை பூராகவும் உள்ள இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் (CEYPETCO) மற்றும் லங்கா இந்தியன் ஒயில் கம்பனியின் (LIOC) பெரும்பாலான எரிபொருள் நிரப்பு நிலையங்களில் தேசிய எரிபொருள் அனுமதிப்பத்திரம் (National Fuel Pass) நாளை ஜூலை 26ஆம் திகதி முதல் அமுல்படுத்தப்படவுள்ளது.

இம்முறையின் மூலம் வாகன இலக்கத் தகட்டின் இறுதி இலக்கத்தின் அடிப்படையில் எரிபொருளை நிரப்ப முடியும். தொழில்நுட்ப அல்லது சாதன வசதிகள் அற்ற எரிபொருள் நிரப்பு நிலையங்களில், அக்குறைபாடுகளை நிவர்த்தி செய்யும் வரை வாகன இலக்கத் தகட்டின் இறுதி இலக்கத்தின் அடிப்படையில், எரிபொருள் ஒதுக்கீட்டின் அடிப்படையில் எரிபொருளை விநியோகிக்க முடியும்.

எரிபொருள் விநியோக முன்னுரிமை
60% ஆன எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு இவ்வசதிகள் வழங்கப்பட்டுள்ளதோடு, அவற்றில் சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதோடு, அந்த எரிபொருள் நிரப்புநிலையங்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் எரிபொருட்கள் விநியோகிக்கப்படும்.

ஓகஸ்ட் 01 முதல் National Fuel Pass QR மாத்திரம்
2022 ஓகஸ்ட் 01ஆம் திகதி திங்கட்கிழமை முதல் அனைத்து எரிபொருள் நிரப்பு நிலையங்களிலும் QR வசதியில் மாத்திரம் எரிபொருள் விநியோகத்தை இறுக்கமாக செயற்படுத்துமாறு அனைத்து CEYPETCO மற்றும் LIOC எரிபொருள் நிரப்பு நிலைய உரிமையாளர்களிடம் கேட்டுக்கொள்ளப்படுகின்றது.

அனைவரும் பதிவு செய்து கொள்ளவும்
எனவே தேசிய எரிபொருள் அனுமதிப்பத்திர முறையின் கீழ் அனைத்து பொதுமக்களும் தங்களது வாகனங்களை பதிவு செய்யுமாறு கேட்டுக்கொள்வதோடு ஆரம்ப கட்டத்தில் இம்முறையினை முறையாக செயற்படுத்துவதற்கு பொதுமக்களாகிய உங்கள் பூரண ஒத்துழைப்பையும் வேண்டி நிற்கின்றோம்.

வார இறுதிக்குள் ஒன்றுக்கு மேற்பட்ட வாகனங்களை பதிய வசதி
வார இறுதிக்குள் வணிக நோக்கம் கொண்ட் மற்றும் அரச நிறுவனங்களின் ஒன்றுக்கு மேற்பட்ட வாகனங்களை பதிவுசெய்வதற்கான தெரிவுகள் வழங்கப்படவுள்ளது.

மின்பிறப்பாக்கி உள்ளிட்டவற்றுக்கு பிரதேச செயலகம் மூலம் பதிவு 
மின்பிறப்பாக்கி, வீட்டுத்தோட்ட உபகரணங்கள் மற்றும் ஏனைய உபகரணங்களுக்குத் தேவையான எரிபொருளை பெற்றுக்கொள்வதற்கான பதிவினை மேற்கொள்வதற்கான தளமொன்று பிரதேச செயலகத்திற்கு வழங்கப்படவுள்ளது.

முச்சக்கர வண்டிகளுக்கு தனியான எரிபொருள் நிரப்பு நிலையம்
முச்சக்கர வண்டிகளை பதிவுசெய்வதற்கான வசதிகள், பொலிஸ் திணைக்களம் மற்றும் பிரதேச செயலகங்களுக்கு  வழங்கப்படவுள்ளதோடு, ஒவ்வொரு முச்சக்கர வண்டிக்கும் தனியான எரிபொருள் நிரப்பு நிலையம் ஒதுக்கப்படும்

பஸ்களை பதிவு செய்வதற்கான வசதிகள், போக்குவரத்து அமைச்சுக்கு வழங்கப்படவுள்ளதோடு, அவற்றுக்கு தனியான டிப்போக்கள் அல்லது எரிபொருள் நிரப்பு நிலையங்கள் ஒதுக்கப்படும்.

சுகாதாரம், விவசாயம், மீன்பிடி உள்ளிட்ட துறைகள்
சுகாதாரம், விவசாயம், மீன்பிடி, சுற்றுலாத்துறை, கைத்தொழில் உள்ளிட்ட ஏனைய சேவைகளுக்கு தேவையான எரிபொருளை அதன் தேவைகளை பொறுத்து அத்தொழிற்துறைகளின் வாகனங்களை பதிவுசெய்வதற்கான வழிமுறைகள் அந்தந்த தொழிற்துறைகளுக்கு வழங்கப்படவுள்ளது.

ஓகஸ்ட் 01 QR தவிர்ந்த ஏனைய முறைகள் இரத்து
ஓகஸ்ட் 01ஆம் திகதி முதல் QR ஒதுக்கீடு அடிப்படையிலான முறை அமுல்படுத்தப்படுவதோடு வாகன இறுதி இலக்க முறைகள் உள்ளிட் ஏனைய முறைகள் செல்லுபடியற்றதாகும்.

மேலும், இத்திட்டத்திற்காக எதிர்வரும் 10 நாட்களுக்கு எரிபொருள் நிரப்பு நிலையங்களில் தேசிய இளைஞர் சேவை மன்ற உறுப்பினர்கள், தேசிய இளைஞர் படையணி மற்றும் தொண்டர்கள், எரிபொருள் நிலையங்களில் உதவி வழங்கவுள்ளனர். 

Tags: