காந்திஜியின் கொள்கைகள், இந்துத்துவா சக்திகளுக்கு வெறுப்பூட்டுபவை

-பிரகாஷ் காரத்

ப்போதுமட்டும் காந்திஜி உயிரோடிருந்தார் என்றால் நாட்டின் பல பகுதிகளிலும் ‘பசுப் பாதுகாப்பு’ என்ற பெயரில் கும்பல் குண்டர்கள் அப்பாவி முஸ்லீம்களையும், தலித்துகளையும் கொலை செய்து வருவதற்கு எதிராகக் காலவரையற்ற உண்ணாவிரதத்தில் உட்கார்ந்திருப்பார். ஏனெனில், அப்பாவிகள் மீது ஏவப்படும் வன்முறை நடவடிக்கைகளுக்கு எதிராக அவர் கடும் வெறுப்பு கொண்டிருந்தார்.

‘மகாத்மா’வின் 150ஆவது பிறந்த தினத்தைக் கொண்டாடும் இத்தருணத்தில், அவர் நாட்டின் கோடானுகோடி மக்களுக்கும், உலகிலும் பல நாடுகளில் வாழ்பவர்களுக்கும் ஒரு ‘மகா ஆத்மா’-ஆக மாறியது எப்படி என்பதை நினைவு கூர்வது அவசியமாகும்.

காந்திஜி, உண்மையில் இருபதாம் நூற்றாண்டு உலக வரலாற்றின் ஒப்பற்ற தலைவர். உலகின் இரண்டாவது மக்கள்தொகை அதிகமாக உள்ள இந்தியாவில், சுதந்திரத்திற்கான போராட்டத்திற்காக உலகின் மிகப்பெரிய வெகுஜன இயக்கத்திற்குத் தலைமை தாங்கினார்.

இ.எம்.எஸ் குறிப்பிடுவதைப்போல காந்திஜி, சமூகப் பிற்போக்குக் கருத்துக்களைப் பெற்றிருந்தபோதிலும், அவர் பயன்படுத்திய வாசகங்கள், விவசாய இயக்கத்தில் பெரும்பாலானவர்களை எழுச்சி கொள்ளச்செய்து, நடவடிக்கைகளில் ஈடுபட வைத்தது.கொஞ்ச காலம் தென்னாப்பிரிக்காவிலிருந்த காந்திஜி, பின்னர் இந்தியா திரும்பியபின், மத்திய தர வர்க்கத்தினரின் இயக்கமாக இருந்த காங்கிரசை, வெகுஜன இயக்கமாக மாற்றியமைத்தார்.

அவ்வாறு காந்திஜி செய்த சமயத்தில், தேசிய இயக்கத்தின் கிளர்ச்சி நடவடிக்கைகளுக்கு எண்ணற்ற வடிவங்களில் சிந்தனைகளை, கண்ணோட்டங்களை மற்றும் உத்திகளை வகுத்தளித்தார். அவருடைய “சத்தியாக்கிரகம்” மற்றும் அவர் தென்னாப்பிரிக்காவில் பின்பற்றிய அஹிம்சை வழியிலான ஒத்துழையாமை இயக்கம் என்னும் கொள்கை நம் நாட்டில் சுதந்திரத்திற்காக அவர் மேற்கொண்ட தேசிய இயக்கத்தின் கிளர்ச்சிக்கான உத்திகளாக மாறின.

காந்திஜி, சுதந்திர இந்தியாவின் எதிர்காலம் ஒரு மதச்சார்பற்ற கோட்பாட்டுடன் அமைந்திட வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தார். சுதந்திரப் போராட்டத்தின் அடிப்படைக் கொள்கையாக இந்து-முஸ்லீம் ஒற்றுமை அமைந்திட வேண்டும் என்று நினைத்தார். “இந்துக்களும், முஸ்லீம்களும் இந்துஸ்தான் என்கிற அழகான மணப்பெண்ணின் இரு கண்கள் போன்றவர்கள்,” என்று கூறிக் கொண்டிருந்தார். அதனால்தான் அவர் 1920இல் நடைபெற்ற கிலாபத் இயக்கத்தை, தான் நடத்திவந்த ஒத்துழையாமை இயக்கத்தின் ஓர் அங்கம் என்று கூறினார். மதவாதிகள் மத்தியில் மதப் பிரச்சனைகளில் ஓர் ஒற்றுமையைக் கொண்டுவருவதில் சிரமங்கள் இருந்தபோதிலும், இந்து-முஸ்லீம் ஒற்றுமையை உருவாக்குவதற்கான நிலைப்பாட்டில் அவர் மிகவும் தெளிவாக இருந்தார்.

அனைத்து மதங்களும் சமமாக மதிக்கப்பட வேண்டும் என்பதிலும் அதேபோன்று அனைத்து மதத்தினரும் சமமாகவே பாவிக்கப்பட வேண்டும் என்பதிலும் அவர் உறுதியான நிலைப்பாட்டை மேற்கொண்டிருந்தார். அவர், இந்தியாவில் மதச்சார்பற்ற அரசு அமைந்திட வேண்டியதன் தேவை குறித்தும் பேசினார். மேலும் மதமும் அரசும் தனித்தனியாகவே இருந்திட வேண்டும் என்றும் கருத்து கொண்டிருந்தார். இதன் காரணமாகத்தான் குஜராத்தில் உள்ள சோம்நாத் கோவில் புனர்நிர்மாணப் பணிகளுக்கு அரசு நிதி உதவி அளித்திடும் முன்மொழிவுக்கு எதிராக அவர் இருந்தார்.

காந்திஜி, மேலும், நாட்டில் பல்வேறு சமூகத்தினரிடமும் காணப்பட்ட பல்வேறு வேற்றுமைப் பண்புகளையும் நன்கு புரிந்துகொண்டிருந்த ஒரு தலைவருமாவார். அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின், மாகாணக் கிளைகளை, மொழிவாரி அடிப்படையில் அமைத்திட வேண்டும் என்று முன்மொழிந்த முதல் தலைவரும் அவர்தான். அதன்படியே, 1920இல் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி மொழிவாரி அடிப்படையில் மாகாணக் கமிட்டிகளை அமைத்தது. அவர், மக்களின் பல்வேறு பிரச்சனைகளுக்காக, நாட்டின் அனைத்துப் பகுதிகளுக்கும் சென்று வந்தார். சம்பரன் விவசாயிகள் போராட்டம், வைக்கம் கோவில் நுழைவுப் போராட்டம், தண்டி உப்பு சத்தியாக்கிரகப் போராட்டம், லக்னோ ஒத்துழையாமை இயக்கப் போராட்டம் என அனைத்திற்கும் அவர் சென்று வந்தார். இவ்வாறு உண்மையில் இந்தியாவின் அனைத்துப் பகுதி மக்களுக்குமான தலைவராக உயர்ந்த முதல் தலைவர் காந்திஜி தான்.

1930களின் மத்தியில் காங்கிரஸ் கட்சிக்குள்ளிருந்த இடதுசாரிகளும், பின்னர் கம்யூனிஸ்ட் கட்சியிலிருந்த தலைவர்களும் காந்தியம் குறித்து விமர்சனங்களைக் கொண்டிருந்தார்கள். வெகுஜன இயக்கம் தொடர்பாக காந்திஜி பின்பற்றிய உத்திகள் குறுகிய வரையறைக்கு உட்பட்டவை என்றும், அவை வெகுஜனத்திரளை புரட்சிகரமான நடவடிக்கைகளை நோக்கி முன்னெடுத்துச் செல்லாது என்றும் கூறினார்கள். அதேபோன்று, விவசாயிகளின் அவல நிலைக்காக இயக்கம் காண தயாராக இருந்த காந்திஜி, நிலப்பிரபுத்துவத்திற்கு எதிராகக் குரல் கொடுக்க தயாராயில்லை. அதேபோன்றே, காந்திஜி தீண்டாமைக்கு எதிராகப் போராடியபோதிலும், வர்ணாஸ்ரம தர்மத்தினையும் ஏற்றுக்கொண்டிருந்தார்.

இவை அனைத்து தொடர்பாகவும் இடதுசாரிகள், காந்தியம் குறித்து கடும் விமர்சனங்களைக் கொண்டிருந்தனர். ஆனாலும், அதே சமயத்தில், இடதுசாரிகள் தேசிய இயக்கத்தின் ஈடிணையற்ற தலைவர் என்பதை ஏற்றுக் கொண்டிருந்தார்கள். அவரின் சிந்தனைகளுடனும், நாட்டுப்பற்றுடனும், தைரியத்துடனும் திருப்தி கொண்டிருந்தார்கள்.

தேசிய இயக்கத்தில் அவருடைய மிகவும் துணிவுமிக்க பங்களிப்பினை அவருடைய வாழ்வின் கடைசிக் காலங்களில் தெளிவாகக் காணமுடியும். 1947க்குப் பின் சுதந்திரம் கிடைத்துவிடும், ஆனால் நாடு துண்டாடப்பட்டுவிடும் என்று தெரிந்தபின்னர், காந்திஜி தனியாளாகவும், விரக்தியுடைய நபராகவும் மாறிவிட்டார்.

நாட்டின் பல பாகங்களில், குறிப்பாக வட இந்தியாவில், மதக் கலவரங்கள் வெடித்தன. நாட்டுப் பிரிவினையும் இந்து-முஸ்லீம் ஒற்றுமை அழிக்கப்படுவதையும் கண்டு காந்திஜி புலம்பினார்.

சுதந்திர தினக் கொண்டாட்டங்களில் பங்கேற்க மறுத்தார். அதற்குப் பதிலாக அவர் கொல்கத்தாவில் நடந்துகொண்டிருந்த மதக் கலவரங்களைத் தணிப்பதற்கான முயற்சிகளில் ஈடுபட்டுக்கொண்டிருந்தார். ஆகஸ்ட் 14 அன்றிரவு, பெலியகடா (Beliaghata)வில் இந்துக்கள் அதிகமாக வாழும் பகுதியிலிருந்த “ஹைடாரி மன்சில்” என்னும் முஸ்லீம் ஒருவரின் வீட்டில் அவர் தங்கியிருந்தார். இவ்வாறு இவர் அங்கே இருந்துகொண்டு, முஸ்லீம்கள் மீது தாக்குதல் தொடுக்கும் இளைஞர்களைத் தடுத்து நிறுத்தி, வன்முறை நடவடிக்கைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்திட அவர்களை இணங்க வைத்தார்.

அதற்கு முன்பு சுமார் மூன்று மாதங்கள் நவகாளிக்கு அவர் சென்றிருந்தார். பின்னர் அப்பகுதி கிழக்குப் பாகிஸ்தானுக்குச் சென்றுவிட்டது. அங்கே, இந்துக்களுக்கு எதிராக பெரும்பான்மை முஸ்லீம் மக்களால் மேற்கொள்ளப்பட்ட வன்முறைகளுக்கு எதிராக உண்ணாவிரதம் மேற்கொண்டார். அப்போது அவர் அங்கே அமைதி வேண்டியும், மத நல்லிணக்கம் வேண்டியும் கிராமம் கிராமமாக கால் நடையாகவே நடந்து சென்றார். ‘இவர் ஓர் இந்து தலைவர்,’ என்று வெறிபிடித்த முஸ்லீம் தலைவர்களால் முத்திரைகுத்தப்பட்டு, தாக்கப்பட்டார்.

பின்னர் தலைநகர் தில்லியில் முஸ்லீம்கள் கொல்லப்படுவதாகக் கேள்விப்பட்டு, மனம் நொந்து, அவர் கொல்கத்தாவிலிருந்து தில்லி திரும்பினார்.

தில்லி திரும்பியபின், பிர்லா இல்லத்தில் 1948 ஜனவரி 12 அன்று, ‘மத நல்லிணக்கம் பேணப்பட வேண்டும்’ என்று வலியுறுத்தியும், ‘இந்திய அரசாங்கம், பாகிஸ்தானுக்குத் தரவேண்டிய 55 கோடி ரூபாய் தொகையை அளித்திட வேண்டும்’ என்று வலியுறுத்தியும் உண்ணாவிரதத்தைத் தொடங்கினார். காஷ்மீரில் மோதல்கள் நடைபெற்றுவருவதைக் காரணம் காட்டி அமைச்சரவை அத்தொகையை அளிக்காது நிறுத்தி வைத்திருந்து. அவர் உண்ணாவிரதம் இருந்த சமயத்தில், மக்கள் மனம் திருந்தி, “இந்துக்களும் முஸ்லீம்களுமாகிய நாங்கள் இனிவருங் காலங்களில் நல்லிணக்கத்துடன் வாழ்வோம்” என்றும், “வன்முறையைக் கைவிடுகிறோம்” என்றும் உறுதிமொழி எடுத்துக்கொண்டனர். இந்திய அரசாங்கமும் பாகிஸ்தானுக்குப் பணத்தை அனுப்பி வைத்தது.

இத்தகைய காந்திஜியின் “முஸ்லீம் ஆதரவு,” “பாகிஸ்தான் ஆதரவு” நிலைப்பாடுதான், நாதுராம் கோட்சேயையும் மற்றும் இதர இந்துத்துவா வெறியர்களையும் காந்தியைக் கொல்வதற்குச் சதித்திட்டம் தீட்ட உந்தித்தள்ளின. அதனைத் தொடர்ந்து அவரும் படுகொலை செய்யப்பட்டார்.

காந்திஜியின் கடைசிக் காலத்தில்தான் அவருடைய பெருந்தன்மை, உயர் பண்பு, கம்பீரம், மேன்மை அனைத்தும் முன்னுக்கு வந்த சமயத்தில் அவர் வாழ்க்கையும் சோகமான முறையில் முடிவுக்கு வந்தது. உண்மையில் அவர் அவரிடமிருந்த முரண்பாடுகள் மற்றும் சிக்கல்கள் அனைத்தையும் மீறி, ஒப்புயர்வுமிக்க அறநெறிப் பண்புகள் மிகுந்த தலைவராக உயர்ந்தார்.

இப்பொழுது நாம் காந்திஜியினுடைய 150ஆவது பிறந்த தின விழாவைக் கொண்டாடக்கூடிய அதே சமயத்தில், அவரைப் படுகொலை செய்தவர்களும், அவர்கள் பின்பற்றும் இந்துத்துவா சித்தாந்தமும் காந்திஜியைத் தங்களுடன் பொருத்திக் கொள்ள நடவடிக்கைகள் எடுத்திருக்கின்றன.

காந்திஜி கடைப்பிடித்த மதச்சார்பற்ற ஜனநாயகக் கொள்கைகளையெல்லாம் ஒதுக்கிவைத்துவிட்டு, காந்திஜியை மட்டும் தங்களவராக எடுத்துக்கொள்ள அவர்கள் முயற்சிகள் மேற்கொண்டு வருகிறார்கள். எனினும் அவர் உயர்த்திப்பிடித்த கொள்கைகளை இவர்கள் வெறுப்பதை மட்டும் இவர்களால் மறைத்திட முடியவில்லை.

வி.டி.சாவர்க்கரின் இந்துத்துவா சித்தாந்தத்தைத்தான் ஆர்எஸ்எஸ் பின்பற்றுகிறது. காந்தியைப் படுகொலை செய்த சதிகாரர்களில் சாவர்க்கரும் ஒருவர். ஆயினும் நீதிமன்றத்தில், அவருக்கு எதிரான சாட்சியத்தை சுயேச்சையான சாட்சி எவரும் ஒத்துழைக்காதது போன்று ஒருசில தொழில்நுட்பக் காரணங்களால் விடுதலை செய்யப்பட்டார்.

ஆர்.எஸ்.எஸ் இயக்கமும், இந்துத்துவா தலைவர்களும் காந்தியைப் படுகொலை செய்த நாதுராம் கோட்சே குறித்து அவ்வப்போது தங்கள் கருத்துக்களை வெளியிட்டுக்கொண்டு இருக்கிறார்கள். இப்போது கூட, 2019 மே மாதத்தில், மூன்று பாஜக தலைவர்கள் கோட்சேயைப் புகழ்ந்து அல்லது அவனுடைய செய்கையை நியாயப்படுத்தி அறிக்கை வெளியிட்டிருக்கிறார்கள். போபால் தொகுதி பாஜக மக்களவை உறுப்பினரான பிரக்யா தாகூர், கோட்சேயை ஒரு “தேசாபிமானி” (“patriot”) என்று அழைத்திருக்கிறார். தெற்கு கனடாவைச் சேர்ந்த பாஜக மக்களவை உறுப்பினரான நளின் குமார் கடீல் தன் ட்விட்டர் பக்கத்தில் எழுதியிருப்பதாவது: “கோட்சே ஒருவரைத்தான் கொன்றார், கசாப் 74 பேரைக் கொன்றுள்ளார், ராஜீவ் காந்தி 17 ஆயிரம் பேரைக் கொன்றுள்ளார். மிகவும் கொடூரமானவர் யார் என்று நீங்களே தீர்மானித்துக்கொள்ளுங்கள்” என்று குறிப்பிட்டிருக்கிறார்.

தேர்தல் சமயத்தில் இவ்வாறு இவர்கள் கூறியதால் சங்கடத்திற்குள்ளான பாஜக தலைவர், அமித்ஷா, இவை பாஜகவின் கருத்துக்கள் அல்ல என்று கூறினார். மேலும் இவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறினார்.

ஆனாலும் எவ்விதமான நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. மாறாக, பாஜக தலைவரின் கபடநாடகத்தை வெளிச்சத்திற்குக் கொண்டுவரும் விதத்தில், நளின் குமார் கடீல் கர்நாடக மாநில பாஜக தலைவராக நியமிக்கப்பட்டிருக்கிறார்.

காந்திஜி உயர்த்திப்பிடித்த மதச்சார்பற்ற கண்ணோட்டத்தை உருவி எறிந்துவிட்டு, அவரின் மத ரீதியான கருத்தை மட்டும் தங்கள் இந்துத்துவாவிற்குள் நுழைத்து, அவரைத் தங்களில் ஒருவராக்கிக்கொள்ள ஆர்எஸ்எஸ்-உம், பாஜக அரசாங்கமும் முயற்சிகள் மேற்கொண்டிருக்கின்றன. இது மிகவும் ஆபத்தான நடவடிக்கை (diabolic move) ஆகும். காந்திஜியால் தலைமை தாங்கப்பட்ட விடுதலைப் போராட்டத்தில் பங்கேற்காது ஒதுங்கி நின்றவர்கள், இவர்கள். முஸ்லீம்களுக்கு ஆதரவாக நின்றார் என்பதற்காக, காந்திஜியைக் கொன்றவர்கள், இவர்கள்.

காந்திஜியை மட்டுமல்ல, விடுதலைப் போராட்டத்திற்காக நடைபெற்ற ஒளிமிக்க தேசிய இயக்கத்தின் பாரம்பர்ய வரலாற்றையும், எதற்காக அது போராடியோ அதன் விழுமியங்களும் பாதுகாக்கப்பட்டு முன்னெடுத்துச் செல்லப்பட வேண்டியவைகளாகும். இதனை, ஆர்எஸ்எஸ்-பாஜக சித்தாந்தத்தையும், அரசியலையும் உறுதியுடன் எதிர்த்து நின்று முறியடிப்பதன் மூலமே செய்திட முடியும்.

(இக்கட்டுரை 2018 ஆம் ஆண்டு எழுதப்பெற்றது)

தமிழில்: ச.வீரமணி

Tags: