‘ஜனநாயக ஊடகம் இல்லாமல் ஜனநாயக சமூகத்தை உருவாக்க முடியாது’ – முகமது ஜுபைர்

Mohammad Zubair

39 வயதான உண்மைச் சரிபார்ப்பாளர் முகமது ஜுபைரின் (Mohammad Zubair) அண்மைக்கால பத்திரிகைப் பணி பன்னாட்டு அளவில் மிகப்பெரிய தலைப்புச் செய்திகளை உருவாக்கியதுடன், இந்தியாவில் வளர்ந்து வரும் இனப்படுகொலை வெறுப்பு பேச்சின் மீதும், இந்தியாவில் இஸ்லாமியர்களுக்கு எதிரான வன்முறை கலாச்சாரத்தின் மீதும் அதிக கவனத்தை ஈர்த்தது. வெறுக்கத்தக்க வகையில் ட்விட்டரில் பதிவு செய்ததாக ஒன்றன் பின் ஒன்றாக ஏழு வழக்குகளில் அவர் கைது செய்யப்பட்டார்.

ஜூன் மாதம் அவர் கைது செய்யப்பட்ட உடனேயே, உலகம் முழுவதிலுமிருந்து ஜுபைர் பெரும் ஆதரவைப் பெற்றார் மற்றும் #நான் ஜுபைருடன்  நிற்கிறேன் (# IStandWithZubair)  உலகளவில் ஒரு சிறந்த போக்காக வெளிப்பட்டது. 23 நாட்களுக்குப் பிறகு, கைது, பிணை, மீண்டும் கைது என்ற சுழற்சியில் சிக்கிய நிலையில், உச்ச நீதிமன்றம் அவருக்கு அனைத்து நிலுவையில் உள்ள மற்றும் ஒரே மாதிரியான ட்விட்டர் பதிவு தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட வழக்குகளுக்கு பிணை வழங்கியது,  இதன் மூலம் நீதிபதி டி.ஒய். சந்திரசூட் ” நச்சு சுழற்சி” என்று வர்ணித்த  இந்த நிகழ்வு  ஒரு முடிவுக்கு வந்தது.

அண்மை ஆண்டுகளில், ஆல்ட் நியூசின் (Alt News ) இரண்டு முன்னாள் தொழில்நுட்ப வல்லுநர்களான முகமது ஜுபைர் மற்றும் பிரதிக் சின்ஹா ​​தலைமையிலான ஒரு டஜன் உண்மைச் சரிபார்ப்பாளர்களைக் கொண்ட ஒரு சிறிய குழு – போலிச் செய்திகள் மற்றும் உந்துதலான அரசியல் பிரச்சாரங்களை முறியடிக்கும் ஒரு மாபெரும் படையாக  உருவெடுத்துள்ளது. மற்றவற்றுடன், ஜுபைர் தனது ட்விட்கள் மற்றும் உடனடி உண்மைச் சரிபார்ப்புகளுக்காக பெரிதும் அறியப்படுகிறார்.  பெரும்பாலும் முக்கிய ஊடகங்களில் வளர்ந்து வரும் கதைகளை சீர்குலைக்கிறார். ஜுபைர் தனது பணியின் மூலம் லட்சக்கணக்கான பின்தொடர்பவர்களை சம்பாதித்துள்ள அதே வேளையில், அவர் சில வலிமையான எதிரிகளையும் பெற்றுள்ளார்.

பிணையில் வெளிவந்த பிறகு தி வயர் (The Wire) ஜுபைருடன் நடத்திய நேர்காணலின் சுருக்கம்:  

உங்கள் விடுதலைக்கு வாழ்த்துக்கள். இதை நீங்கள் எப்படி உணர்கிறீர்கள்?

நான் திரும்பி வந்ததில் மகிழ்ச்சி அடைகிறேன். எனக்கு ஆதரவாக நின்ற நண்பர்கள் மற்றும் நலம் விரும்பிகளிடமிருந்து நான் பெற்ற அபரிமிதமான ஆதரவிற்கு நான் நன்றியுள்ளவனாக இருக்கிறேன். எனது கைது அவர்களின் வாழ்க்கை மற்றும் சுதந்திரத்தின் மீதான தாக்குதல் என்று பலர் உணர்ந்துள்ளனர் என்பதை அறிவது மிகவும் பெரியது. எனது குடும்பத்தினர் பயந்தனர் ஆனால் பிரதிக் மற்றும் அவரது தாயார் அவர்களுக்கு  ஆதரவாக  இருந்து நாள்தோறும்  அவர்களோடு அலைபேசியில் தொடர்பு கொண்டு , தொடர்ந்து வழக்குகளின் விவரஙகளைப் பகிர்ந்து கொண்டனர்.  மேலும் உ.பி. யிலும் தில்லியிலும் உள்ள ஐந்து வெவ்வேறு இடங்களுக்கு உள்ளூர் வழக்கறிஞர்களை ஏற்பாடு செய்ய 24 மணி நேரமும் உழைத்தனர். ஆல்ட் நியூஸின் பணியைத் தொடர்ந்து நடத்துவதோடு மட்டுமல்லாமல், வழக்குகளுக்குத் தயாராக வழக்கறிஞர்களுக்கு உதவினார்கள். பிரதிக் குறிவைக்கப்பட்டார், ஆனால் அவர் அமைதியாக இருந்தார். எங்களின் நன்கொடையாளர்களுக்கு அச்சுறுத்தல்கள் இருந்தபோதிலும் ஆதரவை திரும்பப் பெறவில்லை. உண்மையில், கடந்த இரண்டு மாதங்களில் மேல்முறையீடு செய்யப்படாத போதிலும் அவர்களிடமிருந்து அதிக நிதி உதவியைப் பெற்றோம்.

இந்த முழு சோதனையிலும் மிகவும் வேதனையான பகுதி எது?

என் பெற்றோர், என் மனைவி மற்றும் குழந்தைகள் அஞ்சினர். என் மகன் நான்தான் அவனுடைய அப்பா என்று எல்லோரிடமும் பெருமையாகச் சொல்வான். பல நாட்களாக அவனை பள்ளிக்கு அனுப்ப முடியவில்லை. மேலும் நான் அவனுடைய தந்தை என்று யாரிடமும் சொல்லாதே என்று சொன்னோம். அது மனதை மிகவும் புண்படுத்தியது.

உங்கள் கடந்த காலத்தைப் பற்றி  நிகழ்நிலையில் நிறைய ஊகங்கள் உள்ளன.  எனவே ஆரம்பத்தில் இருந்து தொடங்குவோம். உங்கள் குழந்தைப் பருவத்தைப் பற்றி சொல்ல முடியுமா?

நான் பெங்களூரிலிருந்து 70 கிமீ தொலைவில் உள்ள தமிழ்நாட்டின் தளி என்ற தொலைதூர கிராமத்தைச் சேர்ந்தவன். என் தந்தை ஒரு விவசாயி.  அவர் ஓசூரில் பழம் மற்றும் காய்கறி சிறுவியாபாரம் செய்து வந்தார். நான் 1-ம் வகுப்பில் தேர்ச்சி பெற்றபோது, ​​என் தங்கையையும் என்னையும் ஓசூரில் உள்ள நல்ல பள்ளியில் சேர்க்கும்படி என் அம்மா வற்புறுத்தினார்.

எப்பொழுது, எதற்காக பெங்களூர்  சென்றீர்கள்?

மூன்று வருடங்களாக, ஆரம்பக் கல்விக்காக நானும் அக்காவும் தினமும் 60 கி.மீ தூரம் ஓசூருக்கு  அரசுப் பேருந்தில் சென்று வந்தோம். பிறகு, பெங்களூருக்கு மாறலாம் என்று அம்மா முடிவு செய்தார். நகரத்திற்குச் செல்வது அப்போது கடினமான தேர்வாக இருந்ததால், என் தந்தையின் குடும்பத்தினரிடமிருந்து சிறிது எதிர்ப்பை அவர்கள் எதிர்கொள்ள வேண்டியிருந்தது. இறுதியில்,  அவர்களை சமாதானப்படுத்துவதில் என் தாய் வெற்றி பெற்றார். நாங்கள் பெங்களூருக்கு குடிபெயர்ந்திருக்காவிட்டால், இன்றைய வாழ்க்கை மிகவும் வித்தியாசமாக இருந்திருக்கும்.

உங்கள் பள்ளி வாழ்க்கையைப் பற்றி மேலும் சொல்லுங்கள்.

பெரிய ஊருக்குச் சென்று கிறித்துவ பள்ளியில் சேர்ந்த பிறகும் எனக்குப் படிப்பில் ஆர்வம் இல்லை. ஆரம்பத்தில் நான் படிப்பில் மிகவும் மோசமாக இருந்தேன். நான் கிரிக்கெட்டை விரும்பி எனது புதிய நண்பர்களுடன் நேரத்தை செலவிட்டேன். ஒன்று அல்லது இரண்டு பாடங்களைத் தவிர, மற்ற பாடங்களில் நான் தோல்வியடைந்தேன் அல்லது 35% – தேர்ச்சி மதிப்பெண் பெற்றேன். நான் 6 ஆம் வகுப்பில் தேர்ச்சி பெற்றேன்.   திடீரென்று நான் என் சகோதரியின் அதே வகுப்பில் இருந்தேன். என் அக்கா எப்போதும் என்  ‘ஒழுங்கற்ற ’ பள்ளி வாழ்க்கையை  கண்காணித்துக் கொண்டிருந்தாள். ஒரு இளைஞனாக, நான் பள்ளியில் ஒரு பெண்ணை அணுகினால், என் சகோதரி அவளை பயமுறுத்துவார் அல்லது என்னை சங்கடப்படுத்துவார்.  மேலும் என் தந்தையிடம் புகார் செய்து விடுவார்.

உங்களுக்கு திடீரென கல்வியில் ஆர்வம் ஏற்படுத்திய திருப்புமுனை எது?

எனது கல்வி நிலை குறித்து என் தந்தை மிகவும் வருத்தமடைந்தார். ஒரு நாள் எங்களுக்கிடையே ஒரு முக்கிய விவாதம் நடந்தது.  இது கிட்டத்தட்ட எல்லா நடுத்தர வர்க்க குடும்பங்களிலும் நடப்பது போன்றதுதான்.  எங்கள் எதிர்காலத்திற்காக அவர் எவ்வளவு தியாகம் செய்துள்ளார் என்றும்,  நான் தோல்வியுற்றால் எல்லாம் சரிந்துவிடும்  என்றும் அவர் என்னிடம் கூறினார். நான் 10 ஆம் வகுப்பு தேர்வில் கூட தேர்ச்சி பெற முடியாது என்று அவர் மிகவும் கோபமடைந்தார்.  எனது 10 ஆம் வகுப்பு ஆசிரியரும் இதையே என்னிடம் கூறினார். எனது குடும்பத்திற்கு கல்வி மட்டுமே நம்பிக்கை என்பதால் நான் இதை அவமானமாக உணர்ந்தேன்.  கடினமாக உழைக்க முடிவு செய்தேன். நல்ல மதிப்பெண்களுடன் பள்ளியை  விட்டு வெளியேறினேன்.  பின்னர் புகழ்பெற்ற  எம்.எஸ். ராமையா பொறியியல் கல்லூரி யில் சேர்ந்தேன். இந்த திடீர் திருப்பத்திற்குப் பிறகு, என் தந்தை என் இளைய சகோதரர்களிடம்,  ஜுபைரைப் போன்ற ஒருவரால் இதைச் செய்ய  முடியுமென்றால், நீங்களும் அதைச் செய்ய முடியும் என்று கூறினார் (சிரிக்கிறார்). திடீரென்று பொறியியல் பட்டம் பெறும் முதல் தலைமுறை பட்டதாரி குடும்பங்களுக்கு  நான்தான் முன்மாதிரி. இதற்கு முன், என் தாய் அல்லது தந்தை தரப்பில் யாரும் இந்த அளவில் முறையான கல்வியைப் பெற்றதில்லை. அந்தக் காலத்தில் அது பெரிய விஷயமாக இருந்தது. என் உடன்பிறந்தவர்களில் இருவர் பொறியாளர்களாகவும், இருவர் மருத்துவர்களாகவும் ஆனார்கள்.

நீங்கள் ஏன் பொறியியல் படித்தீர்கள்?

அந்த நேரத்தில், நாங்கள் நினைத்ததெல்லாம் ஒரு நல்ல வாழ்க்கையை பெற  வேண்டும் என்பது மட்டுமே. அதற்கு மருத்துவராகவோ, பொறியியல் பட்டதாரியாகவோ ஆக வேண்டும்  என்பதைத் தவிர எங்களுக்கு வேறு வழி இல்லை  என்று நினைத்தோம். முதலில் நான் உயிரியல் பாடத்தை நன்றாக படிக்க இயலாததால் என்னால் மருத்துவராக முடியவில்லை.  மேலும் எனது குடும்பம் எங்கள் எதிர்காலத்திற்காக எல்லாவற்றையும் விற்றுவிட்டதால் நான் விரைவில் வேலை செய்யத் தொடங்கினேன். எங்களிடம் போதிய வருவாய் இல்லாமல் போய்விட்டது.  மூத்தவனாக இருந்ததால், குடும்பத்தை நடத்துவது என் பொறுப்பாகிவிட்டது.

பத்தாண்டுகளுக்கு முன்பு வரை அரசியலில் ஆர்வம் இல்லாத பெங்களூரைச் சேர்ந்த தொழில்நுட்ப வல்லுநரான முகமது ஜுபைர் இந்தத் தொழிலுக்கு எப்படி வந்தார்?

நான் என் சூழ்நிலைகளின் உருவாக்கம். நான் 2012 வாக்கில் சமூக ஊடகங்களில் உற்சாகமாக ஈடுபட்டேன். அரசியல் சாராத உள்ளடக்கத்தை இடுகையிடும் பல கணக்குகளைப் பின்தொடர்ந்தேன். எனது சொந்த பக்கங்கள் கிரிக்கெட் பற்றிய பதிவுகளால் நிரப்பப்பட்டது. 2012-13 இல் ஏதோ ஒரு மாற்றம் ஏற்பட்டது. திடீரென்று இந்தப் பக்கங்கள் அனைத்தும் அப்போதைய காங்கிரஸ் அரசைக் குறிவைத்து அரசியல் உள்ளடக்கத்தை வெளியிடத் தொடங்கின. என்ன நடக்கிறது என்பது பற்றி எனக்கு எதுவும் தெரியாது. அடுத்த இரண்டு ஆண்டுகளில், அரசாங்கத்தின் தோல்விகளில் இருந்து கவனம் இஸ்லாமியர்கள் மீது திரும்பியது. மேலும் நெருங்கிய நண்பர்கள் நுட்பமான இஸ்லாமியர் விரோத கருத்துக்களை நிகழ்நிலையில் இடுகையிடத் தொடங்கினர். அது என்னை திணறடித்தது. நான் நீண்ட காலமாக பின்தொடர்ந்தவர்கள் திடீரென்று என்னை அந்நியப்படுத்தியதால் நான் தனிமையாகவும் துரோகமாகவும் உணர்ந்தேன். அந்த நேரத்தில், எனது அரசியல் சார்பற்ற கிரிக்கெட் பதிவுகள் எனக்கும் என்னைச் சுற்றியுள்ள உலகத்துக்கும் பொருளற்றதாகிவிட்டன. எனது உள்ளூர் சட்டமன்ற உறுப்பினர் அல்லது முதல்வர் பெயர் கூட எனக்குத் தெரியாது. அந்த அளவிற்கு அரசியலில் இருந்து நான் எப்படி துண்டிக்கப்பட்டிருந்தேன். ஆனால் அடுத்த சில ஆண்டுகளில் அரசியலில்  எனது ஆர்வம் அதிவேகமாக வளர்ந்தது.

பிரதிக்கை எப்படி சந்தித்தீர்கள்?

பிரதிக்கின் முகநூல் பக்கத்தில் இருந்து ஒரு பதிவை பகிர்ந்திருந்தேன். நான் அதற்கு உரிய மதிப்பு கொடுக்கவில்லை என்று எனக்கு செய்தி அனுப்பினார். நான் அதை திருத்தி மறுபதிவு செய்தேன். எங்களுக்குள் நிறைய ஒற்றுமைகள் இருப்பதைக் கண்டேன். உனாவ் சம்பவம் நடந்தபோது, ​​ அந்த செய்தியைப் பரப்பிட எங்கள் பக்கங்களைப் பயன்படுத்தினோம். படிப்படியாக, முக்கிய ஊடகங்கள் அதை கையில் எடுத்தன. இதன் மூலம் சொந்தமாக இணையதளம் தொடங்க வேண்டும் என்பதை  உணர்தோம். ஆரம்பத்தில், முக்கிய கட்டுரையில்  எதிர் கருத்துக்களுக்கு மட்டுமே அழுத்தம் கொடுக்க விரும்பினோம். ஆனால் அதற்குப் பிறகுதான் உண்மைச் சரிபார்ப்பு இணையதளம் என்ற  சிந்தனையை பிரதிக் கொண்டு வந்தார். அப்போதுதான் ஆல்ட் நியூஸ்  பிறந்தது. நான் 2018 வரை முழுநேரமாக சேரவில்லை. ஆரம்பத்தில் என் குடும்பத்தை சமாதானப்படுத்துவது எனக்கு கடினமாக இருந்தது.

வளர்ந்து வரும் இஸ்லாமிய வெறுப்பும்சகிப்புத்தன்மையும் நீங்கள் செய்வதையே செய்யத் தள்ளியது என்று சொன்னீர்கள். 2012-13ல் என்ன நடந்தது? 

பன்னாட்டு நிறுவனத்தில் பணிபுரியும் போது, ​ வெள்ளிக்கிழமைகளில் குர்தாவில் அலுவலகத்திற்குச் செல்வேன். ஒரு வெள்ளிக்கிழமை அன்று,   நான் குர்தா அணியாததால், எனது மேலாளர் என்னை அணுகி,    “இன்று வெள்ளிக்கிழமை. நீ ஏன் குர்தா அணியவில்லை?  நீ அதில் மிகவும் அழகாக இருப்பாயே,” என்று உரிமையுடன் கோபித்துக் கொண்டார். ஆனால் உடன் பணியாற்றும் இதே நண்பர்கள் அலுவலகத்தில் அரசியல் விவாதம் நடக்கும்போதெல்லாம் திடீரென்று விரோதமாகவும், முரட்டுத்தனமாகவும் மாறுவதைப் பார்ப்பது எனக்கு மனவருத்தத்தை ஏற்படுத்தியது. அந்த நேரத்தில் அவர்களை எதிர்க்கும் அறிவும் மனமும் எனக்கு இல்லை. அங்கிருந்த மூன்று அல்லது நான்கு இஸ்லாமியர்கள் மடக்கப்பட்டுவிட்டதாக உணர்ந்தார்கள். இயற்கையாகவே  புலன பரப்புரை எதற்கும் எங்களிடம் பதில் இல்லை.அதைப் பற்றி படிக்கவும், ஆராயவும் ஆரம்பித்தேன். எனது பணியின் போது, ​​பிரச்சாரத்தை எதிர்ப்பதற்கான உண்மைகள், ஒரு பெரிய பார்வையாளர்களுக்கு அவற்றைப் பரப்புவதற்கான திறனைப் போலவே முக்கியம் என்பதை நான் உணர்ந்தேன். எனது முகநூல் பக்கமான ‘அதிகாரப்பூர்வமற்ற சுசு சுவாமி’ விவகாரங்களின் அபத்தம் குறித்த எனது விரக்தியை வெளிப்படுத்தும் வலைவாசலாக மாறியது. ஒரு கட்டத்தில், எனது வேலையின் ஒரு பகுதியாக வெவ்வேறு நாடுகளுக்குச் செல்வது எனது முகநூல் நையாண்டிப் பக்கத்தைப் போலவே என்னை உற்சாகப்படுத்தியது.

சமீபத்தில் உங்களுக்கு சிக்கலை ஏற்படுத்திய அதே நையாண்டியா?

எனது பழைய ட்விட்டர் பதிவுகளுக்காகவோ அல்லது  முகநூல் பகடி பதிவுக்காகவோ நான் கைது செய்யப்படவில்லை என்பது தெளிவாகத் தெரிகிறது. ஒவ்வொரு பழைய பதிவும் அரசியல்வாதிகளின் மூர்க்கத்தனமான அறிக்கைகளை விமர்சிப்பதாக இருந்தது.

பிறகு ஏன் கைது செய்யப்பட்டீர்கள் என்று நினைக்கிறீர்கள்?

பாஜக செய்தித் தொடர்பாளர்களின் கருத்துக்களின் மீது மக்கள் கவனத்தைத் திருப்பிய எனது ட்விட்டர் பதிவுகள் வைரலாகி, அரசாங்கத்திற்கு எதிராக  அயலுறவுக் நிலைபாடுகளில் பிளவுகள் எழுந்தவுடன், அவர்கள் என்னைத் தொடர்ந்து வருவார்கள் என்று எனக்குத் தெரியும்.

பாஜக செய்தித் தொடர்பாளர் நுபுர் ஷர்மாவின் பேச்சுரிமையை நீங்கள் ஆதரிக்கவில்லை என்று தனது கட்டுரையில் மூத்த ஆசிரியர் ஒருவர் குற்றம் சாட்டினார். அவரது பகுப்பாய்வு பற்றிய உங்கள் பார்வை என்ன? 

அவருடைய ஆய்வில் எனக்கு உடன்பாடில்லை. எனது ட்விட்டர் பதிவுகளின் கீழ் நூற்றுக்கணக்கான மக்கள் எனது இறைத்தூதரையும், எனது மதத்தையும் மிக மோசமான முறையில் அவதூறு செய்கிறார்கள். நான் அவர்களுக்கு பதிலளிப்பதில்லை. ஆனால் இந்த முறைகேட்டை சாதாரணமாக்கும் ஆளும் கட்சி பேச்சாளர்களை கண்டிக்க வேண்டும். ஒருவரையொருவர்  அவதூறு செய்வதற்கும் தாக்குவதற்கும் நீங்கள் மக்களை அழைக்கும்போது அது வெறும் விவாதம் அல்ல. இந்துக்களுக்கு எதிராக வெறுப்புப் பேச்சு நடத்திய மௌலானா என்று அழைக்கப்படுபவர்களையும் நான்  எதிர்க்கிறேன். பொருளாதாரம் அல்லது காற்று மாசுபாடு பற்றி விவாதிக்கப்பட்டாலும், அதே ‘மரியாதைக்குரிய மதத் தலைவர்கள்’ அவர்களுடைய சர்ச்சைக்குரிய கருத்துக்களை வெளியிடுவதற்கு அழைக்கப்படுகிறார்கள்.  அது எரிபொருள் குறித்த பிரச்சாரத்திற்குத் தீனி போடுகிறது. வெளிப்படையாக, அவர்களுடைய வளர்ப்பு பிராணி   ஊடகங்களுக்கு அவர்களுடன் எந்தப் பிரச்சனையும் இல்லை. உண்மையில், அவர்களின்  காணொளிகள் தேர்தலுக்கு முன் அச்சம் காரணமாக வைரலாகின்றன. இது ஒவ்வொரு தரப்பினருக்கும் ஏதாவது ஒரு வகையில் பயனடையும் சூழ்நிலையை உருவாக்கியுள்ளது.  இந்த விவாதங்கள் மதத்தை விமர்சிப்பதற்கோ அல்லது  முற்போக்கு  விழுமியங்களைப் பரப்புவதற்கோ ஏற்பாடு செய்யப்படவில்லை.

முக்கிய ஊடகங்களின் ஒரு பிரிவினர் உங்கள் கைதைக் கொண்டாடினர். இந்த ஊடகத்தால் நீங்கள் ஏன் வெறுக்கப்படுகிறீர்கள்?

என்னை வெறுக்க அவர்களுக்கு நல்ல காரணம் இருக்கிறது. பிரதான ஊடகங்கள் வெறுப்பைத் தூண்டுகின்றன. அத்துடன் தான்தோன்றி குழும நீதியைக் கொண்டாடுகின்றன. அவர்கள் தகவல் தொழில்நுட்பப்  பிரிவை மிகைப்பிகளின் பாத்திரத்திற்குக் குறைத்துள்ளனர். முன்னதாக, அவர்களின் பொய்யான செய்திகள் அம்பலப்படுத்தப்பட்ட போது, ​​ அவர்கள் மன்னிப்புக் கேட்டனர்.  ஆனால் இப்போது அவர்கள் அதை முற்றிலும் தண்டனையின்றி செய்கிறார்கள். என் வேலை அவர்களை சங்கடப்படுத்துகிறது. சமூகத்தைப் பிளவுபடுத்துவதற்கும் மக்களை அச்சத்தில் இருக்க வைப்பதற்கும் அவர்கள் பொதுப் பொறுப்பேற்க  அஞ்சுகிறார்கள்.

நூற்றுக்கணக்கான வெறுப்பு மற்றும் வன்முறை  காணொளிகளை  நீங்கள் பார்த்திருக்கிறீர்கள்.  குறிப்பிட்ட ஏதேனும் ஒரு காணொளி உங்களை  மனவருத்தமடைய செய்ததா?

ஹரித்வாரில் நடந்த நிகழ்ச்சியில் விடுக்கப்பட்ட வன்முறை  அழைப்பு காணொளிகளும், சீதாபூரில் காவலர்கள் முன்னிலையில் விடுக்கப்பட்ட பகிரங்கமான கற்பழிப்பு மிரட்டல்  காணொளிகளும் என்னை மிகவும் அதிர்ச்சிக்குள்ளாக்கின.

நீங்கள் சிறையில் இருந்தபோது​​சமூக ஊடகங்களில் உங்கள் காதுகள்  பற்றிய ஒரு புதிய வகை பரப்புரை பகிரப்பட்டது. நீங்கள் உண்மையில் உங்கள் காதுகளை மறைத்தீர்களா?

பாதுகாப்புக்காக முகத்தை மறைக்கச் சொன்னது காவல் துறையினர்தான். இது எனக்கு முதல் முறை (சிரிக்கிறார்). என்னை ஒரு பயங்கரமான குற்றவாளியாக அல்லது பயங்கரவாதியாக சித்தரிக்க, காவல் துறையினர் என்னை இழுத்துச் செல்லும் காணொளி   எப்படி தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்படும் என்று எனக்குத் தெரியவில்லை. இருப்பினும், இது என் பாதுகாப்பிற்காக அல்ல, என்னைக் கேவலப்படுத்துவதற்காக என்று உணர்ந்தபோது, ​​நான் என் முகத்தை மறைக்கவில்லை. பிந்தைய காணொளிகளை நீங்கள் பார்த்தால், நான் முகமூடி அணியவில்லை அல்லது முகத்தை மறைக்கவில்லை என்பதை நீங்கள் காணமுடியும். சில காணொளிகளில்  ஊடகங்களைப் பார்த்து நான் கை கூட அசைத்தேன்.

ஒருவேளை நீங்கள் இந்திய சட்ட அமலாக்க இயந்திரத்திலிருந்து எப்படியோ தப்பித்த அஜ்மல் கசாப்பாக இருக்கலாம் என்று உங்கள் ஆரம்பகால வாழ்க்கை பற்றி சதி  பரப்புரைக் கோட்பாடுகள் பரப்பப்படுகின்றன.  இவற்றை நீங்கள் எப்படி சமாளிக்கிறீர்கள்?

எனது குடும்பத்திற்கு சிறந்த எதிர்காலத்தை உருவாக்க உழைக்கும் மேலும் ஒரு சாதாரண குடிமகனாக நான் இருந்தேன். இவர்களிடம் இருந்து இதைவிடச் சிறப்பாக எதையும் எதிர்பார்க்க முடியாது. இது நகைப்பிற்குரியது.  ஆனால் ஒரு வலுவான பரப்புரை எந்த ஒரு விமர்சனம் செய்பவரையும் துரோகியாக எளிதில் சித்தரித்துவிடும். மேலும் ஒரு இஸ்லாமியரிடம் இதைச் செய்வது இன்னும் எளிதானது.

விசாரணையின் போது உங்களிடம் காவல்துறையினர் என்ன கேட்டார்கள்?

பல கேள்விகள் அற்பத்தனமாகவும் சில சமயங்களில் அருவருப்பாகவும்   இருந்தன. ஹத்ராஸில் என்னை விசாரித்த இரண்டு அதிகாரிகள், வலதுசாரி பரப்புரை இணையதளத்தின் கட்டுரைகளின் அடிப்படையில் கேள்விகளைக் கேட்டனர். ஜார்ஜ் சொரோஸ் எனக்கு நிதியுதவி செய்வது குறித்து ஒரு அதிகாரி என்னிடம் கேள்வி கேட்டபோது, ​​அந்த கேள்வியின் மூலத்தை அவரிடம் கூறி, “ஐயா திருவாளர் எக்ஸ் சின் ட்விட்டர் பதிவுதானே உங்கள் கேள்விக்கான ஊற்றுக்கண் ?”  என்று கேட்டேன். அவர் திடுக்கிட்டார்.  நாங்கள் சத்தமாக சிரித்தோம். சீதாபூரில் உள்ள காவலர்கள் “காதல் வியாபாரிகளுக்கு” வக்காலத்து வாங்குபவர்கள் போல் நடந்து கொண்டனர். “இவர் இப்படிப் பேசுவதற்கு என்ன செய்திருக்கிறார் என்று உங்களுக்குத் தெரியுமா? நீங்கள் ஏன் அவருடைய மன்னிப்பைப் பதிவிடவில்லை?” என்று அவர்கள் என்னிடம் கேட்டார்கள்.  ஆனால் அதுவும் கூட  ஒரு மன்னிப்பா?

சிறையில் உங்கள் ஈகைத் திருநாளை எப்படி கொண்டாடினீர்கள்?

நான் ஒரு நகரத்திலிருந்து மற்றொரு நகரத்திற்கு தொடர்ந்து மாற்றப்பட்டதால், தவறாமல் அல்லது ஈத் தினத்தன்று கூட என்னால் பிரார்த்தனை செய்ய முடியவில்லை. என்றாலும், நமாஸ் மற்றும் துவாக்களை ஓதுமாறு என் குடும்பத்தினர் எனக்கு அறிவுறுத்தியதால் நான் அதற்கு சிறிது நேரத்தைச் செலவிட்டேன்.  நான் என்னைத் தனிமைப்படுத்திக் கொள்ள விரும்பவில்லை என்பதுடன் சிறைச்சாலையின் நான்கு சுவர்களுக்குள் இருக்கும் அனைத்தையும் தெரிந்துகொள்ள இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொண்டேன். முடிந்தவரை கைதிகள் மற்றும் காவல்துறை அதிகாரிகளிடம் பேசினேன். சிறையில் வெவ்வேறு நபர்கள் தங்களைப் பற்றிக் கூற கேட்பது என் அனுபவத்தை வளப்படுத்தியதை உணர்ந்தேன்.   ஒருபுறம், நான் பாதுகாப்பற்ற நிலையில் இருப்பதாக உணர்ந்தேன்.  ஆனால் மிக விரைவில் நான் பல தோழர்களுடன் நட்பு கொண்டேன். ஒருவேளை அவர்களின் கதையை அறிய நான் மிகவும் ஆர்வமுடையவனாக இருந்திருக்கலாம்.

உங்கள் பிணை விடுதலையை விதிவிலக்காகக் கருதுவதாக நீங்கள் கூறியது ஏன்?

பணம், அணுகல், வளங்கள், சிவில் சமூகத்தின் ஆதரவு, பெரிய பத்திரிகையாளர்களின் தோழமை மற்றும் எல்லாவற்றிற்கும் மேலாக மிகவும் உறுதியான சட்டக் குழு ஆகியவை எனக்கு கிடைத்த நல்வாய்ப்பு. சமூக வலைளப் பதிவுகளுக்காகவே பல ஆண்டுகளாக சிறையில் வாடும் பல இளம் கைதிகளை நான் சந்தித்தேன். நீண்ட சட்டப் போராட்டங்களில் ஈடுபட முடியாத காஷ்மீரிகளை நான் சந்தித்தேன். அவர்களின் வேதனையைக் கேட்கும் போது என் கண்களில் கண்ணீர் வந்தது.திகாரில் உள்ள ஒரு முக்கிய நபர் என்னிடம், “நீங்கள் இங்கு வந்திருப்பது எனக்கு வருத்தமாகவும், மகிழ்ச்சியாகவும் இருக்கிறது. மற்ற பத்திரிகையாளர்களும் இங்கு வந்து கைதிகளின் நிலையைப் பார்க்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன்.  அதனால் நீங்கள் வெளியே செல்லும்போது எங்களைப் பற்றியும் எங்கள் கதைகளைப் பற்றியும் உலகத்துடன் பேசலாம்,” என்று கூறினார்.மற்ற பலருக்கு இது போன்ற சமூக ஊடக சீற்றம் இருக்காது. மக்கள் சுதந்திரத்திற்கான உரிமையை கண்மூடித்தனமாக மறுக்க முடியாத வகையில், இந்தச் சிக்கலுக்கு அமைப்பின் ஒரு பெரிய மறுசீரமைப்பு தேவைப்படுகிறது. விசாரணைக் கைதிகளின்,  குறிப்பாக ஆதரவாக  சமூக ஊடங்களை இயக்க ஆளில்லாதவர்களின் நிலைமை குறித்து  பத்திரிகையாளர்கள் அதிக கவனம் செலுத்த வேண்டும் என்று நினைக்கிறேன்.

அண்மைக்காலமாக கர்நாடகா வெறுக்கத்தக்க குற்றசெயல்களைச் சந்தித்து வருகிறதுஅது எல்லா தவறான காரணங்களுக்காகவும் செய்திகளில் இடம்பிடித்துள்ளது. இந்த மாற்றத்தை எப்படி பார்க்கிறீர்கள்?

அவ்வப்போது  நடக்கும் கடலோரப் பகுதி  நிகழ்வுகளை நாம் ஒதுக்கி விட்டுப் பார்த்தால், அண்மைக்காலம் வரை இந்த வகுப்புவாத மோதல்களில் இருந்து கர்நாடகா பாதுகாப்பாக இருந்தது. ஆனால்  நிலைமை மிக வேகமாக மாறியது, குறிப்பாக கடந்த ஒரு வருடத்தில். வகுப்புவாத நஞ்சு இங்கு பரவுவதைப் பார்க்கும்போது வருத்தமாக இருக்கிறது. இளைஞர்கள் தங்கள் வாழ்க்கையை இழக்கிறார்கள் ஆனால் இந்த பைத்தியக்காரத்தனத்திற்கு முடிவே இல்லை. இதனால் இந்தியா முழுவதும் எந்த பிரச்சினையும் இல்லை என்று நான் சொல்லவில்லை.  ஆனால் இந்த பகுதியில், இது நிச்சயமாக மோசமாக இல்லை. நாங்கள் ஒருவரையொருவர் மதிக்கும் இளம் இந்தியர்களாக வளர்ந்தோம். குறைந்தபட்சம் அனைவருக்கும் சொந்தமாகவும் கனவு காணவும் ஒரு இடம் இருந்தது.

இளம் பத்திரிகையாளர்களுக்கு உங்கள் செய்தி என்ன?

நான் அமைதியாகி விட்டால் அதன் விளைவு மற்றவர்களை அச்சத்தில் உறையச் செய்துவிடும். அதனால்தான் நான் கைது செய்யப்பட்டேன். ஒரு இஸ்லாமியர் பொறுப்புக் கூறுவதும், பத்திரிகையாளராகப் பணியாற்றுவதும் குற்றமல்ல. எனது இளைய  தோழர்களுக்கு அவர்களின் பணி முக்கியமானது என்றும், மறக்கவைக்கப்பட்டுவிடும் பயங்கரங்களுக்கு சாட்சியமளிப்பது ஒரு குற்றமல்ல என்றும் நான் சொல்ல வேண்டும். நீங்கள் சமூக ஊடகங்களில் இருப்பதுடன் உங்கள் சொந்த கருத்துக்களை எழுத வேண்டும். உங்களைச் சுற்றி நடக்கும் பரப்புரைகளுக்கு பதிலடி கொடுக்காமல் இருக்க வேண்டாம்.  ஒவ்வொரு மாவட்டத்திலும் செல்லப் பிராணி ஊடகங்களின் பிரச்சாரத்தை உண்மைச் சரிபார்ப்பு அல்லது வெறுக்கத்தக்க பேச்சுகளைக் அம்பலப்படுத்தக்கூடிய ஒரு தனி நபர் கிடைத்தால்,  இறுதியில் நிலைமை சிறப்பாக மாறும்.ஒரு சில தனிநபர்களின் பணி, எவ்வளவு நன்றாக இருந்தாலும், வலுவான முக்கிய ஊடகம் இல்லாத நிலையில் இந்த வெற்றிடத்தை நிரப்ப முடியாது. ஆனால் இதைச்  சொல்வது எளிது. செய்வது கடினம். குறிப்பாக ஒதுக்கப்பட்ட பிரிவினரிடமிருந்து  வரும் புதிய குரல்களுக்கு  இடத்தை உருவாக்குவதும் வளங்களை வழங்குவதும் நமது பொறுப்பு. அவர்களுக்கு தேவையான பயிற்சி மற்றும் தொழில்நுட்ப திறன்களை வழங்க வேண்டும். ஜனநாயக ஊடகம் இல்லாமல் ஜனநாயக சமூகத்தையும், புதிய குரல்கள் இல்லாமல் ஜனநாயக ஊடகத்தையும் உருவாக்க முடியும் என்று கற்பனை செய்வது  விரும்பத்தக்க சிந்தனை அல்ல.

உங்களுக்கு ஏதேனும் நம்பிக்கையைப உள்ளதா?

குழந்தைகள் ஒருவரையொருவர் வெறுக்கவோ அல்லது தங்களைப் பற்றிய நம்பிக்கையில்லாமல் வளரவோ நான் விரும்பவில்லை, ஆனால் நான் பொய் சொல்ல மாட்டேன் – என் கண்களுக்கு  நம்பிக்கைத்  தெரியவில்லை. என் பார்வையில், இந்த அரசியல் சூழல் அப்படியே இருக்கும் அல்லது இன்னும் மோசமாகும். இருப்பினும், அமைதியாக இருப்பதுதான் இதற்கு  ஒரு சரியான தேர்வு என்று நான் நினைக்கவில்லை. உண்மையைச் சொல்வதைத் தொடர, நம்மிடம் உள்ள ஆதாரங்களை  நாம் பிடித்துக் கொள்ள வேண்டும். இதுவரை, நான் வெறுப்பூட்டும் பேச்சுகள், வெறுப்பு குற்றங்கள் மற்றும் போலி செய்திகளை முறியடித்து வருகிறேன், ஆனால் இப்போது எனது கவனம் பிரதான ஊடகங்களால் பரப்பப்படும் வகுப்புவாத வெறுப்பை அம்பலப்படுத்துவதில் அதிக கவனம் செலுத்துகிறது.

மூலம்: Zubair: ‘A Muslim Man Asking For Accountability and Working as a Journalist Is Not a Crime’

Tags: