இன்று சர்வதேச யானைகள் தினம்

னத்தை பாதுகாப்பதில் யானைகள் முக்கிய பங்காற்றுகின்றன. இன்று, உலக யானைகள் தினத்தில் அவற்றை பாதுகாக்க மனித சமுதாயம் உறுதியேற்க வேண்டும்.

யானைகளை பாதுகாக்க உலகத்திலுள்ள, 65 அமைப்புகள் மற்றும் யானைகளை கொண்ட நாடுகள், ஓகஸ்ட் 12ந் திகதி உலக யானைகள் தினத்தை கடைப்பிடிக்கின்றன. வில்லியம் சாட்னர் (William Shatner) எடுத்த ‘வனத்திற்குள் திரும்பு’ (Return to the Forest) என்ற ஆங்கில படத்தின் கதை, ஒரு தனியார் வளர்க்கும் யானையை, காட்டிற்குள் மீண்டும் விடுவது பற்றியது. இப்படம், 2012 ஓகஸ்ட் 12ந் திகதி வெளியானது. அன்றைய தினம், உலக யானைகள் தினமாக கடைபிடிக்கப்படுகிறது. யானைகளின் சராசரி ஆயுட்காலம் ஏறக்குறைய, 70 ஆண்டுகள். இதன் தும்பிக்கை, 40 ஆயிரம் தசைகளால் ஆனது. இதன் மூலம், 1.5 கி.மீ., தொலைவிலுள்ள மனிதனின் நடமாட்டத்தைக்கூட யானையால் அறிய முடியும். யானையின் இரு தந்தங்களும், 90 கிலோ வரை எடையிருக்கும். ஆப்ரிக்கா பெண் யானைகளுக்கு தந்தம் உண்டு. யானைக்கு மூளையின் அளவு பெரியது என்பதால் நினைவாற்றல் அதிகமுண்டு. இதனால் பரந்த காட்டில் வழித்தடம் மாறாமல் சென்று திரும்புகின்றன. யானையின் பற்கள், ஐந்து கிலோ எடை கொண்டவை. யானைகள், நான்கு ஆண்டுகளுக்கு ஒரு முறைதான் குட்டி போடும். அவை, 100 கிலோ எடை வரை இருக்கும். பெண் யானைகளுக்கு மதம் பிடிக்காது. கூட்டத்தில் இருக்கும் முதுமை அடைந்த யானை, தான் இறப்பது உறுதி என்று தெரிந்தால், கூட்டத்தில் இருந்து பிரிந்து உண்ணா நோன்பு இருந்து தன் சாவை தானே தேடிக்கொள்ளும்.

யானை – மனித மோதல் நாளாந்தம் அதிகரித்து வரும் நிலையில், விஞ்ஞான ரீதியில் காட்டு யானை தொடர்பான தரவுகள் புதுப்பிக்கப்பட வேண்டிய தருணம் ஏற்பட்டுள்ளதாக இலங்கையைச் சேர்ந்த யானை ஆய்வு அதிகாரி மற்றும் சூழலியலாளர் சமீர வீரதுங்க தெரிவித்துள்ளார்.

இலங்கையில் கடந்த 2011 ஆம் ஆண்டின் தரவுகளுக்கு அமைய,  5 ஆயிரம் யானைகள் உள்ளதென கணக்கிடப்பட்டுள்ளன.

எவ்வாறாயினும், தற்போது அந்த தரவுகள் புதுப்பிக்கப்பட வேண்டிய தருணம் ஏற்பட்டுள்ளதாக யானை ஆய்வு அதிகாரி மற்றும் சூழலியலாளர் சமீர வீரதுங்க தெரிவித்துள்ளார்.

கடந்த தசாப்தத்தில் 62 சதவீத யானைகள் அழிவடைந்துள்ள நிலையில், இந்த எண்ணிக்கை அடுத்த தசாப்தத்தில் மேலும் அதிகரிக்கும் என கவலை வெளியிடப்பட்டுள்ளது.

நாளாந்தம் 100 ஆபிரிக்க யானைகள் கொல்லப்படுவதாகவும் மதிப்படப்பட்டுள்ளது. ஒரு யானையை பாதுகாப்பதானது, 18 இலட்சம் விதைகளை விதைப்பதற்கு சமம் என கருதப்படுகின்றது.

நாளொன்றுக்கு ஒரு யானை, 200 முதல், 250 கிலோ உணவை உட்கொள்ளும் நிலையில், அதில், 10 கிலோ விதைகளும், கன்றுகளும் மீண்டும் மண்ணில் விதைக்கப்படுகின்றன.

ஒரு யானை மாதத்துக்கு, 3,000 விதைகள் வீதம் ஆண்டிற்கு, 36 ஆயிரத்து, 500 விதைகளை விதைத்து, தன் வாழ்நாளில், 18 லட்சத்து, 25 ஆயிரம் மரங்கள் என்ற அடிப்படையில் வனத்தை உருவாக்கின்றதாக ஆய்வுகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கையில் கடந்த 50 வருடங்களில் யானைகளின் வாழ்விடம் 15 சதவீதம் குறைந்துள்ளதாக தற்போதைய விஞ்ஞான தரவுகள் தெரிவிக்கின்றன.

இன்றைய நிலையில் காடுகளின் காவலனாக இருக்கும் யானைகள் பல விதமான அச்சுறுத்தல்களை சந்தித்து வருகின்றன. முக்கியமாக, யானைகளின வழித்தடங்கள் துரித கதியில் அழிக்கப்படுகின்றன. காடுகளுக்கு இணைப்புப் பாலமாக உள்ள இந்த வலசைப்பாதைகள் அழிக்கப்படுவதன் காரணமாக யானைகள் குறுகிய காடுகளுக்குள் வாழ வேண்டிய சூழலுக்கு தள்ளப்பட்டுள்ளன. வலசைப் பாதைகளைத் துண்டிப்பதே, யானைகள், ஊருக்குள் படையெடுக்க முக்கியக்காரணமாக விளங்குகிறது.

வாழ்விடங்களின் எண்ணிக்கை அழிக்கப்படும் போதும், இனத்தின் வாழ்விடத்தை குறைக்கும் போது, இனங்களின் எண்ணிக்கையும் குறைவடைவதாக ஆய்வில் தெரிவிக்கின்றது 2010 முதல் 2021 வரையில், 3,328 யானைகள் உயிரிழந்துள்ளன.

வருடாந்தம் 200க்கும் மேற்பட்ட யானைகள் மரணிக்கின்றன.

யானை – மனித மோதலில் 2019 ஆம் ஆண்டு 407 யானைகள் மரணித்ததுடன், 122 மனிதர்களும் உயிரிழந்தனர்.

2020 ஆம் ஆண்டு 112 மனிதர்கள் உயிரிழந்ததுடன், 318 யானைகள் மரணித்தன. அதேநேரம் கடந்த வருடத்தில் மாத்திரம் யானை – மனித மோதலில் 375 யானைகள் உயிரிழந்ததுடன், 142 பேர் மரணித்ததாகவும் தரவுகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

யானை வாழ்விடங்களில் ஏற்படும் நாகரிக வளர்ச்சி, வெட்டப்படும் மரங்கள், அதிகரிக்கும் குவாரிகள், வழிப்பாதை ஆக்கிரமிப்பு, வனத்தில் அமைக்கும் தண்டவாளங்கள், சாலைகள் போன்ற பல்வேறு காரணங்களால் ஏற்படும் விபத்துகளால் யானைகளின் எண்ணிக்கை குறைந்து வருகிறது. காடுகளின் குறுக்கில் அமைக்கப்பட்டுள்ள சாலையை கடக்கும் யானைகள் வாகன விபத்தில் சிக்கி உயிரிழக்கின்றன. அதேவேளையில் மனிதர்களின் அலட்சிய செயலால் காட்டு யானைகள் பலியாவதும் தொடர்கிறது. யானைகள் அழிந்தால் காடுகள் முற்றிலும் அழியும். காடுகள் அழிந்தால் மனிதர்கள் வாழவே முடியாது. இதுகுறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தவும், யானைகளை பாதுகாக்கவும், இந்த தினம் சர்வதேச யானைகள் தினமாக கடைபிடிக்கப்படுகிறது.

யானைகள் விஞ்ஞானிகளால் ‘சூழல் அமைப்பு பொறியியலாளர்’ (Ecosystem engineers) என அன்புடன் அழைக்கப்படுகின்றன. யானைகள் முற்றிலுமாக அழிக்கப்படும் பட்சத்தில், வனங்களும், அதிலுள்ள வன உயிரினங்களும் படிப்படியாக அழியும் என்பதே நிதர்சனம். பல்வேறு சிறப்பு கொண்ட யானைகளை அதன் பாணியிலேயே வாழ விடுவது தான் வனங்களுக்கும், மனித உயிர்களுக்கும் பாதுகாப்பாக இருக்கும் என்று யானை பாதுகாவலர்களும் வன உயிரின ஆர்வலர்களும் தெரிவிக்கின்றன.

யானைகளைப் பாதுகாக்க அறிவியல்பூர்வமான திட்டம் தேவை

-ஏ.பேட்ரிக்

  

லகின் தொன்மையான விலங்குகளில் யானையும் ஒன்றாகும். மனித வரலாற்றில் காலங்காலமான தொடர்பு யானைக்கு உண்டு. இதன் காரணமாகவே யானை ஒரு பாரம்பரிய உயிரினம் என இந்திய உச்ச நீதிமன்றம் தெளிவுபடுத்தியுள்ளது. இதை இந்திய அரசும் உறுதிப்படுத்தியுள்ளது.

காலம் காலமாக யானைகள் பயன்படுத்தும் வழித்தடத்தை மனிதன் ஆக்கிரமித்ததால் அதன் எல்லை சுருங்கியது. இதனால் மனிதன், யானை இடையே மோதல் உருவாகியுள்ளது. இந்நிலையில் யானைகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் குறைந்து வருவதன் காரணத்தால் யானைகளையும், புலிகளையும் பாதுகாக்க மத்திய அரசு சிறப்புத் திட்டத்தை உருவாக்கியுள்ளது. இந்தியாவில் சுமார் 1 லட்சம் யானைகள் இருக்க வேண்டும் என கணக்கிடப்பட்டுள்ள சூழலில் தற்போது 30,000 யானைகள் மட்டுமே உள்ளன.

ஆசிய யானைகள் இனம் உலகில் 13 நாடுகளில் மட்டுமே உள்ளது. இந்த 13 நாடுகளிலும் உள்ள யானைகளில் 50 சதவீதத்துக்கும் மேற்பட்ட யானைகள் இந்தியாவில்தான் உள்ளன. அவற்றிலும் பாதியளவுக்கும் மேற்பட்டவை தமிழகம், கர்நாடகம் மற்றும் கேரளத்தில் உள்ளன. இதிலும் நீலகிரியை உள்ளடக்கிய நீலகிரி உயிர்க்கோள காப்பகத்தில்தான் அதிக அளவிலான ஆசிய யானைகள் வாழ்கின்றன.

இத்தனை சிறப்புகளைக் கொண்ட ஆசிய யானைகளின் தற்போதைய நிலை குறித்து யானை ஆர்வலரும், ஓசை சுற்றுச்சூழல் அமைப்பின் தலைவருமான காளிதாசன் கூறியதாவது:
தென்இந்தியாவில், தமிழகத்தில் கோவை, சத்தியமங்கலம் மற்றும் நீலகிரி பகுதிகளிலும், கேரளத்தில் மன்னார்காடு, வயநாடு மற்றும் அமைதிப் பள்ளத்தாக்கு பகுதிகளிலும், கர்நாடகத்தில் பந்திப்பூர், நாகர்ஹோலே, கொள்ளேகால் உள்ளிட்ட பகுதிகளிலும் யானைகள் அதிக அளவில் வாழ்கின்றன. தொடர்ச்சியாக ஒரே காட்டில் அதிக எண்ணிக்கையில் யானைகள் வசிப்பதால் பல்வேறு சிக்கல்கள் ஏற்படுகின்றன. யானைகள் தனித்து வாழும் விலங்கல்ல. கூட்டமாக வாழும் பெரிய விலங்காகும். அதனால் அவை உணவு மற்றும் தண்ணீருக்காக மட்டுமின்றி இனப்பெருக்கத்திற்காகவும் வலசை (இடம் மாறுவது) செல்கின்றன. பருவ நிலைக்கேற்ப யானைகள் வலசை போவது இயல்பாகும்.

ஆனால், யானைகளின் பாரம்பரிய வலசை நிலங்கள் தற்போது தனியார் நிலங்களாகவும், குறுகிய பாதைகளாகவும் மாற்றப்பட்டிருப்பதை யானைகளின் பாரம்பரிய உணர்வால் ஏற்றுக் கொள்ள முடிவதில்லை. அதனால் குறுகிய எல்லைக்குள் தங்க விருப்பமற்ற யானைகள் தடையை உடைத்து வெளியே வரும்போதுதான் மோதல்களும் அதிகரிக்கின்றன. மனிதர்களைக் கண்டு ஒதுங்கிச் சென்ற யானைகள் தற்போது மோதலுக்கு தயாராகின்றன.

எனவே, யானைகளின் வாழ்விடம், வலசைப் பகுதிகள், குறுகிவிட்ட வலசைப் பகுதிகள் என இம்மூன்றையும் இணைத்து ஒரு புதிய செயல் திட்டம் உருவாக்கப்பட வேண்டும். இந்த செயல் திட்டத்தில் தக்காண பீடபூமியிலிருந்து சமவெளிப் பகுதி வரையிலான யானை வழித்தட நிலங்கள் தொடர்பாக உறுதியான முடிவெடுக்க வேண்டும். வன உயிரின வாழ்விடங்களில் சுற்றுலாவை அனுமதித்தாலும், கேளிக்கை விடுதிகளைஅனுமதிக்கக் கூடாது.

ஒரு கணக்கெடுப்பின்படி இந்தியாவில் உள்ள 30,000 யானைகளில் 1,500 ஆண் யானைகள் மட்டும் உள்ளன. அதேபோல, வனப் பகுதிகளுக்குள் அமைக்கப்படும் சாலைகளை உயர்மட்ட சாலைகளாகவே அமைக்க வேண்டும். யானைகளைப் பாதுகாக்க அறிவியல்பூர்வமான யானை மேலாண்மைத் திட்டத்தை அமுலாக்க வேண்டும் என தெரிவித்தார்.

Tags: