“சோசலிச சக்திகளின் ஒன்றியம்” துருக்கியில் உதயமானது

துருக்கியில் கம்யூனிஸ்ட் கட்சியும், மேலும் பல சோசலிஸ்டு கட்சிகளும் இணைந்து “சோசலிச சக்திகளின் ஒன்றியம்” (Union of Socialist Forces) என்ற அமைப்பை உருவாக்கி, அந்த கூட்டணியை மேடையாகக் கொண்டு வரும் பொதுத் தேர்தலை சந்திக்க முடிவு செய்துள்ளன.

துருக்கியில் அடுத்த பொதுத் தேர்தல் ஜூன் 18, 2023 அன்று நடைபெறவுள்ளது. இரண்டு சுற்று முறையில் புதிய ஜனாதிபதி தேர்வு செய்யப்படுவார். அதேவேளையில், நாடாளுமன்றத்தின் 600 உறுப்பினர்களைத் தேர்வு செய்வதற்கான வாக்குப்பதிவும் நடக்கும். கடந்த தேர்தல் 2018 ஆம் ஆண்டில் நடந்தது. அப்போதுதான் முதன்முறையாக நேரடியாக ஜனாதிபதியைத் தேர்வு செய்தனர். 2017 ஆம் ஆண்டில் அரசியல் அமைப்புச் சட்டத்தில் திருத்தத்தை மேற்கொண்டு ஜனாதிபதி ஆட்சி நடைமுறைக்கு வந்தது.

வரவிருக்கும் தேர்தலை ஒன்றுபட்டு எதிர்கொள்ளும் முயற்சியாக இடதுசாரி சக்திகளை ஒன்றிணைக்கும் பணி தொடங்கியுள்ளது. துருக்கி கம்யூனிஸ்ட் கட்சி, இடதுசாரிக் கட்சி, துருக்கி கம்யூனிஸ்ட் இயக்கம் மற்றம் புரட்சிகர இயக்கம் ஆகிய கட்சிகள் இதற்கான பேச்சுவார்த்தைகளை நடத்தின. இந்த முயற்சிக்குப் பல்வேறு தரப்பினரின் ஆதரவும் கிடைத்தது. “சோசலிச சக்திகளின் ஒன்றியம்” என்று பெயர் சூட்டப்பட்ட ஒரு இடதுசாரி அரசியல் கூட்டணி துருக்கியில் உருவாகியுள்ளது.

தொடர்ந்து வலதுசாரி சக்திகளின் ஆட்சியைச் சந்தித்து வந்த துருக்கியில் மாற்றம் தேவை என்று பல்வேறு தரப்பினரும் இந்த முயற்சியை வரவேற்றிருக்கிறார்கள். நாட்டின் 226 பிரபலங்கள் ஒன்றிணைந்து இந்த சோசலிச சக்திகளின் ஒன்றியத்திற்குத் தங்கள் ஆதரவு உண்டு என்று ஒரு அறிவிப்பை வெளியிட்டிருக்கிறார்கள். இந்த அறிவிப்பில் தொழிற்சங்கத் தலைவர்கள், எழுத்தாளர்கள், பத்திரிகையாளர்கள், வழக்கறிஞர்கள், அறிவுஜீவிகள், கலைஞர்கள் உள்ளிட்ட பல்வேறு துறைகளைச் சேர்ந்த பிரபலங்கள் அந்த அறிவிப்பில் கையெழுத்திட்டுள்ளனர்.

ஒரே கூட்டணியாக இணைந்துள்ள நான்கு இடதுசாரிக் கட்சிகளும், “துருக்கியின் ஒளிமயமான எதிர்காலத்திற்காக, சுரண்டலுக்கு எதிரான சமத்துவத்திற்காக, பிளவுவாதத்திற்கு எதிரான மதச்சார்பின்மைக்காக, ஏகாதிபத்தியத்திற்கு எதிரான விடுதலைக்காக நாங்கள் ஒன்று சேர்ந்து நிற்கிறோம்” என்று மக்களுக்கு உறுதியளித்துள்ளன. முதலாளித்துவ எதிர்ப்பு, நேட்டோ எதிர்ப்புக் கொள்கை, தேசமயமாக்கல், மதச் சார்பின்மை மற்றும் சமூக ரீதியிலான சமத்துவம் ஆகிய ஐந்து அம்சக் கொள்கையைத் தங்கள் கூட்டணியின் அடித்தளமாக இடதுசாரிக் கட்சிகள் அறிவித்துள்ளன.

ஜனாதிபதி வேட்பாளர்கள்

இதுவரையில் மூன்று கட்சிகள் தங்கள் ஜனாதிபதி வேட்பாளர்களை அறிவித்துள்ளன. அதில் தற்போதைய ஜனாதிபதி ரிசெப் தய்யீப் எர்டோகனும் ஒருவராவார். இந்நிலையில்தான் நான்கு இடதுசாரிக் கட்சிகளும் இணைந்து “ஒன்றிணைந்து  நாட்டின் வருங்காலத்தைப் பாதுகாப்போம்” என்ற முழக்கத்துடன் ஒன்றிணைந்து வரப்போகும் பொதுத் தேர்தலைச் சந்திக்கவுள்ளன.

முதல் கம்யூனிஸ்ட் மேயர்

துருக்கியின் கிழக்குப்பகுதியில் இடதுசாரிகளின் செல்வாக்கு அதிகரித்து வருகிறது. நாட்டிலேயே முதன்முறையாக டுன்செலியின் மேயராக ஃபடிஹ் மகோக்லு தேர்வு செய்யப்பட்டார். துருக்கி கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பாக தேர்தலை எதிர்கொண்ட அவர், வெற்றி பெற்ற பிறகு பெரிய அளவிலான மாற்றங்கள் ஏற்படுத்தி வருகிறார் என்பது குறிப்பிட்டத்தக்கது.

Tags: