நவம்பர் 15: பிர்சா முண்டா நினைவு நாள்

ஒடியன்

தே  நவம்பர்15 ஆம் தேதியில்தான் இதே நள்ளிரவு வேளையில்தான் உலிகாட் (Ulihatu) வனப்பகுதியில், பிர்சா (Birsa) என்ற ஆண்குழந்தையை அந்த பழங்குடித்தம்பதிகள் பெற்றெடுத்தார்கள்.

பிர்சா பிறந்த அந்த 1875 ஆம் ஆண்டு  மழை பொய்த்திருந்தது. விளைச்சல் பட்டுப்போய்   பஞ்சம் தலைவிரித்து ஆடிக்கொண்டிருந்தது. மக்கள் ஒருவேளை சோற்றுக்காக அல்லல்பட்டுக் கொண்டிருந்தார்கள்.

பிர்சா ஓயாமல் அழுதுகொண்டிருந்தான்.

எடை குறைவாகப் பிறந்த, சதா அழுதுகொண்டிருக்கும் இந்த  நோஞ்சான் குழந்தைதான் இந்த மண்ணில் நாளை வெள்ளையர்களை எதிர்த்து  ஒரு  வீரஞ்செரிந்த விடுதலைப்போரை முன்நின்று நடத்தப்போகிறான் என்பதை அந்தத்தம்பதியினரோ  முண்டாக்களோ அறிந்திருக்கவில்லை.

அதனால்தான்..

வறுமையின் கோரப்பிடியால் சிக்கியிருந்த  சுகணாவும் – ஹர்மியும் பிர்சாவை   வளர்க்கமுடியாமல், ஹர்மியின் தம்பியிடம் ஒப்படைத்தார்கள். 

பிர்சா பிறக்கும் முன்பு  அந்த மலைசூழ்ந்த மண் எப்படி இருந்தது ?

தொழிற்புரட்சி என்னும் கோரத்தாண்டவத்தால் ஒரு குச்சிக்கம்பைக்கூட விட்டுவைக்காமல், சொந்த நாட்டையே  சூறையாடிவிட்ட   ஆங்கிலேயர்கள், தங்களது ஆளுகைக்குட்பட்ட காலனி நாடுகளில் தங்களுக்கு தோதான மரங்களையும் வளங்களையும் தேடியலைந்துகொண்டிருந்தார்கள் .

இரும்புக்கு நிகரான உறுதியுடைய மரங்களும்,  வாழ்வில் அவர்கள் பார்த்திராத விதவிதமான விலங்குகளும் தங்கமும், நிலக்கரியும் கொட்டிக்கிடக்கும் இந்திய வனங்களும்  அவர்களுக்குள் பேராசைத்தீயை மூட்டிவிட்டிருந்தது. 

கொள்ளைக்கான முன் ஏற்பாடுகளை கனகச்சிதமாகத் திட்டமிட்டு சத்தமில்லாமல் புளூபிரிண்டாக்கி மேசைக்குள் வைத்துக்கொண்டார்கள்.

ஈவிரக்கமில்லாமல் எந்தவிதமான அறிவிப்பும் இல்லாமல் அவர்களின் அந்த  சூறையாடல் திட்டத்தை  பணியடர்ந்த வசந்தகாலத்தின் ஒரு அதிகாலையில்தான் செயல்படுத்தத் தொடங்கினார்கள்.

அன்றைக்கு இருந்ததில் எது  அதி நவீன எந்திரமோ, அந்த எந்திரமும்.. எது அதி நவீன போக்குவரத்துமோட்டாரோ, அந்த  போக்குவரத்து மோட்டார்களும் பச்சை உடையணிந்த வீரகளோடு, எங்கெல்லாம் வனம் இருக்கிறதோ, அங்கெல்லாம் வந்து சாரைசாரையாக  அணிவகுத்து  நின்றன.

என்ன நடக்கிறதென்று சுதாகரித்துக்கொள்ளும் முன்பே, பழங்குடிகளின் வனங்களை அவர்கள்  இஞ்இஞ்சாக துளைக்கத் தொடங்கினார்கள். குறுக்கும் நெடுக்குமாக  கீரீச்சிட்டுப்பறந்து தலைகுத்திப்போனது பறவைகள். அந்நியர்களின் உடல் வாசத்தால் அலர்ஜியான யானைகள் சக்தியுள்ளவரை பிளிரி ஓய்ந்தது.

தேவைக்கு அதிகமாக ஒரு சுள்ளியைக்கூட உடைத்து பழக்கமில்லாத, தேவைக்கு அதிகமாக ஒரு பழத்தைக்கூடப்பறித்து உண்ணவிரும்பாத பழங்குடிகள்… தங்களுக்கு பாலூட்டிய  தாய்போன்ற வனத்தின் மடி   தங்களது கண்முன்னே ஈவிரக்கமில்லாது அறுக்கப்படுவதைக் காணச்சகிக்காது  கொதித்தெழுந்து கூச்சலிட்டார்கள். என்ன வந்தாலும் சரியென்று கூடி நெருங்கி  மூர்க்கமாக எதிர்த்து நின்றார்கள்.

நிச்சயமாய் இந்த எதிர்ப்பை ஆங்கிலேயர்கள் எதிர்பார்க்கவில்லை.

அவர்கள் துப்பாக்கியை நீட்டி வானத்தை நோக்கி சுட்டார்கள்.

மக்கள்  துப்பாக்கிக்கும் பீரங்கிக்கும் அஞ்சவில்லை மாறாக   தங்களது உயிரணைய காட்டுக்காக அதன் உரிமைக்காக தங்கள் நெஞ்சை நிமிர்த்தி நின்றனர்.  தங்களால் எந்தெந்த வழிகளிலெல்லாம்  எதிர்ப்பை காட்டமுடியுமோ அந்தந்த வழிகளிலெல்லாம் எதிர்ப்பைக் காட்டினர். பூட்டுகள் சரசரக்கும் சத்தம் கேட்டால் ஓடி ஒளிந்துகொள்ளும்,  மேலடை அறியாத ‘நாகரீகம்’ அறியாத பழங்குடிகளை  அவர்கள் அந்த நாள்வரை ஒரு பொருட்டாகவே மதித்ததில்லை. அப்படிப்பட்டவர்கள் இப்படி எதிர்த்து நிற்பதை அவர்களால் தாங்கிக்கொள்ள முடியவில்லை.

நாளுக்கு நாள் இந்த போராட்டங்கள்  பம்பாய் மாகாணமெங்கும் பற்றிப்பரவியது. கோபத்தீ கொளுந்துவிட்டு எரிந்து  நிலமை கட்டுக்குள் அடங்காமல் போகவே, பதறிய அதிகாரிகள் மெற்கொண்டு நடக்கவேண்டியவை குறித்து ஆலோசனை செய்தனர். அது சதியாகத்தான் இருந்திருக்குமே தவிர வேறு எதுவுமாக  இருந்திருக்க வாய்ப்பிலை.

ஒரு இரவில் அந்த சதி அறிவிப்பு வந்தது.

வனப்பகுதிலிருக்கும் எல்லா மரங்களும் எல்லா விலங்குகளும் எல்லா பறவைகளும்  எல்லா வளங்களும் எல்லா நிலங்களும் ஆங்கில அரசுக்கு சொந்தமானது, இதில் தலையிடவோ இங்கே நடக்கும் பணிகளை தடுக்கவோ யாருக்கும் எந்த  உரிமையுமில்லை. ஒரு  குயில் கூட தங்களை கேட்காமல் கூவக்கூடாது என்று  அறிவித்தது. திட்டமிட்டுத் தொடுக்கப்பட்ட வழக்கொன்றில்  இந்த அறிவிப்பை ஒரு  தீர்ப்பாக மாற்றி சட்டமாகவும் இயற்றினார்கள்.

வனத்திற்கென்று ஒரு துறையைத்தொடங்கி எல்லா அதிகாரங்களையும் அந்தத்துறையிடம் குவித்துக்கொண்டார்கள். அதற்கு தோதாக வனச்சட்டத்தை வகுத்துக்கொண்டார்கள்.

அந்த வனச்சட்டத்தின்படி “ஆதிவாசிகள்  தாங்கள் தங்கியிருக்கும் வீடுகளுக்கு தாங்கள் உழுதுகொண்டிருக்கும் துண்டுதுக்கடா நிலங்களுக்கு, தாங்கள்  ஆடுமாடு மேய்க்கும் மேய்ச்சல் நிலங்களுக்கு..  வனத்துறையிடம் அனுமதி வாங்க வேண்டும். அவர்கள் அனுமதி கொடுக்க வேண்டுமென்றால் ஒரு  வரி செலுத்தவேண்டும்.. அப்படி வரி செலுத்தாவிட்டால், அந்த  நிலங்களைவிட்டு வெளியேறவேண்டும்”  என்று எச்சரித்தது  அதன்படி செயல்படவும் தொடங்கியது.

வனத்துறையை மேலும் விரிவாக்கி  பல்லாயிரம் பணியாளர்களை நியமித்து அதை ஒரு முறையான அமைப்பாக்கி  பம்பரமாக செயல்பட ஆரம்பித்தார்கள்.

நிற்க…

இந்த சூழலில்தான் வனத்தின் தென்கிழக்காக இருந்த தனது மாமாவின் கூரையில் கும்லா மலையின்அருவியும் அதன் காற்றும், பழங்களும் விலங்குகளின் இரைச்சியும் பிர்சாவுக்கு தேவையான  இரத்தத்தையும் சதையையும்  தந்துதவுகிறது.

அவன் மெல்ல தவழத்தொடங்குகிறான்.

ஆனால் 1880ம் ஆண்டின்   இறுதிக்குள், ஆங்கில அரசு   பல்வேறு  தந்திரங்கள் மூலமாக கிட்டத்தட்ட எல்லா வனங்களையும் தங்கள் ஆளுகைக்குள் கொண்டுவந்துவிட்டது. அதே நாள் சோட்டா நாகபுரியில்   நிலச்சுவாந்தார்களையும் வட்டிக்காரர்களையும் அழைத்து  ஆங்கில அதிகாரிகள் ஆலோசனை நடத்தினார்கள்.

‘வரியாக பணம் கட்ட நீங்க தயாரா ‘?

“எவ்ளோ காசு வேணுமின்னாலும் கட்டறோம் நிலத்த நாங்க எடுத்துக்கறோம்”

போட்டிபோட்டுக்கொண்டு அந்த நிலங்களை வட்டிக்காரர்களும் வசதிபடைத்தவர்களும் வளைக்கத்தொடங்கினார்கள். பழங்குடிகளின் கண்முன்னாலேயே, அவர்கள் நிலத்தில் இறங்கி  எல்லைபிரித்து வேலி போடத்தொடங்கினர்.

கரைகளில் உட்கார்ந்து கண்ணீரோடு பழங்குடிகள் குமுறிகுமுறி அழுது கொண்டிருந்தார்கள் .

கிட்டத்தட்ட 50 சதவீதமான நிலம் இப்போது அவர்களின் கையைவிட்டு போயிருந்தது.  மீதி இருந்த நிலங்களுகும் கொஞ்சம் கொஞ்சமாக கைமாறிக் கொண்டிருந்தது.

நிலமிழந்த ஆதிவாசிகள் உணவுக்காக உயிர்வாழ  வட்டிக்காரர்களிடம் தங்களை தாங்களே விற்றுக்கொண்டு அடிமைகளாக மாறிக்கொண்டிருந்தனர்.துப்பாக்கி முனையில் அவர்கள் கசக்கி பிழியப்பட்டனர்.

1894 ஆம் ஆண்டு அது.ஒரு சொட்டு மழையில்லை. விளைச்சலில்லை வீட்டில் ஒரு கைப்பிடி தானியமில்லை. பட்டினிசாவுகள் ஆங்காங்கே நிகழத்தொடங்கியிருந்தது.

இந்த துயரமான நிலையிலும்  வரிக்கட்டாமலிருக்கும் ஆதிவாசிகளின் நிலங்களை கையகப்படுத்த பிரிட்டீஸ் அதிகாரிகள் மூர்க்கமாக முயன்றுகொண்டிருந்தனர்.

முண்டாக்கள் கொதித்தெழுந்தார்கள்.

அக்டோபர் 1 ஆம் தேதி  ஆயிரக்கணக்கான  ஆதிவாசிகள் தங்களது நிலம் பறிபோகக்காரணமாக இருந்த வரிகளை தள்ளுபடி செய்யக்கோரி வரலாறு காணாத ஆர்பாட்டத்தையும் பிரம்மாண்டமான பேரணியொன்றையும் நடத்தி பிரிட்டீசாரை ஆட்டம்காண வைத்தனர். பேரணி, சோட்டா நாக்பூர் பிரிட்டீஷ் தலைமைஅலுவலகத்தின் முன்னால் வந்து நின்றது. கூடியிருந்த ஆயிரக்கணக்கான முண்டாக்கள் யாரையோ எதிர்பார்த்து ஒருவொருக்கொருவர் பேசிக்கொண்டிருந்தார்கள்.

கூட்டத்தின் கடைசியிலிருந்து, ஆட்களை ஒதுக்கிகொண்டே   ஒடிசலான தேகம் கொண்ட ஒரு இளைஞன் ஆவேசமாக முன்னேறி வந்து கொண்டிருந்தான்.

20 வயதுகூட நிரம்பாத அந்த இளைஞன்தான் துணிவோடு இந்தப்போரை முன்னின்று வழி நடத்தியவன் என்று பேசிக்கொண்டார்கள்.

கூட்டம் வழிவிட்டு ஒதுங்கி… அவனது வாயசைவுக்காக காத்து நின்றது

முன்னால் வந்து நின்ற அவன் அங்கே கிடந்த உயரமான பாறை ஒன்றின் மேலே ஏறி நின்று,  முழங்கத்தொடங்கினான்.

ஜல் ஹமாரே  (நீர் நமது)

ஜமீன் ஹமாரே (நிலம்நமது)

ஜங்கில் ஹமாரே (வனம் நமது )

அந்த இளைஞன் முழங்க முழங்க கூட்டமும்  அந்த முழக்கத்தை திரும்பத்திரும்ப முழங்கி முழங்கி ஆர்பரித்தது.

அந்த இளைஞன் வேறு யாருமல்ல உலிஹட்டில் பிறந்து கும்லாவில் வளர்ந்த  நோஞ்சான் குழந்தைதான் அது.

நன்றாக வளர்ந்துவிட்டிருந்தான் அவனது குரலும் உடலும் ஏதோ தீர்க்கத்தை தின்று வளர்ந்ததுபோல் மாறிவிட்டிருந்தது.

வசீகரமான சத்திய ஆவேசமாக அவன் எழுப்பிய இந்த  முழக்கம், முண்டாக்களுக்குள் புகைந்து கொண்டிருந்த நெருப்பை ஊதிபெருக்கி ஊழித்தீயாக்கியது.

அந்த முழக்கம் மலைகளின் இண்டு இடுக்கிலெல்லாம் இடிமுழக்கமாக ஒலிக்கத்தொடங்கியது. அது எல்லைகளை கடந்து தடையுடைத்து எங்கும் பரவியது. அது ஒவ்வொரு முண்டாக்களின்  இருதயத்துக்குள்ளும் இறங்கி, மாயங்களை நிகழ்த்தத் தொடங்கியது. சோட்டா நாகபுரி போர்கோலம் பூண்டு நின்றது.

இது அவனுக்கு இன்னும் உற்சாகமூட்டியது.

பிரிட்டீஷ் படைகளை சமாளிக்க வெறும் முழக்கம் மட்டுமே போதாது என்று உணர்ந்திருந்த  பிர்சா மறைந்து தாக்கவும்  மூர்க்கமாகப் போரிடவும்  கெரில்லாப் போர்ப்படையை தன் சொந்தப் பழங்குடிகளை வைத்தே கட்டத் தொடங்கினான்.

நவீன எந்திரங்களை நவீன எந்திரங்களைக்கொண்டு எதிர்கொள்ள வேண்டியதில்லை. மரபார்ந்த போரை ஒரு மரபற்ற போரால்தான் வீழ்த்தமுடியும்.. அது ஒன்றைத்தான் பழங்குடிகள திறம்பட நடத்தமுடியும் என்பதில் பிர்சா உறுதியாக இருந்தான்.

தொடர்சியாக வெள்ளையர்களுக்கு எதிராக பல்வேறு தாக்குதல்களை திட்டமிட்டு அவன் நடத்திக்கொண்டே இருந்தான்.

எத்தனையோ தாக்குதல்களை அவன் நடத்தியிருந்தாலும், ஆங்கிலேயர்களின் ஆணிவேரை அசைத்துப்பார்த்த அதிமுக்கியமான இரண்டு தாக்குதல்களாக இதையே பிர்சா நினைத்தான்.

1900 ஜனவரி 4.

முண்டாவின் முக்கிய தளபதியான கயா முண்டா, செய்ல் மலையில் உள்ள எட்கடியில் இருந்தான். “கயாவை கைதுசெய்துவிட்டால் குறிப்பிட்ட பல கிராமங்களில் பழங்குடிகளின் கிளர்ச்சியை அடக்கிவிடலாம்.அதேநேரத்தில்  பிர்சாவின் வலதுகையை உடைத்த மாதிரியும் இருக்கும்” என்று ஆங்கில மூளை கணக்குபோட்டது. அந்தக்கணக்கைத் தீர்க்கும் வழிகளோடு  போலீஸ் படையொன்று  எட்கடி கிராமத்தை நோக்கி வந்துகொண்டிருந்தது.

பொலீஸ் நுழையப்போவதை முன்னமே அறிந்த பழங்குடி ஒற்றன் ஒருவன், பறவையைப்போல ஒரு சங்கேத ஒலியை கிழக்குதிசையை நோக்கி ஒலிக்கவிட்டிருந்தான். அது இரண்டு குன்றுகளைத்தாண்டி நின்றிருந்த அணிக்கு சேர்ந்துவிட்டது.  எப்படி இதை சமாளிக்கவேண்டும் என்பதற்கான எதிர் சங்கேத ஒலியையும் அவர்கள் அனுப்பிவிட்டார்கள்.

போலீஸ் கிராமத்துக்குள் நுழைந்துவிட்டது நாய்களும் கோழிகளும் அச்சத்தில் குலைத்துக்கொண்டு அங்குமிங்கும் ஓடியது நாய்களைத் தேடிக்கொண்டு சிறுத்தை ஒன்று கிராமத்தின் ஓரத்தில் பாய்ந்து விழுந்தது..  என்னதென்று யூகிப்பதற்க்குள் ஒட்டுமொத்த கிராமமும் அவர்கள் மேல் நாலப்புறங்களிலிருந்தும் பாய்ந்து குதறியது. அதில் ஏற்கனவே முண்டாக்கள் பலரையும் கொன்ற போலீஸ்கான்ஸ்டபுள்  ஜய்ராம் கொல்லப்பட்டான்.இந்த செய்தி அறிந்த ராஞ்சியின் இணை கமிசனர் ஆயுதம் தாங்கிய போலீஸ் படையொன்றை  எட்கடிக்கு அனுப்பிவைத்தான்.

ஆரவாரத்துடன் வந்த அந்தப்படை நீண்ட போராட்டத்துப்பின்பு  கயாவை கைது செய்து வீடுகளுக்கு தீ வைத்துவிட்டு வெளியேறியது. ஆனாலும் ஆயுதம்தாங்கிய போலீஸ்காரர்களிடமிருந்து தங்கள் கயாவை  மீட்க, முண்டா   ஆண்களும் பெண்களும் குழந்தைகளும் இணைந்து நடத்திய  சமசரமில்லாத மயிற்கூச்செரியும் சண்டை  அந்த படையினரிடம் ஒரு அச்சத்தை ஏற்படுத்திவிட்டது.

ஏனென்றால்  அவ்வளவு தீர்க்கத்தையும் இராணுவம்போலான ஒரு  ஒழுங்கையும் முன் அனுமானம் செய்யமுடியாத ஒரு எதிரியின் வியூகத்தையும்  முதன்முதலாக அங்கேதான் அவர்கள்  பார்த்தார்கள்.

காடுகளுக்குள் சிதறிய  முண்டாக்கள் கயா கைதுக்கு பழிவாங்க  தயாராகிக்கொண்டிருந்தார்கள்.

1897ஆம் ஆண்டு காலை 10 மணி.

குந்தி காவல் நிலையம் அந்த பகுதிக்கான முக்கியமான கேந்திரமாக இருந்தது. முண்டாக்களுக்கு எதிரான எல்லா திட்டங்களும் அங்கிருந்துதான் தீட்டப்பட்டது .எல்லா முண்டாப்பகுதிகளையும் கண்காணிக்கும் வசதிகளை இந்த காவல்நிலையம்தான் பெற்றிருந்தது. இந்த அஸ்த்திவாரத்தைத் தகர்த்தால்  ஆங்கிலேயர்களை ஆட்டம்காண வைக்கலாம் என்று திட்டமிட்ட பிர்சா 400 முண்டாக்களோடு   டோம்பரி மலையைவிட்டு இறங்கி, குந்தி காவல் நிலையத்தை நோக்கி கருமேகம்போல நகர்ந்தார்கள்.

நேரம் 10.12 ஐ தொட்டுவிட்டது..

திட்டமிட்டபடி சீறிப்பாய்கிற ஈட்டிகளும் அம்புகளும் சுழன்று பறக்கும் கோடாலிகளும்…. அந்தக்காவல் நிலையம் ஒரு போர்களம்போல் காட்சியளித்தது போலீஸ் அதிகாரிகளும், ஊழியர்களும் செய்வதறியாது திணறிப்போய் நாலப்புறமும்  சிதறி ஓடுகிறார்கள். கூட்டத்தை நோக்கி  ரகுந்ராம் என்ற போலீஸ்காரன் சுட ஆரம்பிக்கிறான். அவன்  குதிரையை இழுக்கும் முன்பு முண்டாவின் கையிலிருந்த அம்பு அவன் குரல்வளையை குத்தி நிற்கிறது. அவன் நின்றுநிதானித்து காவல் நிலையத்தின் வாசலில் வீழ்கிறான். 

இப்படித்தான் ஆங்கிலேயர்களை அவன் உண்டு இல்லை என்று ஆக்கிவைத்தான்

1889 தொடங்கி -1895ஆம்ஆண்டுவரை இப்படியான ஒரு   வீரஞ்செரிந்த யுத்தத்தைத்தான் அந்தப்பகுதியில் பிர்சா நிகழ்த்திக் கொண்டிருந்தான்  இழப்புகளைக்கண்டு அஞ்சாது, மேலும் மேலும்  திடீர் திடீரென்று ஏறியடித்த பழங்குடிகளின் வீரத்துக்குமுன், கட்டற்ற போர்முறையின் கதிகலக்கும் வடிவத்துக்குமுன்… குகைகளுக்குள்ளிருந்து எழும்  மாய வியூகங்களுக்குமுன் தாக்குப்பிடிக்க முடியாமல், பல இடங்களில் பிரிட்டீஷ் படைகள் தொடர்ந்து மண்டியிட்டது. பல்லாயிரம் சிப்பாய்கள் படைகளைவிட்டு தப்பியோடினர். 

அவமானத்தால் கூனிக்குறுகிய அதிகாரிகள் பிர்சாவை எப்படியாவது பிடித்து இந்தபோரை தமதாக்கிவிடவேண்டுமென்று கங்கணம் கட்டிக்கொண்டிருந்தனர்.

“இது ஒரு ஆபத்தான சமிங்கை இதை இப்போதே முடிக்காவிட்டால் நமது அரசுக்கு மிகபெரிய ஆபத்தாக முடியும்” என்று  அவ்வப்போது அரக்கபரக்க ஆலோசனைக்கூட்டங்களை நடத்திக் கொண்டிருந்தார்கள்.

அப்படி ஒரு கூட்டத்தில்  எடுக்கப்பட்ட முடிவின்படி ஆகஸ்ட் 23, 1895 அன்று சூழ்ச்சிசெய்து பிர்சாவை கைதுசெய்து சிறைக்கொட்டடியில் அடைக்கிறார்கள்.

கொடூரமான  சித்திரவதைக்குப் பின்பு  1897-ல் விடுதலையான பிர்சா  மீண்டும்  தீவிரமாக இயக்கப்பணிகளை முன்னெடுக்கிறார். சினம் கொண்ட பிரிட்டீஷ் அரசு  அவரை 1900-ல் மீண்டும் கைதுசெய்து சிறையில் அடைத்தது.

1900 ஆம் வருடம்  ஜீன் 8 ஆம் தேதி அது.

நள்ளிரவு நெருங்கிக்கொண்டிருந்தது.

மெல்ல மெல்ல அடியெடுத்து நிழல்களைப்போல் நடந்துவந்தார்கள்  வெள்ளை சிறையதிகாரிகள். கையில் இருந்து பொட்டலத்தைப்பிரித்து குடிக்கவைத்திருந்த தண்ணீரில் அதைக் கலந்துவிட்டு நிம்மதியாகத் தூங்கப்போனார்கள்.

ஜூன் 9-ம் தேதி அதிகாலை.

ஒரு மாபெரும் வரலாற்றை எழுதிக்காட்டிய, ஆதிவாசிகளின் நம்பிக்கை ஒளியாய்இருந்த, எதிரிகளின் செவிப்பறையில் ஓயாத பேரிடியாய் ஒலித்துக்கொண்டிருந்த மகோன்தமான வீரன், எதற்கும்.அடிபணியாத தலைவன், பிர்சா முண்டா (Birsa Munda) தனது 25 வது வயதில், மர்மமானமுறையில் ராஞ்சி சிறையின் 11 ஆம் அறையில்  இறந்துகிடந்தான்.

இது நடந்து நூறாண்டுகளுக்கும்மேலாகிவிட்டது, அப்போது எப்படியிருந்தார்களோ, என்னமாதிரியான துன்பங்களை அனுபவித்தார்களோ அதே நிலையில்தான் பழங்குடிகள் இன்னும் இருக்கிறார்கள். அதே வகையான சுரண்டலைத்தான் இப்போதும் அனுபவிக்கிறார்கள். பெயர் அறியாத நோய்களால், இரத்த சோகையால், பட்டினியால், போதிய மருத்துவமின்மையால், போதிய உணவின்மையால், காப்பகங்களால் வனத்துக்கு வெளியேயும், வனத்துக்கு உள்ளேயும் தினம் தினமும் ஆயிரக்கணக்கானோர் செத்துக்கொண்டிருக்கிறார்கள். இலட்சக்கணக்கான  ஏக்கர் நிலங்களை அன்னியர்களிடம்  இழந்துகொண்டிருக்கிறார்கள். தினம்தினம் தங்களது பெண்களை பலிகொடுத்துக் கொண்டிருக்கிறார்கள். துயரம் நிறைந்த  தங்களது வாழ்வை மெளனமாக கடந்து கொண்டிருக்கிறார்கள். அந்த மெளனம் பொருள் பொதிந்தது.  அதுதான்  இந்த மலைகளின் இண்டு இடுக்குகளெங்கும் பல்வேறு வடிவங்களில் போராடும், புதிய புதிய பிர்சாக்களை மீண்டும் மீண்டும் பிறக்கவைத்துக் கொண்டிருக்கிறது.

பிர்சா முண்டாக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்!

Tags: