“மக்களை திசை திருப்பவே இந்து – முஸ்லிம் விவகாரத்தை பா.ஜ.க எழுப்புகிறது” – டெல்லியில் ராகுல் காந்தி

மக்களின் கவனத்தை திசை திருப்பவே இந்து – முஸ்லிம் விவகாரத்தை பா.ஜ.க எழுப்புவதாக காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி குற்றம்சாட்டியுள்ளார்.

டெல்லியில் ராகுல் காந்தி பேச்சு: நூறு நாட்களுக்கும் மேலாக ராகுல் காந்தி மேற்கொண்டு வரும் இந்திய ஒற்றுமை யாத்திரை இன்று (24/12/2022) டெல்லி வந்தடைந்தது. டெல்லி செங்கோட்டை பகுதியில் இன்று மாலை நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் ராகுல் காந்தி உரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது: “நாட்டில் தற்போது இருப்பது நரேந்திர மோடி அரசு அல்ல. இது அம்பானி – அதானி அரசு. இது ஏழை மற்றும் நடுத்தர மக்களுக்கான அரசு அல்ல. இந்தியாவில் மக்கள் ஏராளமான பிரச்சினைகளை சந்தித்து வருகிறார்கள். அதற்கு இதுவரை மத்திய அரசு தீர்வு காணவில்லை.

நாட்டின் உண்மையான பிரச்சினைகளில் இருந்து மக்களின் கவனத்தை திசை திருப்பும் நோக்கிலேயே இந்து – முஸ்லிம் விவகாரம் எழுப்பப்படுகிறது. பட்டம் படித்த இளைஞர்கள் பலர் இன்று பகோடா விற்றுக்கொண்டிருக்கிறார்கள். ஆனால், இது குறித்து பிரதமர் நரேந்திர மோடிக்கு கவலை இல்லை.

நாடு முழுவதும் வெறுப்பு பரப்பப்பட்டு வருகிறது. வெறுப்பு சந்தையில் நான் அன்பின் கடையை திறக்கிறேன். நான் மேற்கொண்ட இந்த இந்திய ஒற்றுமை யாத்திரையில் எங்களோடு நாய்கூட வந்தது. ஆனால், ஒருவரும் நாயை கொல்லவில்லை. பசு, எருது, பன்றி என பல்வேறு விலங்குகள் வந்தன. இந்த யாத்திரை இந்தியாவின் யாத்திரையாக இருக்கிறது. இங்கே வெறுப்புக்கு இடமே இல்லை. வன்முறைக்கு இடமே இல்லை.

நான் 2004-ல் அரசியலுக்கு வந்தபோது மத்தியில் எங்கள் அரசு இருந்தது. ஊடகங்கள் நாள் முழுவதும் என் புகழ்வதை வழக்கமாகக் கொண்டிருந்தன. ஒருமுறை, உத்தரப் பிரதேசத்தின் பட்டா பர்சுவால் என்ற இடத்துக்குச் சென்று அங்குள்ள விவசாயிகளுக்காகக் குரல் கொடுத்தேன். உடனே அவர்கள் எனக்கு எதிராக திரும்பிவிட்டார்கள்” என்று அவர் பேசினார்.

மல்லிகார்ஜுன கார்கே பேச்சு: இந்த நிகழ்ச்சியில் பேசிய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, எங்கேயும் கரோனா இல்லை. யாருக்கும் எதுவும் ஏற்படவில்லை. பிரதமர் நரேந்திர மோடி கூட முகக்கவசம் அணிவதில்லை. ஆனால், இந்திய ஒற்றுமை யாத்திரையால் கரோனா பரவிவிடும் எனக் கூறி மக்களை அச்சுறுத்தப் பார்க்கிறார்கள். உண்மையில் அவர்கள் இந்திய ஒற்றுமை யாத்திரைக்கு கிடைத்துள்ள வரவேற்பால் அச்சமடைந்திருக்கிறார்கள். அதன் காரணமாகவே, கரோனாவை காரணம் காட்டி யாத்திரையை நிறுத்த முயல்கிறார்கள்” என்று தெரிவித்தார்.

”ராகுலின் யாத்திரை அடுத்து வரும் ஒளிமயமான தலைமுறைக்கானது!” – கமல்

டெல்லியில் தொடர்ந்து வரும் ராகுல்காந்தியின் இந்திய ஒற்றுமை நடைபயணத்தில் மக்கள் நீதிமய்யம் தலைவர் கமல்ஹாசன் பங்கேற்று உரையாற்றினார்.

காங்கிரஸ் முன்னாள் தலைவரும், வயநாடு தொகுதி எம்பியுமான ராகுல்காந்தி பாரத் ஜோடோ யாத்திரை என்ற பெயரில் இந்திய ஒற்றுமை நடைபயணத்தை மேற்கொண்டு வருகிறார்.

தமிழ்நாட்டின் கன்னியாகுமரியில் செப்டம்பர் 7-ம் தேதி தொடங்கிய இந்த பயணம் கேரளா, கர்நாடகா, மத்தியபிரதேசம், ராஜஸ்தான், ஹரியானா ஆகிய மாநிலங்களை கடந்து தற்போது டெல்லியில் தொடர்ந்து வருகிறது.

மொத்தம் 150 நாட்கள் கொண்ட ராகுல்காந்தியின் இந்த நடைபயணத்தில் பல்வேறு மாநிலங்களில் உள்ள பொதுமக்கள், கட்சித் தொண்டர்கள், சமூக ஆர்வலர்கள், சமூக செயற்பாட்டாளர்கள், நடிகர், நடிகைகள் என பல்வேறு தரப்பினரும் இணைந்துள்ளனர்.

டெல்லியில் கடும் குளிருக்கிடையே 108வது நாளான இன்று காலையில் தொடங்கிய இந்திய ஒற்றுமை நடைபயணத்தில் ராகுல்காந்தியுடன், அவரது தாயார் சோனியா காந்தி, சகோதரி பிரியங்கா காந்தி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

அதனைத் தொடர்ந்து மாலையில் தொடங்கிய நடைபயணத்தில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் பங்கேற்றுள்ளார். கறுப்பு கலர் கோட் அணிந்து ராகுல்காந்தியுடன் நடைபயணம் மேற்கொண்டு வருகிறார்.

அவருடன் நூற்றுக்கணக்கான மக்கள்நீதி மய்யம் தொண்டர்களும் இந்த நடைபயணத்தில் பங்கேற்றுள்ளனர்.

பின்னர் செங்கோட்டைக்கு முன்பாக நடைபெற்ற திரளான கூட்டத்தில் கமல்ஹாசன் உரையாற்றினார்.

முதலில் ஆங்கிலத்தில் பேசிய கமல்ஹாசன்,”நான் இங்கு ஏன் வந்தேன் என்று எல்லோரும் கேட்கிறார்கள். என் அப்பா ஒரு காங்கிரஸ்காரர். எனக்கு பல சித்தாந்தங்கள் இருந்தன. நான் ஒரு நடிகனாக, ஒரு அரசியல் கட்சியின் தலைவராக இருந்தாலும், இங்கு ஒரு இந்தியனாகவே வந்துள்ளேன்.” என்று பேசி கொண்டிருக்கும் போதே ராகுல்காந்தி, கமல்ஹாசனை தமிழில் பேசுமாறு கோரிக்கை வைத்தார்.

அதனை தொடர்ந்து கமல்ஹாசன் தமிழில் பேச, கரூர் எம்பி ஜோதிமணி ஆங்கிலத்தில் அதனை மொழிபெயர்த்தார்.

அப்போது அவர், “ராகுல் காந்தி தன்னை ஒரு தமிழன் என்று முன்னதாக அடையாளப்படுத்தியுள்ளார். ஆனால் அதற்காக அவரை எனது சகோதரனாக நான் கருதவில்லை. மாறாக இது இரண்டு கொள்ளுப் பேரன்மார்கள் கலந்து கொள்ளும் யாத்திரை. அவர் நேருவின் வழியில் வந்தார். நான் காந்தியின் வழியில் வந்திருக்கிறேன்.

எந்த கட்சி ஆட்சியில் இருந்தாலும் இந்திய நாட்டின் அரசியலமைப்புக்கு நெருக்கடி என்றால் நான் தெருவில் வந்து நிற்பேன். நான் அதற்காகவே இந்த யாத்திரையில் பங்கு கொண்டுள்ளேன்.

நான் இங்கு வருவதற்கு முன்னதாக பலரும் எனக்கு அறிவுரை கூறினார்கள். நீங்கள் ராகுல் காந்தியின் யாத்திரைக்கு சென்றால் உங்களது அரசியல் பயணத்தை பாதிக்கும் என்று கூறினார்கள். எனது அரசியல் பயணம் எனக்காக உருவானது இல்லை. நாட்டுக்காக உருவானது.

நான் ராகுல்காந்தி யாத்திரை தொடங்கிய இந்தியாவின் தென்கோடியில் உள்ள தமிழ்நாட்டில் வாழும் குடிமகன் தான். இந்த யாத்திரை இப்பொழுதுதான் தொடங்கியுள்ளது. இன்னும் இது பல நூறு தூரம் செல்ல வேண்டி உள்ளது.

நான் நடந்து வந்த கிலோ மீட்டர் கணக்கை பற்றி பேசவில்லை. மாறாக இந்த நடை பயணமானது நமது பாரம்பரியமிக்க வரலாற்றிலிருந்து ஒளிமயமான எதிர்காலத்திற்கு அழைத்துச் செல்கிறது.

இது ஒன்றும் ஐந்தாண்டு திட்டமல்ல. இது அதையும் தாண்டி அடுத்து வர இருக்கும் தலைமுறைகளுக்கானது.

நாடு என்று வரும் பொழுது இங்குள்ள பல்வேறு கட்சிகளின் கட்சி கொடிகளின் நிறங்கள் தாண்டி, நமக்கு தேசியக் கொடியில் உள்ள மூன்று நிறங்களே தெரிய வேண்டும். அதற்காகவே நான் இங்கு வந்துள்ளேன்.

நான் ராகுல் காந்தியை மிகவும் மதிக்கிறேன். அவரின் துணிச்சலான இந்த முடிவையும், மாநிலங்கள் தாண்டிய இந்த நடைபயணத்தையும் நான் ஆதரிக்கிறேன். அதற்கு வாழ்த்து கூறுகிறேன்” என்று தெரிவித்தார்.

டெல்லியில் கவனம் ஈர்த்த ராகுல் காந்தியின் இந்திய ஒற்றுமை யாத்திரை

ராகுல் காந்தியின் இந்திய ஒற்றுமை யாத்திரை சனிக்கிழமை காலை டெல்லியை வந்தடைந்தது. இந்த யாத்திரையில் ராகுல் காந்தியுடன் சோனியா காந்தியும், பிரியங்கா காந்தியும் கலந்து கொண்டனர். டெல்லியே அதிரும் அளவுக்கு கூட்டம் குவிந்தது.
கடந்த செப்டம்பர் 7-ஆம் தேதி ராகுல் காந்தி தமிழகத்தின் கன்னியாகுமரி மாவட்டத்தில் இந்திய ஒற்றுமை யாத்திரையை தொடங்கினார். இந்த யாத்திரை தமிழகம், கர்நாடகா, கேரளா, ஆந்திரா, தெலங்கானா, மத்தியப் பிரதேசம், மகாராஷ்டிரா, ராஜஸ்தான், ஹரியாணா மாநிலங்களைக் கடந்து தற்போது டெல்லிக்குள் நுழைந்துள்ளது.
சோனியா காந்தி இரண்டாவது முறையாக இந்திய ஒற்றுமை யாத்திரையில் கலந்து கொள்கிறார். முன்னதாக, அக்டோபர் மாதம் கர்நாடகாவில் நடந்த யாத்திரையில் அவர் கலந்து கொண்டார்.
ஃபரிதாபாதிலிருந்து டெல்லிக்குள் யாத்திரை நுழைந்த போது, டெல்லி காங்கிரஸ் தலைவர் அனில் சவுத்திரி, காங்கிரஸ் தலைவர்கள் ராகுல் காந்தியை வரவேற்றனர். அப்போது தொண்டர்கள் மற்றும் தலைவர்களிடையே பேசிய ராகுல் காந்தி, “நாட்டின் சாமானிய மக்கள் தற்போது அன்பை பற்றி பேசத் தொடங்கி உள்ளனர். ஒவ்வொரு மாநிலத்திலும் லட்சக்கணக்கான மக்கள் யாத்திரையில் கலந்து கொண்டனர். நான் ஆர்எஸ்எஸ், பாஜகவினருக்கு ஒன்றைச் சொல்லிக்கொள்கிறேன்… நாங்கள் வெறுப்பின் சந்தையில் அன்பின் கடையைத் திறந்துள்ளோம்” என்றார்.
மேலும், “இந்த யாத்திரையின் நோக்கமே, மக்கள் ஒருவருக்கொருவர் உதவிக்கொள்ளும் உண்மையான இந்தியாவை எடுத்துக்காட்டுவதுதான். அவர்கள் வெறுப்பை பரப்புகிறார்கள். நாம் அன்பை பறப்புகிறோம்” என்றார் ராகுல் காந்தி.
24/12/2022 சனிக்கிழமை டெல்லிக்குள் நுழைந்த ராகுல் காந்தியின் இந்திய ஒற்றுமை யாத்திரை காலை 8.30 மணியளவில் டெல்லி அப்பலோ மருத்துவமனை அருகே வந்தது. அப்போது அந்த வழியாக வந்த ஆம்புலன்ஸ் வாகனம் கடந்து செல்வதற்காக அவர் தனது யாத்திரையை சிறிது நேரம் நிறுத்தினார்.
அதேபோல பின்தொடர்ந்து வரும் தொண்டர்களையும் ஆம்புலன்ஸ் வாகனத்திற்கு வழிவிட்டு நிற்குமாறு கேட்டுக்கொண்டார் ராகுல்.
பரத்பூரில் இருந்து சனிக்கிழமை தொடங்கிய யாத்திரை, 23 கிமீ பயணித்து மாலை செங்கோட்டையை அடைந்ததும் நிறைவடையும். பின்னர் 9 நாட்கள் ஓய்வுக்கு பிறகு ஜனவரி 3-ம் தேதி மீண்டும் டெல்லியில் இருந்து யாத்திரை தொடங்கும்.
பல்லாயிரக்கணக்கானோர் பங்கேற்ற யாத்திரை: டெல்லியில் நடந்த யாத்திரையில் ஏராளமானோர் கலந்து கொண்டனர். கொரோனா விதிகளைப் பின்பற்றி யாத்திரையை மேற்கொள்ளுமாறும், இல்லாவிட்டால் யாத்திரையை நிறுத்துமாறும் ராகுல் காந்திக்கு மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா கடிதம் எழுதி இருந்தார். எனினும், இன்றைய யாத்திரையில் பல்லாயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.
அனுராக் தாக்கூர் கண்டனம்: கரோனா கட்டுப்பாடுகளைப் பின்பற்றாமல் இந்திய ஒற்றுமை யாத்திரை மேற்கொள்ளப்படுவதற்கு மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர் கண்டனம் தெரிவித்தார். டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “சீனா, தென் கொரியா, ஜப்பான் நாடுகளில் கரோனா தொற்று வேகமாக பரவி வருகிறது. ஆனால், காங்கிரஸ் கட்சி ஒரு குடும்பத்தைப் பற்றி மட்டுமே கவலைப்படுகிறது” என்று கூறியுள்ளார்.
மேலும், “கொரோனா கட்டுப்பாடுகளைப் பின்பற்ற வேண்டிய காலம் இது. இந்திய ஒற்றுமை யாத்திரையில் பங்கேற்ற இமாச்சலப் பிரதேச முதல்வர் சுக்விந்தர் சிங் சுக்குவுக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அவரை சந்தித்த ராகுல் காந்தியோ மற்ற காங்கிரஸ் தலைவர்களோ கொரோனா பரிசோதனை மேற்கொண்டார்களா அல்லது தங்களை தனிமைப்படுத்திக் கொண்டார்களா?” என்று அனுராக் தாக்கூர் கேள்வி எழுப்பியிருந்தார்.
“ஊழல்வாதிகளை ஒன்று சேர்ப்பதற்கான யாத்திரை இது. அவர்கள் (காங்கிரஸ் கட்சியினர்) ஒரு குடும்பத்தின் நலனை மட்டுமே சிந்திப்பதற்குப் பதில், நாட்டின் நலன் குறித்து சிந்திக்க வேண்டும்” என குறிப்பிட்டிருந்தார். மேலும், “இவர்களை சுட்டுத்தள்ள வேண்டும்” என்றும் அனுராக் தாக்கூர் காட்டமாக கூறியிருந்தார்.
ப.சிதம்பரம் பதில்: அனுராக் தாக்கூரின் விமர்சனத்திற்கு பதில் அளித்துள்ள காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம், “அனுராக் தாக்கூர் அவ்வாறு விமர்சித்திருப்பதில் ஆச்சரியம் இல்லை. இந்திய ஒற்றுமை யாத்திரைக்கு மிகப் பெரிய ஆதரவு கிடைத்திருக்கிறது. ஏராளமானோர் இதில் இணைந்திருக்கிறார்கள். அதனால், அனுராக் தாக்கூர் அவ்வாறு கூறி இருக்கிறார். அவர் பெரிய அமைச்சர். நாங்கள் சிறிய மனிதர்கள்” எனக் குறிப்பிட்டுள்ளார்.
Tags: