அமெரிக்காவை ஆதரித்ததன் விளைவாகத் தள்ளாடுகிறது ஐரோப்பா

ஸ்பெயினில் எரிபொருட்களின் விலையுயர்வை எதிர்த்து வீதியின் குறுக்கே ரயர்களைக் கொழுத்தி மக்கள் போராடுகிறார்கள்.

ஷ்யாவுக்கும், உக்ரைனுக்கும் இடையிலான பிரச்சனையில் அமெரிக்காவை கண்மூடித்தனமாக ஆதரித்ததால் ஐரோப்பிய நாடுகளில் மக்கள் அவதிக்குள்ளாகியுள்ளனர்.

இதுவரையில் இல்லாத அளவிற்கு அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் ஐரோப்பிய நாடுகளில் ஏறியுள்ளன. உக்ரைன் மீது தாக்குதல் நடத்தியதற்காக ரஷ்யா மீது மேற்கத்திய நாடுகள் தடைகளை ஏற்படுத்தியிருக்கின்றன. இந்தத் தடைகள் ரஷ்யாவுக்கு ஏற்படுத்திய பாதிப்புகளை விட, பெரும்பாலான ஐரோப்பிய நாடுகளையே அதிகமாகப் பாதித்துள்ளன. இந்தத் தடைகள் தொடர்ந்தால் நிலைமை மேலும் மோசமடையவே வாய்ப்புகள் உள்ளதாக பல நாடுகள் கருதுகின்றன.

கோதுமை உற்பத்தி செய்வதில் உலகிலேயே முதல் பத்து நாடுகளில் ரஷ்யாவும், உக்ரைனும் இடம் பெற்றுள்ளன. ஐரோப்பிய நாடுகளில் ரஷ்யா முதலிடத்தில் இருக்கிறது. தற்போது ஏற்பட்டுள்ள நெருக்கடியால், ரஷ்யாவிலிருந்து கோதுமையை இறக்குமதி செய்ய முடியாமல் ஐரோப்பிய நாடுகள் பாதிக்கப்பட்டிருக்கின்றன. இதனால் கோதுமையின் விலை 70 விழுக்காடு அதிகரித்து விட்டது. இதன் விலை மேலும் உயரவிருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

உக்ரைன் விவசாயிகளைப் பாதுகாக்க நிதியுதவி தரப்போவதாக ஐரோப்பிய ஆணையம் கூறியுள்ளது. ஆனால், விலை உயர்வால் பாதிக்கப்படவிருக்கும் மக்களின் நிலை மோசமாகி இருக்கிறது. வரிகளைக் குறைக்கப்போவதாக ஐரோப்பிய ஆணையம் அறிவித்திருந்தாலும், எவ்வளவு நாட்களுக்கு தாக்குப் பிடிப்பார்கள் என்பது உறுதியாக இல்லை. ரஷ்யாவின் நடவடிக்கைகள் நிறைவு பெற்று, அதற்குப் பின்னர் நிலைமை சரியாகும் வரையில் வரிவிலக்குகள் கிடைத்தால்தான் மக்களுக்கு பலன்கள் கிடைக்கும்.

எரிவாயு இருப்பை அனைத்து உறுப்பு நாடுகளும் உத்தரவாதப்படுத்த வேண்டும் என்று ஐரோப்பிய ஆணையம் மசோதா கொண்டு வந்துள்ளது. நவம்பர் மாதத்திற்குள் இதைச் செய்ய வேண்டும் என்று அது தெரிவிக்கிறது. இது குறித்துக் கருத்து தெரிவித்த சில நிபுணர்கள். இது வெறும் ஆசையாக மட்டுமே இருந்துவிட வாய்ப்புள்ளது என்கிறார்கள். மற்றொரு பிரச்சனையும் ஐரோப்பிய நாடுகள் முன் வந்துள்ளது. சுமார் 35 லட்சம் பேர் உக்ரைனிலிருந்து பல்வேறு ஐரோப்பிய நாடுகளுக்கு அகதிகளாக வந்துள்ளனர். இவர்களுக்கு அடைக்கலம் கொடுப்பது பெரும் சவாலாக உருவாகியிருக்கிறது.

Tags: