கோல்டன் குளோப் விருது வென்ற ‘நாட்டு நாட்டு’ப் பாடல்

-மு.வா.ஜெகதீஸ் குமார்

‘RRR’ படத்தின் ‘நாட்டு நாட்டு’ பாடல்

திரைத்துறையினர் உயரிய விருதாக கருதும், ஒஸ்கர் அகாடெமி விருதுக்கு அடுத்தபடியாக ‘கோல்டன் குளோப்’ (Golden Globe) விருதுதான் விளங்கி வருகிறது.

Hollywood foreign press association வழங்கும் இந்த விருது விழா, நேற்று (ஜனவரி 11 ) அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடைபெற்றது.

இதில், எஸ்.எஸ்.ராஜமொளலியின் ‘ஆர்.ஆர்.ஆர்’ திரைப்படம் ஆங்கில மொழி அல்லாத படத்திற்கான பிரிவிலும், அந்தப் படத்தின் மிகவும் பிரபலமான ‘நாட்டு நாட்டு “ பாடல் சிறந்த பாடல் பிரிவிலும் நாமினேஷனுக்கு தேர்வாகி இருந்த நிலையில், எம்.எம்.கீரவாணி இசையமைத்த அந்த பாடல் கோல்டன் குளோப் விருதை தட்டிச் சென்றது.

விருது அறிவிக்கப்பட்ட உடனே விழாவில் கலந்துகொண்ட படக்குழுவினர் மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்ட வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகின.

‘நாட்டு நாட்டு’ பாடலை ராகுல், கால பைரவா பாடியிருந்தனர். சந்திரபோஸ் தெலுங்கில் எழுதியிருந்த பாடல் வரிகளுக்கு, பிரேம் ரஷித் சிறப்பான நடனம் அமைத்து இருந்தார். ராம் சரண் மற்றும் ஜூனியர் என்.டி.ஆர். நடனம் ஆடியிருந்தனர். உக்ரைன் அதிபர் மாளிகை முன்பு இந்த பாடல் படமாக்கப்பட்டது.

இந்நிலையில், கோல்டன் குளோப் விருது பெற்ற இசையமைப்பாளர் எம்.எம். கீரவாணி குறித்து பார்ப்போம்.

இசையமைப்பாளர் எம்.எம்.கீரவாணி

ஆந்திர பிரதேச மாநிலம் கொவ்வூரில் 1961 ஆம் ஆண்டு பிறந்தவர் எம்.எம்.கீரவாணி.

தெலுங்கு திரையுலகின் முன்னணி இசையமைப்பாளராக விளங்குவது மட்டுமின்றி, பாடலாசிரியராகவும் சில பாடல்களுக்கு பின்னணியும் பாடியுள்ளார் எம்.எம்.கீரவாணி.

80 காலகட்டங்களில் இசையமைப்பாளராக தனது வாழ்க்கையை துவங்கிய அவர், தெலுங்கு மட்டுமின்றி தமிழ்,மலையாளம்,கன்னடம் மற்றும் இந்தி உள்ளிட்ட மொழிப் படங்களுக்கும் இசையமைத்துள்ளார்.

சுமார் 150 படங்களுக்கும் மேல் இசையமைத்திருந்தாலும், தனது உறவினரும், இயக்குநருமான ராஜமொளலியின் பாகுபலி முதல் மற்றும் இரண்டாம் பாகம், ஆர்.ஆர்.ஆர் படங்கள் தான் அவரை உலகளவில் பிரபல இசையமைப்பாளராக மாற்றியது.

நாகர்ஜூனாவின் ’அன்னமயா’ திரைப்படம் இவருக்கு சிறந்த இசையமைப்பாளருக்கான தேசிய விருதையும் வென்று கொடுத்தது.

மறைந்த இயக்குநர் கே.பாலச்சந்தர் இயக்கிய ‘அழகன்’ திரைப்படம் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமான எம்.எம்.கீரவாணி,

தொடர்ந்து ’நீ பாதி நான் பாதி’ , ’பாட்டொன்று கேட்டேன்’, ‘சிவந்த மலர்’, ‘சேவகன்’, ‘வானமே எல்லை’, ‘ஜாதி மல்லி’, ‘பிரதாப்’, ‘கொண்டாட்டம்’, ‘ஸ்டூடண்ட் நம்பர் 1’, ‘இஞ்சி இடுப்பழகி’ உள்ளிட்ட படங்களுக்கு இசையமைத்துள்ளார்.

மேலும், ’அழகன்’ படத்திற்காக தமிழ்நாடு மாநில விருதையும் அவர் பெற்றுள்ளார்.

பி.வாசுவின் ‘சந்திரமுகி 2’ படத்திலும் எம்.எம்.கீரவாணி இசையமைக்க உள்ளதாக கூறப்படுகிறது.

இயக்குநர் ராஜமொளலியின் மனைவி ரமாவின் சகோதரியும், தயாரிப்பாளருமான ஸ்ரீ வள்ளி என்பவரைத்தான் கீரவாணி திருமணம் செய்து கொண்டுள்ளார்.

61 வயதான இவருக்கு கால பைரவா என்ற மகன் உள்ளார். பிரபல பாடகரான இவர் தான் ராகுலுடன் இணைந்து ’நாட்டு நாட்டு’ பாடலை பாடியிருந்தது குறிப்பிடத்தக்கது.

“கடின உழைப்புக்கு கிடைத்த தகுதியான வெற்றி” – கீரவாணிக்கு இளையராஜா வாழ்த்து

நாட்டுக் கூத்து பாடலுக்காக கோல்டன் குளோப் விருது வென்ற இசையமைப்பாளர் கீரவாணி மற்றும் ஆர்ஆர்ஆர் படக்குழுவுக்கு “உங்கள் அனைவரது கடின உழைப்புக்கு கிடைத்த தகுதியான வெற்றி” என்று இசையமைப்பாளர் இளையராஜா தனது வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், “கீரவாணி, எஸ்.எஸ்.ராஜமவுலி, ஆர்ஆர்ஆர் திரைபடம் உங்கள் அனைவரது கடின உழைப்புக்கு கிடைத்த தகுதியான வெற்றி. நான் மகிழ்ச்சி கொள்கிறேன். வாழ்த்துகள்” என்று பதிவிட்டுள்ளார்.

முன்னதாக, இயக்குநர் ராஜமவுலி இயக்கத்தில் கடந்த 2022 மார்ச் மாதம் வெளிவந்த திரைப்படம்தான் ‘ஆர்ஆர்ஆர்’ (RRR). இந்தப் படத்தில் இடம்பெற்றுள்ள ‘நாட்டுக் கூத்து’ பாடலுக்கு ‘Best Original Song’ பிரிவில் கோல்டன் குளோப் (Golden Globe) விருது கிடைத்துள்ளது. சர்வதேச அளவில் திரைத்துறையில் இந்த விருது மிக முக்கிய விருதாக பார்க்கப்படுகிறது.

கடந்த 1962 முதலில் பெஸ்ட் ஒரிஜினல் (Best Original song) பாடலுக்கான கோல்டன் குளோப் விருது வழங்கப்பட்டு வருகிறது. இந்த பிரிவில் முதல் விருதை வென்ற இந்திய சினிமா என்ற பெருமையை ‘ஆர்ஆர்ஆர்’ படக்குழு பெற்றுள்ளது. இதற்கு முன்னர் கடந்த 2009-ல் ஏ.ஆர்.ரஹ்மான், பெஸ்ட் ஒரிஜினல் ஸ்கோர் பிரிவில் கோல்டன் குளோப் விருதை வென்றிருந்தார்.

நாட்டுக் கூத்து பாடலுக்கு இசையமைப்பாளர் எம்.எம்.கீரவாணி இசை அமைத்திருந்தார். இந்தப் பாடலை தெலுங்கில் சந்திரபோஸ் எழுதி இருந்தார். தமிழில் மதன் கார்க்கி எழுதி இருந்தார். ராகுல் மற்றும் கால பைரவா இந்தப் பாடலை பாடி இருந்தனர். சுமார் 3.36 நிமிடங்கள் ‘ரன் டைம்’ (Run time) கொண்ட இந்தப் பாடலில் ஒவ்வொரு மைக்ரோ நொடியும் பீட்டுகள் அனல் பறக்கும் ரகமாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

“‘நாட்டு நாட்டு’ பாடலின் சூழலை இசையமைப்பாளர் கீரவாணி சார் விளக்கியபோது, ‘ஹீரோ, வில்லன், காதல், நட்பு, விட்டுக்கொடுத்தல், தியாகம் என ஒரு படத்திற்குத் தேவையான அனைத்தும் இந்தப் பாடலுக்குள் இருக்கிறது’ என்று பாராட்டினேன். ‘எனக்கு இந்தமாதிரி குத்துப் பாட்டு பண்றதெல்லாம் பிடிக்கவே பிடிக்காது. மெலடி பாடல் கொடுத்தால் எஞ்சாய் பண்ணி இசையமைப்பேன்’ என்றார் அவர். கீரவாணி சாருக்கு மெலடி பாடல்கள்தான் பிடிக்கும். ராஜமெளலி சார் கேட்டுக் கொண்டதற்காக மட்டும்தான், ‘நாட்டு நாட்டு’ பாடலை உருவாக்கினார். இந்தப் பாடலுக்கு ‘கோல்டன் குளோப்’ விருது கிடைக்கும் என்று நிச்சயம் அவரே எதிர்பார்த்திருக்கமாட்டார்.

ஆனால், தற்போது விருது கிடைத்ததில் அவர் மட்டுமல்ல, மொத்த டீமும் உற்சாகத்தில் இருக்கிறது. காலையிலிருந்து அனைவரிடமும் பேசினேன். வாழ்த்துகளைப் பகிர்ந்துகொண்டோம். விருதுக்கான மொத்த கிரெடிட்டும் ராஜமெளலி சாருக்கும் கீரவாணி சாருக்கும்தான். ராம் சரண், ஜூனியர் என்.டி.ஆரின் நடனத்தையும் பாராட்டியே ஆகவேண்டும்” என்று பாராட்டிப் பேசுபவரிடம், “தமிழில் ‘நாட்டு நாட்டு’ பாடலைப் புதிதாக எழுதினீர்களா அல்லது மொழிமாற்றம் மட்டும் செய்தீர்களா?” என்று கேட்டோம்.

“நான் எழுதிய பாடல்தான். முதன் முதலில் தெலுங்கில், இப்பாடலை சந்திரபோஸ் எழுதியிருந்தார். அர்த்தம் தெரியாவிட்டாலும் நடன அசைவுக்கும் சூழலுக்கும் ஏற்றவாறு பாடலை மட்டுமே கேட்டு இரண்டே மணி நேரத்தில் எழுதிக்கொடுத்தேன். தெலுங்குப் பாடலுக்கும் தமிழ்ப் பாடலுக்கும் எந்தத் தொடர்பும் இருக்காது. கீரவாணி சார் மகன் காலபைரவாதான் இப்பாடலைப் பாடியுள்ளார். ராஜமெளலி சார், கீரவாணி சார் குடும்பத்தினர் என அனைவரும் இந்தப் பாடலுக்காக உழைத்திருக்கிறார்கள்.

பாடல் ஆரம்பிக்கும்போது, ‘கருந்தோளு கும்பலோடு பட்டிக்காட்டுக் கூத்தக் காட்டு’ என்று ஆரம்பித்து ‘வெற்றிக்கொடியை நாட்டு’ என்று முடித்திருப்பேன். அதாவது, கறுப்பு நிறம் கொண்ட நம் இந்தியர்களைத் தவறாகப் பேசும்போது, நாயகர்கள் நடனம் ஆடி வெற்றி பெறுவார்கள். அப்படித்தான், ஆங்கிலேயர்களின் அரங்கில் வெற்றி பெற்றிருக்கிறது இப்பாடல். மேலும், தமிழில் மட்டும்தான் இப்படி வரிகள் வந்துள்ளன. மற்ற மொழிகளில் இந்தக் குறிப்பிட்ட வரிகள் கிடையாது” என்றார் பெருமிதத்துடன், நாட்டு நாட்டு’ பாடலை தமிழில் எழுதிய மதன் கார்க்கி

Tags: