இளையராஜா 47 ஆண்டுகள் 

மே 14,1976 – தமிழர்களின் உணர்வோடும், உயிரோடும் இரண்டறக் கலந்த இசை வெள்ளத்தின் ஆதி ஊற்று ‘அன்னக்கிளி’ என்ற படத்தின் மூலம் அறிமுகமான நாள். 47 வருடங்களாக வற்றாமல் ஓடிக் கொண்டிருக்கும் அந்த இசைநதியின் பெயர் இளையராஜா.

கருமை நிறமும், ஒல்லியான தேகமும் கொண்டு தமிழகத்தின் கடைக்கோடி கிராமமாம் பண்ணைபுரத்தில் இருந்து புறப்பட்ட அந்த இளைஞன், இன்று ஏறக்குறைய அரை நூற்றாண்டு காலம் உலகம் முழுவதும் வாழும் தமிழ் மக்களின் நாடி நரம்புகளில் தனது இசையை புகுத்தி ஆதிக்கம் செலுத்தி வருகிறார். கவலை, மன அழுத்தம், துக்கம், மகிழ்ச்சி, ஏமாற்றம் வெற்றி, தோல்வி என எல்லா நிலைகளிலும் மனங்கள் தேடுவது இளையராஜாவின் இசையைத்தான்.

முதல் படத்திலேயே தனது இசை ருத்ரதாண்டவத்தை தொடங்கிய இளையராஜா இன்று 1500க்கும் அதிகமான படங்களை கடந்து ‘விடுதலை’, ‘கஸ்டடி’, ‘மாடர்ன் லவ்: சென்னை’ வரை தனது இசை ராஜ்ஜியத்தை நிறுவிக் கொண்டிருக்கிறார். மேற்கத்திய இசைக் கருவிகளும், இந்தி சினிமா பாடல்களின் தாக்கமும் கொண்டிருந்த தமிழ்த் திரைப்பட பாடல்களில் உருமி, பறை போன்ற கருவிகளை பயன்படுத்தி ஒரு புதிய இசைப் புரட்சியை நிகழ்த்தினார் இளையராஜா. இந்திப் பாடல்களின் ஆதிக்கத்தை அதன் வேரோடு தகர்த்தெறிந்தார்.

’அன்னக்கிளி உன்னைத் தேடுதே’ பாடலும், ‘மச்சானைப் பாத்தீங்களா’ பாடலும் ஒலிக்காத ஒலிப்பெருக்கிகளே இல்லை என்னும் அளவுக்கு ‘அன்னக்கிளி’யின் பாடல்கள் தமிழகத்தின் மூலை முடுக்குகளில் எல்லாம் இளையராஜாவை பற்றி பேசவைத்தன. 1983 முதல் 1992 வரை பத்தாண்டுகளில் இளையராஜா இசையமைத்தது 455 படங்கள் என்றால் நம்ப முடிகிறதா? அதிலும், 1984 மற்றும் 1992 ஆகிய ஆண்டுகளில் தலா 54 படங்களுக்கு இசையமைத்துள்ளார். ஒரே நேரத்தில் இத்தனை படங்களுக்கு பணியாற்றினாலும், எந்த படத்திலும் மற்ற படத்தின் பின்னணி இசை அல்லது பாடலில் சாயல் இம்மியளவு கூட தெரியாமல் பார்த்துக் கொண்டார். தொழில்நுட்பம் வளர்ச்சியடையாத அக்காலகட்டத்தில் இது ஒரு மிகப்பெரிய சாதனை.

அவரால் ‘16 வயதினிலே’ படத்தில் வரும் ‘சோளம் விதைக்கையிலே’ என்ற அசல் கிராமிய பாடலையும் தரமுடியும், ‘சிகப்பு ரோஜாக்களில்’ இடம்பெற்ற ‘நினைவோ ஒரு பறவை’ போன்ற பாடலையும் தரமுடியும். இசைத்தட்டு, வானொலி, ஆடியோ கேசட், தொலைகாட்சி, விசிஆர், விசிடி, டிவிடி, தற்போது ஓடிடி என தன்னுடைய எல்லைகளை இப்போதும் விரிவடையச் செய்து கொண்டே இருக்கிறார் ராஜா.

படத்தின் நடிகர்களுக்காக இயக்குநர்கள், தயாரிப்பாளர்கள் காத்திருந்தது போய், இளையராஜாவுக்காக மாதக்கணக்கில், வருடக்கணக்கில் காத்திருந்தது நடந்தது. ஒரே நாளில் ஐந்தாறு படம் என நிற்க நேரமில்லாமல் ஓடிக் கொண்டே இருந்தாலும், ஒவ்வொரு பாடலும், பின்னணி இசையும் தனித்தன்மையுடன் இருந்தது மனித மூளைக்கு அப்பாற்பட்ட அற்புதம். ‘ஆண் பாவம்’, ‘இதயம்’, ‘நாயகன்’, ‘அபூர்வ சகோதரர்கள்’, ‘மெளனராகம்’, ‘புதுப்புது அர்த்தங்கள்’, ‘தளபதி’ என பின்னணி இசைக்கு ஒரு புது இலக்கணத்தையே படைத்திருப்பார் இளையராஜா.

டிவியும், செல்போனும், சோஷியல் மீடியாவும் இல்லாத காலகட்டத்தில் உழைத்து களைத்து வீடு வந்து சேரும் தொழிலாளிக்கு வானொலி வழியே தனது இசைக்கரத்தை நீட்டி மெல்ல தலை வருடும் இளையராஜாவைத் தவிர வேறு யார் துணையாக இருந்திருக்க முடியும்.

எத்தனையோ விமர்சனங்களை எதிர்கொண்டாலும் தெளிந்த நதி போல அந்தந்த காலகட்டங்களின் தொழில்நுட்பங்களுக்கு ஏற்ப தன்னை புதுப்பித்து ஓடிக் கொண்டே இருக்கிறார் இளையராஜா. ஏறக்குறைய மூன்று தலைமுறைகளாக அவர் கட்டமைத்த இசை சாம்ராஜ்யம் இன்னும் பல நூற்றாண்டுகளுக்கு அழியாமல் வாழும்.

“கோட்டையில்லை, கொடியுமில்லை எப்பவும் நீ ராஜா”

-இந்து தமிழ்
14.05.2023

Tags: