பிரேஸில்: நம்பிக்கை சிதைகிறது!

லகின் நான்காவது பெரிய ஜனநாயக நாடான பிரேஸிலில் புதிய அதிபருக்கு எதிராக நடைபெற்றுள்ள வன்முறைகள் ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை கொண்டோருக்கு பெருத்த ஏமாற்றத்தை ஏற்படுத்தியிருக்கின்றன.

தென்னமெரிக்க கண்டத்திலுள்ள இலத்தீன் அமெரிக்க நாடுகளில் பெரும் பரப்பளவும், இயற்கைவளமும், 21.5 கோடி மனிதவளமும் கொண்ட நாடு பிரேஸில். இது 2022-ஆம் ஆண்டு சர்வதேச நிதியத்தின் கணிப்பின்படி, உலக பொருளாதாரத்தில் 1.90 லட்சம் கோடி டொலர் உள்நாட்டு உற்பத்தியுடன் 12-ஆம் இடம் வகிக்கிறது.

பிரேஸிலின் நவீன அரசியல் 1800-களில் தொடங்குகிறது. போர்த்துகலின் குடியேற்ற நாடாக இருந்த பிரேஸில், காலனி ஆதிக்கத்திலிருந்து விடுதலை பெற்ற நாடாகத் தன்னை அறிவித்துக் கொண்டாலும், 1822 முதல் 1889 வரை முடியாட்சி தொடர்ந்தது. அடுத்து, இராணுவம் ஆட்சியைக் கைப்பற்றி குடியரசாக அறிவித்தது. 1889 முதல் 1930 வரையிலான அந்த ஆட்சி முதல் குடியரசு எனப்படுகிறது. அதன்பிறகு ஆயுதப் புரட்சியால் ஆட்சியைக் கைப்பற்றிய சர்வாதிகாரி வர்காஸ் 15 ஆண்டுகள் ஆண்டார். 1946 முதல் 1964 வரை மீண்டும் குடியரசு ஆட்சியும், அதைத் தொடர்ந்து 1964 முதல் 1985 வரை ராணுவ ஆட்சியும் அமைந்தன.

1985 முதல் 1990 வரை “புதிய குடியரசு காலம்’ எனப்படுகிறது. அதையடுத்து பலகட்சி ஆட்சி முறை 1990 முதல் தொடர்ந்து வருகிறது. பிரேஸில் ஜனநாயக இயக்கம், தொழிலாளர் கட்சி பழைமைவாத விடுதலை கட்சி, பிரேஸில் சோஷலிஸ கட்சி உள்ளிட்ட கட்சிகளிடையிலான அதிகார மோதலாக பிரேஸிலின் தற்போதைய அரசியல் களம் மாறி இருக்கிறது.

26 மாநிலங்கள், தலைநகரப் பகுதி ஆகியவற்றைக் கொண்ட கூட்டாட்சிக் குடியரசான பிரேஸிலில் விகிதாசார பிரதிநிதித்துவ அடிப்படையில் தேர்தல் நடைபெறுகிறது. 1990-களுக்குப் பிறகே இந்நாட்டில் ஜனநாயக வீச்சு பெருகி இருக்கிறது. ஆனால் அங்கு இன்னமும் ஜனநாயகம் பண்படவில்லை. ஆட்சியில் நிலவும் ஊழலும், அதிகார மோதல்களும், கொள்கையற்ற கட்சித் தாவல்களும், வெட்கமற்ற கூட்டணி மாற்றங்களும் பிரேஸிலின் அரசியலில் நிலையற்ற தன்மையை உருவாக்கி உள்ளன.

இதற்கு முன்னர் 2011 முதல் 2016 வரை முதல் பெண் அதிபராக இருந்தவர் பிரேஸில் ஜனநாயக இயக்கத்தைச் சார்ந்த தில்மா ரூசுஃப். அவர் மீது ஊழல் புகார் கூறப்பட்டதால் அவர் பதவிநீக்கம் செய்யப்பட்டு, மைக்கேல் டெமெர் அதிபரானார். அதையடுத்து 2019 முதல் 2022 வரை, பழைமைவாத விடுதலைக் கட்சியைச் சார்ந்த ஜெயிர் பொல்சொனாரோ (Jair Bolsonaro) அதிபராகத் தேர்வானார்.

2022 அக்டோபரில் நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் தொழிலாளர் கட்சியைச் சார்ந்த இனாசியோ லூலா டிசில்வா (Luiz Inácio Lula da Silva) 50.90% வாக்குகளுடன் அதிபராகத் தேர்வானார். இவர் முந்தைய அதிபர் பொல்சொனாரோவை (49.10 % வாக்குகள்) குறைந்த வாக்குகள் வித்தியாசத்தில் வென்றார்.

இனாசியோ லூலா டிசில்வா ஏற்கெனவே பிரேஸில் அதிபராக இருமுறை இருந்தவர். 2003 முதல் 2010 வரை அவர் அதிபராக இருந்தபோது நாட்டின் வறுமையைப் போக்க பல நடவடிக்கைகளை எடுத்தார். ஆனாலும், நாட்டின் அரசு எண்ணெய் நிறுவனமான பெட்ரோப்ராஸ் தொடர்பான ஒப்பந்தங்களில் முறைகேடு செய்ததாக இவர் மீது குற்றம் சாட்டப்பட்டு 2018-இல் கைது செய்யப்பட்டார். 580 நாள்கள் சிறைவாசத்துக்குப் பிறகு, நீதிமன்றம் வாயிலாக தண்டனை ரத்தான பிறகே மீண்டும் அரசியல் களத்துக்கு வந்தார் லூலா டிசில்வா.

தற்போது பிரேஸிலின் அரசியல், லூலா டிசில்வா- பொல்சொனாரோ என்ற இரு துருவங்களிடையே சுழல்கிறது. இதனை இடதுசாரி அரசியல் கட்சி – பழைமைவாத அரசியல் கட்சி என்ற இரு சித்தாந்தங்களின் மோதலாகவும் காணலாம்.

கடந்த அக்டோபரில் நடந்த தேர்தலின் முடிவை ஏற்க மறுத்து வரும் பழைமைவாத விடுதலைக் கட்சியினர், ஜனவரி 1-இல் அதிபராகப் பொறுப்பேற்ற லூலா டிசில்வாவுக்கு எதிராக கடந்த ஞாயிற்றுக்கிழமை (ஜனவரி 8) பெரும் போராட்டத்தை நடத்தி இருக்கின்றனர். தேர்தலில் மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களைப் பயன்படுத்தியதில் முறைகேடு நிகழ்ந்துள்ளதாக அவர்கள் குற்றம் சாட்டுகின்றனர். அன்று பிரேஸில் நாடாளுமன்றம், உச்சநீதிமன்றம், அதிபர் மாளிகை ஆகிய இடங்களை முற்றுகையிட்ட பொல்சொனாரோ ஆதரவாளர்கள் அலுவலகங்களை சூறையாடியுள்ளனர்.

ஆயுதப் படையினரின் தீவிர முயற்சியால் 1,200 பேர் கைது செய்யப்பட்ட பிறகே அந்நாட்டில் அமைதி திரும்பி இருக்கிறது. தற்போது முன்னாள் அதிபர் பொல்சொனாரோ உடல்நிலையைக் காரணம் காட்டி அமெரிக்கா சென்றுவிட்டார். அங்கு அவர் சிகிச்சை பெறுகிறார். அவரை, அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் ஆதரிக்கிறார். தற்போதைய அமெரிக்க அதிபர் ஜோ பைடன், லூலா டிசில்வாவை ஆதரிக்கிறார்.

சென்ற 2021-இல் அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயகக் கட்சி வென்று ஜோ பைடன் அதிபராகத் தேர்வானபோது, அதை டிரம்ப் ஏற்க மறுத்ததும், குடியரசுக் கட்சியினர் அமெரிக்க நாடாளுமன்றத்தைக் கைப்பற்றி வன்முறையில் ஈடுபட்டதும் அனைவரும் அறிந்ததே. அதேபோன்ற சூழல் தற்போது பிரேஸிலிலும் நிலவுகிறது. அமெரிக்க அரசியலின் தாக்கம் பிரேஸிலும் தொடர்வதாகத் தெரிகிறது.

ஆட்சி மாற்றத்தை இயல்பாக, சுமுகமாக அடைய உதவுவதே நாடாளுமன்றத் தேர்தல் முறையின் சிறப்பு. தேர்தல் தோல்வியை ஆட்சியாளர்கள் ஏற்க மறுக்கும் போக்கால் ஜனநாயகத்தின் மீதான மக்களின் நம்பிக்கை சிதைகிறது!

Tags: