இந்தியாவில் மதச்சார்பின்மை: வரலாறு, விலகல்,சவால்!

-இரா.சிந்தன்

ந்திய அரசியலமைப்பை தாங்கி நிற்கும் நான்கு அடித்தளங்களாக, மதச்சார்பற்ற மக்களாட்சி, பொருளாதார இறையாண்மை, கூட்டாட்சி மற்றும் சமூக நீதி ஆகியவை அமைந்துள்ளன. இன்றைய பா.ஜ.க/ஆர்.எஸ்.எஸ் ஆட்சியினால் இந்த அடித்தளங்கள் அனைத்துமே தாக்குதலுக்கு உள்ளாகின்றன. ஜனவரி 26-ஆம் தேதி 73 வது குடியரசு தினம் கொண்டாடப்படவுள்ள சூழலில், இந்திய மக்களாட்சியின் மதச்சார்பற்ற அம்சம் பற்றி விரிவாக பார்ப்போம்.

முதலில், மதச்சார்பின்மை என்பது மதவழி சிறுபான்மையினரின் பிரச்சனை மட்டுமே அல்ல. அது இந்திய நாட்டின் மக்களாட்சி கட்டமைப்பின் பிரிக்க முடியாத அங்கம் ஆகும்.

தொடக்கத்தில், பாஜகவின் தலைவர்கள் தாங்கள் ‘போலி மதச்சார்பின்மையை’ எதிர்ப்பதாக சொல்லி வந்தார்கள். ஆனால், ஆர்.எஸ்.எஸ் அமைப்பினரோ, ‘மதச்சார்பின்மை’ என்பது மேற்கத்திய சிந்தனை என்று சொல்லி அதை விலக்கினர்.  

தற்போது, ஆர்.எஸ்.எஸ்/பா.ஜ.க பரிவாரம் ஆட்சி அதிகாரத்தில் உள்ளது. ஆட்சி நிர்வாகம் ஆர்.எஸ்.எஸ் வழிகாட்டுதலிலேயே நகர்கிறது. வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம் மதச்சார்பின்மை கோட்பாடு அவர்களால் தாக்கப்படுகிறது. இந்த நிகழ்வுகளை தனியாக பார்க்க முடியாது. ஒட்டுமொத்த இந்திய மக்களாட்சி அமைப்பிற்கே விடுக்கப்பட்டுள்ள சவாலாகத்தான் பார்க்க வேண்டும்.

செக்யூலரிசமும் அதன் பொருளும்:

‘செக்யூலரிசம்’ என்ற ஆங்கிலச் சொல், தமிழில் மதச்சார்பின்மை எனப்படுகிறது. ஐரோப்பிய நாடுகளின் வரலாற்று சூழலில் அரசாட்சியில் தேவாலயங்களின் தலையீடு மிதமிஞ்சியதாக இருந்தது. எனவே, அந்த நாடுகளில் முதலாளித்துவ மக்களாட்சி உருவானபோது அரசாட்சியிலும், அரசியலிலும் இருந்து தேவாலயங்கள் விலக்கி நிறுத்தப்பட வேண்டிய அவசியம் இருந்தது. அதுவே மதச்சார்பின்மை வலியுறுத்தப்படுவதற்கான பிரதான அம்சம் ஆகும். ஆனாலும், சோசலிச நாடுகளைத் தவிர வேறு எந்த முதலாளித்துவ நாடுகளும் மதமும், அரசியலும் முற்றாக பிரிக்கப்பட வேண்டும் என்ற தெளிவோடு இல்லை.

எந்தவொரு நாட்டின் மக்களாட்சி கட்டமைப்பும், முழுமையான கருத்தாக முதலில் வடிவமைக்கப்பட்டு, அதன் பிறகு அமுலாக்கப்படுவது அல்ல. இறக்குமதி செய்யப்படுவதும் அல்ல. அந்தந்த வரலாற்று காலகட்டத்தில், மக்களின் அனுபவங்களில் இருந்தே, போராட்டங்களின் மூலமாக வடிவம் பெறுகிறது. அதனால்தான், நவீன நாடாளுமன்ற மக்களாட்சி முறை நிலவக்கூடிய நாடுகள் எதுவுமே, ஒன்றை இன்னொன்று பிரதியெடுத்தது போல அமைந்ததில்லை. எனவே, மக்களாட்சியின் ஒரு அம்சமான மதச்சார்பின்மையின் கருப்பொருளையும் இந்திய சூழலில் இருந்து ஆய்வு செய்ய வேண்டும்.

அரசியலும், மதமும் பிரித்து வைக்கப்பட வேண்டும் என்ற பார்வை, இந்தியா மக்களாட்சியை பாதுகாக்க மிக மிக அவசியமானதாகும்.

வரலாற்றில் இணக்க வாழ்வு

இந்திய துணைக்கட்டத்தில் வாக்குரிமையும், நாடாளுமன்றம் உள்ளிட்ட பிரதிநிதுத்துவ அவைகளும் நவீன மக்களாட்சியின் ஏற்பாடுகள். இருப்பினும், மன்னராட்சிக் காலங்களிலும் சமூகத்தில் நல்லிணக்க வாழ்வுக்கான தேவையும்,  மதத்தில், நம்பிக்கையில் அரசு தலையிடாமைக்கான அவசியமும் உணரப்பட்டுள்ளன.

சங்ககால தமிழ் இலக்கியமான பட்டினப்பாலை (பத்துப்பாட்டு தொகுப்பு) காவிரி பூம்பட்டினத்தின் நகர வாழ்க்கையை விவரிக்கிறது. அந்த நாட்டில் பெளத்தம், சமணம், முருக வழிபாடு, காளி கோயில்கள், வீர மறவர் நினைவாக நடப்பட்ட கற்களை தொழுதல் என்று பல்வேறு நம்பிக்கைகள் நிலவுகின்றன. வேள்வி செய்யும் ஆரிய முனிவர்களும் இருக்கிறார்கள். உலகின் பல பகுதிகளில் இருந்தும் துருக்கியர்கள், சீனர்கள், இலங்கையர், யவனர்கள் வந்து செல்லும் வணிகத் தளமாக இருந்துள்ளது.

பட்டினப்பாலை நூலை எழுதியவர் சைவர் என்று ஆராய்ச்சிகள் காட்டுகின்றன. ஆனால் அவர் தனது இலக்கியத்தை பொதுவானதாக படைத்துள்ளார். சோழ மன்னன் கரிகாற்பெருவளத்தானின் ஆட்சியும் கூட  சமய/மத நம்பிக்கை வழிப்பட்டதாக அந்த பாடல்களின் வழியாக அறியமுடியவில்லை.

அன்றைய தமிழ்ச் சமூகத்தில் அவரவர் நம்பிக்கை, பேச்சு மொழிகள் மற்றும் சிந்தனைகள் சார்ந்த நல்லிணக்கமும் நிலவிவந்தன. கலைக்கூடங்களில் பல்வேறு மொழி பேசும் மாறுபட்ட சிந்தனை கொண்ட அறிஞர்களுக்கிடையே  விவாதங்கள், அறிவுப் பகிர்வுகள் நடந்து வந்துள்ளன.

அப்போது சமுதாயத்தில் மனித உருவில் சிலைகளை வைத்து  வழிபாடு செய்யும் வழக்கம் இல்லை. கந்து எனப்படும் கல்லை நோக்கி தொழுவதை வேற்று நாட்டாரும் செய்தார்கள். பல்வேறு மத நம்பிக்கைகள் அருகருகே பின்பற்றப்பட்டு வந்தன.  அரசாட்சி என்பது அனைவருக்குமானதாக இருக்க வேண்டும் என்பது பொது விதியாக இருந்து வந்ததும் தெரிகிறது.

பட்டினப்பாலை நூல் எழுதப்படுவதற்கு 2 நூற்றாண்டுகள் முன்பே அசோகப் பேரரசினால், அதன் ஆட்சிப் பகுதிகள் நெடுகிலும் தர்ம சக்கரம் பொறித்த தூண்கள் நிறுவப்பட்டுள்ளன. இந்த தூண்களில்  அரசாட்சிக்கான ஒழுக்கங்கள் பிரகடனம் செய்யப்பட்டிருந்தன. அதில் ஒன்று  மக்களின் தனிப்பட்ட நம்பிக்கைகளை அவரவர் தேர்ந்தெடுத்து பின்பற்றுவதற்கான உரிமையை அரசாங்கம் உறுதி செய்திட வேண்டும் என்பதாகும். பின்னர் ஏற்பட்ட முகலாயர் அல்லது பிற முஸ்லிம் மன்னர்களின் ஆட்சியிலும் பெரும்பாலும் இந்த முறையே தொடர்ந்தது. கடந்த காலத்தில் பொதுவான நிலவிய சகிப்புக் கொள்கை என்பது வேறுபட்ட மத நம்பிக்கைகள் அருகருகே வாழ்வது தொடர்பானதாக மட்டுமில்லை. வேறுபட்ட மொழி, பண்பாடு மற்றும் மரபு சார்ந்த வேற்றுமைகளை அங்கீகரித்து இயங்குவதாகவும் இருந்தது.

எனவே, இந்திய சமூகத்தில் நிலவிய செழிப்பான நல்லிணக்க வரலாற்றை மதச்சார்பின்மைக்கான அடித்தளமாக காண முடிகிறது. மேலும், இந்திய வரலாற்றின் பொதுவான போக்கு, உலகின் வேறு பல பகுதிகளை ஒத்ததாகவே இருந்துவந்துள்ளது.

அதே சமயத்தில், பெரிய புராணம் குறிப்பிடும் சமணர் கழுவேற்றத்தைப் போன்று சகிப்பின்மையும், மத அடிப்படையிலான ஒடுக்குமுறைகளும் நிலவிய காலங்களும் வரலாற்றில் உண்டு. மத அடிப்படையில் இயங்க முயற்சித்த பல்வேறு மதங்களை, நம்பிக்கைகளை பின்பற்றியவர்களில் – கஜினி முகமது, தைமூர் போன்ற  மோசமான அரசர்களும் உண்டு. ஆனால் அதை மட்டுமே ஒட்டுமொத்த வரலாறாக முன்னிறுத்தி, இன்றைய அரசியலை பார்க்க முடியாது.

ஆனால் ஆர்.எஸ்.எஸ்., அமைப்பு தன்னுடைய அரசியலுக்கு ஏற்ற விதத்தில் வரலாற்றை திரிப்பதன் மூலம் வகுப்புவாத அரசியலை வளர்த்தெடுக்கிறது. மேலும் மக்களாட்சி ஏற்பாட்டிற்கே  நேர்மாறான, அரதப்பழைய சட்ட நூலான ‘மனுஸ்மிருதியை’ அரசமைப்பிற்கான முன் மாதிரியாக உயர்த்திப் பிடிக்கிறார்கள். அந்த நூலின் உள்ளடக்கம் அவர்களின் அரசியல் திட்டத்திற்கு நெருக்கமாக உள்ளது.

மனுவின் சட்டங்கள், பிறப்பின் அடிப்படையில் ஏற்றத்தாழ்வினையும், பாலின அடிப்படையில் வாய்ப்பு மறுப்பதையும், அடிமைப்படுத்துவதையும் நியாயப்படுத்துகின்றன. நிலவுடைமைச் சுரண்டலை தீவிரப்படுத்தும் நோக்கில் எழுதப்பட்ட அந்த சட்டங்கள் மக்களாட்சிக்கு நேர் விரோதமானவை. சனாதனத்தை, பிராமண மேலாதிக்கத்தை நிலைநாட்டும் நோக்கம் கொண்டவை. அதனை உயர்த்திப் பிடிக்கும் சங்க பரிவாரம், ஒட்டுமொத்த மக்களாட்சியையும் தகர்க்க நினைக்கிறது.

விடுதலைப் போரில் மக்கள் ஒற்றுமை

நவீன இந்தியாவிற்கான மதச் சார்பின்மைக் கொள்கையின் வலுவான அடித்தளம், விடுதலைப் போராட்ட காலத்தில் உருவானது.

தமிழ்நாட்டில் 1801 ஆம் ஆண்டில் கம்பெனி ஆட்சிக்கு எதிராக நடந்த மருது சகோதரர்கள் கிளர்ச்சிக்கும், வேலு நாச்சியாருக்கும் ஹைதரும், திப்புவும் அளித்த உதவிகளிலும், 1806 வேலூர் கிளர்ச்சியிலும் வலுவான மத ஒற்றுமை வெளிப்பட்டது. அதனைத் தொடர்ந்து நாடுதழுவிய அளவில் பரவலான எழுச்சியாக அமைந்தது 1857 முதல் சுதந்திர போராட்டம். மத ஒற்றுமை வெளிப்பட்ட பொற்காலமாக அது இருந்தது. ராணி லட்சுமி பாயும், பேகம் ஹசரத் மஹாலும், மவுலவி அஹமதுல்லாவும், ராவ் துலா ராமும் தோளோடு தோள் நின்று கம்பெனி ஆட்சியை எதிர்த்தார்கள். ராணி லட்சுமி பாயின் காலாட்படை/பீரங்கிபடை தளபதிகள் மற்றும் அவரது பெண் மெய்க்காப்பாளர் முஸ்லீம்களாவர்.  பேகம் ஹஸ்ரத் மகாலின் தளபதிகளில் பாதி பேர் இந்துக்களாவர். மொகலாய முடியரசர் பகதுர் ஷா சபர் இந்த போராட்டத்தின் அடையாளமாக இருந்தார். இந்த ஒற்றுமை பிரிட்டிஷ் அரசாட்சிக்கு ஆபத்தானதாக அமைந்தது.

முதல் சுதந்திர போராட்டம் குறித்து, (பிற்காலத்தில் மன்னிப்புத் திலகமாகிய) வி.டி.சாவர்க்கர் எழுதிய நூல் மிகவும் புகழ்பெற்றதாகும். அதில் அவர் “இந்தியாவின் சுதந்திரத்திற்கு ஏற்பட்ட அபாயத்தை முதன்முதலில் உணர்ந்தவர்கள் பூனாவைச் சேர்ந்த நானா பட்னாவிசும், மைசூரின் ஹைதர் சாஹிபும்தான்” என்கிறார். திப்பு சுல்தானையும், ஹைதர் அலியையும் வெகுவாக புகழ்ந்துள்ளார். (இந்த நூலை எழுதும்போது அவர் ‘இந்துத்துவா’ திட்டத்தை உருவாக்கியிருக்கவில்லை)

மக்களின் விடுதலை எழுச்சியை ரத்த வெள்ளத்தில் ஒடுக்கிய பிரிட்டிஷ் ஆட்சி, நேரடியாக இங்கிலாந்து ஆளுகையின் கீழ் இந்தியாவை கொண்டு வந்தது. அதன் பிறகு இந்திய அரசியலில் வகுப்புவாத பிரிவினைகளை உருவாக்கும் முயற்சிகளையும் வேகப்படுத்தியது.

அதே சமயம் போராட்டக் களத்தில் முன்னின்ற தலைவர்கள், மதங்களைக்  கடந்த ஒற்றுமையை முன்னெடுத்தார்கள். அதன் அடிப்படையில், விடுதலைக்கு பிறகான இந்தியா எவ்வாறு அமைய வேண்டும் என்பதையும் முன்வைத்தார்கள்.

பரிணமித்த அரசமைப்பு சட்டம்

விடுதலைக்கு முன்பே நவீன இந்தியாவின் அரசமைப்பு தொடர்பான வரைவுத் திட்டங்களை உருவாக்கும் முயற்சிகள் தொடங்கிவிட்டன. 1895 ஆம் ஆண்டில் பால கங்காதர திலகர் ‘சுதந்திர மசோதா’ (ஸ்வராஜ்) என்று, அரசமைப்புச் சட்டம் ஒன்றை நாட்டு மக்களின் முன் வைத்தார். அந்த ஆவணம் அனைத்து மதங்களும் இந்தியாவின் மதங்களாக இருக்கும் என்று பிரகடனம் செய்தது.

ஆனால், ஆட்சி அதிகாரத்தை கைவசம் வைத்திருந்த பிரிட்டிஷ் ஏகாதிபத்தியமோ,  வகுப்புவாத தன்மையுடன் அன்றைய அரசமைப்பில் திருத்தங்களை செய்தது. ஏற்கனவே ஆங்காங்கு தென்பட்ட வகுப்புவாத போக்குகளை, ஆதரித்து வளர்ப்பதாக பிரிட்டிஷ் அரசாங்கம் இயங்கியது. அதன் விளைவாக மத அடிப்படையிலான வகுப்புவாத அமைப்புகள் உருவாயின. 1906ஆம் ஆண்டில் முஸ்லிம் லீக்கும், பல்வேறு இந்து சபாக்களும் அமைக்கப்பட்டன. இந்து சபாக்கள் ஒருங்கிணைந்து 1913 ஆம் ஆண்டில் இந்து மகாசபா ஏற்பட்டது.

ஆர்.எஸ்.எஸ் அமைப்பு, 1925ஆம் ஆண்டில்தான் அமைக்கப்பட்டது. இருப்பினும் மற்ற வகுப்புவாத அமைப்புகளில் இருந்து ஆர்.எஸ்.எஸ் வேறுபட்டதாகும். மற்ற அமைப்புகளை ஒத்த விதத்தில் பழமையை மீட்டமைத்தல், மத அடிப்படையிலான அரசியலை முன்னெடுத்தல் என்பதோடு குறிப்பிடத்தக்க வேறு சில அம்சங்களும் இருந்தன.

  • முதலாவது, ஆர்.எஸ்.எஸ் அமைப்பு இத்தாலியின் பாசிசம் மற்றும் ஜெர்மானிய நாசிசத்திடம் இருந்து ஊக்கம் பெற்றதாக இருந்தது.
  • இரண்டாவது, மற்ற வகுப்புவாத அமைப்புகளில் இருந்து வேறுபட்டு, ‘இந்துக்களை ஆயுதமயமாக்குவோம்’ என்றது.
  • மூன்றாவது, பிரிட்டிஷ் காலனி ஆதிக்கத்திற்கு எதிராக மக்கள் போராடி வந்த சூழலில், அதைப்பற்றி எந்தக் கவலையும் இல்லாமல் உள்ளுக்குள்ளேயே எதிரிகளை கட்டமைத்து வெறுப்பினை மூட்டியது.

ஆர்.எஸ்.எஸ் அமைப்பும் அதன் அரசியல் திட்டமும் பிரிட்டிஷ் ஆட்சியாளர்களுக்கு சேவகம் செய்வதுடன், மராட்டியத்தில் வளர்ந்து வந்த பிராமணர் அல்லாதார்/தலித் மேம்பாட்டிற்கான அரசியலை எதிர்கொண்டு – சனாதன சிந்தனையை உயர்த்திப்பேசுவதாகவும், முன்னெடுப்பதாகவும் இருந்தன. அவர்களே மத அடிப்படையில் இரண்டு தேசங்கள் என்ற கொள்கையை முதலில் முன்வைத்தார்கள். அதன் பின்னர் சிறுபான்மை வகுப்புவாத அமைப்புகளில் இருந்தும் இரு தேசங்கள் என்ற பிரிவினை முழக்கம் எழுந்தது. இருப்பினும் அந்த காலகட்டத்தில் வகுப்புவாத/பாசிச வகைப்பட்ட திட்டத்திற்கு பரந்த மக்கள் ஆதரவு இல்லை என்பது இயல்பானது.

1925ஆம் ஆண்டில், பகத் சிங் செயல்பட்ட இந்துஸ்தான் சோசலிச குடியரசு சங்கத்தின் ‘புரட்சிகர திட்டம்’ என்ற அரசியலமைப்பு சட்ட நகலை வெளியிட்டனர்.  1927ஆம் ஆண்டு சைமன் ஆணையத்தை புறக்கணித்த போராட்டத்தில் நேரு அறிக்கை வெளியிடப்பட்டது. இவை இரண்டுமே மதச் சார்பின்மைக் கொள்கையின் வழி நின்றன. இந்திய மக்களுக்கு கூடுதல் அதிகாரத்தையும் சுயாட்சியையும் உறுதி செய்வதை நோக்கியதாக இருந்தன.

மதச்சார்பின்மையில் உறுதி

1928ஆம் ஆண்டில், காங்கிரசின் மராட்டிய பிராந்திய மாநாடு நடந்தபோது நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் இவ்வாறு பேசினார்: “சமூகத்தை ஜனநாயகப்படுத்தாமல், அரசியலில் மட்டும் மக்களாட்சியை நிறுவிட உங்களால் முடியாது. இல்லை நண்பர்களே, அரசியலில் மக்களாட்சியும், சமூகப் பார்வையில் பழமைவாதத்தையும் கொண்டுள்ள விநோதமான கதம்பமாக நாம் ஆகிவிட வேண்டாம்… பிறப்பினால் கிடைக்கும் சாதகங்களும், சாதி அல்லது நம்பிக்கைகளும் அகற்றப்பட வேண்டும்… பெண்களின் நிலை உயர்த்தப்பட வேண்டும்… இந்தியாவின் பல்வேறு சமுதாயங்களிடையே பிரத்யேக நிலைமைகள் நிலவிடும் சூழல்தான் இப்போது நிலவுகிறது. நல்லிணக்கத்தை உருவாக்க வேண்டுமானால் மதச்சார்பின்மையும், அறிவியல் பயிற்சிகளும் அவசியப்படுகின்றன…  மதச் சார்பின்மையும், அறிவியல் சிந்தனைகளையும் போல, மதவெறியை குணப்படுத்தக் கூடிய வேறொன்று இல்லை.” என்றார்.

1931ஆம் ஆண்டில், கராச்சியில் நடந்த காங்கிரஸ் மாநாட்டில் சர்தார் வல்லபாய் பட்டேல் “எங்களுக்கு தேவை இதயப்பூர்வமான ஒற்றுமை… பெரும்பான்மை சமூகம் தைரியத்தை இரு கைகளிலும் எடுத்து சிறுபான்மையினரின் இடத்தில் தங்களை வைத்து பார்க்கும்போதுதான் அத்தகைய ஒற்றுமை ஏற்படும். இதுதான் ஞானத்தின் உச்சம்” என்று தெளிவாக முன்வைத்தார்.

மக்கள் போராட்டத்தின் அழுத்தம் காரணமாக, பிரிட்டிஷ் ஆட்சி சில சமரசங்களை முன்னெடுத்தது. அதில் உருவானதுதான் 1935 இந்திய அரசாங்க சட்டம். ஆனால், அதிலும் வகுப்புவாத பிரிவினையை தூண்டும் முயற்சிகள் இருந்தன. இவ்வாறு நவீன இந்தியாவிற்கான அரசாட்சி எவ்வாறு அமையவேண்டும் என்பதிலேயே மிக நீண்ட விவாதங்கள் விடுதலைப் போராட்ட காலத்தில் நடைபெற்றன.

இந்தியா விடுதலை பெற்றபோதும், நமது நல்லிணக்க வாழ்வின் மீதும்,  மதச்சார்பற்ற அரசியலின் மீதும் ஒரு சம்மட்டி அடியைக் கொடுத்தே அகன்றது பிரிட்டிஷ் காலனி நிர்வாகம். அவ்வாறு நிகழ்த்தப்பட்ட இந்தியா – பாகிஸ்தான் பிரிவினையின் காரணமாக மத அடிப்படையிலான வகுப்புவாத கலவரங்கள் நிகழ்ந்தன. வகுப்புவாத சக்திகளும் அந்த களத்தை பயன்படுத்தி வளர முயற்சித்தார்கள். இவை வரலாற்றின் ஆறாத வடுக்கள் ஆகின.

ஆர்.எஸ்.எஸ்., முன்னெடுத்ததும், பிறகு சிறுபான்மை வகுப்புவாதிகள் கையில் எடுத்துக் கொண்டதுமான இரு தேசங்கள் பிரிவினையை நோக்கிய வகுப்புவாத வெறி நடவடிக்கைள், 1940களிலேயே தொடங்கிவிட்டன. ஆர்.எஸ்.எஸ் மட்டுமல்லாது, சிறுபான்மை வகுப்புவாத சக்திகளும் களத்தில் சேதங்களை விளைவித்தார்கள். பிரிவினையை காங்கிரஸ் கட்சி ஏற்கவில்லை. அதன் தலைவராக இருந்த மவுலானா  அபுல்கலாம் ஆசாத்திடம் கைகுலுக்க மறுக்கும் அளவுக்கு வெறுப்போடு முகமது அலி ஜின்னா (முஸ்லிம் லீக்)  செயல்பட்டார். இவ்வாறு பெரும்பான்மை வகுப்புவாத அமைப்புகளும், சிறுபான்மை வகுப்புவாத அமைப்புகளும் ஒருவருக்கொருவர் தீனி கொடுத்தார்கள்.

ஆனால், இந்திய தேசிய இயக்கத்தின் தலைவர்கள் மதச்சார்பின்மையில் உறுதி காட்டியது முக்கியமானதாகும். 1947ஆம் ஆண்டில், ‘இந்து அரசு’ அமைக்க வேண்டும் என்ற ஆலோசனையை வல்லபாய் படேலிடம், பிர்லா முன்வைத்தார். அதற்கு ஜூன் 10ஆம் தேதியிட்ட கடிதத்தில் பதில் கொடுத்துள்ளார் பட்டேல். “இந்து மதத்தை அரசின் மதமாகக் கொண்ட இந்து நாடாக இந்துஸ்தானை கருதுவதற்கு இயலாது என்று நினைக்கிறேன். வேறு சில சிறுபான்மையினர் இந்தியாவில் இருக்கிறார்கள். அவர்களை பாதுகாப்பது நமது முதன்மையான பொறுப்பு என்பதை நாம் மறக்கக் கூடாது. அரசு என்பது சாதி மதங்களைக் கடந்து, அனைவருக்குமானதாக இருக்க வேண்டும்”.

இந்திய மக்களாகிய நாம்

விடுதலை இந்தியாவின் அரசமைப்பு எவ்வாறு அமைய வேண்டும் என அரசியல் நிர்ணய சபை விவாதித்தது. இந்த விவாதங்கள் 3 ஆண்டுகள் நடைபெற்றன. பிரிவினையின் மிக மோசமான வன்முறைகளைக் கண்ணுற்ற அந்த அவை மதச்சார்பின்மையில் உறுதி காட்டியது.

அரசியல் நிர்ணய சபையின் விவாதத்தில், இந்திய அரசமைப்புச் சட்டத்தின் தொடக்க வரி என்னவாக இருக்க வேண்டும் என்பதும் விவாதிக்கப்பட்டது. கடவுளின் பெயரால் இந்த நாட்டை நிர்மாணிக்கிறோம் என்ற வாசகமும் அவையில் முன்வைக்கப்பட்டது. ஆனால், இறுதியாக, ‘இந்திய மக்களாகிய நாம்’ என்று தொடங்க வேண்டும் என்றே முடிவானது. இந்த முடிவு வாக்கெடுப்பு நடத்தி இறுதி செய்யப்பட்டது.

13 பிரிட்டிஷ் மாகாணங்களும், 565 மன்னராட்சிப் பகுதிகளும், 8 மதங்களும், ஆயிரக்கணக்கான சாதிகளும், மொழிவழி தேசியங்களும், ஏராளமான மொழிகளும், இனக்குழு சமூகங்களும், பழங்குடிகளும் கொண்டு உருவான ஒரு நாட்டில், ‘மதச்சார்பின்மை இல்லாது போனால் அரசியல் அமைப்பு சட்டம் முன்வைக்கிற எல்லா சிறப்பு அம்சங்களும் பொருளற்றதாகிப் போகும்’ என்றார் அண்ணல் அம்பேத்கர். இவ்வாறுதான் இந்திய மக்களாட்சியின் சாரத்தில் இருந்து பிரிக்க முடியாத அங்கமானது ‘மதச்சார்பின்மை’.

அரசமைப்புச் சட்டத்தின் சாரம்

இருப்பினும், இந்திய அரசியலமைப்பின் முகப்புரையில் ‘மதச்சார்பற்ற’ என்ற சொல் 1975 ஆம் ஆண்டில்தான் சேர்க்கப்பட்டது. ஆனால், உச்ச நீதிமன்றம் தன் தீர்ப்புகளில், இந்திய அரசமைப்பில் இருந்து மதச்சார்பின்மைக் கொள்கையை பிரிக்கவே முடியாது என்பதை தெளிவாக்கியே வந்துள்ளது. முதலில் 1962 ஆம் ஆண்டில் தனது கருத்தாகவும் பின்னர், 1973 ஆம் ஆண்டு கேசவானந்த பாரதி வழக்கின் தீர்ப்பிலேயே ஒரு பகுதியாகவும் உறுதிபட குறிப்பிட்டது.

இந்திய அரசமைப்பு சட்டத்தின் பிரிவு 14, சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்கிறது. பிரிவு 15, சாதி, மதத்தின் பேரால் வேற்றுமைகள் பாராட்டக் கூடாது என்கிறது.  ஒவ்வொரு தனி மனிதரும் தம்முடைய நம்பிக்கையை வெளிப்படுத்தவும், பின்பற்றவுமான உரிமையை அரசமைப்புச் சட்டத்தின் பிரிவு 25 வழங்குகிறது. வெவ்வேறு மதப் பிரிவுகளும் மத நிறுவனங்களை நடத்தவும், சொத்துக்களை சேர்க்கவும், கையாள்வதற்குமான உரிமையை வழங்குகிறது.

அதே சமயம் மத வழி, மொழிவழி, இனவழி சிறுபான்மையினர் மற்றும் அதிகாரம் மறுக்கப்பட்டவர்களின் உரிமைகளை பாதுகாப்பதற்காக எந்தவொரு கட்டமைப்பிலும் அரசு தலையிடுவதை உறுதி செய்கிறது. தீண்டாமைக் கொடுமைகளையும், பாலின பாகுபாடுகளையும் மதத்தின் பேரால் நியாயப்படுத்துவதை எதிர்க்கிறது. குடிமக்களின் ஜனநாயக உரிமைகளை பாதுகாக்க மத நிறுவனங்களில் அரசு தலையீடு செய்ய வேண்டும் என்கிறது. அதிலிருந்து பிறழ்வோரை தண்டிக்க அதிகாரமளிக்கிறது. இந்து சட்டமும், இட ஒதுக்கீடும், வன்கொடுமை தடுப்பு சட்டமும், மொழிவழி மாநிலங்களும், பாலின சமத்துவ முன்னெடுப்புகளும், அறநிலையத் துறை/கோயில் நிர்வாகங்களில் மேற்கொள்ளும் தலையீடுகளும் இதன்பாற்பட்டவையே. மேலும், தேர்தல் அரசியலில் மதம் கலக்கக் கூடாது என்பதை மக்கள் பிரதிநிதித்துவ சட்டம் விரிவாக பேசுகிறது.

இந்தியாவிற்கானது மதச்சார்பின்மை

இருப்பினும், இந்தியாவின் மதச்சார்பின்மை கண்ணோட்டம், வெறுப்பின் அனைத்து வெளிப்பாடுகளையும் மறுதலிக்கிற காந்தியின் கண்ணோட்டத்தில் இருந்துதான் உருவெடுத்தது. எனவே, அது அதற்கே உரிய பலவீனத்தையும் கொண்டிருந்தது.

அரசாங்கத்திலும், அரசியலிலும் இருந்து மத நிறுவனங்களை முற்றாக விலக்கி வைப்பது இந்தியாவிற்கு மிக மிக அவசியமாகும். இங்கு நிலவக் கூடிய படிநிலைச் சாதி அமைப்பும் அதன் சுரண்டலும் பிரத்தியேகமானவை. நாட்டில் பன்முக பண்பாடு நிலவுகிறது, பல்வேறு மொழிவழி தேசியங்களும் இனக் குழுக்களும் வாழ்கின்றனர். எனவே, மதம் மட்டுமல்ல, சாதி அல்லது வேறு எந்த பண்பாட்டு நிறுவனமும் அரசில் ஆதிக்கம் செலுத்தாமல் இருப்பதை உறுதி செய்ய வேண்டும். மேலும், மதம், மொழி மற்றும் இனவழி சிறுபான்மையினர் உரிமைகளை முன்னிறுத்தும் மக்களாட்சி மதிப்பீடுகளும், மதச்சார்பின்மையின் அங்கமே ஆகும். இந்தக் கொள்கையானது அரசின் நிர்வாகம் மட்டுமல்லாது அனைத்து பொது நிர்வாகங்களுக்கும் விரிவாக பார்க்க வேண்டியது.

ஒரு நிர்வாகத்தில், அது மத நிறுவனமே ஆனாலும், அதன் நிர்வாக ஒழுங்கு மேற்சொன்ன வரையறைக்குள் இருக்க வேண்டும் என்பதையும் மதச்சார்பின்மை வலியுறுத்துகிறது மேலும், சமூகத்தில் நல்லிணக்க வாழ்வினை பாதுகாப்பதும், வளர்த்தெடுப்பதும் முக்கிய பங்காற்றுகிறது.

நடைமுறையில் மதச்சார்பின்மை

பிரிட்டிஷ் ஆட்சியின் பல்வேறு முயற்சிகளையும், பெரும்பான்மை மற்றும் சிறுபான்மை வகுப்புவாத சக்திகளின் தாக்குதல்களையும் தாண்டி,  மதச்சார்பின்மைக் கொள்கையை பாதுகாத்தது விடுதலைப் போராட்டக் களம்தான். விடுதலைக்கு பின், இந்து வகுப்புவாத வெறியூட்டப்பட்ட கோட்சே, அண்ணல் காந்தியை சுட்டு வீழ்த்தினான். அதனைத் தொடர்ந்து சமூகத்தில் நல்லிணக்கத்தை சிதைக்க ஏராளமான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. ஆனாலும், அந்த முயற்சிகள் தோற்கடிக்கப்பட்டன.

மறுபக்கத்தில் மொழிவழி மாநிலங்களுக்கான எழுச்சியும் இன்ன பிற ஜனநாயக இயக்கங்களும் சார்பின்மைக் கொள்கையை வலுப்படுத்தின. முற்போக்கான மாற்றங்களை நோக்கிய போராட்டக் களம், சமூக நல்லிணக்கத்தையும், மதச் சார்பின்மைக் கொள்கையையும் வலுப்படுத்தியதில் செலுத்திய பங்கு தனியாக விவரிக்க வேண்டியதாகும்.

இருப்பினும், விடுதலைக்கு பின் இந்திய ஆளும் வர்க்கம் கடைப்பிடித்த குறுகிய பார்வையின் காரணமாக வகுப்புவாத வெறிக் கூட்டத்திற்கு வாய்ப்புகளும் உருவாக்கப்பட்டன. (உதாரணமாக, ஒன்றிய ஆட்சிகள் பின்பற்றிய மக்கள் விரோதக் கொள்கை முடிவுகளை, ஜனநாயகத்தை நசுக்கிய அவசர நிலை மற்றும் ஆட்சிக் கலைப்பு நடவடிக்கைகளை சொல்லலாம்)

முதலாளித்துவ ஜனநாயகமும், மதச்சார்பின்மைக் கொள்கை பற்றிய தாராளவாத பார்வையும் –  தன் அளவிலேயே ஏராளமான போதாமைகளைக் கொண்டவை ஆகும். முதலாளித்துவ ஜனநாயகம் என்பது வெளித்தோற்றத்திற்கு அனைவருக்குமானதாக தெரிகிறது. உண்மையில் அது வர்க்கச் சார்பானது. சுரண்டப்படும் மக்களை அடக்கி ஆள்வதாகவே அரசின் கருவிகள் உள்ளன. எனவே, அரசியலில் அது வகுப்புவாதத்தை அனுமதிக்கிறது. தன்னுடைய அதிகார நோக்கத்திற்காக பயன்படுத்திக் கொள்கிறது. குறுகிய நோக்கங்களுக்காக சமுதாயத்தில் வகுப்புவாத உணர்வு பரவலாக்கப்படும்போது அது ஒட்டுமொத்த மக்களாட்சி அமைப்பையுமே பாதிக்கிறது.

அதனோடு தாராளவாத பார்வையும் இணையும்போது சிக்கல் கூடுதலாகிறது. பொதுவாக, சிறுபான்மையினருக்கான உரிமைகளை வலுவாகப் பேசும் தாராளவாத மதச்சார்பின்மை ஆதரவாளர்கள், ஒட்டுமொத்தமாக உழைக்கும் மக்கள் மீது நிகழ்த்தப்படும் முதலாளித்துவச் சுரண்டலை கண்டுகொள்ளாமல் உள்ளனர். எனவே, சுரண்டலுக்கு ஆளாகும் மக்களில் பெரும்பான்மையோர் முன்பு, சிறுபான்மையினர் தனிச் சலுகை பெற்றவர்களாகவும், எதிரிகளாகவும் சித்தரிக்கப்படும்போது, தாராளவாத பார்வையிடம் அதற்கான பதில் இருப்பதில்லை. ஏற்கனவே அரசியலில் வகுப்புவாத உணர்வுக்கு இடம் ஏற்பட்டுவிடுகிற சூழலில், இத்தகைய குறைபாடுடைய  தாராளவாத போக்குகள் பாதிப்பை கடுமையாக்குகிறது.

சி.பி.ஐ(எம்) கட்சி திட்டத்தில் இது பின்வரும் விதத்தில் தெளிவாக விளக்கப்படுகிறது: “நடைமுறையில் மதச்சார்பின்மை முதலாளி வர்க்கத்தால் நாசமாக்கப்பட்டுள்ளது… அரசியலையும், மதத்தையும் முற்றாகப் பிரிப்பது என்பதற்குப் பதிலாக, அரசு மற்றும் அரசியல் நிகழ்முறைகளில் அனைத்து மத நம்பிக்கைகளுக்கும் சமமாக தலையிடுவதற்கான சுதந்திரம் என்பதே மதச்சார்பின்மையின் பொருள் என மக்களை நம்ப வைக்க முயல்கின்றனர். மதச்சார்பின்மைக்கு எதிரான போக்குகளை உறுதியுடன் எதிர்ப்பதற்கு பதிலாக, முதலாளி வர்க்கம் அதற்கு சலுகை வழங்கி வலுப்படுத்துகிறது.”

மேலும், இந்தியாவில் முதலாளித்துவ சுரண்டல் நிலை காரணமாக அரசியல் சாசனத்தில் சிறுபான்மை மக்களுக்கு உத்தரவாதப்படுத்தப்பட்டுள்ள உரிமைகள்கூட செயல்படுத்தப்படுவதில்லை. பொருளாதார, சமூகத்துறைகளில் சம வாய்ப்பு இல்லாததோடு பாரபட்சமும் நிலவுகிறது என்பதே உண்மை நிலையாகும்.

ஆனால், இந்திய ஆளும் வர்க்கங்கள் அதைப்பற்றி கவலைப்படவில்லை. தொடக்கத்திலேயே அவர்கள் பிற்போக்கான நிலவுடைமை வர்க்கங்களோடு சமரசம் செய்தார்கள். அதன்பிறகு பொருளாதார இறையாண்மையையும் விட்டுக் கொடுத்தார்கள். சர்வதேச நிதி மூலதனத்தின் விதிகளுக்கு உட்பட்டு உலகமயத்தை ஏற்று நடந்தார்கள். ஆண்டுகள் செல்லச் செல்ல  விடுதலைப் போராட்ட காலத்தில் முகிழ்த்த புரிதலில் இருந்து திட்டவட்டமான முறிப்பை ஏற்படுத்திக் கொண்டார்கள். இப்படிப்பட்ட போக்கு, இந்தியாவில் ஆர்.எஸ்.எஸ் இயக்கத்திற்கு சாதகமான புறச்சூழலை உருவாக்கியது. 

ஆர்.எஸ்.எஸ் திட்டம்

இந்திய ஆளும் வர்க்கங்கள் ஆர்.எஸ்.எஸ்., வழிநடத்தும் பாஜகவோடு ஒரு கூட்டினை ஏற்படுத்திக் கொண்டுள்ளார்கள். அதன் மூலம் ஆர்.எஸ்.எஸ். ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றியுள்ளது. இந்த சூழலை பயன்படுத்திக் கொண்டு மதச்சார்பின்மை அடித்தளத்தையும், சமூகத்தில் நிலவும் நல்லிணக்கத்தையும் தாக்கி அழிக்க முயற்சிக்கிறார்கள். இதற்காக அரசு, நிர்வாகம், கல்வி அமைப்பு, தகவல் தொடர்பு சாதனங்கள் ஆகியவற்றை மதவெறி மயமாக்க முயற்சிக்கின்றனர்.

ஆர்.எஸ்.எஸ் முன்வைக்கும் திட்டம் பாசிச வகைப்பட்டதாகும். அதன் கொள்கைத் திட்டம் சட்டத்தின் முன் அனைவரும் என்பதை ஏற்கவில்லை. இந்து மதம், ஆரிய இனம், சனாதன பண்பாடு மற்றும் சமஸ்கிருத மேன்மை ஆகிய நான்கு அம்சங்களை அது முன்னெடுக்கிறது. இந்து மதத்தை அது தனது அரசியல் திரட்டலுக்கான கருவியாக பார்க்கிறது. பிற மதங்களின் மீதான வெறுப்பை அடிப்படையாகக் கொண்டு மத உணர்வை கட்டமைக்கிறது. ஆரிய இனத்தை மேன்மைக்குரியதாக முன்வைப்பதுடன், சாதி ஆணாதிக்கத்தை உயர்த்திப்பிடிக்கும் சனாதன பண்பாட்டினை திணிக்கிறது. சமஸ்கிருத மொழியை அனைத்து மொழிகளுக்கும் மேம்பட்டதாக முன்வைக்கிறது. இவை அனைத்துமே மதச்சார்பின்மை கோட்பாட்டிற்கும், மக்களாட்சிக்கும் நேர் எதிரானதாகும்.

மேலும் கோல்வால்கர் எழுதிய நாம் அல்லது வரையறுக்கப்பட்ட நமது தேசம் என்ற நூல், சாமானிய மக்களுக்கு எதிராக, இன்னொரு பகுதி சாமானிய மக்களை ஆயுதம் ஏந்தச் செய்கிற பாசிச திட்டத்தை இன்னும் விரிவாக பேசுகிறது.

அறிவியல் அடிப்படையே இல்லாத விதத்தில் மத நம்பிக்கையின் அடிப்படையில் மக்களின் தேச பக்தியை முடிவு செய்வதுடன், அதன் வழிப்பட்டதாக ஒருவரின் குடியுரிமையை தீர்மானிக்கிறது. மேலும், தனது விளக்கப்படி ‘இந்து தேசத்தின்’ குடிமக்கள் அல்லாதவர்களை இரண்டாந்தர குடிமக்களாக நடத்த வேண்டும் என்கிறது. முஸ்லிம்களையும், கிறித்துவர்களையும் அன்னியர்கள் என்பதுடன், பிற சிறுபான்மை மதங்களின் (பெளத்தம், சமணம், சீக்கியம்) தனித்துவத்தையும் ஏற்க மறுக்கிறது.

பொதுவாக பெரும்பான்மை வகுப்புவாதம் வெளித்தோற்றத்தில் தேசியவாதம் போலவே தென்படும். உண்மையில் அது அரசியல் லாபத்திற்கான திட்டம் மட்டுமே ஆகும்.

நாட்டின் இறையாண்மையை பாதுகாத்து, வளர்ச்சியை முன்னெடுப்பதன் மூலம் தேச உணர்வை வளர்ப்பதை விடவும் – உள்ளுக்குள்ளேயே எதிரிகளை கட்டமைத்து, முடிவில்லாத மோதல்களை உருவாக்கி, அதன் மூலம், தேசிய வெறியை கட்டமைத்தல் – இன்றைய ஆளும் வர்க்கத்திற்கு சுலபமாக தென்படுகிறது.  ஆனால் இது நாட்டின் அரசமைப்பிற்கும், மதச்சார்பின்மைக்கும் பெரும் சவாலை உருவாக்கியுள்ளது.

முடிவாக…

இந்த சவால், ஆளும் வர்க்கங்கள், சுரண்டப்படும் வர்க்கங்கள் மீது தொடுத்துவரும் தாக்குதலின் மற்றுமொரு வெளிப்பாடே ஆகும். இதன் பின்னணியில் இருப்பது இந்துத்துவா-பெருமுதலாளித்துவ கூட்டே ஆகும்.

இந்துத்துவ வகுப்புவாதம் தனது அரசியலை பெரும்பான்மையினரின் பெயரால் முன்னெடுக்கும் போதிலும் அது உண்மையில் இந்துக்களாக வாழும் மக்களுக்கும் சேர்த்து துயரத்தையே அதிகரிக்கிறது. மிகச் சிறு எண்ணிக்கையிலான பெரு முதலாளிகளையும், கடைந்தெடுத்த பிற்போக்கு சக்திகளையுமே வலுப்படுத்துகிறது. மேலும் ஆர்.எஸ்.எஸ்., அமைப்பின் பாசிச திட்டமானது, மதச்சார்பின்மைக்கும் ஒட்டுமொத்தமாக மக்களாட்சிகும் அபாயமாகிறது.

பெரும்பான்மை வகுப்புவாதம் வளரும்போது மறுபக்கத்தில் சிறுபான்மை வகுப்புவாதத்தையும் தூண்டி விடுகிறது. அதுவும் மதச்சார்பின்மைக்க்கு சவாலாகவே எழுகிறது. பெரும்பான்மை மதவாதம் காரணி எனில், சிறுபான்மை மதவாதம் அதனால் உருவாகும் விளைவு என்ற தோற்றத்தில் முன்னுக்கு வருகிறது. உண்மையில் ஒன்றுக்கு ஒன்று உதவி செய்து வளர்கிறது. எனவே நாம் காரணியை பிரதானமாக எதிர்க்க வேண்டும், அதன் உடன் தோற்றமான சிறுபான்மை வகுப்புவாதத்தையும் எதிர்க்க வேண்டும். அதை நோக்கிய ஒன்றுபட்ட போராட்டத்தில் அனைத்து மக்களும் இணைய வேண்டும். சிறுபான்மை வகுப்புவாத சக்திகள், பாதிக்கப்படும் மக்களை அதிலிருந்து தனிமைப்படுத்தவும் செய்கிறார்கள். எனவே,  பெரும்பான்மை மதத்தை சார்ந்த மக்களை மதச்சார்பின்மை மற்றும் மதநல்லிணக்கத்தின் பக்கம் வென்றெடுக்க செயல்படும் அதே சமயத்தில், பாதிக்கப்படும் சிறுபான்மை மக்களோடு நிற்பதன் மூலம், ஜனநாயக இயக்கத்தை விரிவாக்க வேண்டும். அதன் வழியாகவே வகுப்புவாதத்தினை உறுதியுடன் எதிர்க்க முடியும்.

எனவே, மதச்சார்பின்மையை பாதுகாக்கும் போராட்டம், இந்திய குடியரசையும் அதன் மக்களாட்சியையும் பாதுகாப்பதற்கான போராட்டமே ஆகும். அதனை வெற்றிகரமாக முன்னெடுக்க  முதலாளித்துவ தாராளவாதப் பார்வை உதவி செய்யாது.

மார்க்சிய அடிப்படையில், மதச்சார்பின்மைக் கொள்கையிலிருந்து ஒரு சிறு விலகல் கூட ஏற்படாமல் செயல்படுவதுடன், விலகல் ஏற்படும்போது அதனை  அம்பலப்படுத்தவும், எதிர்த்து போராடவும் வேண்டும். ஒவ்வொரு மதத்தினரின் உரிமைகளை, அது பெரும்பான்மை மதமாக இருந்தாலும் சரி, அல்லது சிறுபான்மை மதமாக இருந்தாலும் சரி – அல்லது எந்த மதத்தின் மீதும் நம்பிக்கை இல்லாமல் இருந்தாலும் சரி, அவர்களது உரிமைகளை பாதுகாத்து நிற்க வேண்டும். அதே நேரத்தில் நாட்டின் பொருளாதாரம், அரசியல் மற்றும் நிர்வாக நிகழ்முறைகளில் மதத்தை நுழைக்கும் அனைத்து முயற்சிகளையும் எதிர்த்திட வேண்டும். மதச்சார்பற்ற கல்வி, மதச்சார்பற்ற பண்பாடு, மதச்சார்பற்ற சமூக விழுமியங்களை உயர்த்திப் பிடிக்க வேண்டும். இதன் மூலமே மதச்சார்பற்ற இந்திய குடியரசை பாதுகாத்திட முடியும். நாட்டுப் பற்றாளர்கள் முன் உள்ள அவசர கடமை இதுவே.

Tags: