நாட்டின் நலன் மீது அக்கறை கொண்டுள்ளோரின் கடமை!

மாணவர்கள் மத்தியில் போதைப்பொருள் பாவனை அதிகரித்து வருவதாக சமீப காலமாக தகவல்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன. மாணவர்கள் விடயத்தில் பெற்றோர் மற்றும் ஆசிரியர்கள் மிகுந்த அவதானம் செலுத்த வேண்டுமெனவும் ஆலோசனை கூறப்படுகின்றது. இல்லையேல் நாட்டின் எதிர்கால சமுதாயம் மோசமாகப் பாதிக்கப்பட்டு விடுமென்று அச்சம் தெரிவிக்கப்படுகின்றது.

மாணவர்களை இலக்கு வைத்து போதைப்பொருள் வியாபாரத்தில் ஈடுபட்டு வரும் கும்பல்களும் இயங்கி வருகின்றன. ஐஸ் (Ice) என்ற போதைப்பொருளை மாணவர்களுக்கு விற்பனை செய்யும் சட்டவிரோத நபர்கள் பற்றிய தகவல்கள் அடிக்கடி வெளிவருகின்றன. அதேநேரம் மாணவர்களில் பலர் போதைப்பொருள் பாவனைக்கு அடிமையாகி இருப்பதாக ஏற்கனவே தகவல்கள் வெளிவந்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

இத்தகவலானது பெற்றோர் மற்றும் ஆசிரியர்களுக்கு மாத்திரமன்றி, கல்விச் சமூகத்தைச் சேர்ந்தவர்கள், நலன்விரும்பிகளுக்கும் மிகுந்த கவலை தருகின்றது. ஐஸ் போன்ற போதைப்பொருட்களுக்கு எதிராக அரசாங்கம் மிகக் கடுமையான நடவடிக்கைகளை மேற்கொண்டிருக்கின்ற போதிலும், போதைப்பொருள் விற்பனையில் ஈடுபடுகின்ற சமூகவிரோதக் கும்பல்கள் குற்றச் செயல்களில் ஈடுபடுவதை ஒருபோதும் அனுமதிக்க முடியாது.

இந்த விடயத்தில் அனைத்துத் தரப்பினரும் அர்ப்பணிப்புடனும் ஒத்துழைப்புடனும் செயற்பட்டால் மாத்திரமே போதைப்பொருள் சீர்கேட்டுக்கு நிரந்தரமான தீர்வைக் காண முடியும். அதுவும் பாடசாலை மாணவர்களை இலக்கு வைக்கும் கும்பல்களை முற்றாக ஒடுக்க வேண்டியதும் மிக அவசியம்.

நாட்டின் எதிர்கால சந்ததியினரை இலக்கு வைத்து அவர்களை தீயவழியில் இட்டுச் செல்வதற்கு முற்படுகின்ற குற்றவாளிகள் தொடர்பில் மிகவும் அவதானமாக செயற்பட வேண்டியது சமூகநலனில அக்கறையுள்ள அனைவரினதும் கடமையாகும். போதைப்பொருள் குற்றவாளிகள் தொடர்பில் பொதுமக்கள் வழங்குகின்ற தகவல்கள் ஒவ்வொன்றும் போதைப்பொருள் குற்றங்களை ஒழிப்பதில் பொலிசாருக்கு உதவியாக அமையுமென்பதில் ஐயமில்லை.

பொதுமக்கள் வழங்குகின்ற தகவல்கள்தான் இந்த விடயத்தில் பொலிசாருக்கு மிகவும் பயனுள்ளதாக அமையுமென்பதில் சந்தேகமில்லை. நாட்டின் நலனைக் கவனத்தில் கொண்டு நாம் ஒவ்வொருவரும் செயற்படுவது அவசியம். போதைப்பொருள் குற்றங்கள் எங்கெல்லாம் இடம்பெறுகின்றதோ அவை பற்றி பொலிசாருக்கு தகவல் தெரிவிப்பதற்கு மக்கள் தயங்கக் கூடாது. அப்போதுதான் குற்றவாளிகளைக் கைது செய்து அவர்கள் மீது சட்டநடவடிக்கை மேற்கொள்ள முடியும்.

இளவயதினரை இலக்கு வைக்கும் போதைப்பொருள் குற்றவாளிகள் தொடர்பில் சமூகநலன்விரும்பிகள் அனைவருமே எச்சரிக்ைக கொள்ள வேண்டியது அவசியம். நாட்டின் எதிர்கால சந்ததியினரை தவறான பாதைக்குக் கொண்டு செல்வதற்கு முற்படுகின்றவர்கள் மோசமான குற்றவாளிகளாவர். அவர்களை ஒருபோதும் மன்னிக்க முடியாது. அவர்கள் சட்டத்தின் முன்னால் நிறுத்தப்பட வேண்டியவர்களாவர். அவ்வாறான போதைப்பொருள் வியாபாரிகள் தொடர்பாக பொதுமக்கள் போதுமான தகவல்களை பொலிசாருக்கு வழங்குவது அவசியம்.

மறுபுறத்தில், இளவயதினரின் பெற்றோரும் இதுவிடயத்தில் மிகுந்த அவதானத்துடன் செயற்பட வேண்டியது அவசியமாகும். பெற்றோர் தங்களது பிள்ளைகளின் அன்றாட நடத்தைகள் தொடர்பாக மிகுந்த விழிப்புணர்வுடன் நடந்து கொள்ள வேண்டும். தங்களது பிள்ளைகளின் நட்புவட்டம், அவர்களது அன்றாட நடத்தைகளில் காணப்படுகின்ற மாற்றங்கள், பிள்ளைகளுக்கு புதிதாக ஏற்படுகின்ற பணத்தேவை, வழமைக்கு மாறான பகல்நேர உறக்கம் போன்றவை பற்றியெல்லாம் பெற்றோர் தங்களது பிள்ளைகள் மீது அதிக அவதானம் செலுத்துதல் வேண்டும்.

இலங்கையின் சில பிரதேசங்கள் போதைப்பொருள் குற்றங்களுக்குப் பிரசித்தி பெற்ற இடங்களாக தற்போது மாறியுள்ளன. முன்னரெல்லாம் கொழும்பு மற்றும் அதனை அண்டிய பிரதேசங்களிலேயே போதைப்பொருள் பாவனை, கடத்தல் மற்றும் அதனுடன் தொடர்புடைய குற்றச்செயல்கள் அதிகளவில் இடம்பெற்று வந்தன. பொலிசாரால் போதைப்பொருட்கள் அடிக்கடி கைப்பற்றப்படுகின்ற இடங்களும் தலைநகர் பிரதேசங்களாகவே இருந்தன.

ஆனால் தற்போது நாட்டின் வேறு பிரதேசங்களில் போதைப்பொருட்கள் அடிக்கடி கைப்பற்றப்படுகின்றன. யாழ்ப்பாணம் பிரதேசத்தில் இந்தியாவிலிருந்து கடத்தி வரப்படுகின்ற கேரள கஞ்சா அடிக்கடி கைப்பற்றப்படுகின்றது. அதேசமயம் ஹெரோயின் போதைப்பொருளும் யாழ்ப்பாணம் பிரதேசத்தில் அடிக்கடி கைப்பற்றப்படுகின்றது. யாழ் மாவட்டத்தில் உள்ள இளைஞர்கள் பலர் போதைவஸ்துக்கு அடிமையாகியிருப்பதாகவும் அதிர்ச்சித் தகவலொன்று வெளிவந்துள்ளது.

அதேபோன்று கிழக்கு மாகாணத்தின் சில பிரதேசங்களில் ஹெரோயின் போதைப்பொருள் கைப்பற்றப்படுகின்ற சம்பவங்கள் அடிக்கடி இடம்பெறுகின்றன. அங்குள்ள பலர் போதைப்பொருள் பாவனைக்கு அடிமையாகியுள்ளதாகக் கூறப்படுகின்றது.

பிள்ளைகளின் மாறுபாடான நடத்தைக் கோலம் ஆரம்பத்திலேயே அவதானிக்கப்படுமானால் போதைப்பொருள் பாவனையை ஆரம்பத்திலேயே கண்டறிந்து விடலாம். அப்பிள்ளையை போதைப்பொருள் பாவனையிலிருந்து விடுபடச் செய்வதும் இலகுவாயிருக்கும். போதைப்பொருள் பாவனையற்ற சமுதாயத்தைக் கட்டியெழுப்புவதற்கு ஒவ்வொருவரும் தங்களது பங்களிப்பை வழங்க வேண்டியது மிகவும் அவசியமென்பதை மறந்து விடலாகாது.

தினகரன்
2023.01.27

பெண்கள் தொடர்பில் வெளிவந்த அதிர்ச்சி செய்தி

ஸ் போதைப்பொருளை பாவிக்கக் கூடியவர்கள் மிகக் குறுகிய காலத்துக்குள் மரணித்துப் போகக்கூடிய ஒரு மோசமான நிலை காணப்படுகிறது என்று வாழைச்சேனை உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் எம்.டி.டி.நிலங்க தெரிவித்தார்.

தற்போது அதிகளவிலான பெண்களும் ஐஸ் போதைப்பொருட்களை பயன்படுத்துபவர்களாக இருக்கின்றனர். இதனை நாம் மிக விரைவாக இல்லாமலாக்குவதற்கான முயற்சிகளை எடுக்க வேண்டும் என்றார்.

பெண்கள் அதிகம் வீட்டுக்குள் இருப்பதினால் அவர்கள் எங்கே சென்று பயன்படுத்துகிறார்கள் என்று தேடித்திரிய தேவையில்லை வீட்டுக்குள் இருந்தே அவர்களை அவதானித்து பாதுகாத்துக் கொள்ளலாம்.

உங்களுடைய பாடசாலை சிறார்களிடத்தில் ஐஸ் மற்றும் ஹெரோயின் போதைப்பொருள் பதார்த்தங்களினால் செய்யப்படுகின்ற லொலிபொப், மாத்திரைகள் வடிவிலான போதைப் பொருட்களை இவர்கள் வழங்கி விடலாம். இதனால் கட்டாயமாக உங்களது பிள்ளைகள் விடயத்தில் அவதானமாக இருந்து கொள்ள வேண்டும்.

இவ்வாறான போதைப்பொருள் தடுப்பு வேலைகளை நீங்கள் கடந்த காலத்தில் இருந்தே ஆரம்பித்து இருக்க வேண்டும்.

இப்போதாவது நீங்கள் ஆரம்பித்து இருப்பது நிச்சயமாக உங்களுடைய எதிர்கால குழந்தைகளை அது பாதுகாக்கும்.  

இந்த போதைப்பொருள் பழக்கத்தில் இருந்து உங்களது சமூகத்தை பாதுகாத்து, போதைப்பொருள் தொடர்புடையவர்களுக்கு எதிராக சட்டநடவடிக்கை எடுக்க நாங்கள் முழுமையான பங்களிப்பை வழங்குவோம் என்று பொலிஸ் அத்தியட்சகர் மேலும் தெரிவித்தார்.

Tags: