இயக்குநர் ‘சங்கராபரணம்’ கே.விஸ்வநாத் காலமானார்!

பன்முகத் தன்மை கொண்ட பழம்பெரும் கலைஞர் காலமானார்!

தெலுங்குத் திரையுலகின் மிக முக்கிய கலைஞரான இயக்குநர் கே.விஸ்வநாத் காலமானார். 92 வயதான அவர், ஹைதராபாத்திலுள்ள தனது இல்லத்தில் வயது முதிர்வின் காரணமாக இயற்கை எய்தினார்.

நீண்ட காலமாகவே உடல்நிலை சரியில்லாமல் இருந்தபோதும், அவ்வப்போது பல்வேறு கலைஞர்களைத் தன் வீட்டில் சந்தித்து அவர்களுடன் உரையாடி வந்தார். கடந்த நவம்பர் மாதம், நடிகர் கமல்ஹாசன் அவரை நேரில் சந்தித்து ஆசிபெற்றிருந்தார்.

இவர் 19.2.1930 ஆம் ஆண்டு ஆந்திர மாநிலம் கிருஷ்ணா மாவட்டத்தில் பிறந்தார். இவருக்கு ஜெயலட்சுமி என்ற மனைவியும், நாகேந்திரநாத், ரவீந்திரநாத் என்கிற மகன்களும், பத்மாவதி என்கிற மகளும் உள்ளனர்.

இவர் கடந்த 1957-ல் சென்னையில் தனது திரைப்பட வாழ்க்கையை தொடங்கினார். 1975-ல் முதன்முறையாக ஆத்ம கவுரவம் என்ற தெலுங்கு திரைப்படத்தை இயக்கினார். இதற்கு நந்தி விருது வழங்கப்பட்டது.

அதன் பின்னர் இவர் சிரிசிரி முவ்வா, சங்கராபரணம், சலங்கை ஒலி, சிப்பிக்குள் முத்து உட்பட பல தெலுங்கு, தமிழ், இந்தி, மலையாளம் மற்றும் கன்னடப் படங்களை இயக்கினார்.

‘கலா தபஸ்வி’ என்று அழைக்கப்பட்ட கே.விஸ்வநாத், 5 தேசிய விருதுகள், ஏழு நந்தி (மாநில) விருதுகள், 10 தென்னிந்திய பிலிம்பேர் விருதுகள், ஒரு இந்தி பிலிம்பேர் விருது என ஏகப்பட்ட விருதுகளை வாங்கிக் குவித்திருக்கிறார். இந்திய அரசின் பத்ம ஸ்ரீ விருதால் கௌரவிக்கப்பட்டவர், 2017-ம் ஆண்டு இந்திய சினிமாவின் உயரிய விருதான ‘தாதாசாகெப் பால்கே’ விருதையும் பெற்றிருந்தார்.

ஒலிப்பதிவாளராக தன்னுடைய திரையுலகப் பயணத்தைத் தொடங்கியவர், இயக்குநராக 53 படங்களை எடுத்துள்ளார். பெண்ணுரிமை, சாதி ஏற்றத் தாழ்வு, நிகழ்த்துக் கலைகள் சம்பந்தப்பட்ட படைப்புகள் எனப் பல சமுக விஷயங்களை தன் படங்களின் மூலமாகப் பேசி இந்தியாவின் முக்கியமான படைப்பாளிகளில் ஒருவராகத் திகழ்ந்தார். இவர் இயக்கத்தில் ‘சங்கராபரணம்’, ‘ஸ்வாதிமுத்யம்’, ‘சாகரசங்கமம்’ உள்ளிட்ட படங்கள் குறிப்பிடத்தக்கவை.

திரைப்படங்களை இயக்கி பிரபல இயக்குநராக அறியப்பட்டாலும், நடிப்பிலும் கவனம் செலுத்தினார். மாற்றுச் சினிமாவின் முன்னோடியாகத் திகழ்ந்தவர், தமிழில் ‘குருதிப்புனல்’, ‘முகவரி’, ‘யாரடி நீ மோகினி’, ‘லிங்கா’, ‘உத்தம வில்லன்’ உள்ளிட்ட பல படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்துள்ளார்.

மாபெரும் கலைஞர் கே.விஸ்வநாத்துக்கு புகழ் அஞ்சலி!

Tags: