அமெரிக்க இராணுவத்தளங்கள் மீது தாக்குதல்கள்

சிரியாவின் கிழக்குப் பகுதியில் ஆக்கிரமிப்பு செய்துள்ள அமெரிக்க இராணுவ முகாம்கள் மீது ராக்கெட்டுகள் ஏவப்பட்டு தாக்குதல்கள் நடைபெற்றுள்ளன.  சிரியாவில் இயங்கிவந்த டேஷ் (Daesh) பயங்கரவாத அமைப்பை எதிர்க்கிறோம் என்ற பெயரில் அமெரிக்காவும், அதன் கூட்டாளிகளும் 2014 ஆம் ஆண்டில் சிரியாவுக்குள் நுழைந்தன. மேற்கு ஆசியாவில் தனது தலையீடுகளை அதிகரிக்கவே இந்த நடவடிக்கையை அமெரிக்கா மேற்கொண்டது. கிழக்குப் பகுதியில் பல முகாம்களை அமைத்துக் கொண்டது. இந்த ஆக்கிரமிப்பில் எண்ணெய் வளம் மிகுந்த பகுதிகளை அமெரிக்கா குறிவைத்துத் தனது முகாம்களை அமைத்தது.

2017 ஆம் ஆண்டில் சிரிய இராணுவம் டேஷ் பயங்கரவாத அமைப்பைத் தோற்கடித்தது. இருப்பினும், தனது சட்டவிரோத ஆக்கிரமிப்பை அமெரிக்கா தொடர்ந்தது. ஏராளமான எண்ணெய் வளம் தொடர்ந்து கொள்ளையடிக்கப்படுகிறது. புதிதாக சில தீவிரவாத அமைப்புகளை உருவாக்கி, அதற்குத் தனது ஆதரவை அமெரிக்க வழங்கிக் கொண்டிருக்கிறது. கொள்ளையடிக்கப்படும் எண்ணெய் வளத்தை சிரியாவில் இருந்துவெளியே எடுத்துச் செல்ல இந்த அமைப்புகள் உதவு கின்றன.

அமெரிக்க ஆக்கிரமிப்புக்கு எதிராக சிரியாவில் உள்ள பல அமைப்புகள் இயங்குகின்றன. சிரியாவின் டேய்ர் அல் ஜார் (Dayr al-Zawr) மாகாணத்தில் உள்ள அல் ஓமர் (Al Omar) எண்ணெய் வயல் பகுதி மற்றும் கோனொகோ (Conoco) எரிவாயுப்பகுதி ஆகிய இரண்டு செழிப்பான பகுதிகளுக்கு அருகே அமைக்கப்பட்டுள்ள அமெரிக்க முகாம்கள் தாக்குதல்களுக்கு உள்ளாகியுள்ளன. 20 ராக்கெட்டுகளுக்கு மேல் ஏவப்பட்டு, இந்த முகாம்களுக்கு பெரும் சேதம் விளைவிக்கப்பட்டிருக்கிறது. உடனடியாக, அமெரிக்க போர் ஹெலிகாப்டர்கள் இந்தப் பகுதிகளைச் சுற்றி வலம்வந்தன. தங்கள் முகாம்கள் தாக்கப்பட்டதை முதலில் ஏற்றுக் கொள்ளாத அமெரிக்க இராணுவம், தங்கள் இராணுவ முகாம் ஒன்றின்  மீது எட்டு ராக்கெட்டுகள் வீசப்பட்டதாகப் பின்னர் ஒப்புக் கொண்டது. அமெரிக்கத் தரப்பில் ஒருவர் காயமடைந்தார் என்றும் சேதத்தை மதிப்பீடு செய்து கொண்டிருக்கிறோம் என்றும் தெரிவித்திருக்கிறார்கள்.

இதற்கு சற்று முன்னர், அல் ஓமர் எண்ணெய் வயல்கள் அடங்கியுள்ள பகுதியிலும் ராக்கெட்டுகள் வீசப்பட்டன. ஆளில்லா விமானம் மூலமாகவும் தாக்குதல் நடத்தப்பட்டது. இந்தத் தாக்குதலில் அமெரிக்க ஒப்பந்ததாரர் ஒருவர் கொல்லப்பட்டார். மேலும் ஐந்து அமெரிக்க இராணுவ வீரர்கள் காயமடைந்தனர். 

அமெரிக்காவுக்கு பதிலடி

டேய்ர் அல் ஜார் மாகாணத்தில் பொது மக்கள் குடியிருக்கும் பகுதிகளின் மீது அமெரிக்கத் தாக்குதல்கள் நடந்தன. இதில் சிலர் கொல்லப்பட்டனர். பலர் காயமடைந்தனர் என்று ஈரானின் அல் ஆலம் தொலைக்காட்சி ஊடகம் வெளியிட்டுள்ள செய்தியில் கூறப்பட்டிருக்கிறது. இந்தத் தாக்குதல்களுக்கு பதிலடியாகவே, சிரிய ஆதரவு அமைப்புகள் அமெரிக்க இராணுவ முகாம்கள் மீது தாக்குதல்களை நடத்தியிருக்க வேண்டும் என்று கூறப்படுகிறது. இதுபோன்ற  தாக்குதல்கள் தொடரும் என்றும் எதிர்பார்க்கிறார்கள்.

சீனா, ரஷ்யா மற்றும் ஈரான் ஆகிய நாடுகளின் ஆதரவு சிரியாவுக்கு உறுதிப்பட்டு வரும் நிலையில், தனது எண்ணெய் கொள்ளைகளுக்கு முற்றுப்புள்ளி வந்துவிடலாம் என்ற  அச்சத்தில்தான் அமெரிக்கா தாக்குதலை நடத்தியிருக்கிறது. டேஷ் பயங்கரவாத அமைப்பின் தோல்வியோடு சிரியாவில் அமைதி திரும்பியிருக்க வேண்டும். புதிய அமைப்புகளை உருவாக்கி, அவற்றிற்கு அமெரிக்கா ஆதரவு அளித்து வருவதால் முழுமையான அமைதி சிரியாவில் உருவாகவில்லை.

Tags: