அழித்தொழிப்பதா ஆன்மீக அரசியல்?

ச.அருணாசலம்

ண்ணிக்கையில்லா என்கெண்டர்கள்! அச்சத்தின் பிடியில் எளியோரை வைத்திருப்பது, அரசியல் எதிரிகளை அராஜகமாக சுட்டுக் கொல்வது, அடங்க மறுத்தால் பொய் வழக்கு போடுவது, ஆட்சி நிர்வாகத்தை அலங்கோலமாக்குவது…என்று அதகளப்படுத்துகிறார் உ.பியின் காவி முதல்வர் யோகி ஆதித்தியநாத்!

உத்தர பிரதேசத்தில் காட்டாட்சி நடக்கிறது. அங்கு சட்டம் ஒழுங்கு மட்டும் சீரழிந்து விடவில்லை. ஒட்டு மொத்த நிர்வாகமுமே முடமாகி உள்ளது. ஆட்சியாளர்கள் மனமெல்லாம் ஆதிக்கம் செலுத்துவது மத உணர்வோங்கிய மேல் சாதி வெறித்தனங்கள் மட்டுமே! இவற்றில் ஜனநாயக செயல்பாடு, பொதுநலன், சட்டத்தின் ஆட்சி ஆகியவை செத்தொழிந்து விட்டது.

முஸ்லீம் வெறுப்பு, சாதிய மேலாதிக்கம்  பெண்ணுரிமை மறுப்பு ஆகிய மூன்றிலும் ஊறி வளர்ந்த யோகி தான் முதல்வரானதும் தனது “எண்ணங்களை” நடைமுறை படுத்த முதல்வர் என்ற அதிகாரத்தை பயன்படுத்துகிறார்.

இதன் விளைவு?

இவர் பதவி யேற்றது முதல் இன்று வரை சுமார் 10,700 என்கவுண்டர்கள் சிறிதும் பெரிதுமாக உ.பி.யில் நடந்துள்ளது. 3,302 நபர்கள் சுடப்பட்டுள்ளனர்.  200க்கும் மேற்பட்டோர் சுட்டுக்கொல்லப்பட்டனர் 3,000க்கும் மேற்பட்டோர் கை கால் கண் இழந்து முடமாக்கப்பட்டுள்ளனர் உ. பி. யில். ஏப்ரல் 15ந்தேதி இரவு பத்து மணியளவில் உ.பியின் பிரயாக்ராஜ் நகரில் மருத்துவ சோதனைக்காக அழைத்து வரப்படும்  அரசியல்வாதியும், கிரிமினல் குற்றவாளியுமான அட்டீக் அகமது மற்றும் அவரது சகோதரர் அஷ்ரப் அகமது ஆகியோரிடம் சில கேள்விகளை கேட்டதற்காக பத்திரிகையாளர்கள் கூடியிருந்தனர். அட்டீக் அகமதுவிடம் பத்திரிக்கையாளர்கள் கேட்ட கேள்விக்கு அவர் பதிலளித்துக் கொண்டிருக்கும் பொழுதே, மிக நெருக்கத்தில் அவர் சுடப்பட்டார் . கூடவே, விலங்கிடப்பட்ட அஷ்ரப்பும் துப்பாக்கி குண்டுகளால் கொல்லப்பட்டனர்.

பதினைந்துக்கும் மேற்பட்ட காவலர்கள் புடைசூழ அகமது மற்றும் அஷ்ரப் விலங்கிடப்பட்டு அழைத்து வரப்பட்ட நிலையில் மூன்று கேமராக்கள் முன்னிலையில் இந்த படுகொலையை நிகழ்த்தி உள்ளனர். மேலும், அவர்கள் கொலை செய்துவிட்டு “ஜெய் ஶ்ரீ ராம்” என்று கோஷமிட்டபடியே போலீசிடம் சரண் அடைந்துள்ளனர்.

நாட்டையே உலுக்கிய இந்த பயங்கர நிகழ்வு சிலரிடையே  மகிழ்ச்சியை கிளப்பி உள்ளது! ஆம், உத்தர பிரதேச பாரதீய ஜனதா கட்சியின் இளைஞர் அணி பட்டாசு கொளுத்தி தங்களது உற்சாகத்தை உலகிற்கு காட்டியது.

இந்த பயங்கர நிகழ்வு திட்டமிட்ட படுகொலை என்றும், காவலர் பாதுகாப்பில் இருக்கும் பொழுதே ”குற்றவாளிகளை” வெளியாட்கள் படுகொலை செய்து விட்டு, ஜெய் ஶ்ரீ ராம் கோஷம் போடுவது எதைக் காட்டுகிறது? கூடியிருந்த காவலர்கள் படுகொலையை தடுக்காமல் வழிவிட்டு “உதவியதன்” மர்மம் என்ன?

அந்த மூன்று கொலையாளிகளுக்கு அகமது சகோதரர்கள் மருத்துவ மனைக்கு இரவு பத்து மணிக்கு மேல் வருவது எப்படி தெரியும்?

மூவரில் ஒருவன் லவ்லேஷ் திவாரி என்பவன் பஜ்ரங் தள் உறுப்பினராம் அனுமன் பக்தராம். இவன் தன்னை தனது முகநூல் பதிவில் ‘சாஸ்திரவாலா பிராமணன்’ அதாவது ஆயுதந் தரித்த பிராமணன் என்று குறிப்பிடுகிறான்.

மற்றொருவன் ‘சன்னி சிங் ‘ என்பவன், இவன் மீது 17 கிரிமினல் வழக்குகள் உள்ளனவாம்! மூன்றாவதாக அருண் மௌர்யா என்பவன் ஒரு கொலைக் குற்றவாளி, ரயில்வே காவலரை கொன்றதாக வழக்கு இவன்மேல் உள்ளது!

இம்மூவரும் 20 முதல் 25 வயது நிரம்பியவர்களே, மூவரும் இந்துத்துவ அமைப்புகளின் தீவிர உறுப்பினர்கள். இவர்கள் மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானியுடனும் மற்ற பா.ஜ.க தலைவர்களுடனும் நெருக்கமாக இருப்பது போட்டோக்களிலும் முக நூல் பதிவுகளில இருந்தும் தெரிய வருகிறது.

அப்படியானால் இவர்களுக்கு ஆயுதங்கள் கொடுத்து உதவியது யார்? மருத்துவ மனைக்கு வரச் சொன்னது யார் என்ற கேள்விகள் எழுகிறது?

ஊரே பதைபதைப்புடன் இருக்க, பிராயாக்ராஜ் நகரில் 144. தடையுத்தரவு பிறப்பித்த வேளையில், உ.பி. நிதி அமைச்சர் சுரேஷ் கன்னா ”இது தெய்வ நீதி” (Divine justice) என்று பக்தி சிரத்தையுடன் கூறுகிறார்.

பா.ஜ.க நாடாளுமன்ற உறுப்பினர் சுப்ரத பாதக் ” அகமது கும்பலை கொன்ற விதம் வேண்டுமானால் தவறாயிருக்கலாம். ஆனால், அவர்கள் ஒன்றும் புனிதர்கள் அல்ல” என்று கூறியிருக்கிறார்.

முதல்வர் யோகி ஆதித்யநாத்தோ, இனி உத்தர பிரதேசத்தில் மஃபியாக்கள்  சுதந்திரமாக நடமாட முடியாது என்று கூறி, கொலையை நியாயப்படுத்துகிறார் . எனில், அரசு காவலில் இருந்த நிராயுத பாணிகளை கொலை செய்த ஏவியர்கள் யார் என்பதற்கு மக்களுக்கே விடை தெரிகிறதே?

இந்த விவகாரத்தில் இந்திய நாட்டின் பிரதமர் வாய் மூடி மௌனியாய் இருக்கிறார் . நடந்துவிட்ட அவலத்தை, அட்டூழியத்தை கண்டிக்கவில்லை. மற்ற மாநில நிகழ்வுகள் பற்றியெல்லாம் எகிறிக்குதிக்கும் உள்துறை அமைச்சர் அமீத் ஷாவும் அமைதி காக்கிறார்.

கடந்த மாதம் அதானி பிரச்சினையில் மோடியின் கள்ள உறவு பற்றிய கேள்வியில் மௌனம் காட்டிய மோடி,  புல்வாமா பிரச்சினையில் வாயை திறக்காத மோடி தற்போது உத்திர பிரதேச படுகொலை பற்றியும் மௌனம் சாதிப்பதன் மர்மம் தான் என்ன?

ஆனால், இவர்களது கட்சினர் இந்து மக்களில் ‘ஒரு பகுதியினரும்’ புளகாங்கிதம் அடைவது எதனால் ?

வல்லான் வகுத்ததே வாய்க்கால் , தடியெடுத்தவன் தண்டல்காரன் என்ற பழைய கால காட்டாட்சி முறையை வீழ்த்தி, மனித குலம் நாகரீகமாக அனைவருக்கும் பொதுவான விதி செய்து அதனடிப்படையில் வாழ்க்கையை நடத்துவதே சட்டத்தின் ஆட்சி என்கிறோம்.

சட்டத்தின் ஆட்சி என்பது அனைவருக்கும் சம்மான நீதி என்பதே. சாதி மத வேறுபாடின்றி, ஏழை பணக்காரன் என்ற வித்தியாசமில்லாமல் நீதி கிடைக்க வேண்டும் என்பது மட்டுமல்ல, அதை அமல் செய்கின்ற பொறுப்பிலுள்ள ஆட்சியாளரகள் (அரசு நிர்வாகத்தின் அனைத்து பிரிவுகளும்) நடுநிலையாக சட்டத்தை பிரயோகிக்க வேண்டும் என்பதே இதன் அடிப்படை ஆகும்.

ஆனால், உத்தர பிரதேசத்தில் நடப்பது என்ன?

சமுதாயத்தில் சிறு பான்மையினராக இருக்கும் முஸ்லீம்கள் மீது வன்மமும் வெறுப்பும் கட்டவிழ்த்து விடப்பட்டுள்ளது. பா.ஜ.கட்சியினரை தவிர, அனைவரும் ஒப்புக் கொள்கின்றனர். சமூகத்தில் பெண்கள், வறியவர்கள், தாழ்த்தப்பட்ட மக்கள், பிற்படுத்தப்பட்டோர் ஆகியோரின் எதிர்பார்ப்புகளை யோகி ஆதித்யநாத் அரசு மறுத்தே 2017 முதல் செயல்பட்டு வந்துள்ளது.

அகிலேஷ் யாதவ், மாயாவதி ஆட்சியின் அத்துமீறல்களை எல்லாம் ஜுஜூபியாக மாற்றிய பெருமை அஜய் பிஷ்ட் என்ற இயற் பெயர் கொண்ட “யோகி ஆதித்யநாத்” தையே சாரும் .

இந்துத்வாவின் முரட்டு அடையாளமாக தன்னை முன்னிறுத்தும் இந்த காவியுடை சந்நியாசி சாதிய மேன்மையிலும், ஆதிக்கத்திலும் ஈடுபாடுள்ளவர்.  இவருக்கு முஸ்லீம்களை கண்டாலே யாதொரு காரணமும் இல்லாமலே வெறுப்பு தோன்றுகிறது. இதை இவர் என்றைக்கும் மறைத்ததோ, பூசி மெழுகியதோ கிடையாது. எளியோரை அடித்து, அடக்கி வை என்ற தாரக மந்திரத்தை ஓதி வளர்ந்தவர் கோரக்நாத் மடத்துறவி ஆதித்யநாத்.

மத்தியில் கிழக்கு உ.பி.யில் தாக்குர் மற்றும் ராஜ்புட் மக்களிடையே செல்வாக்குடன் இந்து யுவ வாகினி என்ற இளைஞர் அமைப்பை நிறுவி, ஏராளமான மேலாதிக்க சாதி இளைஞர்களை இந்து சமய தீவிரவாதத்தில் இழுத்த இவரை பா.ஜ.க தனக்குள் இழுத்துக் கொண்டது.

யோகி ஆட்சியில் கொல்லப்பட்ட 300 பேரில் 37%  சதவிகிதம் பேர் முஸ்லீம்கள். ஐக்கிய நாடுகள் வரை இவரது புகழ் பரவி யு. என். ஸ்பெஷல் ராப்பரடியர்ஸ் என்றழைக்கப்படும் ஐ.நா மனித உரிமை சிறப்பு பார்வையாளர்கள் இவரது அத்துமீறலை பல முறை கேள்வி கேட்டுள்ளனர்.

தேசிய மனித  உரிமை ஆணையம் N H R C  5 முறை உ. பி அரசிற்கு நோட்டீஸ் அனுப்பி  (அதாவது ஓய்வு பெற்ற உச்ச நீதி மன்ற நீதிபதி அருண் மிஸ்ரா இவ்வாணையத்திற்கு தலைமை ஏற்பதற்கு முன்னால்) உள்ளது.

பெண்களுக்கு எதிரான வன்செயல் ஆதித்தயநாத் ஆட்சியில் அத்துமீறி உள்ளதை புள்ளி விவரம் காட்டுகிறது. Crimes against women 46%  சதவிகிதம் கூடியுள்ளது. தேசீய குற்ற ஆவணங்கள் முகமை N C R B , உ.பி. மாநிலத்தில் பெண்களுக்கெதிரான பாலியல் வன்முறை மற்றும் குற்றநிழ்வுகள் 2018ல் 59,445 ஆகவும் 2019ல் அந்த எண்ணிக்கை 59,853 ஆக்க்கூடியதாக தெரிவிக்கிறது. இந்த போக்கு 2023லும் தொடர்வது தெரிகிறது.

பரபரப்பாக பேசப்பட்ட ‘ஹத்ராஸ் படுகொலை’ நாடு முழுவதும் அதிர்வு அலைகளை ஏற்படுத்தியதை யாரும் மறந்திருக்க முடியாது. ‘உன்னாவ் வன்கொடுமை’ எல்லாம் இன்றும் தொடர்ந்து வருவதை என்னவென்பது? சட்டமும், ஒழுங்கும், நீதியும், நேர்மையும் நிறைந்து வழிகிறதா உத்தர பிரதேசத்தில்?

#. தாழ்த்தப்பட்டவர்கள் மற்றும் பட்டியலினத்தாரின்  மீது வன்கொடுமைகள் 40 சதவிகிதத்திற்கு மேல் அதிகரித்துள்ளது.

உ.பி. சிறைகளில் அடைபட்டுள்ளோரில் 65% சதவிகிதத்தினர் தாழ்த்தப்பட்ட மக்கள் தான்.

உத்தர பிரதேசத்தில் நடப்பது காட்டாட்சியா இல்லை சட்டத்தின் ஆட்சியா என்று கேள்வி கேட்டு 500க்கும் மேற்பட்ட ஓய்வு பெற்ற மூத்த அதிகாரிகள், ஓய்வு பெற்ற நீதிபதிகள் , ஓய்வு பெற்ற இராணுவ அதிகாரிகள் மற்றும் காவல்துறை தலைவர்கள் “நீண்ட கடிதம்” கடந்த ஆண்டு 2022ல் எழுதினர்.

அதில் அரசின் கொள்கைகளை விமர்சிப்போர், குறைபாடுகளை வெளிக்கொணர்வோர் மீது சட்டத்திற்கு புறம்பாக கடுமையான பயங்கரவாத சட்டங்களை ஏவி சிறையுலடைப்பதை வழக்கமாக கொண்டுள்ளது ஆதித்யநாத் அரசு என ஏராளமான புள்ளிவிவரங்களை தந்துள்ளனர். ஒன்று குடியுரிமை சட்ட திருத்த்தை எதிர்த்து போராடியவர்களை பயங்கரவாத சட்டங்களில் கைது செய்து, சிறையிலடைப்பது போன்ற கொடுமைகள்!

அரசுக்கு எதிராக கருத்து கூறியவர்கள், போராடியவர்கள் மேல் 10,700 F I R போடப்பட்டுள்ளன, தடியடி , துப்பாக்கி சூடு மூலம் 22 பேர் கொல்லப்பட்டனர், சுமார் 800 க்கும் மேற்பட்டோர் சிறையில் அடைக்கப்பட்டதும் 2019-2020ல் நடந்தது.

எதற்கெடுத்தாலும் தேசீய பாதுகாப்பு சட்டத்தின் கீழ்  NSA வழக்குகள். புனையப்பட்டதும் அவ்வாறு புனையப்பட்ட 120 வழக்குகளில் 94 வழக்குகள் நீதி மன்றங்களால் தள்ளுபடி செய்யப்பட்டது மட்டுமல்ல, நீதி மன்றங்கள் உ.பி. அரசை இந்த முறைகேட்டிற்காக கடுமையாக கண்டிக்கவும் செய்தன.

போராடும் முஸ்லீம்  மக்களின் வீடுகளை “புல் டோசர்” மூலம் இடித்து தரைமட்டமாக்குவது போன்ற இழி செயல்கள் குற்றங்கள் நாம் மறக்க கூடியவை அல்ல.

ஹத்ராஸ் வன்கொடுமையை விசாரித்து எழுதச்சென்ற ‘சித்திக் கப்பான் ‘ என்ற நிருபரை 21 மாதங்களுக்கு மேல் சிறையிலடைத்து மகிழ்ந்தது உ. பி. அரசு.

‘லவ் ஜிகாத்’ என்ற பெயரில் முஸ்லீம் மக்களின் மீதும் இளைஞர்களின் மீதும் வன்முறையை கட்டவிழ்த்து விடவில்லையா உ. பி. அரசு. இதன் மூலம் குடும்ப உறவுகளை சமூக நல்லிணக்கத்தை சீரழிக்கவில்லையா உ.பி காவல்துறையும், அதன் பொறுப்பில் உள்ள யோகியும் என கேள்வி கேட்டுள்ளனர் மூத்த அதிகாரிகள் .

இதையே தான் ‘எடிட்டர்ஸ் கில்ட்’ எனப்படும் அகில இந்திய பத்திரிக்கை ஆசிரியர் சம்மேளனமும் கேட்டது!

# சிறு பான்மையினர் மீது மாட்டிறைச்சி வைத்துள்ளனர், பசுக்களை கடத்துகின்றனர் என பொய்குற்றச்சாட்டுகளை கூறி காட்டுமிராண்டி தனமாக தாக்குவதும், சிறையிலடைப்பதும் சித்திரவதை செய்வதும்,  எரித்துக் கொலை செய்வதும் கௌ ரக்‌ஷ்க் என்ற பெயரில் யோகியின் அடியாட்கள் கோர தாண்டவம் ஆடுவது குறைந்துள்ளதா உத்தர பிரதேசத்தில்?

# சிறுபான்மையினருக்கு எதிரான பயங்கரவாத்த்தை புனிதமயமாக்கும் முயற்சியில் உள்ளார் ஆதித்யநாத். அதனுடைய வெளிப்பாடுதான் “பிராந்திய ரக்‌ஷக் தல்”  என்ற காவி உடை தரித்த இந்து பயங்கரவாத அமைப்பு ஆகும் .

# இவர்களை காவலரின் நண்பர்கள் என்று அழைக்கும் ஆதித்யநாத் இந்த காவி பயங்கரவாதிகள் மூலம் காவல்துறை உதவியுடன் சிறுபான்மையினரின் வாழ்வாதார உரிமைகளை அழித்தொழித்து அவர்களை ‘எப்பொழுது என்ன நேருமோ ‘ என்ற பதட்டத்தில் வைத்துள்ளார்.  காவி பயங்கரவாதிகளின்  அத்துமீறல்களை ஏதோ காவல்துறையின் நடவடிக்கைகள் போல சித்தரிப்பதும், அவர்களை “பாதுகாப்பதும்” ஒன்றை நமக்கு சுட்டிக் காட்டுகிறது.

# கௌ ரக்‌ஷக், இந்து யுவ வாகினி, பிராந்திய ரக்‌ஷக் தள்  S 10  , போன்ற அமைப்புகளில் உள்ள மதவெறியூட்டப்பட்ட இளைஞர்களின் ‘அடாவடி ‘செயல்களை நியாயப்படுத்தும் ஆதித்யநாத், அரசு நிர்வாகத்திற்கும் குறிப்பாக காவல் துறையினருக்கும் இந்த இளைஞர் அமைப்புகளுக்கும் உள்ள வேறுபாட்டை மழுங்கடிப்பதில்,  மதவெறியர்களின் தாக்குதல்களை நியாயப்படுத்துவதில் முனைந்து செயல்படுகிறார்.

இப்படி தங்களுக்கென தனி படையாக மதவெறியூட்டப்பட்ட ஆட்களை திரட்டி அரசு நிர்வாகத்தை அவர்கள் விரும்பும் வழியில் செல்ல வற்புறுத்துகின்றார் யோகி ஆதித்யநாத். அனுசரித்து வருபவர்களுக்கு ஆதரவும், அனுசரணையும் தந்து, எதிர்ப்பவர்களை சிறையிலடைத்தல், அழித்தல் மற்றும் ஒழித்தல் என்ற ஆயுதங்களால் அரசியலமைப்பு சார்ந்த நிர்வாக பிரிவுகளை தங்களது காவி பயங்கரவாத பணிக்கு நிர்பந்தித்துள்ளனர்.

இவற்றையெல்லாம் பட்டியலிட்டு சுட்டிக்காட்டிய மூத்த ஓய்வு பெற்ற அதிகாரிகளின் நீண்ட கடிதத்திற்கு யோகியிடமிருந்து எந்த பதிலும் இல்லை. ஆனால், அமீத் ஷாவும், மோடியும் உ. பி . மாநிலத்தில் சட்ட ஒழுங்கு நன்றாகவே உள்ளது என்று சாட்சியம் அளிப்பதை பார்க்கிறோம்.

லக்கீம்பூர் கேரி யில் பாஜ க அமைச்சர் மகன் போராடும் விவசாயிகள் மீது ஜீப் ஏற்றி கொன்று காட்டாட்சியின் ஒரு சிகரத்தை சென்ற ஆண்டு தொட்டார், இன்றோ ஆதித்யநாத்தின் அடியாட்கள் முஸ்லீம் கைதிகளை சுட்டுக்கொன்று புதிய சிகரத்தை தொட்டுள்ளனர். வளர்ச்சியும், பரிமாணமும் நம்மை பயமுறுத்துகிறது.

மத வெறியாலும், வீண் பெருமையினாலும் ஈர்க்கப்பட்ட ஒரு கூட்டம் தாங்கள் மனநோயினால் பாதிக்கப்பட்டுள்ளோம் என்ற அறிவின்றி, ரத்த வெறி பிடித்தவர்களாக படு கொலைகளை கண்டு  பூரிப்படைகின்றனர் . இது இந்திய சமூகத்தை பிடித்துள்ள ஒரு பீடை .

விடிவு காலம் வருமா?

Tags: