இஸ்ரேல் – பலஸ்தீனம்.. அடுத்தது என்ன?

ஹமாஸ் அமைப்பினர் முன்னெடுத்த ‘2023 ஒக்ரோபர் தாக்குதல்’ இஸ்ரேல் – பலஸ்தீனம் விவகாரத்தை மேலும் இருட்டான பகுதிக்குள் கொண்டு சென்றிருக்கிறது. இஸ்ரேலுக்குள் அதிரடியாக நுழைந்து ஆயிரத்துக்கும் மேற்பட்ட இஸ்ரேலியர்களைக் கொன்றதுடன், நூற்றைம்பதுக்கும் மேற்பட்டவர்களைக் பிணைக் கைதிகளாகப் பிடித்துச் சென்றனர் ஹமாஸ் அமைப்பினர். இதையொட்டி ஹமாஸுக்கு எதிராகப் போர் தொடங்கிவிட்டதாக இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு அறிவித்தார். இஸ்ரேலின் முப்படைகளும் களத்தில் இறங்கின. முதல் சில நாட்களிலேயே 1,100க்கும் மேற்பட்டவர்கள் பலஸ்தீனத்தில், இஸ்ரேல் இராணுவத் தாக்குதலில் இறந்தனர். இரு தரப்புக்கும் இடையிலான மோதல் பெரும் மனிதப் பேரழிவு நோக்கி நகர்ந்துகொண்டிருக்கும் நிலையில், இந்த மோதல் தொடர்பாக பலஸ்தீன கொள்கை வலையமைப்பின் சிந்தனை அரங்கு (அல்-ஷபாகா – Al-Shabaka) தலைவர் தாரிக் பகோனி(Tareq Baconi)யைத் தொடர்புகொண்டார் ஐசக் சேடினார் (Isaac Chotiner). ‘நியு யார்க்கர்’ (New Yorker) இதழில் வெளியான இந்தப் பேட்டியானது இந்த விவகாரத்தை நெருக்கமாக புரிந்துகொள்ள உதவுகிறது. 

தாக்குதலுக்கு ஹமாஸ் தேர்ந்தெடுத்த நேரம் குறித்து என்ன சொல்கிறீர்கள்?

ஹமாஸுக்கும் இஸ்ரேலுக்கும் இடையில் குறிப்பாகவும், பலஸ்தீனர்களுக்கும் இஸ்ரேலிய அரசுக்கும் இடையில் பரவலாகவும் நாம் இதுவரை புரிந்துகொண்டதில் இந்தத் தாக்குதல் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தியிருக்கிறது, பழைய கண்ணோட்டத்தின்படி பார்த்தால், இந்தத் தாக்குதலுக்குப் பல காரணங்கள் இருக்கின்றன; மேற்குக் கரையில் இஸ்ரேலியர்கள் அதிக வன்முறையைக் காட்டுகிறார்கள், அங்கே யூதக் குடியிருப்புகளை அதிக எண்ணிக்கையில் புதிதாகக் கட்டுகிறார்கள், அதிக நிலப் பகுதிகளைத் தங்களுடைய கட்டுப்பாட்டுப் பகுதியில் சேர்த்துக்கொள்கிறார்கள்; டெம்பிள் மவுண்ட் (Temple Mount), காசா நிலப்பரப்பு ஆகிய பகுதிகளில் பலஸ்தீனர்களைச் சீண்டும் செயல்கள் அதிகரித்துவந்தன, அத்துடன் பலஸ்தீனர்கள் மீதான கட்டுப்பாடுகளும் நிபந்தனைகளும் அதிகரித்துக்கொண்டேவருகின்றன.

கடந்த காலமாக இருந்தால் இவற்றுக்கு எதிர்ப்பு தெரிவிக்க, ஹமாஸ் அமைப்பினர் தங்கள் பகுதியிலிருந்து இஸ்ரேலியர் பகுதிகள் மீது ரொக்கெட் குண்டுகளை ஏவியிருப்பார்கள்; பலஸ்தீனர்களுக்கு ஆதரவாக – அவர்கள் சார்பில் இந்தத் தாக்குதல்களை நடத்துகிறோம் என்று உணர்த்தியிருப்பார்கள், அல்லது காசா நிலப்பரப்பின் இன்றைய நிலையைத் தாங்கள் ஏற்கவில்லை – மாற்ற விரும்புகிறோம் என்று உணர்த்தச் செயல்பட்டிருப்பார்கள்.

இப்போது ஹமாஸ் நடத்தியிருக்கும் தாக்குதலின் அளவும் – தீவிரமும், அதில் அது அடைந்திருக்கும் வெற்றியும் நாம் இப்போது புதிய ‘முன்னுதாரண’த்தை எட்டியிருக்கிறோம் என்று புரிய வைக்கிறது; காசா நிலப்பகுதியில் பலஸ்தீனர்கள் மீதான கட்டுப்பாடுகளைத் தளர்த்துவது குறித்தே மீண்டும் மீண்டும் பேசிக்கொண்டிருக்க மாட்டோம் என்பதை ஹமாஸ் முதல்முறையாக உணர்த்தியிருக்கிறது; இப்படியே தொடர்ந்து ‘இன ஒதுக்கல்’ கொள்கை மூலம் பலஸ்தீனர்களை முடிவில்லாமல் விலக்கி வைத்துவிடலாம், இஸ்ரேலியர்களின் மக்களுக்கு எந்தவித பாதிப்பும் வராமல் பார்த்துக்கொண்டுவிடலாம் என்ற இஸ்ரேலின் மனக்கணக்கு தவறானது என்று புரிய வைத்திருக்கிறது.

இஸ்ரேல் மீது ஹமாஸ் ஏன் தாக்குதல் நடத்தியது என்பதற்கான காரணங்கள் தெளிவானது. கடந்த சில ஆண்டுகளில் இப்போதுதான் இஸ்ரேல் மிகவும் பலவீனமாக இருக்கிறது, இஸ்ரேலியர்களுடைய ஆதிக்கத்தை வலுப்படுத்தும் யூத மேலாதிக்க திட்டம் உருவாக்கிய இஸ்ரேலிய அரசியலும், சமூகமும் பெரிய பிளவுகளையும் கண்டுவருகிறது. இராணுவப் பயிற்சி பெற்ற பலரும், அரசின் அழைப்பையேற்று பணிக்கு வர மறுக்கின்றனர், ‘இஸ்ரேலிய வரலாற்றிலேயே பாசிஸம் தலைக்கேறிய அரசு’ என்று இதை இஸ்ரேலியர்களிலேயே கணிசமானவர்கள் நினைக்கின்றனர். 

உலக அளவிலும் பல நாடுகள், நாம் நம்பியதைப் போல இது யூத ஜனநாயக நாடு அல்ல, பெரும் துயரத்தை ஏற்படுத்தும் விதத்திலான ஜனநாயகமற்ற அரசு என்று உணர்ந்துள்ளன. 

ஹமாஸ் அமைப்பு இப்படி ஒரே இரவில் பலரைக் கொன்றதையும் பிணைக் கைதிகளாகப் பிடித்ததையும் பிற செயல்களையும் ‘புதிய முன்னுதாரணம்’ என்கிறீர்களா?

புதிய முன்னுதாரணத்தை உருவாக்குவதில் ஹமாஸ் ஈடுபடுவதாகக் கருதவில்லை. ஆனால், மேற்கத்திய நாடுகளின் கொள்கை வகுப்பாளர்களும், சர்வதேச சமூகமும் இங்கு நிலவும் உண்மை நிலையைப் பற்றிய புரிதலை மாற்றிக்கொண்டு வருகின்றனர்.  கடந்த சில ஆண்டுகளாக இந்த மாறுதல்கள் நிகழ்ந்துவருகின்றன. இந்த அரசு இனவெறி பிடித்த அரசு என்பதைப் பலஸ்தீனர்கள் இடையிலும் இஸ்ரேலியர்கள் இடையிலும் உள்ள மனித உரிமைக் காவலர்களும் உலக அளவிலான மனித உரிமை ஆதரவாளர்களும் ஒப்புக்கொள்கின்றனர்.

2021இல் பலஸ்தீனத்தின் அனைத்துப் பகுதிகளிலுமே அரசுக்கு எதிரான போராட்டங்களிலும் ஆர்ப்பாட்டங்களிலும் பெரும் எண்ணிக்கையில் பலஸ்தீன மக்கள் தன்னெழுச்சி உணர்வுடன் பங்கேற்றனர். இஸ்ரேலின் உள் பகுதியும் – அது கைப்பற்றிய பகுதிகளும் வேறு என்ற தோற்றத்தை உருவாக்க முயன்றதை இப்படித் திரண்டு முறியடித்தனர். பலஸ்தீனர்களைப் பிளவுபடுத்தும் இந்த ஒஸ்லோ பிரிவினை முயற்சியை ஏற்பது, பலஸ்தீனர்களை அடக்கி ஒடுக்கும் ஒற்றை யூத அரசுக்கு எதிரான போராட்டம் என்ற உண்மையைவிட்டு விலகுவதாகிவிடும்.

இந்தத் தாக்குதல் மூலம் ஹமாஸ் சாதித்தது என்ன? எதை நினைத்து ஹமாஸ் இந்தத் தாக்குதலை நடத்தியிருக்கக்கூடும் என்று எனக்குத் தெரியவில்லை. ஆனால், இஸ்ரேல் இனியும் தன்னை யூத ஜனநாயக அரசாகக் காட்டிக்கொண்டு பலஸ்தீனர்களை முடிவில்லாமல் ஒடுக்கிக்கொண்டே இருக்க முடியாது என்பது மட்டும் புரிகிறது.

Tareq Baconi

பழைய முன்னுதாரணத்தை மாற்ற ஹமாஸ் விரும்பினால், எதற்காக இவ்வளவு பெரிய தாக்குதலை இந்த அளவுக்குத் தீவிரமாக நடத்தியிருக்க வேண்டும் என்ற என் கேள்விக்கு பதில் என்ன?

இஸ்ரேல் என்பது இன ஒதுக்கல் கொள்கையைக் கடைப்பிடிக்கும் காலனிய அரசு என்ற புரிதலை ஏற்படுத்தும் முன்னுதாரணத்தோடுதான் ஹமாஸ் செயல்பட்டுக் கொண்டிருந்தது. இஸ்ரேலை எந்த நேரத்திலும் தோற்கடிக்க முடியாது, காலம் தோறும் அதன் அடக்குமுறை ஆட்சியே தொடரும் என்ற மாயத் தோற்றத்தை ஹமாஸ் சேதப்படுத்தியிருக்கிறது. இஸ்ரேலும் தோற்கக்கூடியதுதான், அதன் உளவு அமைப்புகளாலேயே கண்டுபிடிக்க முடியாதபடிக்கு எதிர்பாராத தாக்குதல்களும் நிகழ்த்தக் கூடியவைதான் என்பதை உணர்த்தியிருக்கிறது.

பலஸ்தீனர்களை இப்படியே அடக்கி வைத்துக் கொண்டிருக்கலாம் என்று இஸ்ரேலிய கொள்கை வகுப்பாளர்கள் நினைப்பது நடக்காது, எதிர்விளைவுகள் பயங்கரமாக இருக்கும் என்பதும் புரிய வைக்கப்பட்டிருக்கிறது. இதை பயங்கரவாதச் செயல் என்றோ, எந்தவித சீண்டலும் இல்லாமல் நிகழ்த்தப்பட்ட தாக்குதல் என்றோ உலகத்தால் இதை இனியும் கருத முடியாது. ஆனால், ‘நியூயார்க் டைம்ஸ்’ தலையங்கம் அப்படித்தான் சொல்கிறது. (எந்தவித எச்சரிக்கையும் தூண்டுதலும் இல்லாமல் இந்தத் தாக்குதல் நிகழ்த்தப்பட்டிருக்கிறது என்று தலையங்கம் கூறுகிறது.)

2007 முதல் ஹமாஸை, காசா நிலப்பகுதியில் இஸ்ரேலிய இராணுவம் வலுவாக அடக்கி வைத்துள்ளது. காசா நிலப்பரப்பில் இருபது இலட்சத்துக்கும் மேற்பட்ட பலஸ்தீன மக்களை இப்படியே அடக்கி ஒடுக்கி ஆண்டுவிட முடியும், ஹமாஸ் அமைப்பு இப்படியே இருக்கும் என்று இஸ்ரேல் நம்பியது. இதற்கும் முன்னால் இருதரப்பும் மிகுந்த வன்மத்துடன் மோதியிருந்தாலும், காசா நிலப்பரப்பில் ஹமாஸ் கட்டுப்படுத்தப்பட்டது, பிற பகுதிகளிலிருந்து அது தனிமையாக துண்டித்தும் விடப்பட்டது.

மேற்குக் கரையைத் தொடர்ந்து தன்னுடைய கட்டுப்பாட்டிலேயே வைத்துக்கொண்டு இருபது இலட்சம் மக்களை அடக்கியாள்வதன் மூலம் காலப்போக்கில் இந்தப் பகுதியில் யூதர்களையே பெரும்பான்மையினராக்கிவிடலாம் என்று இஸ்ரேலிய அரசு திட்டமிட்டுச் செயல்படுகிறது. இந்தத் தாக்குதல் மூலம், தான் அடக்கப்பட்டுவிட்டதாக இஸ்ரேல் கருதுவது எந்த அளவுக்குத் தவறு என்பதை உணர்த்தியிருக்கிறது ஹமாஸ். இந்தத் தருணத்துக்காகத்தான் அது காத்துக் கொண்டிருந்தது. ஹமாஸ் தனது படையை வலுப்படுத்திக் கொண்டிருக்கிறது, இஸ்லாமிய சித்தாந்த அடிப்படையில் பலஸ்தீனர்களுக்கு அரசியல் தீர்வை காணும் முயற்சியை அது தொடர்ந்து மேற்கொள்கிறது என்பது அனைவருமே அறிந்ததுதான்.

மனித உரிமைகளை அப்பட்டமாக மீறும் காலனிய அரசாக இஸ்ரேல் தனது செயல்பாடுகளை அதிகப்படுத்திவருகிறது என்கிறீர்கள்; ஆனால் ஹமாஸின் தாக்குதல் அப்படிப் புரிந்துகொள்வதற்குப் பதிலாக, இஸ்ரேலுக்கல்லவா ஆதரவைப் பெருக்கித் தந்திருக்கிறது? அமெரிக்காவும் ஐரோப்பிய ஒன்றியமும் இதர நாடுகளும் இஸ்ரேலையல்லவா அரவணைக்கின்றன?  காசா நிலப்பரப்பில் நீங்கள் விரும்பியதைச் செய்யுங்கள் என்றல்லவா அவற்றின் ஆதரவு தெரிவிக்கிறது? இஸ்ரேலைப் புரிந்துகொள்வதில் ஏற்படுத்திய முன்னேற்றத்தை அப்படியே திசை திருப்பும் வகையில் அல்லவா இது இருக்கிறது?

உண்மைதான், சில வகைகளில் அப்படி நடக்கவும் வாய்ப்பிருக்கிறது, உங்கள் கருத்தை ஏற்கிறேன்; இப்போது நடைபெறும் விவாதங்கள் இப்படியொரு தாக்குதலுக்குக் காரணங்கள் எவை என்று புரிந்துகொள்வதில் சில மயக்கங்களை ஏற்படுத்தக்கூடும். இப்போது அனைவருடைய கவனமும் இந்த மோதலை நிறுத்துவதும், மக்களுடைய மரணத்தைத் தடுப்பதுமாகத்தான் இருக்கும்.

ஹமாஸ் அமைப்பை முற்றிலுமாக அழித்துவிட்டாலும் பலஸ்தீனர்களின் நியாயமான கோரிக்கைகளுக்காகப் பரிந்து பேச-போராட இன்னொரு அமைப்பும், இன்னொரு சித்தாந்தமும் தோன்றுவது இயற்கை. இஸ்ரேலின் இன ஒதுக்கல் அரசை ஆதரிக்கும் மேற்கத்திய நாடுகளும் அமெரிக்காவும், இது இப்படியே தொடர்வதால் தங்களுக்கு இழப்பு ஏதுமில்லை என்று கருதுவதுதான் எனக்கு அச்சத்தை ஊட்டுகிறது.

ஆழ்ந்து சிந்தித்துத்தான் ஹமாஸ் இந்தத் தாக்குதலை நடத்தியது என்று கருதினாலும் அதன் இலக்குக்கும், அது கையாண்ட வழிமுறைக்கும் பொருத்தப்பாடே இல்லையே?

உங்கள் கருத்து சரிதான், இப்போது நிலைமை தெளிவாக இல்லை. இது நம்மை எங்கே இட்டுச் செல்லும் என்று எவராலும் சொல்ல முடியாது. தன்னால் எந்த அளவுக்குச் சேதத்தை ஏற்படுத்த முடியும் என்பதை அறிந்து ஹமாஸே வியப்படைந்திருக்கும் என்றே கருதுகிறேன். காசா நிலப்பகுதி முழுவதிலுமே தனது ஆதிக்கத்தை இஸ்ரேல் வலுப்படுத்திவிட முடியும், ஹமாஸ் என்ற இயக்கமே இத்துடன் முடங்கிவிடலாம்; ஆனால் முதல் 72 மணி நேரத்தில் நடந்த சம்பவங்கள், இஸ்ரேலை எவராலும் தீண்ட முடியாது என்ற நம்பிக்கையெல்லாம் வெறும் மாயைதான் என்பதை உணர்த்திவிட்டது.

மேற்கத்திய நாடுகளின் முழு ஆதரவுடன் தனது இராணுவ பலம் முழுவதையும் திரட்டி காசா நிலப்பரப்பில் எதிரிகளே இல்லாமல் இஸ்ரேல் நிர்மூலம் செய்துவிடலாம், பலஸ்தீனர்களை மேலும் கொடுமையாக ஒடுக்கவும் செய்யலாம் ஆனால் பலஸ்தீன மக்களின் அரசியல் சிந்தனையில் இந்தத் தாக்குதல் அழிக்க முடியாத நினைவைப் பதிவு செய்துவிடும். இதைத்தான் ‘புதிய யதார்த்தம்’ என்று கருதுகிறேன்.

ஹமாஸுக்கும் பலஸ்தீன (நிர்வாக) ஆணையத்துக்கும் (Palestinian Authority) இடையிலான உறவுக்கும் – இந்தத் தாக்குதலுக்கும் தொடர்பு இருக்கும் என்று கருதுகிறீர்களா?

நிறுவனரீதியாகவும் அரசியல்ரீதியாகவும் பலஸ்தீன ஆணையத்துக்கும் (பி.ஏ) ஹமாஸுக்கும் இடையில் வெளிப்படையான பிளவு இருந்தது. இது இன்று நேற்றல்ல, பல பதின் ஆண்டுகளாகத் தொடர்வது. காசா நிலப்பரப்பில் ஹமாஸ் கடந்த 16 ஆண்டுகளாகச் செயல்பட்டுக்கொண்டிருக்கிறது. சில வழிகளில் அது நன்கு செயல்பட்டது. ஆனால் அதன் போக்கில் ஈரெட்டான அணுகுமுறை இருந்தது.

அது காசா நிலப்பரப்பை நிர்வகிக்கும் அமைப்பாக இருப்பதைவிட, இஸ்ரேல் இராணுவத்தை எதிர்த்துப் போரிடும் ஆயுதமேந்திய இயக்கமாகவே இருக்க விரும்பியது. பலஸ்தீனர்களுக்காகப் பரிந்து பேசுவதை காசா நிலப்பரப்பில் மட்டுமல்ல, பாலஸ்தீனத்தின் இதர பகுதிகளிலும், புலம்பெயர்ந்த பலஸ்தீனர்கள் இடையிலும், அகதிகளாகிவிட்ட சமூகத்தவர் இடையிலும் அது தொடர்ந்து மேற்கொள்கிறது.

‘பலஸ்தீன (நிர்வாக) ஆணையம்’ என்பது செல்வாக்கிழந்துவிட்டது. அதை, இஸ்ரேலிய இன ஒதுக்கல் அரசின் அங்கமாகவும் கைப்பாவையாகவும்தான் பலஸ்தீனர்கள் பார்க்கின்றனர். பலஸ்தீன ஆணையத்துக்கு எதிரான அமைப்பாகவே ஹமாஸ் தன்னை எப்போதும் காட்டிக்கொண்டது. இஸ்ரேல் இராணுவத்துடன் பாதுகாப்பு ஏற்பாடுகளில் ஒருங்கிணைந்து செயல்படுவதை ஹமாஸ் ஏற்றுக்கொண்டதே இல்லை.

பலஸ்தீனர்களுக்கு எதிராக இஸ்ரேல் வன்முறையைப் பயன்படுத்தியபோதெல்லாம் ஹமாஸ் அமைப்புதான் வலிமையாக அதை எதிர்த்துச் செயல்பட்டது; பலஸ்தீனர்கள் தன்னுடைய சித்தாந்தத்தை ஏற்கிறார்களா, வழிமுறைகளை அங்கீகரிக்கிறார்களா என்றெல்லாம் அது கவலைப்பட்டதே இல்லை. இஸ்ரேலின் அடக்குமுறைக்கு அடங்க மறுக்கும் அரசியல் அமைப்பாகவும் இராணுவ அமைப்பாகவும் அது மட்டுமே களத்தில் இருக்கிறது. இந்தத் தாக்குதலானது பலஸ்தீன நிர்வாக ஆணையம் என்பது எவ்வளவு பொருத்தமில்லாத அமைப்பு என்பதையும் வெளிப்படுத்திவிட்டது.

Isaac Chotiner

இது பலஸ்தீன அமைப்புகளுக்குள்ளான போட்டியால் நிகழ்ந்த தாக்குதல் என்று ஏன் பார்க்க மறுக்கிறீர்கள், இஸ்ரேலுடன் சமாதான ஒப்பந்தம் செய்துகொள்ளாதீர்கள் என்று அரபு நாடுகளை எச்சரிப்பதற்காக திட்டமிட்டு நிகழ்த்தப்பட்ட தாக்குதல் என்று ஏன் நம்ப மறுக்கிறீர்கள்?

இந்தத் தாக்குதலுக்குப் பின்னால் அந்த அம்சங்கள் இருப்பதாக நான் கருதவில்லை. ஆனால் ஓரிரு மாதங்களுக்குள் முடிவெடுத்து செய்த செயல்களாக இவை இல்லை. எப்படி அடக்கி ஒடுக்கினாலும் நம்மை யாரும் தட்டிக்கேட்க மாட்டார்கள் என்ற இஸ்ரேலின் எண்ணத்தைத் தவிடுபொடியாக்கவே ஹமாஸ் இதைச் செய்திருப்பதாகக் கருதுகிறேன்.

ஹமாஸ் தொடர்பாக இஸ்ரேலிய அரசின் கொள்கை என்னவாக இருந்தது? இஸ்ரேலிய ஊடகங்கள் சொல்லும் தகவல் வித்தியாசமாக இருக்கிறது; ஹமாஸை வலுப்படுத்தினால் பலஸ்தீன (நிர்வாக) ஆணையத்தை செல்வாக்கில்லாமல் செய்துவிடலாம், பிறகு பலஸ்தீனர்களுக்கென்று தனி நாடு அல்லது அரசு கேட்கும் கோரிக்கைகள் வலிமையிழந்துவிடும் என்று இஸ்ரேல் பிரதமர் நேதன்யாகு கூறியதாக அவை சொல்கின்றன; காசா நிலப்பகுதியில் அது எப்படி பெரிதானது?

பலஸ்தீனத்தைப் பொருத்தவரை இஸ்ரேலிய அரசின் சித்தாந்தம் அல்லது கொள்கை அல்லது நிலை என்பதெல்லாம் மதச்சார்பற்ற பலஸ்தீன தேசியவாதம் செல்வாக்கு பெற்றுவிடாமலிருக்க, மதம் சார்ந்த அமைப்புகளை ஊக்குவிப்பதுதான். அந்த வகையில்தான் பலஸ்தீன ஆணையத்துக்கு அது ஆதரவு தந்தது. பலஸ்தீனர்களைப் பிரித்தாளும் இத்தகைய சூழ்ச்சிகளைத்தான் இஸ்ரேல் தொடர்ந்து மேற்கொண்டுவருகிறது. ஹமாஸைப் பொருத்தவரையும் இப்படித்தான் நடந்தது. 2006 இல் அது அலுவலகத்தைத் திறந்தபோது, பலஸ்தீனப் பகுதிக்கு யாரும் எளிதில் போய் திரும்ப முடியாதபடிக்கு கடுமையான கட்டுதிட்டங்களை இஸ்ரேல் அமுல்படுத்தியது.

எதிர்பார்த்தபடியே ஹமாஸ் இதைக் கடுமையாக எதிர்த்தது. காசா நிலப்பகுதியில் தன்னுடைய அதிகாரத்தையும் ஆணைகளையும் நியாயப்படுத்த, ஹமாஸ் இயக்கம் அதற்கு எதிர் முகாமிலிருந்தது உதவியது. ஏன் இப்படி மனிதாபிமானமற்றத் தடைகளை ஏற்படுத்துகிறீர்கள் என்று யாருமே இஸ்ரேல் அரசைக் கேட்க முடியவில்லை. இவ்வாறு இஸ்ரேல் அரசுக்கு எதிரான நிலையை ஹமாஸ் எடுத்தாலும் அங்கே அரசியல் சமபல நிலைக்கு அது மறைமுகமான கூட்டாளிபோல செயல்பட்டது. அது, ‘வன்முறையால் நிரம்பிய சமன்பாடு’. ஆனால் இரண்டுமே பிறகு எதிராளியின் நிலையை மறைமுகமாக அங்கீகரித்தன.

உள்நாட்டுப் பிரச்சினையில் மக்களுடைய கவனத்தைத் திசை திருப்பியாக வேண்டிய நிலை இஸ்ரேலிய அரசுக்கு ஏற்படும்போதெல்லாம், பலஸ்தீனப் பகுதியில் தனது போட்டியாளர்களைவிட, அதிக செல்வாக்கை ஹமாஸ் பெற வேண்டிய நேரங்களில் எல்லாம் இரண்டு தரப்பும் ஆங்காங்கே சிறு சிறு மோதல்களில் ஈடுபடும். பிறகு இரண்டுமே மோதல்களை நிறுத்தியும் விடும். இஸ்ரேலின் கண்ணோட்டத்தில் இப்படி நடந்துகொள்வதில் உத்தி ஏதுமில்லை.

பலஸ்தீன நிலப்பரப்பைத் தொடர்ந்து ஆக்கிரமிக்க வேண்டும், அதையதை அதனதன் இடங்களிலேயே பராமரிக்க வேண்டும் என்பது மட்டுமே இஸ்ரேலிய அரசின் கொள்கை. ஹமாஸுடனோ அதன் அரசியல் தலைவர்களுடனோ பேச வேண்டிய அவசியமே இஸ்ரேல் அரசுக்கு ஏற்பட்டதில்லை. காசா நிலப்பரப்பில் தனது செல்வாக்கை நிலைநாட்டிவிட்டதால், ஹமாஸின் நடவடிக்கைகள் குறித்து அது அதிகம் அலட்டிக்கொண்டதும் கிடையாது.

இஸ்ரேலிய அரசுக்கு இணக்கமாகச் செயல்பட்டதால் பலஸ்தீன ஆணையம் மக்களிடையே செல்வாக்கிழந்ததா? நீங்கள் சொல்வதைப் பார்த்தால் ஹமாஸுடன் இஸ்ரேலுக்கு மறைமுகமான உறவு இருந்ததைப்போலத் தெரிகிறதே?

பலஸ்தீனர்களையே கொண்ட ஆணையம் இருந்தபோதிலும், காசா நிலப்பரப்பில் ஹமாஸின் குரலையும் கேட்க வேண்டும் என்ற அங்கீகாரத்தை இஸ்ரேலிய அரசுதான் அளித்தது. காசா நிலப்பரப்பில் பாதுகாப்பு ஒருங்கிணைப்பு உங்களுடைய வேலையல்ல என்று பலஸ்தீன ஆணையத்தைக் கண்டித்த இஸ்ரேலிய அரசு, அந்த உரிமையை ஹமாஸ் அமைப்புக்கு மறைமுகமாக வழங்கியது. ஹமாஸ் சில சமயம் இஸ்ரேலிய அரசுடன் பேசும், ரொக்கெட்டுகளை இஸ்ரேலுக்குள் செலுத்துவதை நிறுத்திவிடும், தனது அமைப்பினரை தாக்குதல் முனையிலிருந்து தளத்துக்குத் திரும்ப அழைத்துக்கொள்ளும். இது இன்னொரு வகையில், விடுதலை அமைப்பாகச் செயல்பட முடியாமல் ஹமாஸின் வீரியத்தையும் அவ்வப்போது குறைத்தது.

ஹமாஸுக்கும் பலஸ்தீன ஆணையத்துக்கும் உள்ள வேறுபாடு என்னவென்றால், ஹமாஸ் தன்னுடைய சித்தாந்தத்தை எப்போதும் கைவிட்டதே இல்லை. ‘பலஸ்தீனர்கள் அனைவருமே தங்கள் பகுதிக்குத் திரும்ப உரிமை படைத்தவர்கள், எங்கள் நிலத்தை ஆக்கிரமித்த யூதர்களுடைய இஸ்ரேலிய அரசை எங்களால் அங்கீகரிக்க முடியாது, இந்த அரசுக்கு எதிராக ஆயுதமேந்தி போராடும் எங்கள் உரிமையை விட்டுத்தர முடியாது’ என்பதே ஹமாஸின் நிலை. பலஸ்தீன விடுதலை இயக்கம் (பிஎல்ஓ) தான் பலஸ்தீன ஆணையமாக இருக்கிறது. அது தன்னுடைய பலஸ்தீன தேசியம் தொடர்பான பல கோரிக்கைகளை விட்டுக்கொடுத்துவிட்டு, தனி நாடு பெற முடியும் என்ற நம்பிக்கையில் இஸ்ரேலிய அரசுடன் சமரசம் செய்துகொண்டுவிட்டது.

இஸ்ரேலிய அரசு தனது இறையாண்மை அதிகாரத்துக்கு உள்பட்டும் – அதை மீறியும் இவ்விரு அமைப்புகளுடன் பேசியும் செயல்பட்டும் வருகிறது. ஹமாஸ் இயக்கத்துடன் தொடர்பு வைத்திருப்பதைப்போலவே, ஹிஸ்புல்லா அமைப்புடனும் அது உறவு வைத்திருக்கிறது. சில வேளைகளில் இந்த உறவு இஸ்ரேல் அரசுக்குச் சாதகமாகவும் இருக்கிறது.

பலஸ்தீன ஆணையத்துடன் இஸ்ரேல் அரசு எப்படிச் செயல்படுகிறது?

அவர்களுக்குள் மோதல் ஏற்படுவதாக நான் கருதவில்லை. இஸ்ரேலிய இளையாண்மைக்கு உள்பட்டுச் செயல்படுகிறது பலஸ்தீன ஆணையம். பாதுகாப்பு ஒருங்கிணைப்பாளராக, இஸ்ரேலிய அரசின் அங்கமாகவே அது மாறிவிட்டது.

ஹமாஸ் இயக்கத்தில்கூட இஸ்ரேலிய அரசின் உளவாளிகள் இருந்ததாகக் கேள்விப்பட்டிருக்கிறேன், அது இப்போதும் தொடரும் என்றே கருதுகிறேன், அப்படியிருந்தும் இந்தத் தாக்குதல் முயற்சி எப்படி அரசுக்குத் தெரியாமல் போனது?

ஹமாஸ் அமைப்பைச் சேர்ந்தவர்களும் அதைப்பற்றிப் பேசுகிறவர்களும் இதே கேள்வியைத்தான் கேட்கிறார்கள்; ஹமாஸின் இராணுவ அமைப்பிலேயே மிகச் சிலருக்குத்தான் இந்த திட்டம் தெரியும். ஹமாஸ் இயக்கத்தின் அரசியல் பிரிவும் இராணுவப் பிரிவும் தனித்தனியாகச் செயல்படுபவை. அரசியல் பிரிவு வியூகத்தை வகுக்கும். அதை எப்படிச் செயல்படுத்தப் போகிறார்கள் என்பதை இராணுவப் பிரிவினர் தெரிவிக்க மாட்டார்கள்.

அரசியல் குழுவுமே முழுத் தகவலுடனோ திட்டத்துடனோ அதைத் தெரிவிக்காது. கடந்த ஆறு மாதங்களாகவே இஸ்ரேலிய அரசுக்குள் ஒற்றுமையின்மையும் வலிமையின்மையும் வெளித்தெரியத் தொடங்கிவிட்டன. தாக்குதல் குறித்து ஊகிக்கப்பட்டாலும் அது எப்போது, எங்கிருந்து, எப்படி வரும் என்பதில் துல்லியமான தகவல்கள் கிடைக்கவில்லை.

காலனியாதிக்கத்துக்கு எதிராகப் போராடிய புரட்சியாளர்கள், தங்களுடைய நோக்கங்களை நிறைவேற்றிக்கொள்ள வன்முறையையும் கையாண்டார்கள் – ஆப்பிரிக்க தேசிய காங்கிரஸின் நெல்சன் மண்டேலை நினைவுக்கு வருகிறார்; பலஸ்தீனர்கள் பிராணிகளைப் போல அவர்களை அப்படித்தான் நடத்த வேண்டும் என்று இஸ்ரேலியர்கள் கூறுவதாகவும் கேள்விப்பட்டிருக்கிறேன். இஸ்ரேலிய நகரங்களில் குழந்தைகள் இறந்து கிடந்த செய்திகளைப் பார்த்தபோது இதைக் குரூரமான குணம் என்றே கருதுகிறேன். விடுதலைக்கான பெரிய போராட்டம் என்றாலும் இப்படிப்பட்ட வழிமுறைகளை எப்படி ஆதரிப்பது, நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?

இது முக்கியமான கேள்வி. அன்றாடம் நானும் இதைக் கேட்டுக்கொள்கிறேன். காலனியாதிக்கத்துக்கு எதிரான எந்தப் போராட்டத்திலும் வன்செயல்கள் இல்லாமலில்லை. இதற்கு மூல வினை எது என்று பார்த்தால் அது காலனியாதிக்கத்தின் வன்முறைதான். ஹமாஸ் இயக்கம் திடீரென்று வன்முறையைக் கையாண்டுவிடவில்லை. சாடிஸம் என்ற குரூர மனப்பான்மையைப் பற்றிக் குறிப்பிட்டீர்கள், பலஸ்தீனர்கள் அன்றாடம் அதை எதிர்கொள்கிறார்கள்.

முதல் முறையாக ‘நியு யார்க்கர்’ என்னைப் பேட்டி காண்கிறது, காரணம், இறந்தது இஸ்ரேலியர்கள்! கடந்த பதினைந்தாண்டுகளில் நான் செய்தியாளராக இருந்தபோது ஆயிரக்கணக்கில் பலஸ்தீனர்களை இஸ்ரேலியர்கள் கொன்றனரே அப்போது யாருமே இந்தக் கேள்விகளைக் கேட்கவில்லையே? இரு தரப்பிலும் இறந்தவர்கள், காயம் அடைந்தவர்கள் புகைப்படங்களைக் காணும்போது எல்லையில்லாத் துயரம் ஏற்படுகிறது; காலனியாதிக்கவாதிகளின் வன்முறை மனித உணர்வையே எல்லாத் தரப்பிலிருந்தும் துடைத்தெறிந்து விடுகிறது, அடக்குவோரின் மனதிலிருந்தும் – அடக்கப்படுவோரின் மனதிலிருந்தும்!

மக்களை இன அடிப்படையில் பிரித்துப் பார்த்து ஒடுக்கும் இந்த அரசுக்கு எதிராக இஸ்ரேலியர்களில் பலர் ஜனநாயக உரிமைகளுக்காகப் போராடுவது பார்த்து எனக்கு வியப்பாக இருக்கும். தங்களுடைய ஜனநாயக உரிமைகளுக்காகப் போராடும் இஸ்ரேலியர்கள், பலஸ்தீனர்களுக்கும் வாழ உரிமையுண்டு, அவர்களும் மனிதர்கள்தான் என்று ஏன் சிந்திப்பதே இல்லை? மனதை உருக்கும் இந்த வன்முறை ஏன் என்பதை, இந்தப் பின்னணியில்தான் நாம் புரிந்துகொள்ள வேண்டும்.

ஹமாஸ் அமைப்பானது எல்லா பலஸ்தீனர்களுக்கு ஆதரவாகவும் குரல் கொடுத்துவிடவில்லை. இஸ்லாமியர் அல்லாதவர்களும் பலஸ்தீனத்தில் உண்டு. காலனியாதிக்கத்துக்கு எதிராக 1970களிலும் 1980களிலும் செயல்பட்ட பாலஸ்தீன விடுதலை இயக்கத்தையும் (பி.எல்.ஓ) மேற்கத்திய நாடுகள் பயங்கரவாத அமைப்பாகத்தான் கருதி அடையாளம் இல்லாமல் நசுக்கின. காலனியாதிக்கத்துக்கு எதிராகத் திரண்டவர்களை ஒடுக்கிய அரசின் திட்டம் அது; தாற்காலிகமாகத்தான் அது வென்றது. பலஸ்தீன விடுதலை இயக்கம் மறைந்து, அந்த இடத்தை நிரப்ப இப்போது ஹமாஸ் இருக்கிறது.

காலனியாதிக்க அரசுகள்தான் வன்முறைகளுக்குக் காரணம் என்று நீங்கள் சொல்வது பேரளவில் உண்மையாக இருக்கலாம்; எல்லாவித சூழ்நிலைகளிலும் மக்களும் வன்முறையில் ஈடுபடுகின்றனர். காலனியாதிக்கத்தையே எதிர்கொள்ளாத இஸ்ரேலியர்களும் வன்முறையில் ஈடுபடுகின்றனர். யூதர்களை – யூதர்கள் என்பதற்காகவே இஸ்லாமியர்கள் கொல்கின்றனர். இவ்வாறு சில வன்செயல்கள் காலனியாதிக்கத்தால் விளைந்தன என்றும் கூற முடியாமல் இருப்பதை வரலாறு கூறுகிறதே?

மனிதர்களின் மரணத்தையும் அவர்களுக்கு ஏற்படும் இழப்புகளையும் இஸ்ரேலிய அரசியல் தலைவர்களும் பலஸ்தீனர்களும் நினைத்துப் பார்க்க வேண்டும்; மனிதாபிமானமற்ற கொலைகளுக்காக வருத்தப்படும் அதே வேளையில், தங்கள் தரப்பு செய்யும் நியாயமற்ற செயல்களையும் எதிர்தரப்பினர் சிந்திக்க வேண்டும். இரண்டு தரப்புகளுமே இப்படிப் படுகொலைகளில் ஈடுபடாமல் தவிர்க்க முடியும்.

எல்லா வன்செயல்களுமே அரசியல் காரணங்களால் மட்டும் விளைபவை அல்ல. இன ஒதுக்கல் கொள்கையை முடிவுக்குக் கொண்டுவருவதிலும் நாம் தார்மிகக் கோட்பாடுகளையே கடைப்பிடிக்க வேண்டும். ஊடகங்கள் இதை நடுநிலையோடு பார்க்காமல் ஒரு சார்பாக பார்க்கும்போது, இது சிக்கலாகிவிடுகிறது, இந்தச் சிக்கலிலிருந்தும் நாம் விடுபட வேண்டும்.

மூலம்: Where the Palestinian Political Project Goes from Here

தமிழில்: வ.ரங்காசாரி

Tags: