வெளியுறவுக் கொள்கையில் தடுமாறும், தடம் மாறும் இந்திய அரசு!

ராஜன் குறை

ருபது இலட்சம் பலஸ்தீனியர்கள் நெருக்கியடித்து வாழும் திறந்தவெளி சிறையான காஸாவிற்குள் இராணுவத்தை அனுப்பியும், குண்டுகளை வீசியும் இஸ்ரேல் நடத்திவரும் தாக்குதல் உலகை உறைய வைத்துள்ளது. காஸா பகுதியை ஆண்டுவந்த ஹமாஸ் அமைப்பு இஸ்ரேல் மேல் “தீவிரவாத” தாக்குதல் நட த்தியது என்ற காரணத்தைச் சொல்லி காஸாவிலுள்ள பலஸ்தீனிய பொதுமக்களைக் கொன்று குவித்து வருகிறது இஸ்ரேல்.

நாங்கள் ஹமாஸ் இயக்கத்தை வேரறுக்க விரும்புகிறோம்; அவர்கள் பொதுமக்களை கேடயமாகப் பயன்படுத்துகிறார்கள் என்ற பழைய இனப்படுகொலை ஏகாதிபத்திய பல்லவியை மீண்டும் பாடுகிறது இஸ்ரேல். காஸாவின் வடபகுதியிலுள்ள மக்களையெல்லாம் தென்பகுதிக்கு புலம் பெயர்ந்து செல்லுமாறு எச்சரிக்கை விடுத்தது இஸ்ரேல். இது மிகப்பெரிய அவல நிலையை தெற்கு காஸாவில் உருவாக்கியுள்ளது. ஏற்கனவே மக்கள் அடர்த்தியாக வாழும் பகுதிக்கு இலட்சக்கணக்கான மக்கள் புலம்பெயர்ந்து வந்தால் என்னவாகும்? இது போன்ற ஓர் இரக்கமற்ற கட்டளையை இஸ்ரேல் விதிப்பது நியாயமா என்று மனசாட்சி உள்ள உலக குடிமக்கள் கேட்கின்றனர்.

இந்த நிலையில்தான் ஐக்கிய நாடுகள் சபை முக்கியமான தீர்மானம் ஒன்றை நிறைவேற்றியுள்ளது. போரில் ஈடுபடாத அப்பாவி பொதுமக்களைக் கொல்வதை, ஆபத்துக்குள்ளாக்குவதை உடனடியாக நிறுத்த வேண்டும், பேச்சுவார்த்தை மூலம் அரசியல் பிரச்சினைக்குத் தீர்வு காண வேண்டும் என்று கோரி, போர் நிறுத்தம் செய்ய வலியுறுத்தும் தீர்மானம் அது. நூற்று இருபது நாடுகள் ஆதரவு அளித்ததால், மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மை அடிப்படையில் அந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இது உலக சமூகத்துக்கு, மானுட நாகரிகத்துக்குக் கிடைத்துள்ள வெற்றி எனலாம். சீனா, ரஷ்யா ஆகிய முக்கிய நாடுகளுடன் ஃபிரான்ஸும் ஆதரித்து வாக்களித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இஸ்ரேலும், அமெரிக்காவும் மேலும் பன்னிரண்டு சிறிய நாடுகளும் தீர்மானத்திற்கு எதிராக வாக்களித்துள்ளன. அமெரிக்காவின் வெட்கமற்ற, அறமற்ற இஸ்ரேல் ஆதரவுப் போக்கே இஸ்ரேல்-பலஸ்தீனியப் பிரச்சினை பல பத்தாண்டுகளாக அரசியல் தீர்வு உருவாக முடியாதபடி நீடிப்பதற்குக் காரணம். அரசியல் தீர்வு எட்டப்படாமல் காஸா திறந்தவெளி சிறைச்சாலையாக இஸ்ரேலின் கோரப்பிடியில் சிக்கத் தவிப்பதுதான் ஹமாஸின் தாக்குதலுக்குக் காரணம். இது அமெரிக்காவுக்கு நன்றாகவே தெரியும். தெரிந்தும் இஸ்ரேலின் கொலைவெறித் தாக்குதலை அமெரிக்கா ஆதரிக்கிறது. இது தீவிரவாதத்தை வளர்க்குமா, குறைக்குமா என்று சிந்தித்துப் பார்க்க மறுக்கிறது. அதனால் இந்த பதினான்கு நாடுகள் எதிர்த்து வாக்களித்தது அதிசயமல்ல.

நாற்பத்தைந்து நாடுகள் வாக்களிப்பில் பங்கேற்கவில்லை. இவை இஸ்ரேலின் மனிதாபிமானமற்ற தாக்குதலை நிறுத்தச் சொல்லி கோருவதற்கு முன்வரவில்லை என்பது வெட்கக்கேடான விஷயமாகும். அந்த நாற்பத்தைந்து நாடுகளில் இந்தியாவும் இருப்பதுதான் இந்தியர்களாக நாம் வெட்கப்பட வேண்டிய விஷயம். காங்கிரஸ் தலைவர் பிரியங்கா காந்தி இந்தியா ஒரு தேசமாக எந்த கொள்கைகளைக் காத்து நின்றதோ, அவற்றை இன்று காற்றில் பறக்க விட்டுள்ளதாக குற்றம் சாட்டியுள்ளார்.

போர் நிறுத்தக் கோரிக்கையை ஆதரிப்பதில் என்ன சிக்கல்?

ஹமாஸ் என்பது பல்வேறு பலஸ்தீனிய அரசியல் அமைப்புகளில் ஒன்றுதான். அவர்கள் தேர்தல்களில் வெற்றிபெற்று ஆட்சியில் பங்கேற்றார்கள். அதே சமயம் தீவிரவாத நிலைக்கும், பேச்சுவார்த்தைகளுக்கும் இடையில் ஊசலாடினார்கள். ஆனால் இஸ்ரேல் பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்து அரசியல் தீர்வை, இஸ்ரேல் பலஸ்தீனம் என்ற இரண்டு சுதந்திர அரசுகள் என்ற தீர்வை உருவாக்கத் தவறியது. உலக வல்லரசுகள், முக்கியமாக அமெரிக்கா, இஸ்ரேலை ஒரு அரசியல் தீர்வை எட்டும்படி நிர்பந்திக்கத் தவறின. பலஸ்தீனிய பகுதிகளில் இஸ்ரேலின் குடியேற்றம் தொடர்ந்தது. தீவிரவாத எதிர்ப்பு என்ற பெயரில் தொடர்ந்து பலஸ்தீனர்கள் கொடுமைப்படுத்தப்பட்டனர்.

29 ஒக்ரோபர், ‘தி இந்து’ ஆங்கில நாளிதழில் முன்னாள் துணை குடியரசுத் தலைவர் ஹமித் அன்சாரி அருமையான கட்டுரை ஒன்றை எழுதியுள்ளார். அதில் எப்படி அரசியல் தீர்வுக்கான பாதைகள் இஸ்ரேலால் அடைக்கப்பட்டன என்பதை சுட்டிக்காட்டியுள்ளார். ஹமாஸ் காஸாவை ஆள்வதில்தான் குறியாக உள்ளது என தப்புக்கணக்கு போட்ட இஸ்ரேல் அரசியல் தீர்வினை முன்னெடுக்க தவறியது. இருபது இலட்சத்துக்கும் அதிகமான மக்களை காஸாவில் ஒரு திறந்தவெளி சிறைச்சாலை போல வாழ நிர்பந்தித்தது. இதெல்லாம்தான் ஹமாஸ் இஸ்ரேல் மீது அக்டோபர் மாதம் கொடூரத் தாக்குதல் நடத்தக் காரணம். இஸ்ரேலில் 1400 பேர் வரை ஹமாஸ் தாக்குதலில் இறந்ததாக இஸ்ரேல் கூறுகிறது.

அதற்குப் பழி வாங்க, ஹமாஸை வேரறுப்பதாகக் கூறி இஸ்ரேல் நடத்தத் தொடங்கிய தாக்குதலில் 7000 இற்கும் அதிகமானோர் இறந்திருப்பதாகத் தெரிகிறது. இருபது லட்சம் பேர் மின்சாரம் இன்றி, போதிய குடிநீர் இன்றி, தகவல் தொடர்பும் துண்டிக்கப்பட்டு கடும் அவதிக்கு ஆளாகியுள்ளார்கள். அவர்கள் மீது மானாவாரியாக இஸ்ரேல் தாக்குதல் தொடுத்து வருகிறது. முற்றிலும் சமனற்ற இந்தப் போரில் இஸ்ரேல் இரக்கமின்றி ஈடுபட்டு வருகிறது.

இந்த நிலையில்தான் மனிதாபிமான அடிப்படையிலான போர் நிறுத்தத்தை (Humanitarian Truce) ஐக்கிய நாடுகள் சபை தீர்மானம் வலியுறுத்தியுள்ளது. இதை ஆதரிப்பதில் என்ன சிக்கல் இருக்க முடியும்? போரினால் பிரச்சினைக்குத் தீர்வு காண முடியுமா? இரக்கமற்ற ராணுவத் தாக்குதல் பாலஸ்தீனர்களை மேலும் தீவிரவாதம் நோக்கித்தானே கொண்டு செல்லும்?

ஆனால் ஜெர்மனி, இங்கிலாந்து, ஜப்பான் உள்ளிட்ட பல நாடுகள் தீர்மானத்தைக் குறித்த வாக்கெடுக்கில் பங்கேற்கவில்லை. இஸ்ரேலுக்கு ஆதரவாக நிற்கும் அமெரிக்காவை பகைத்துக்கொள்ள விரும்பாதது காரணமாக இருக்கலாம். மெள்ள மெள்ள உலகில் மீண்டும் இருதுருவ அரசியல் உருவாகி வருகிறது என்பது தெளிவாக உள்ளது. சீனா ஒருபுறமும், அமெரிக்கா மற்றொருபுறமுமாக அணி சேர்க்கின்றன. சீனா, ரஷ்யா, வடகொரியா, ஈரான் என பல நாடுகள் ஒருங்கிணைகின்றன. அமெரிக்கா, இங்கிலாந்து, ஜெர்மனி, ஜப்பான் என மற்றோர் அணி உருவாகிறது. இது 1991 ஆம் ஆண்டு ரஷ்யா தகர்ந்ததிலிருந்து உருவான ஒரு துருவ உலகம், அமெரிக்கா தனிப்பெரும் வல்லரசாக விளங்கும் உலகம் என்ற ஒரு கருத்தாக்கத்தை நிச்சயம் மாற்றி வருகிறது.

இந்தியாவின் தடுமாற்றம்

சுதந்திரத்துக்குப் பிறகு இந்தியா நேருவின் தலைமையில் அணிசேரா நாடுகள் என்ற கோட்பாட்டை உருவாக்கியது. அறம் சார்ந்த நிலைப்பாட்டை, மனிதாபிமான அணுகுமுறையை சர்வதேச பிரச்சினைகளில் இந்தியா முன்னெடுத்தது. பஞ்சசீலக் கொள்கை என்பதை அறிமுகப்படுத்தியது. அவையாவன:

1) எல்லா நாடுகளும் சமாதான சுக வாழ்வு வாழ வேண்டும்.

2) வலிமை மிக்க நாடுகள் வலிமை குறைந்த நாடுகளைத் துன்புறுத்தக் கூடாது.

3) எந்த நாடும் மற்ற நாடுகளின் உள் விவகாரங்களில் தலையிடக் கூடாது.

4) தேவையுள்ள அனைத்து நாடுகளுக்கும் ஆக்கமும் ஊக்கமும் அளித்து வர வேண்டும்.

5) அனைத்து நாடுகளின் எல்லைப் பாதுகாப்புக்கும் மரியாதை அளிக்க வேண்டும்.

பலஸ்தீன மக்களின் உரிமைகளுக்குக் குரல் கொடுப்பது என்பது இந்த கொள்கைகளின் வெளிச்சத்தில் இன்றியமையாதது.

ஆனால், இன்றைய பாரதிய ஜனதாக்கட்சி இந்திய அரசு அறம் சார்ந்த நிலைபாடுகளை எடுக்காமல், ஆதாயம் சார்ந்த நிலைபாடுகளை எடுக்கிறது. உக்ரைனை ஆக்கிரமிக்க போர் தொடுத்த ரஷ்யாவை கண்டிப்பதை விட, அது மலிவான விலையில் பெட்ரோல் விற்றால் வாங்குவதில் ஆர்வம் காட்டியது. அதே நேரம் சீனாவின் எல்லை ஊடுருவல் அச்சுறுத்தலைக் கண்டு அமெரிக்காவினை அனுசரிக்க துடிக்கிறது.

பலஸ்தீனத்தின் மீது இஸ்ரேல் இன்று தொடுத்துள்ள கொடூர தாக்குதல் ஹமாஸை அழிப்பதற்கு என்பதை குழந்தைகூட நம்பாது. இது பழிவாங்கும் வெறி. பலஸ்தீனிய உயிர்களை மதிக்காமல் பல பத்தாண்டுகளுக்கு இஸ்ரேல் செய்து வரும் கொடுங்கோன்மையின் வெறித் தாண்டவம். ஹமாஸ் போன்ற தீவிரவாத இயக்கங்களை இத்தகைய தாக்குதல்களால் அழிக்கவும் முடியாது. இன்று நடைபெறும் தாக்குதல்கள் மேலும் இஸ்லாமிய தீவிரவாதத்தை பலஸ்தீனத்திலும், அதற்கு அப்பாலும் வளர்க்கவே செய்யும்.

இத்தகைய நிலையில் மனிதாபிமான அடிப்படையில் போர் நிறுத்தத்துக்குக் குரல் கொடுப்பதில் இந்தியாவுக்கு என்ன தடை இருக்க முடியும் என்பதே கேள்வி. அதனால்தான் காங்கிரஸ் தலைவர் பிரியங்கா காந்தி இந்தியா தீர்மானத்துக்கு வாக்களித்து ஆதரிக்காதது, இந்தியா தன் தேசிய வாழ்வில் இதுகாறும் கடைப்பிடித்த வந்த கொள்கைகளுக்கு முற்றிலும் எதிரானது என்று கண்டித்துள்ளார்.

கண்ணுக்குக் கண் என்பது உலகையே குருடாக்கும்

பிரியங்கா காந்தி அவரது செய்தியின் தொடக்கத்தில் மகாத்மா காந்தியின் புகழ்பெற்ற வரி ஒன்றை மேற்கோள் காட்டியுள்ளார். கண்ணுக்குக் கண் என்ற பழிவாங்கும் போக்கு தொடர்ந்தால் மொத்த உலகமும் குருடாகிவிடும் என்ற கருத்துதான் அது. ஹமாஸ் நடத்திய தாக்குதலுக்கு பழிவாங்க இஸ்ரேல் மேலும் கடுமையான தாக்குதலை காஸா மேல் தொடுத்தால், மேலும் பல தீவிரவாதிகள் இஸ்ரேலுக்கு எதிராக உருவாகத்தானே செய்வார்கள்? அமெரிக்கா மட்டும் என்ன இந்த வன்முறை சுழற்சியிலிருந்து தப்ப முடியுமா?

இவ்வாறு சிந்திப்பதற்கு பதிலாக இந்தியா, ஹமாஸ் நடத்திய தீவிரவாத தாக்குதலை கண்டித்த வரி தீர்மானத்தில் இடம்பெற வேண்டும் என்று கூறியுள்ளதாகத் தெரிகிறது. உள்ளபடி கனடாதான் ஹமாஸை கண்டிக்கும் வரியை சேர்க்க வேண்டும் என்ற தீர்மானத்தைக் கொண்டுவந்துள்ளது. ஆனால் அதற்கு போதுமான ஆதரவு கிடைக்கவில்லை. பொதுவாக போர் நிறுத்தம் என்று சொல்லும்போது இருதரப்பும் போரை நிறுத்தி அரசியல் தீர்வு காண வேண்டும் என்பதுதானே பொருள்? அதில் எதற்கு ஒரு தரப்பை மட்டும் கண்டிக்கும் வரி?

இதில் என்ன வேடிக்கை என்றால் அந்த வரியைச் சேர்க்க வேண்டும் என்று கோரிய கனடாதான் தீவிரவாதிகளுக்கு புகலிடம் தருவதாக இந்தியா குற்றம் சாட்டுகிறது. இந்திய அரசு கனடா எல்லைகளுக்குள் தீவிரவாதிகளை கொல்லத் துணைபோவதாக கனடா பகிரங்கமாக கண்டித்தது. இந்த இரண்டு நாடுகளும் சேர்ந்து ஹமாஸை கண்டிக்கின்றன.

பலஸ்தீன பிரச்சினை எழுபத்தைந்து ஆண்டுக்கால பிரச்சினை. ஹமாஸ் உருவாகியது முப்பத்தைந்து ஆண்டுகளுக்கு முன்னர்தான். தீர்க்கப்படாத பலஸ்தீனிய மக்களின் உரிமைப் பிரச்சினையின் விளைவுதான் ஹமாஸ் இயக்கமே தவிர, பிரச்சினைக்கே ஹமாஸ் காரணமல்ல. அறம் சார்ந்த ஒரு தீர்வு, சுதந்திர பலஸ்தீன தேசம் என்ற தீர்வு எட்டப்படாவிட்டால் அமைதி என்பது சாத்தியமில்லை. சர்வதேச சமூகத்துக்கு இஸ்ரேலை கண்டிக்கவும். வற்புறுத்தவும் தேவையும், உரிமையும் இருக்கிறது.

ஏனெனில் இஸ்ரேல் சர்வதேச முயற்சியால் உருவான செயற்கையான, காலனிய, குடியேற்ற நாடு. அது உருவாக்கப்பட்ட நிலம் பலஸ்தீனியர்களின் நிலம். அவர்கள் உரிமையை, சுதந்திரத்தை மறுக்கும் அநீதி களையப்பட வேண்டும். பா.ஜ.க அரசு தன் சுயநல ஆதாய அயலுறவுக் கொள்கையை கைவிட்டு, அறம் சார்ந்த கொள்கைகளுக்குத் திரும்ப வேண்டும்.

Tags: