அண்ணல் அம்பேத்கரும் முதல் தலித் புரட்சியும்

-கி.ரமேஷ்

பாபாசாகேப் அண்ணல் அம்பேத்கரின் நினைவு தினத்தன்று அவரை நினைவு கூரும் விதமாக முதல் தலித் புரட்சி என்று அழைக்கப்படும் மகத் சௌதாகர் குளசத்தியாகிரகத்தையும் அதன் விளைவுகளையும் நினைவு கூர்வது இந்தக் கட்டுரையின் நோக்கம்.

அண்ணலின் வாழ்க்கையின் மிகவும் முக்கியமான ஒரு சம்பவம் சௌதாகர் குளசத்தியாகிரகம்.  மகத்தில் ஒரு மாநாட்டைக் கூட்ட வேண்டும், அதற்கு அண்ணல் அம்பேத்கரை அழைத்துத் தலைமை தாங்கச் செய்ய வேண்டுமென்று அதற்கு விதை போட்டவர் தோழர் ஆர்.பி.மோரே.  தோழர்?  ஓம்.  தோழர்தான்.  முதலில் தீண்டாமைக்கெதிராக அண்ணல் அம்பேத்கருடன் இணைந்து பயணித்து, பின்னர் 1930 களில் அண்ணலின் ஒப்புதலுடன் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியில் இணைந்தார். பின்னர் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் இணைந்து இறுதிவரை ஒரு அப்பழுக்கற்ற கம்யூனிஸ்டாகத் திகழ்ந்து மறைந்தவர் தோழர் ஆர்.பி.மோரே. மராத்தி மொழியில் வெளியாகும் கட்சிப் பத்திரிகையான ஜீவன்மார்க்கின் நிறுவனர் தோழர் மோரே. அவரது பேரன் இன்று கூட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னணி ஊழியராகத் திகழ்கிறார்.

இளைஞர் மோரே…

மகத்தில் டாஸ்காவ்ன் என்ற ஊரில் பிறந்த மோரே ஏராளமான தீண்டாமைக் கொடுமைகளை எதிர்கொண்டவர்.  தமது பள்ளிப் படிப்பைக் கூடப் போராடித்தான் பெற்றார்.  அதிலும் தீண்டாமைக் கொடுமையை அனுபவித்தார்.  எனினும் இடைவிடாமல் போராடிய மோரே மகர்களை இணைப்பதிலும், அவர்களுக்குச் சில உரிமைகளைப் பெற்றுத் தருவதிலும் மாணவராக இருந்தபோதே வெற்றி பெற்றவர். சாதிவெறியால் தொடர்ந்து துன்பத்துக்குள்ளாகும் தாழ்த்தப்பட்ட மக்களை உலுக்கியெழுப்பவும், போராட்டத்துக்குத் தயார் செய்யவும் ஒரு மாநாட்டை நடத்துவது பற்றி சிந்தித்த மோரே மகத்தில் இருக்கும் அனைத்து தாழ்த்தப்பட்ட மக்களின் தலைவர்களையும் திரட்டி அதற்கான முடிவை எடுத்தார்.  அதற்கு அண்ணல் அம்பேத்கரைத் தலைமை தாங்க அழைக்கும் பொறுப்பு அப்போது 24 வயதே ஆன இளைஞர் மோரேவிடம் ஒப்படைக்கப்பட்டது.

அந்தக் கோரிக்கையுடன் அண்ணல் அம்பேத்கரை அணுகினார் மோரே.  பாபாசாகேப் அப்போது பகிஷ் கிருத் ஹிருதகாரிணி சபாவை உருவாக்கி விட்டு,  அதற்கான இயக்கத்தைத் தொடங்க ஒரு பொருத்தமான பிரச்சனையைத் தேடிக் கொண்டிருந்தார். அப்போதுதான் இந்தக் கோரிக்கை வந்து சேர்ந்தது.  இந்தக் கோரிக்கை அம்பேத்கருக்கு மகிழ்ச்சி அளித்தாலும் அவர் அதை ஏற்பதில் சிறிது தயக்கம் காட்டினார். மீண்டும் மீண்டும் மோரே விடாமல் வற்புறுத்த சுமார் மூன்று ஆண்டுகளுக்குப் பிறகுதான் அம்பேத் கர் இந்தக் கோரிக்கையை ஏற்றார். அப்போது உட னிருந்த பாய் வினாயக் சித்ரேவை அவர் மகத் சென்று சூழ்நிலையை ஆராய்ந்து கூறுமாறு கேட்டுக் கொண்டார். மகத்துக்கு அம்பேத்கரின் ஆலோசனைப்படி கமலகாந்த் சித்ரேவை அனுப்பினார் பாய் சித்ரே. அங்கு சென்ற கமல்காந்த் சித்ரே மாநாட்டுக்கு உரிய நடவடிக்கைகளை மோரேவும் உடனிருந்த மற்றவர்களும் செய்திருந்ததைக் கண்டு மகிழ்ந்து அண்ணலிடம் கோரிக்கையை ஏற்குமாறு கூறினார். அதன் பிறகு தான் அம்பேத்கர் அந்த மாநாட்டில் கலந்து கொள்ளும்  முடிவை எடுத்தார். 1927, மார்ச் 19, 20 திகதிகளில் இந்த மாநாடு நடைபெறும் என்று முடிவெடுக்கப்பட்டது.

இந்த முடிவெடுக்கப்பட்டதும் அண்ணல் அம்பேத்கர் இதற்கான தயாரிப்புகளில் நேரடியாக ஈடுபட்டார். அவரது அலுவலகத்துக்கு இந்த மாநாட்டை ஆதரித்துப் பலர் தினமும் வந்து சென்றனர். தீவிரமான பரப்புரை மேற்கொள்ளப்பட்டது.  தனது தலைமையுரையை மிகக் கவனமாகத் தயாரித்தார் அம்பேத்கர். கடைசி நிமிடம் வரை அவ்வப்போது திருத்தி அதை மேம்படுத்திக் கொண்டே இருந்தார்.

போலே தீர்மானம் செய்த உதவி

மாநாடு நடைபெறும் இடம் குறித்து சிக்கல் எழுந்தது.  தாழ்த்தப்பட்டோருக்கு அப்போது யாரும் இடம் கொடுக்க மாட்டார்கள்.  இறுதியில் மகத் பேருந்து நிறுத்துமிடத்துக்குப் பக்கத்திலேயே வீரேஷ்வர் திரையரங்கு வளாகத்தை ஏற்பாடு செய்தனர். பக்கத்திலேயே மாநாட்டுக்கு வருபவர்களுக்குத் தங்குமிடம் ஏற்பாடு செய்யப்பட்டது. அவர்களுக்கு உணவு சமைத்துக் கொடுப்பதற்காக பொருட்கள் மக்களிடமிருந்து நன்கொடையாகப் பெறப்பட்டன. எனினும் தண்ணீரையும் காசு கொடுத்தே வாங்க வேண்டியிருந்தது.

இந்த இடத்தில் ஒரு விஷயத்தை நினைவு கூர வேண்டியுள்ளது.  பம்பாய் மாநகராட்சி, போலே தீர்மானம் என்ற ஒரு தீர்மானத்தை நிறைவேற்றியிருந்தது.  முன்னணி சீர்திருத்தவாதியான போலே என்பவர் கொண்டு வந்த அத்தீர்மானம் தாழ்த்தப்பட்டோருக்கு குளம் போன்ற இயற்கை வளங்களைப் பயன்படுத்த உரிமை உள்ளது என்று கூறியது.  அதை ஏற்க மறுத்தால் மாநகராட்சி நிதி மானியங்கள் அளிக்காது என்று கூறப்பட்டதால் உள்ளாட்சி நிர்வாகங்கள் வேண்டா வெறுப்பாக அதை ஏற்றாலும், அதை நடை முறைப்படுத்துவதில் எந்த ஆர்வமும் காட்டவில்லை. அதில் மகத் சௌதாகர் குளமும் ஒன்று.  எனவே தான் அங்கு மாநாடு கூடியது.

படகு மூலமாக மார்ச் 16 அன்று பம்பாயிலிருந்து புறப்பட்ட அம்பேத்கர் உள்ளிட்ட தலைவர்கள் மகத் தங்கும் விடுதிக்கு மார்ச் 19 பகல் வந்து சேர்ந்தனர். மார்ச் 19 காலையிலிருந்தே மகத்துக்கு ஆயிரக்கணக்கான மக்கள் மாநாட்டில் கலந்து கொள்ள வந்து கொண்டே இருந்தனர்.  மாலை நான்கு மணிக்கு மாநாட்டு அரங்கு நிரம்பி வழிந்தது.  டாக்டர் அம்பேத்கர் எழுச்சியான தலைமையுரை ஆற்றினார்.  பின்னர் அவருடன் வந்திருந்த பட்டியலினம் அல்லாத சாதியைச் சேர்ந்த தலைவர்களும், சஹஸ்ரபுத்தே உள்ளிட்ட தலைவர்களும் உரையாற்ற அன்றைய நிகழ்வு முடிந்தது.

மறுநாள் காலை கூடிய தலைவர்கள் சௌதாகர் குளத்துக்கு மக்களை அழைத்துச் சென்று அதில் இறங்குவது என்று முடிவெடுத்தனர்.  அதன்படி கூட்டம் நடைபெற்று 32 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்ட பிறகு ஜாதவ் நிறைவுரை ஆற்ற  அவருக்குப் பிறகு எழுந்த பாய் சித்ரே அனைத்து நீர்நிலைகளும் அனைத்து சாதியினருக்கும் திறந்து விடப்பட வேண்டு மென்பதை வலியுறுத்தி அனைவரும் சௌதாகர் குளத்தை நோக்கிப் பேரணியாகச் சென்று அங்கு குடிதண்ணீர் அருந்த வேண்டுமென்று முன்மொழிய கூட்டத்தினரிடையே உற்சாகம் பொங்கியது.  மின்சாரம் தாக்கியது போன்ற ஒரு உணர்வு ஏற்பட்டது.  அரங்கமே பேரார்வமிக்க முழக்கங்களால் அதிர்ந்தது. அம்பேத்கரைத் தொடர்ந்து தலைவர்கள் அணி வகுக்க, மக்கள் அவருக்குப் பின்னால் அணி வகுத்தனர்.  மகத் நகரின் சந்தைத் திடல் வழியாக மிகுந்த கட்டுப்பாட்டுடன் வீரமுழக்கமிட்டுச் சென்றனர் அவர்கள்.  குளத்தை அடைந்ததும் அம்பேத்கர் உள்ளே இறங்கி நீரைப் பருகியதும், மற்றவர்களும் உள்ளே இறங்கிப் பருகினர். 

வதந்தியைக் கிளப்பி  வன்முறை தாக்குதல்

இதற்குப் பின்னர் மாநாட்டு அரங்கிற்கு அவர்கள் செல்ல, தலைவர்கள் தாம் தங்கியிருந்த அரசு மாளிகைக்குச் சென்றனர்.  அப்போதுதான் பிரச்சனையை சாதி ஆதிக்க சக்தியினர் கிளப்பினர்.  அங்கிருந்த வீரேஷ்வர் கோவிலுக்குள் தாழ்த்தப்பட்டவர்கள் நுழையப் போவதாக அங்கிருந்த பூசாரி கிளப்பி விட, சாதி ஆதிக்க சக்திகள் ஆயுதங்களுடன் திரண்டனர். அவர்களில் பலர் மாநாட்டுப் பந்தலுக்குச் சென்று அங்கு  உணவருந்திக் கொண்டிருந்தவர்களை ஆயுதங்களால் தாக்கினர்.  குடிதண்ணீர் பானைகளை உடைத் தெறிந்தனர்.  மூன்று நான்கு பெண்கள் உட்பட 60-70  பேர் காயமடைந்தனர்.  சில முஸ்லிம்களும், சில பிற்படுத்தப்பட்ட சாதியினரும் தலையிட்டு சிலரைக் காப்பாற்றினர். சந்தைத் திடலிலும் தாக்குதல் நடைபெற்றது.  தமது ஊர்களுக்குத் திரும்பி யோர் மீதும் தாக்குதல் நடந்தது. எதிர்காலத்தில் சௌதாகர் குளத்துக்கு அருகில் யாரும் வருவதற்கு அஞ்ச வேண்டும் என்ற நோக்கத்துடன் தாக்குதல் நடந்தது.  

உள்ளூர் நிர்வாகத்துக்கு இந்த சதித்திட்டம் அனைத்தும் தெரிந்தாலும் அவர்கள் தலையிடாமல் வேடிக்கை பார்த்தனர்.  அவர்கள் நடவடிக்கை எடுப்பதற்கு பதில் டாக் பங்களாவில் தங்கியிருந்த அம்பேத்கரிடம் வந்து இருதரப்பு மக்களும் கொந்தளித்துக் கொண்டிருப்பதாகவும், அம்பேத்கர் வந்து பட்டியலின மக்களைக் கட்டுப்படுத்த வேண்டுமென்றும் கூறினர்.  உடனே அம்பேத்கர் மற்ற தலைவர்களுடன் கிளம்பினார். வீரேஷ்வர் கோவிலில் கூடியிருந்த சாதி ஆதிக்க சக்தியினர் அவருடன் சண்டைக்கு வந்தனர்.  எனினும் அங்கு நுழையும் எண்ணம் தமக்கு இல்லவேயில்லை என அவர் கூறி சமாதானப்படுத்த முயன்றார். அவர்கள் ஏற்காத நிலையில் அவர் அங்கிருந்து அகன்றார்.  வழியில் எங்கும் பட்டியலின மக்கள்,  அவர்கள் கூறியதுபோல் கூடியிருக்கவில்லை என்பதைக் கண்டு திரும்பி விட்டார். ஒடுக்கப்பட்ட மக்கள் பதில் தாக்குதலுக்குத் தயாராக இருந்தாலும், அம்பேத்கர் அனுமதிக்கவில்லை.  அவர்களை அமைதிப்படுத்தினார்.  காயமடைந்தோரை மருத்துவமனை கொண்டு சென்றனர்.  

தமது மனித உரிமைகளை மீட்டெடுக்க தாழ்த்தப் பட்ட மக்கள் நடத்திய போராட்டத்துக்கு எதிராக பழமை வாதிகளும், வைதீகர்களும் பசுவின் மூத்திரம் நிரப்பப்பட்ட 108 மண்பானைகளை சௌதாகர் குளத்தில் கவிழ்த்துப் ‘புனிதப்’ படுத்தினர்.  அவர்கள் அம்பேத்கர் மீது வழக்கும் தொடர்ந்தனர்.  இவர்கள் திருந்தவே மாட்டார்கள் என்ற முடிவுக்கு அம்பேத்கர் வருவதற்கு இதுவும் ஒரு காரணம்.

செய்தியை மூடி மறைத்த பத்திரிகைகள்
பம்பாயிலிருந்து வந்த செய்திப் பத்திரிகைகளோ இச்செய்தியை மறைத்தன அல்லது ஒடுக்கப்பட்டோர் மீது குற்றம் சாட்டின. அதை எதிர்த்து அம்பேத்கர் பல  கட்டுரைகளை எழுதினார்.   

லட்சியத்துக்கு ஆதரவாக இருக்கும் அனைத்து மக்களும் தேவை

இங்கு இன்னொரு விஷயத்தைக் கூற வேண்டியுள்ளது.  தாழ்த்தப்பட்ட மக்களின் விடுதலைக்கான போராட்டத்தில் அந்தக் கருத்தை ஏற்கும் எந்த சாதியினரும், அவர் பிராமணராக இருந்தாலும் அவர்களைச் சேர்த்துக் கொள்வது அந்தப் போராட்டத்துக்கு வலிமை  தரும் என்ற கருத்தை அண்ணல் வலியுறுத்தினார்.  ஒரு பிராமணப் பெண்மணி தமது கணவரின் அனுமதியுடன் இந்த மாநாட்டில் தொண்டராக இருக்க அனுமதி கோரியபோது அதற்கு சாதகமாக அம்பேத்கர் பதி லளித்தார்:

“பிராமண சாதியில் பிறந்த எந்த ஒருவரும் தனது மனதளவில் தாராளவாதியாய் இருக்க முடியாது என்று நாம் நம்பவில்லை.  பிராமணர்களோ அல்லது பிராமணரல்லாதவர்களோ நமது இலட்சியத்துக்கு அனுதாபமுடனிருக்கும் அனைத்து மக்களும் நமக்குத் தேவைப்படுகின்றனர். எங்களுடைய மேன்மைமிக்க பணியில் எங்களுக்கு உதவ வேண்டுமென்று ஒரு தார்மீக உறுதிப்பாட்டுடன் யாரெல்லாம் முன்வருவார்களோ அவர்கள் எல்லோருக்கும் மட்டும் நாம் நன்றியுடை யவர்களாக இருப்போம்.  எங்களுக்குக் கடிதம் எழுது வதன் மூலம் சத்தியாகிரகத்தில் பங்கேற்பதற்கான தமது விருப்பத்தை வேறு பலரும் கூட வெளிப் படுத்தியுள்ளனர்…”

“தேச ஒற்றுமை, (சோகங்களால் துயரப்படும் சக மனிதர்கள் மீதான ஆழ்ந்த) மானுடப் பரிவு, நீதி, சீர்திருத்தங்களின் பார்வைக் கோணத்திலிருந்து தீண்டாமையை ஒழிப்பது மிக மிகத் தீவிரமான தேவை என்பதனை நியாயமாக நம்பக்கூடிய அனைத்து மக்களும் தீண்டப்படாதோருடன் சேர்ந்து பங்கு பெறுவதற்கு எந்தவிதமான ஆட்சேபணையும் இருக்கக் கூடாது.”

அத்ரேகரின் வீரக்கதை

இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க முதல் போராட்டத்துக்குப் பிறகு மீண்டும் மகத்தில் இரண்டாவது மாநாடும் நடைபெற்றது.  அந்த மாநாட்டில் சுமார்  15000 பேர் கலந்து கொண்டனர்.  1927, டிசம்பர் 25 அன்று அது ஏற்பாடு செய்யப்பட்டது.  அரசாங்கம் தடை உத்தரவு போட்டும் அதை யாரும் மதிக்கவில்லை.  அதற்காகப் பிரச்சாரம் மேற்கொண்டிருந்த அத்ரேகர் என்ற தலைவர் தமது உயிரே போனாலும் இந்த மாநாட்டை சிறப்பாக நடத்துவது என்று உறுதியுடன் செயல்பட்டு வந்தார்.  தாம் போகும் இடத்துக்கு எல்லாம் தமது இறுதிச் சடங்கிற்கான பொருட்களைக் கொண்டு சென்றார் என்றால் அவரது உறுதியைத் தெரிந்து கொள்ளலாம்.  அந்த மாநாட்டில் சஹஸ்ர புத்தே மனுதர்மத்தை எரிக்கும் பெரும் வாய்ப்பைப் பெற்றார்.  அம்மாநாட்டுக்குப் பிறகு அம்பேத்கரைக் கொலை செய்யப் போவதாக சாதி ஆதிக்க சக்தியினர் மிரட்டினர். ஆயிரக்கணக்கான ஒடுக்கப்பட்ட மக்கள் கூடித் தமது தலைவரைக் காத்து நின்றனர்.  இந்தப் பகுதியின் தீரமிக்க மகர் மக்களுடைய இந்த வீரக்கதை எக்காலத்துக்கும் நிலைத்திருக்கும்.  

Com. R.B.More

இறுதி வரை நட்பு…

இந்த அனைத்து நிகழ்வுகளையும் தோழர் மோரேவின் வரலாற்றில் படிக்க முடியும். தோழர் மோரே அம்பேத்கரின் இயக்கத்திலிருந்து விலகி கம்யூனிஸ்டாகி இருந்தாலும், அடிக்கடி அவரை அழைத்து விவாதிப்பார் அம்பேத்கர்.  இருவரும் ஒருவருக்கொருவர் மிகுந்த அன்பும், மரியாதையும் கொண்டிருந்தனர்.  இறுதிவரை இந்தத் தொடர்பு நீடித்தது.  “கம்யூனிஸ்ட் இயக்கத் தத்துவத்தை நோக்கித் திரும்புமாறு என்னை உந்திய பல காரணங்களுள் அம்பேத்கருடைய கற்பித்தலும் ஒரு பிரதான காரணமாகும்.  இதை நான் அவரிடமே வெளிப்படையாகக் கூறியிருக்கிறேன்.  இதில் அவருக்குப் பரம திருப்தியும் இருந்தது.  தன்னுடைய நம்பிக்கைக்குரிய விசுவாசிகளில் ஒருவர் எப்படித் தன்னிடமிருந்து பெற்ற உத்வேகத்தினால் கம்யூனிஸ்டாக மாறி அதன் மூலம் பொதுமக்களின் நலவாழ்வுக்கென்றே அர்ப்பணிக்கப்பட்ட ஒரு வாழ்க்கையை ஏற்றுக் கொண்டார் என்பதை அவர் பார்த்ததன் விளைவே அந்த முழுநிறைவு! அவருடைய பரிநிர்வாணம் (மறைவு) வரையிலும் அவர் என்மீது பொழிந்து வந்த அன்பிலிருந்தே மேற்கண்ட உண்மை வெளிப்படையாகப் புலனாகும்” என்று பதிவு செய்கிறார் தோழர் மோரே.

அனைவரது சமத்துவத்துக்காகவும், அனைவரின் நல்வாழ்வுக்காகவும் தமது வாழ்க்கையை அர்ப்ப ணித்த அந்த இரு தலைவர்களின் வாழ்க்கையை அனைவரும் படிக்க வேண்டும்.  அதற்காக இரு புத்தகங்களை உங்கள் முன் வைத்து முடிக்கிறேன்.  

மஹத் – முதல் தலித் புரட்சியின் உருவாக்கம், ஆனந்த் டெல்டும்டே, என்.சி.பி.எச். வெளியீடு. The story of a Dalit Communist – R.B.More, Leftword.

இன்று அம்பேத்கரின் நினைவு தினம்

Tags: