பலஸ்தீன மக்கள் மீதான இஸ்ரேல் அரசின் இனப்படுகொலையை தடுத்து நிறுத்துவோம்!

பேராசிரியர் வெங்கடேஷ் ஆத்ரேயா

இஸ்ரேலின் அரசின் இனப்படுகொலை பயங்கரவாதம்

க்ரோபர் 7, 2023 அன்று நீண்ட காலமாக மேற்கு ஆசிய பகுதியில் உள்ள பலஸ்தீனத்தில் இஸ்ரேலின் கொடிய, காலனிய ஆக்கிரமிப்பை எதிர்த்துப் போராடி வரும் ஹமாஸ் அமைப்பு இஸ்ரேல் மீது பெரும் தாக்குதலை நிகழ்த்தியது. இதில் சுமார் 1,200 இஸ்ரேலியர்கள் கொல்லப்பட்டனர். 250க்கும் மேற்பட்டவர்களை பிணையக்கைதிகளாக ஹமாஸ் கைப்பற்றியது. இவர்களில் 100 கைதிகளை ஹமாஸ் விடுவித்துவிட்டார்கள்.

ஹமாஸ் தாக்குதல் நிகழ்ந்ததற்கு அடுத்த நாள், ஒக்ரோபர் 8 இல் தொடங்கி கடந்த மூன்று மாத காலமாக காஸா பகுதி மக்கள் மீது இஸ்ரேல் இராணுவம் குண்டுமழை பொழிந்து வருகிறது. இஸ்ரேல் இராணுவத்தின் கடும் தரைவழி தாக்குதலும் காஸா பகுதி மக்களை கொன்று குவிக்கிறது. காஸா மக்களுக்கு உணவு, குடிநீர், மருத்துவ வசதி, மின்சாரம் ஆகிய அனைத்தும் மறுக்கப்பட்டு வருகின்றன. பலஸ்தீனத்தின் பகுதியான ஜோர்டான் நதியின் மேற்குக் கரையில்  வாழும் மக்களையும் இஸ்ரேல் தாக்கி வருகிறது.

தற்சமயம் வரை 23,400 அதிகமான பலஸ்தீனர்கள் இஸ்ரேல் தாக்குதல்களில் உயிர் இழந்துள்ளனர். இதில் 6,500க்கும் மேற்பட்டவர்கள் குழந்தைகள். இஸ்ரேல் தாக்கப்பட்ட உடனேயே, இந்திய பிரதமர் மோடி ஹமாஸ் தாக்குதலை பயங்கரவாதம் என்று கண்டித்தும், இஸ்ரேலுக்கு தனது ஒருமைப்பாட்டை தெரிவித்தும் அறிக்கை விட்டார். ஆனால் பிரச்சினையை இஸ்ரேல் அரசு சார்பாக மட்டும் புரிந்து கொள்வதும், பேசுவதும், எந்த வகையிலும் நியாயம் இல்லை. இப்பிரச்சினையின் வரலாற்று பின்னணியை சுருக்கமாக பார்த்தாலே இது விளங்கும்.

வரலாற்றுப் பின்னணி

பலஸ்தீனம் என்றழைக்கப்படும் மேற்கு ஆசிய பகுதியில் ஏழாம் நூற்றாண்டில் இருந்து பலஸ்தீன மக்கள் தொடர்ந்து வாழ்ந்துவந்துள்ளனர். இவர்களில் பெரும் பகுதியினர் இஸ்லாம் மதத்தை பின்பற்றுபவர்கள். கணிசமான அளவில் யூதர்களும் கிறிஸ்தவர்களும் இங்கு வாழ்ந்து வந்தனர். இம்மக்களிடையே பொதுவாக அமைதியும் சுமூக உறவுகளும் இருந்து வந்தன. கி பி 1516 ஆம் ஆண்டில் துருக்கியர்களால் ஆளப்பட்ட ஓட்டமான் சாம்ராஜ்யத்தின் (Ottoman Empire) ஒரு மாநிலமாக  பலஸ்தீனம் ஆக்கப்பட்டது. பத்தொன்பதாம் நூற்றாண்டின் பிற்பகுதிவரை பலஸ்தீனத்துக்குள் வேறு இடங்களில் இருந்து குறிப்பிடத்தக்க குடியேற்றம் எதுவும் நிகழவில்லை. 1851 இல் பலஸ்தீனில் 3,27,000 பலஸ்தீன மக்களும் 13,000 யூதர்களும் இருந்தனர். அதாவது, பலஸ்தீன மக்கள் தொகையில் 4% தான் யூதர்கள். 1925ஆம் ஆண்டில், பல பத்தாண்டுகளாக யூதர்கள் பலஸ்தீனத்தில் நிலம் வாங்கி குடியேறிய பிறகும் கூட, யூதர்கள் அல்லாத பலஸ்தீன மக்களின் தொகை 7,65,000 ஆகவும் யூதர்கள் மக்கள் தொகை 100,000 ஆகவும் இருந்தது.

ஆனால் மேலை நாடுகளில் யூதர்களுக்கு எதிரான உணர்வுகள் அதிகரித்து வந்தன. யூதர் சமூகத்தில் ஒரு சாரார் இப்பின்னணியில் “யூதர்களுக்கு என்று ஒரு பாதுகாப்பான இடம் தேவை. அது யூதர்களின் பண்டைக்கால மதநூலில் குறிப்பிடப்பட்ட ஜெருசலம் என்ற யூதர்களின் புண்ணியஸ்தலம் இருக்கும் பலஸ்தீனம் தான்” என்ற கருத்துக்களை வலுவாக பரப்பினர். பின்னர் இவர்கள் சியோனிஸ்ட் (Zionist) இயக்கத்தை அமைத்து, மேலை நாடுகளில், குறிப்பாக அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவில் இருந்த யூத செல்வந்தர்கள் மூலமும், வேறு வகைகளிலும் பணம் திரட்டி, ஓட்டமான் பேரரசின் கீழ் இருந்த பலஸ்தீன பகுதியில் பெரும் அளவில் நிலங்களை கையகப்படுத்தினர். இவர்கள் வாங்கிய நிலங்கள் ஏற்கெனவே குத்தகைதாரர்கள் காலம் காலமாக சாகுபடி செய்துவந்த நிலங்கள். அந்த குத்தகைதாரர்களை நிலம் கையகப்படுத்திய  ஜயனிஸ்ட் அமைப்புகள் வன்முறையை பயன்படுத்தி விரட்டி அடித்து அகதிகளாக்கினர். இந்த போக்கு முதல் உலகப் போருக்குப் பின் மேலும் தீவிரமடைந்தது. எனினும் 1931ஆம் ஆண்டு தரவுகள்படி  அந்த ஆண்டில் பலஸ்தீனத்தில் மொத்த மக்கள் தொகையான 10,33,314 இல் யூதர்களின் எண்ணிக்கை  1,74,606 தான். அதாவது, ஆறில் ஒரு பங்கு தான்.

களவாடப்பட்ட பலஸ்தீனம்

இவ்வாறு திட்டமிட்டு உலகின் பிற இடங்களில் (பிரதானமாக மேற்கு மற்றும் கிழக்கு ஐரோப்பா, வட அமெரிக்கா, பிரிட்டன் ஆகிய நாடுகளில்) இருந்து யூதர்களை குடி அமர்த்தும் நடவடிக்கைகளுக்கு பலஸ்தீன மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். பிரிட்டிஷ் அரசின் பொறுப்பில் இருந்த பலஸ்தீனத்தில் 1936 முதல் 1939 வரை பிற நாட்டு யூதர் குடியேற்றத்திற்கு எதிராகவும், பலஸ்தீன மக்களின் குடிஉரிமைகளுக்காகவும், பெரும் கிளர்ச்சிகள் வெடித்தன. இக்கிளர்ச்சிகளை பிரிட்டிஷ் ஏகாதிபத்தியம் அடக்கி ஒடுக்கியது. இதை செய்வதற்கு சியோனிஸ்ட் கும்பல்களையும் பயன்படுத்திக் கொண்டது.  எனினும், இத்தகைய அநீதிகளுக்கு பலஸ்தீன மக்கள் உட்படுத்தப்பட்டாலும், ஹிட்லர் ஆட்சியில் இன அழிவு ஆபத்துக்கே உள்ளாக்கப்பட்ட யூதர்கள் மீது பன்னாட்டு அளவில் அனுதாபம் இருந்தது. மேலும், நீண்டகாலமாக யூத எதிர்ப்பை தடுக்கத் தவறிய மேலை ஏகாதிபத்திய நாடுகள், பாதிக்கப்பட்ட யூதர்களை தங்கள் நாடுகளுக்குள் ஏற்க தயாராக இல்லை. தனது  அறிவியல் ஆராய்ச்சி தேவைகள் கருதி ஒரு சில முன்னணி அறிவியலாளர்களை அமெரிக்கா வரவேற்று ஏற்றுக்கொண்டது. அவர்களும் யூத எதிர்ப்பு உணர்வுகளை சந்திக்க வேண்டியிருந்தது.

ஐரோப்பிய நாடுகளிலும் யூத எதிரப்புணர்வு பரவலாக இருந்தது. இப்பின்னணியில் 1948 இல் ஐக்கிய நாடுகள் அவையின் ஒரு தீர்மானம் வாயிலாக, பலஸ்தீன நாட்டின் 55% பரப்பளவு கொண்டு இஸ்ரேல் என்ற நாடும், மீதம் 45% பரப்பளவில் பலஸ்தீன நாடும் அமைக்கப்படும் என்ற முடிவை பலஸ்தீன மக்கள் மீது மேலை நாடுகள் திணித்தன. இவ்வாறு பலஸ்தீன மக்களின் தாய்நாடாகிய பலஸ்தீனம் மேலை ஏகாதிபத்திய நாடுகளின்  உதவியுடன் களவாடப்பட்டது.

களவாணி நாடாக உருவாக்கப்பட்ட இஸ்ரேல், மேலும் ஏராளமான பலஸ்தீனர்களை தனக்கு அளிக்கப்பட்ட பகுதியில் இருந்து பயங்கரவாத தாக்குதல், வன்முறை நடவடிக்கைகள் மூலம் 1948 இலும் பின்னரும் வெளியேற்றியது. 1967 இலும் 1973 இலும் இஸ்ரேலுக்கும் அண்டை அரபு நாடுகளுக்கும் நிகழ்ந்த போர்களில் மேலும் அதிக பரப்பளவை இஸ்ரேல் ஆக்கிரமித்துக் கொண்டது. தற்சமயம், பெயரளவிற்கு ஜோர்டான் நதியின் மேற்குக்கரை பகுதியில் ஓரளவு தன்னாட்சி பெற்ற பலஸ்தீன நிர்வாகம் இருந்தாலும், பலஸ்தீனம் முழுவதையும் தனது கட்டுப்பாட்டில் கொண்டுவந்து பலஸ்தீனர்களை அவர்களது சொந்த நாட்டிலேயே நாடற்றவர்களாக, அதிகாரமற்றவர்களாக, அகதிகளாக இஸ்ரேல் ஆக்கியுள்ளது.

காஸா பகுதியை உலகின் மிகப்பெரிய திறந்தவெளி சிறை என்று வர்ணிக்கப்படும் வகையில் கருணையற்ற முற்றுகைக்கு பல ஆண்டுகளாக  உள்ளாக்கியிருக்கிறது இஸ்ரேல். இதன் பின்னணியில்தான் பலஸ்தீன மக்கள்  தங்கள் நாட்டை விடுவிக்கும் வேட்கையை இழக்காமல் போராடி வருகின்றனர். ஹமாஸ் நிகழ்த்திய தாக்குதல் இஸ்ரேலின் தொடரும் கொடுமைகளுக்கு எதிர்வினை என்பது உணரப்படவேண்டும். இதன் பொருள்  பயங்கரவாதத்தை ஆதரிப்பது என்பதல்ல. நடந்தவைகளுக்கு முழுமுதல் பொறுப்பு ஏற்க வேண்டியது அமெரிக்க – ஐரோப்பிய ஏகாதிபத்தியமும் அதன் தயவில் அனைத்து பன்னாட்டு உடன்படிக்கைகளையும் நெறிமுறைகளையும் மீறி பலஸ்தீனம் முழுவதையும் ஆக்கிரமித்துள்ள இஸ்ரேல் நாடும்தான். துரதிருஷ்டவிதமாக ஆர்.எஸ்.எஸ் ஆட்சியின் கீழ் இந்தியா இஸ்ரேலின் இனப்படுகொலை தாக்குதல்களை எதிர்த்து குரல் கொடுக்காமல் உள்ளது.

1945 – 1973 கால பன்னாட்டு நிலைமைகள்

இரண்டாம் உலகப்போர் முடிந்தவுடன், வலுவடைந்த சோசலிச முகாம், சற்று வலுவிழந்த மேலை ஏகாதிபத்தியம் என்ற பின்னணியில், உலகம் எங்கும் ஏகாதிபத்திய நாடுகளின் காலனி ஆட்சி நடந்துகொண்டிருந்த நாடுகளில் காலனி ஆதிக்கத்தை எதிர்த்து தேச விடுதலை இயக்கங்கள் வலுவடைந்தன. 1945-60 காலகட்டத்தில ஏராளமான காலனி நாடுகள் விடுதலை பெற்றன. 1960-80 காலத்தில் பல ஆப்பிரிக்க நாடுகள் விடுதலை பெற்றன. தெற்கு வியட்நாம் அமெரிக்க ஆதிக்கத்தை தகர்த்தது. 1975 இல் ஒன்றுபட்ட வியட்நாம் மலர்ந்தது. பல தென் ஆப்பிரிக்க நாடுகளில் காலனி ஆதிக்கம் முடிவுக்கு கொண்டுவரப்பட்டது. இதற்கும் பின்னர் தென் ஆப்பிரிக்க நிறவெறி அரசும் விலகியது. அங்கு தென் ஆப்பிரிக்க மக்களின் ஜனநாயக ஆட்சி மலர்ந்தது. இவை எதுவும் ஏகாதிபத்தியத்தின் கொடையாக கிடைக்கவில்லை. விடுதலை போராட்டங்கள் மூலமே கிடைத்தன. துரதிருஷ்டவசமாக, பலஸ்தீனம் மட்டும் இன்னும் விடுதலை பெறவில்லை. இதற்குப் பல காரணங்கள் உண்டு. அவற்றையெல்லாம் இந்த கட்டுரையில் ஆய்வு செய்வது சாத்தியம் இல்லை. ஆனால் சில முக்கிய வரலாற்று நிகழ்வுகளை நினைவு கூறுவது உதவிகரமாக இருக்கும்.

1950களின் துவக்கத்தில், அதற்கு முந்தைய ஆண்டுகளில் சியோனிஸ்டுகளால் விரட்டப்பட்ட 7 இலட்சம் பலஸ்தீனியர்கள்  தங்களது வீடு வாசலை இழந்து அகதிகளாக்கப்பட்டு, பல்வேறு அரபு நாடுகளுக்கும், வேறு இடங்களுக்கும் குடிபெயர்ந்தனர். 1956 இல் எகிப்தில் நாசர் தலைமையில் ஆட்சி அமைந்தபொழுது ஏற்கெனவே உருவாகியிருந்த அரபு தேசிய உணர்வுகள் வலுப்பெற்றன. பிரிட்டிஷ் மற்றும் பிரெஞ்சு ஏகாதிபத்தியங்கள் சூயஸ்  கால்வாயை எகிப்து அரசு நாட்டுடமையாக்கியதை எதிர்த்து, எகிப்து மீது  போர் தொடுத்தன. இதில் ஏகாதிபத்தியம் பக்கம் நின்று இஸ்ரேல் போரில் இணைந்தது. அமெரிக்க வல்லரசு பிரிட்டிஷ், பிரெஞ்சு நாடுகளை முழுமையாக ஆதரிக்கவில்லை. மற்ற முதலாளித்துவ வல்லரசுகளை பின்னுக்குத் தள்ளி வல்லரசுகள் வரிசையில் முதலிடம் பெறுவதே அமெரிக்க அரசின் நோக்கமாக இருந்தது. எகிப்தின் வெற்றி அரபு தேசிய உணர்வுகளை வலுப்படுத்தியது.

இச்சமயத்தில்தான் மக்கள் சீனம் உள்ளிட்ட பல வளரும் நாடுகள் இந்தோனேசியாவில் பாண்டுங் நகரில் கூடி அணிசேரா நாடுகளின் இயக்கத்திற்கு வித்திட்டன. அணிசேரா இயக்கத்தின் முக்கிய தலைவர்களாக அன்றைய இந்திய பிரதமர் நேரு, எகிப்தின் அதிபர் நாசர், யூகோஸ்லாவ் குடியரசின் அதிபர் டிட்டோ ஆகிய மூவரும் திகழ்ந்தனர். ஆனால், அரபு தேசிய உணர்வுகள் இக்காலத்தில் மேலும் முன்னுக்கு வந்தபோதிலும், மேற்கு ஆசிய நாடுகளில் பெரும்பாலும் ஜனநாயகம் மறுக்கும் ஆட்சிகளே உருவாயின. ஈரான், ஈராக், சவுதி அரேபியா, சிரியா, ஐக்கிய அரபு இராச்சியம், குவைத் உள்ளிட்ட இந்த நாடுகளில் கணிசமான கச்சா எண்ணய் இருப்பது அறியப்பட்டிருந்த நிலையில், இந்த நாடுகளில் இருந்த எண்ணெய் மற்றும் எரிவாயு வளங்கள் மீது அமெரிக்க வல்லரசின் கவனம் இருந்தது. இந்தப் பகுதியில் தனது செல்வாக்கை அதிகரித்துக் கொள்ளவும், ஜனநாயக இயக்கங்களை நசுக்கவும், அது முனைந்தது.

ஈரான் நாட்டில் எண்ணெய் வளங்களை நாட்டுடமையாக்க, அங்கிருந்த ஜனநாயக இயக்கம் நடவடிக்கை எடுத்தவுடன், அதன் பிரதமர் மொசதேக் சி.ஐ.ஏவால் படுகொலை செய்யப்பட்டார். ஜனநாயக ஆட்சி கலைக்கப்பட்டது. ஈரான் மன்னர் ஷாவின் கொடுங்கோல் ஆட்சியை அமெரிக்க அரசு ஆதரித்தது. அந்த நாட்டு ஆட்சியாளர்களுடன் நெருக்கமாக இருந்து, அங்கிருந்த முற்போக்கு சக்திகளை அழித்தொழிக்க பெரும் பங்கு ஆற்றியது. மேற்கு ஆசிய நாடுகளில் அரபு தேசியத்தை வளர விடாமலும், அது முற்போக்கு திசையில் செல்லாமலும் பார்த்துக்கொள்வதில் ஏகாதிபத்திய நாடுகள் கவனமாக இருந்தன. 1967 இல் இஸ்ரேல், எகிப்து மற்றும் சிரியா மீது வான்வழி தாக்குதல்கள் மூலம் அந்த நாடுகளின் விமானங்களை செயலற்றதாக ஆக்கியது. போர் தொடுத்த ஜோர்தான் மீதும் கடும் தாக்குதலை நிகழ்த்தியது. 

ஆறு நாட்கள் மட்டும் நிகழ்ந்த இப்போரில் எகிப்து, சிரியா, ஜோர்தான் ஆகிய மூன்று நாடுகளை வீழ்த்திய இஸ்ரேல், ஜோர்தானிடம் இருந்து ஜோர்தான் நதியின் மேற்கு கரை பகுதியையும், காஸா பகுதி மற்றும் சினாய் தீபகற்பத்தை எகிப்திடம் இருந்தும், கோலன் குன்றுகளை சிரியாவிடம் இருந்தும் கைப்பற்றியது. பின்னர் சினாய் தீபகற்பத்தை எகிப்திடம் திருப்பி கொடுத்தது. ஆனால் சிரியாவின் கோலன் குன்றுகளும், காஸா பகுதியும், ஜோர்தான் நதியின் மேற்கு பகுதியும் இஸ்ரேல் வசம் உள்ளன.  1973 ஆம்  ஆண்டிலும் யுத்தத்தில் இஸ்ரேல் வெற்றி பெற்றது. இதற்கெல்லாம்  அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் இராணுவ மற்றும் நிதி உதவிகள் முக்கிய பங்கு ஆற்றின.

1960களின் நடுப்பகுதியில் பலஸ்தீன தேசியம் என்ற கோட்பாடு பல நாடுகளில் அகதிகளாக வாழ்ந்துவந்த பலஸ்தீனிய அறிவுஜீவிகள் மத்தியிலும் மத்திய தர வர்க்கத்தினரிடமும் பலஸ்தீன தேசிய உணர்வை வளர்த்தெடுத்தது. இதே காலத்தில் பலஸ்தீனத்தின் பெரும்பகுதி இஸ்ரேலின் நேரடி கட்டுப்பாட்டில் வந்தது. 1967, 1973 போர்கள் ஒருபக்கம், இஸ்ரேல் ஒரு வலிமையான நாடு என்ற பிம்பத்தை ஏற்படுத்தியது. அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் விமர்சனமற்ற ஆதரவை பெற்ற நாடு என்பதும் தெளிவாகியது. மறுபுறம், பலஸ்தீனிய பிரச்சினையில் மேற்கு ஆசிய அரபு நாடுகளின் செல்வாக்கு பலவீனமானது. பலஸ்தீன தேசியம் வலுப்பெற்று தேச விடுதலைக்கான களம் இஸ்ரேலின் ஆக்கிரமிப்பிற்குள் இருந்த பலஸ்தீனம்தான் என்பதும் முன்னுக்கு வந்தது. 1967, 1973 போர்கள் முடிந்து, பலஸ்தீனம் மூன்று பகுதிகளைக் கொண்டதாக ஆகியது. ஒன்று, 1947 ஐ.நா சபை தீர்மானப்படி இஸ்ரேல் என்று வரையறுக்கப்பட்ட பகுதி; இரண்டு  காஸா பகுதி; மூன்று ஜோர்டான் நதியின் மேற்கு கரை பகுதி. 

1967 போருக்குப் பின்பும் 1973 போருக்குப் பின்பும் 1948 ஐ.நா தீர்மானத்தில் குறிப்பிடப்பட்ட  எல்லைகளை மீறி, இஸ்ரேல் கையகப்படுத்தி தனது ஆட்சியின் கீழ் கொண்டுவந்த பகுதிகள், இன்றுவரை நிறைவேற்றப்பட்ட அனைத்து ஐ.நா. தீர்மானங்களிலும் “ஆக்கிரமிக்கப்பட்ட பகுதிகள்” என்றே கருதப்படுகின்றன. ஆனால் நாம் ஏற்கெனவே குறிப்பிட்டுள்ளதுபோல்,  இஸ்ரேல் இவ்வாறு தான் ஆக்கிரமித்துள்ள பகுதிகளில், இஸ்ரேல் நாட்டில் இருந்து  யூதர்களை மேற்கு கரை பகுதியில் தொடர்ந்து  குடியமர்த்தி வருகிறது. இதன் மூலமும் பிறவழிகளிலும் பலஸ்தீன மக்களின் வாழ்வாதார உரிமைகளையும் குடி உரிமைகளையும் பறிக்கிறது. காஸா பகுதியை முற்றிலும் தனது பாதுகாப்பு வளையத்திற்குள் வைத்துள்ளது. காஸா பகுதி உலகின் மிகப்பெரிய திறந்தவெளி சிறை என்று கருதப்படுவதை நாம் ஏற்கெனவே சுட்டிக் காட்டியுள்ளோம்.

எனினும்,  1973க்குப் பின் பலஸ்தீன பிரச்சினைக்கு முற்றிலும் ஒரு புதிய பரிமாணம் வந்தது.

ஏகாதிபத்தியத்தின் நலம் காக்கும் செல்லப்பிள்ளை இஸ்ரேல்

1973ஆம் ஆண்டு நிகழ்ந்த போரில் இஸ்ரேல் அரபு நாடுகளை தோற்கடித்த போதிலும், சில முக்கிய மாற்றங்கள் இதனை அடுத்து நிகழ்ந்தன. இதில் மிக முக்கியமானது பெட்ரோலியம் ஏற்றுமதி செய்யும்  நாடுகளின் கூட்டமைப்பு (OPEC) உருவானது ஆகும். கச்சா எண்ணய் உற்பத்தியை கட்டுப்படுத்தி விலைகளை உயர்த்தும் அமைப்பாக செயல்படும் வலுமிக்க அமைப்பாக இது முன்வந்தது. 1973 இல் இந்த அமைப்பு  கச்சா எண்ணய் விலையை  மூன்று மடங்கு உயர்த்தியது.  ஏறத்தாழ இதே காலத்தில் இரண்டாம் உலகப்போருக்குப்பின் சுமார் 30 ஆண்டுகள் தொடர்ந்து நிகழ்ந்து வந்த முதலாளித்துவ முகாமின் பொருளாதார வளர்ச்சி சரிந்தது. புதிய சூழலில் மேற்கு ஆசியப் பகுதியில் நிலவிய அரசியல் களத்தில், அமெரிக்க வல்லரசு சில நுட்பமான மாற்றங்களை செய்ய முனைந்தது. இதில் ஒன்று, இஸ்ரேல்-பலஸ்தீன பிரச்சினைக்கு இஸ்ரேலும் ஏற்கக் கூடிய வகையில் தீர்வு காண்பது என்பதாகும். இதனை அன்றைய அமெரிக்க அதிபர் கார்ட்டர் முன்னெடுத்தார். ஆனால் இஸ்ரேல் எடுத்த நிலைபாடுகள் காரணமாக தீர்வை எட்ட முடியாமல் போனது.

பல பின்னடைவுகளின் மத்தியிலும் பலஸ்தீன விடுதலை இயக்கம் காணாமல் போய்விடவில்லை. அதன் புதிய எழுச்சிகள் காஸா மற்றும் மேற்கு கரை பகுதியில் மையமாகி வீறு கொண்டு நிகழ்ந்தன. முதல் மக்கள் எழுச்சி (ஆங்கிலத்தில்  இதனை first intifada என்று அழைத்தனர்) 1987 இல் நிகழ்ந்தது. இஸ்ரேலின் ஆக்கிரமிப்பு ஆட்சியை மீறி இது எழுந்தது. குழந்தைகள், இளைஞர்கள் உள்ளிட்டு பல நூறாயிரம் மக்கள் பங்கேற்றனர். பலருக்கு இதுவே முதல் கிளர்ச்சி அனுபவம்.   பலவகையான ஒத்துழையாமை நடவடிக்கைகள், பெருந்திரள்  ஆர்ப்பாட்டங்கள், பொது வேலை நிறுத்தங்கள், இஸ்ரேலிய பொருட்களை விலக்கி வைத்தல், வரிகொடா இயக்கம், அரசியல் சுவரெழுத்துக்கள், இஸ்ரேலிய இராணுவம் பள்ளிக்கூடங்களை மூடிய பொழுது இரகசியமாக நடத்தப்பட்ட பள்ளிக்கூடங்கள் என்று பல வடிவங்களில் மக்கள் போராடினர். இஸ்ரேலிய இராணுவத்துடன் நேரடியாகவும் தலைமறைவாகவும் மக்கள் மோதினர். இஸ்ரேல் கடும் அடக்குமுறையை ஏவி விட்டது. 1987-91 காலத்தில் மட்டும் இஸ்ரேல் இராணுவம் மேற்கு கரை பகுதியில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்களை கொன்றனர். இதில் 200 பேர் 16 வயதுக்கும் கீழானவர். இக்காலத்தில் உலகிலேயே தனிநபர் (per capita) கணக்கில் பார்த்தால் மிக அதிகமாக சிறையில் இருக்கும்  மக்கள் எண்ணிக்கை இஸ்ரேலில்தான் இருந்தது.

மக்கள் எழுச்சியை கண்ட பலஸ்தீன தேசியக்குழு முக்கிய முடிவுகளை அறிவித்தது. காஸா  பகுதி மற்றும் பலஸ்தீன மேற்கு கரை ஆகிய இரண்டு பகுதிகளையும் கொண்ட சுதந்திர பலஸ்தீன நாடு என்று அறிவித்தது. 1948 ஐ.நா தீர்மான அடிப்படையில், இஸ்ரேல் நாடு அமைவதையும் அங்கீகரித்தது. இவ்வெழுச்சிக்கு முன்பு, மதசார்பற்ற பலஸ்தீன விடுதலை அமைப்பிற்கு எதிராக இஸ்லாமிய அமைப்புகளுக்கு இஸ்ரேல் ஆதரவு கொடுத்து வந்தது. இந்த அணுகுமுறையை பின்னாட்களிலும் பயன்படுத்தியது. எனினும் பலஸ்தீன விடுதலை இயக்கத்துடன் (PLO) பேச மாட்டோம் என்று பிடிவாதமாக இருந்த இஸ்ரேல் அரசு, மக்கள் எழுச்சியைக் கண்டபின் இரகசிய பேச்சுவார்த்தைகள் நடத்தியது. இதன் விளைவாக 1993 இல் இஸ்ரேல்-பலஸ்தீன விடுதலை இயக்கம் இருவரும் ஏற்றுக்கொண்ட  கொள்கை உடன்பாடு அறிக்கை அமெரிக்க தலைநகரான வாஷிங்டனில்  வெளியிடப்பட்டது. எனினும், கடந்த முப்பது ஆண்டுகளாக இப்பிரச்சினை முடிவுக்கு கொண்டுவரப்பட்டு அமைதி ஏற்படவில்லை.

இந்த 30 ஆண்டுகளில் உலகில் பல முக்கிய மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன. 1993 இல் ஒரு துருவ உலகின் ஆகப்பெரிய வல்லரசாக அமெரிக்கா இருந்தது. இன்று பல துருவப் போக்குகள் கணிசமாக வளர்ந்துள்ளன. மக்கள் சீனம், பன்னாட்டு அரசியலில் குறிப்பிடத்தக்க சக்தியாக முன்வந்துள்ளது. உக்ரைன் பிரச்சினையிலும், இன்றைய பலஸ்தீன போரிலும் பெரும்பாலான வளரும் நாடுகளும், மக்கள் சீனமும், ரஷ்யாவும், அமெரிக்காவுடனும் ஜி-7 இல் உள்ள இதர ஏகாதிபத்திய நாடுகளுடனும் ஒத்துப்போக மறுத்துவிட்டன. மேற்கு ஆசியப் பகுதியில் மக்கள் சீனத்தின் முயற்சிகள் ஈரான்-சவுதி அரேபியா நாடுகளுக்கிடையே நல்லுறவை ஏற்படுத்தியுள்ளது. இஸ்ரேலுடன் சவுதி அரேபியா ஒப்பந்தம் காணும் என்ற அமெரிக்க-இஸ்ரேல் கனவு தவிடு பொடியாகிவிட்டது. அரபு மக்கள் மட்டுமின்றி யூத மக்களில் குறிப்பிடத்தக்க பகுதியினரும் இஸ்ரேலின் நடவடிக்கைகளுக்கெதிராக களம் இறங்கியுள்ளனர். ஆனால் ஏகாதிபத்திய வல்லரசுகள் உலக அரங்கில் ஏற்பட்டுள்ள ஜனநாயக மாற்றங்களை பார்க்க மறுக்கின்றனர்.

காஸாவில் உடனடி போர்நிறுத்தம் கோரும் ஐ.நா அவையின் தீர்மானத்திற்கு உலகெங்கும் பெரும் ஆதரவு உள்ளபோதிலும், ஏகாதிபத்திய நாடுகள் எதிர்நிலை எடுத்துள்ளனர். எனினும், எதிர்வரும் காலம் இஸ்ரேலின் கொடுங்கோல் ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைத்தே தீரும். கடந்த ஒரு மாத காலமாக ஏகாதிபத்திய நாடுகள் உட்பட உலகெங்கும் மக்கள் வீதிகளில் இறங்கி பலஸ்தீன விடுதலைக்கு ஆதரவாகவும், இஸ்ரேலின் இனப்படுகொலை நடவடிக்கைகளுக்கு எதிராகவும்,  வலுவாகக் குரல் கொடுத்து வருகின்றனர். இன்றைய போரில் தான் வென்றதாக இஸ்ரேல் கருதினாலும், இனி பலஸ்தீன மக்களுடன் நியாயமான ஒப்பந்தம் ஏற்படாதவரை, இஸ்ரேல் அமைதியாக வாழ முடியாது. பலஸ்தீனத்தின் பெரும்பகுதி மக்களை அடக்கி ஆள்வது என்பது, மாறிவரும் உலகில், ஏகாதிபத்தியம் பலவீனம் அடைந்துவரும் பின்னணியில், சாத்தியம் இல்லை.     

இஸ்ரேலின் இனப்படுகொலை போரை தடுத்து நிறுத்துக!

சிக்கலான இஸ்ரேல்-பலஸ்தீன பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காண்பது எளிதல்ல. ஏகாதிபத்தியத்தின்  செல்லப்பிள்ளையான இஸ்ரேல், பலஸ்தீன மக்களை ஒரு பொருட்டாகவே கருதவில்லை. உலக அளவில் ஏகாதிபத்திய எதிர்ப்பு சக்திகள் வலுவாக ஒன்றிணைந்து போராடினால்தான் ஒரு தீர்வு கிடைக்கும். அது ஒருபுறம் இருக்க, நம் கண் முன் ஒரு இனப் படுகொலை நடக்கிறது. அது தடுத்து நிறுத்தப்படவேண்டும். இஸ்ரேல் காஸா மீதான தாக்குதலை உடனடியாக நிறுத்த வேண்டும். போர் நிறுத்தம் உடனடி அவசியம். இன்றைய மாறிவரும் பன்னாட்டு சூழலில், வளரும் நாடுகளும் அரபு நாடுகளும், மக்கள் சீனம் மற்றும் ரஷ்யா உள்ளிட்ட இதர நாடுகளுடன் இணைந்து இஸ்ரேல் மீது போரை நிறுத்த கடும் அழுத்தம் தர வேண்டும்.

முன்பே குறிப்பிட்டதுபோல், அரபு நாடுகளில் மட்டுமின்றி, அமெரிக்காவிலும் கனடாவிலும்  ஐரோப்பிய நாடுகளிலும், பல ஆசிய, ஆப்பிரிக்கா, இலத்தீன் அமெரிக்க நாடுகளிலும், இந்தியாவிலும், பலஸ்தீன மக்களுக்கு ஆதரவாகவும், போர் நிறுத்தம் கோரியும், பிரம்மாண்டமான மக்கள் போராட்டங்கள் நடந்து வருகின்றன. ஜனநாயக எண்ணம் கொண்ட இலட்சக்கணக்கான யூதர்களும் இப்போராட்டங்களில் பங்கேற்று வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.  இது இஸ்லாமியர்களுக்கும் யூதர்களுக்குமான மோதல் அல்ல. பலஸ்தீன மக்கள்  தமது நாட்டில் வாழும் உரிமையை மீட்டெடுப்பதே போராட்டத்தின் நோக்கமாக இருக்க முடியும். இஸ்ரேல் மக்களும் பலஸ்தீன மக்களும் இரு அண்டை நாடுகளாக அமைதி காத்து வாழும் நட்பு நாடுகளாக மலர வேண்டும். மலரும். இந்த நீண்ட காலக் கனவு நிறைவேற முதல் தேவை உடனடி போர் நிறுத்தம்.

Tags: