ராமர் கோவில் திறப்புவிழா

-எஸ்.ஏ.மாணிக்கம்

மக்கள் ஒற்றுமை, மதச்சார்பின்மை பாதுகாக்கப்பட வேண்டுமானால் வகுப்புவாத அரசியலின் மீது மென்மையான அணுகுமுறையும் ஆபத்தானது என்பதையே அயோத்தியின் நிகழ்வுகள் இந்திய அரசியலுக்கு பாடம் புகட்டியுள்ளது.

இராமாயணக் காலம் திரேத யுகம் எனக் கூறப்படுகிறது. அதாவது சுமார் 9 இலட்சம் ஆண்டுகளுக்கு முற்பட்டது.

இந்திய உபகண்டத்தில் மனிதர்கள் குடியேறத் துவங்கிய காலத்தைப்பற்றிய  பல்வேறு தொல்லியல் துறை வல்லுநர்களின் ஆய்வுப்படி சுமார் 65 ஆயிரம் வருடங்களிலிருந்து 85 ஆயிரம் வருடங்களுக்கு உட்பட்டிருக்கலாம் என்கின்றனர்.

இராமாயணம் – ஒரு படைப்பே, உண்மை அல்ல

வால்மீகி அல்லது மற்றவர்களால் கி.மு இரண்டாம் நூற்றாண்டின் இறுதிக்கும், கி.பி முதலாம் நூற்றாண்டிற்கும் இடைப்பட்ட காலத்தில் இராமாயணத்தின் அயோத்தியா மற்றும் இலங்கா காண்டம்  எழுதப்பட்டுள்ளன. அடுத்த நூற்றாண்டில் ஆதி  காண்டம் மற்றும் உத்திர காண்டங்கள் எழுதப்பட்டன. கி.பி நான்காம் நூற்றாண்டில் தான் தற்போதைய இறுதி வடிவம் பெற்றுள்ளது.

பாராயண கதையாக இருந்த இராமாயணம் எழுத்து வடிவமாக இடம் பெற 400 ஆண்டுகளுக்கு மேலானது என்பது குறிப்பிடத்தக்கது. கி.மு 3ஆம் நூற்றாண்டுக்கும் கி.பி இரண்டாம் நூற்றாண்டுக்கும் இடையே இராமாயணம், மகா பாரதம், மனுஸ்மிருதி ஆகிய முக்கியப் படைப்புக்கள் உருவாகின. இக்காலத்தில் தான் அந்நிய படையெடுப்புக்கள், அதன் மூலம் அந்நிய குடியேற்றங்கள் நிகழ்ந்துள்ளன.

சமூக, பொருளாதார, கலாச்சார மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன. அடிமை சமூகத்தை நியாயப்படுத்தவும், வணிக மற்றும் போர்த் தொழிலை நியாயப்படுத்தவும், சமூக அடுக்குகள் தவிர்க்கமுடியாதவை என்பதையும், அரசர்களின் இருப்பை நியாயப்படுத்தி அவர்களை தெய்வநிலைக்கு உயர்த்தியும் இத்தகைய காப்பிய இலக்கியங்கள் உருவாக்கப்பட்டன.

சீதை, திரெளபதி கதாபாத்திரங்கள் வாயிலாக இதிகாசங்களும். மனுத் தத்துவங்களும் பெண்ணடிமைத்தனத்தை முன்னிறுத்தின. ராமர் பற்றிய கதை ராம-கதா என்ற வழியில் தான் வெகுகாலமாக சொல்லப்பட்டு வந்தது. அதுவே ஒரு காவியமாக செய்யுள் வடிவத்தில் வால்மீகியால் இராமாயணம் ஆக படைக்கப்பட்டது. காவியம் என்ற அடிப்படையில் அதில் கற்பனை கதாபாத்திரங்கள், இடங்கள் இடம்பெற்றன. வரலாற்றியல் ரீதியான இதற்கான ஆதாரங்கள் எதுவும் இல்லை. காவியம் என்ற வகையில் இது நம்பிக்கையின் அடிப்படையில் பேசப்படுகிறது.

தொல்லியல் ஆதாரங்கள் இல்லை
இராமாயணத்தில் கூறப்பட்டுள்ள மாளிகைகளும், கட்டிடங்களும் நவநாகரீக நாட்டுப்புற காட்சிகளே தவிர கி.மு. 8-ஆம் நூற்றாண்டு தொல்லியல் ஆய்வுகளில் இவ்வாறான கட்டிடங்கள் அல்லது சிதைவுகள் எதுவும் காணப்படவில்லை. உத்தரப்பிரதேசத்தின் பைசாபாத் மாவட்டத்தின் சரயுநதியின் தெற்கு கரைப்பகுதியின் குடியேற்றம் பற்றி தொல்லியல் ஆய்வுகளை மேற்கொண்டதில் கி.மு.700 ஆண்டுகளுக்கு முன்னதாக இருந்திருக்க முடியாது என்கின்றனர்.

வால்மீகி  குறிப்பிடும் இராமாயணத்தின் அயோத்தி உண்மையானால் நேபாள நாட்டின் சரயு நதியின் தெற்குப் பகுதியிலிருந்து 13 முதல் 14 கி.மீ.தூரத்தில் அமைந்திருக்கலாம் என்கின்றனர். புத்தமத ஏடுகளில் கோசல நாட்டின் மிக முக்கிய மான நகரங்களாக ஸ்ரவஸ்தி மற்றும் சஹேதா ஆகிய வற்றையே குறிப்பிடுகின்றன. ஜைன ஏடுகளும் இதையே தான் குறிப்பிடுகின்றன.  குப்த மன்னன் காலத்தில் தான் ஸஹேதா என்றும் இடம் அயோத்தியாவாக பெயர்மாற்றம் ஆனது.

கி.பி  5-ஆம் நூற்றாண்டில், இரண்டாம் சந்திரகுப்தன் தன்னுடைய வசிப்பிடத்தை சஹேதாவிற்கு மாற்றிய போது அந்த பெயரை அயோத்தியா என்று மாற்றிக் கொண்டார். அவர் ராமபக்தன் என்பதற்காக அல்ல.

தன்னை சூரிய வம்ச வழிவந்தவன் என்ற பெருமைப்படுத்திக் கொள்ள நகரின் பெயரை அயோத்தியா என்று மாற்றிக் கொண்டார். கி.பி 7-ஆம் நூற்றூண்டுக்கு பின்னர் எழுதப்பட்ட புராணங்களில் கோசல நாட்டின் தலைநகராக அயோத்தியை குறிப்பிடுகின்றன. திரேத யுகத்தில் இருந்த அயோத்தியாவை மீண்டும் கண்டுபிடிக்க வேண்டும் என்ற ஆர்வத்தில் இரண்டாம் சந்திரகுப்தன் இதைப் பற்றி தெரிந்த தீர்த்தங்கர்களின் அரசன் பிரயாகாவை சந்திக்கிறார்.

ஆனால் அவர் சொன்ன இடத்தையும் கண்டுபிடிக்க முடியவில்லை. இறுதியில் ஒரு யோகியை சந்திக்கிறார். அந்த யோகி  ஒரு பசுவையும் அதன் கன்றையும் அழைத்துச்செல், ராமன் பிறந்த இடம் இருக்கும் இடத்தை நெருங்கும்போது கன்றுக்குட்டி தானாக பால் சுரக்கும் அந்த இடம் தான் ஜென்மபூமி. அவ்வாறே கன்றுக்குட்டிக்கு பால் சுரந்த இடமே பழங்கால அயோத்தியாவாக முடிவாக்கப்பட்டது.

யுவான் சுவாங்

புத்த, ஜைன தலமே அயோத்தி

கி.பி ஐந்தாம் நூற்றாண்டு முதல் எட்டாம் நூற்றாண்டு வரையிலும் எழுதப்பட்ட ஏடுகளிலோ அல்லது உள்ளூர் மக்கள் மூலமாகவோ இராமாயணக் கால அயோத்தியாவைப் பற்றியோ அல்லது ராமரை வழிபட்டதற்கான எந்தவொரு குறிப்புமோ கிடைக்கப்பெறவில்லை. இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட சீன அறிஞர் யுவான் சுவாங் புத்தமதத்தினரின் முக்கிய மையமாக அயோத்தியா இருந்தது எனவும் பல புத்த  பிட்சுகளும் பிற மத துறவிகளும் இருந்ததாக குறிப்பிடுகிறார்.

மேலும் அயோத்தியாவில் சில காலம் புத்தர் தங்கி இருந்ததாகவும் குறிப்பிடுகிறார். ஜைன மதத்தினரின் புனிதத் தளங்களில் முக்கிய மானதாக  அயோத்தி இருந்துள்ளது. ஜைன தீர்த்தங்கர்களில் முதலாவது மற்றும் நான்காவது தீர்த்தங்கர்களின் பிறப்பிடமாக இருந்துள்ளதாகவும் தகவல்உள்ளது.

13 ஆம் நூற்றாண்டில் தான் ராம வழிபாடு துவங்கியது. துவக்கத்தில் வைணவப் பிரிவினர் விஷ்ணுவின் அவதாரமாக ராமரை வழிபட்டதும் அதையொட்டி இந்தி மொழியில் கதைகள் உருவாக்கப்பட்டதும் துவங்கியது. 15 மற்றும் 16-ஆம் நூற்றாண்டுகளில் கூட வைணவத்தினர் அயோத்தியில் குறிப்பிடும்படியாக இருக்கவில்லை. ராம வழிபாட்டைக்காட்டிலும் சிவ வழிபாடுதான் அதிகமாக அக்காலத்தில் இருந்தது. 18 ஆம் நூற்றாண்டுக்கு பிறகே சாதுக்கள் பெருமளவில் அயோத்தியாவில் தங்கினர். அதையொட்டி அயோத்தியில் பல கோவில்கள் கட்டப்பட்டுள்ளன.

கோவில்கள் கட்டிய இஸ்லாமிய நவாபுகள்

இஸ்லாமிய நவாபுகள், சத்திரிய போர்ப்படைகளின் ஆற்றலை தங்களின் ஆட்சிக்கு பாதுகாப்பாக வைத்துக்கொள்ளும் வகையில் அவர்களுக்கு  தாராளமான உதவிகளை செய்து கொடுத்தனர். இந்து  கோவில்களுக்கு ஏராளமான தானங்களை வழங்கியுள்ளனர். அயோத்தி நவாபின் திவான் சப்தர்ஜங் அயோத்தியாவில் கோவில்கள் கட்டவும் புனரமைக்கவும் உதவி செய்துள்ளார். அயோத்தியில் அனுமன் மலையில் கோவில் கட்ட நிலங்களை தானமாக அளித்துள்ளார்.

1855 ஆம் ஆண்டில் அயோத்தியில் அனுமன்கார் கோவில் பிரச்சனையில் இந்து நாகா சாதுக்களுக்கும், சன்னி பிரிவு இஸ்லாமியர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. அப்போதைய அதிகாரத்தில் இருந்த நவாப் வாஹித் அலி பிரச்சனைகளை கண்டறிய மாவட்ட அதிகாரி அஹா அலி கான், இந்து நிலப்பிரபு ராஜா  மான்சிங், மற்றும் ஆங்கிலேயப் படையில் இருந்த  தலைமை அதிகாரி ஆகியோரைக் கொண்ட முத்தரப்பு கமிட்டியை அமைத்தார். வகுப்புவாத சக்திகளினால் உடன்பாட்டிற்கு வர முடியாத நிலையில்  வாஹித் அலி, இஸ்லாமிய சமூக மக்களை ஒன்றுபடுத்தி சுமூக நிலையை உருவாக்கியதோடு, கலவரச் சூழலை உருவாக்கிய மவுலவி அலியின் சொத்துக்களை பறி முதல் செய்தார். கலவரத்திற்கு உடந்தையாக இருந்த 400 இற்கும் மேற்பட்ட சன்னி பிரிவு இஸ்லாமியர்களை இராணுவத்தை வைத்து கொன்றார்.  மதத்திற்கு அப்பாற்பட்டு நிஜாம் வாஹித் அலி ஷா நடவடிக்கை எடுத்தார் என வரலாறு உறுதி செய்கிறது.

ராமர் கோவில் இருந்ததா? இடிக்கப்பட்டதா?

மன்னர் அக்பரின் சமகாலத்தவரும், அதே வட்டாரத்தில் வசித்தவரும், சிறந்த ராம பக்தருமான துளசி தாசர், அயோத்தியில் ராமர் கோவில் இடிக்கப்பட்டு அந்த இடத்தில் மசூதி கட்டப்பட்டதான எந்தவொரு குறிப்பினையும் எழுதி வைக்கவில்லை.

பாபர் தன்னுடைய வாழ்க்கை சரித்திரத்தை பதிவு செய்த பாபர்நாமாவில் கூட, பாபர் அயோத்திக்கு சென்றதான தகவல் இல்லை. இப்ராஹிம் லோடியை தோற்கடித்த பிறகு பானிப்பட்டில் ஒரு மசூதி பாபர் பெயரால் 1528-29 ஆம் ஆண்டில் கட்டப்பட்டது. இது பாபர் மசூதி என்று  அழைக்கப்படுகிறது. தற்போது இந்திய தொல்லியல் துறையின் கீழ் உள்ளது.

முதல் வழக்கு

1885 ஆம் ஆண்டு துறவி மஹந்த் ராகுலதாஸ் ராமஜென்மாஸ்டமி இன்ஸ்டிட்யூட் என்ற பெயரில் அயோத்தி மசூதி வளாகத்தில் 17 அடிக்கு 21 அடி நிலம் ஒதுக்கீடு செய்து இந்துக்கள் கோவில் கட்டி வழி பட அனுமதிக்க வேண்டும் என பைசாபாத் சப் கோர்ட்டில் வழக்கு தொடுத்தார். இதன்மீது 1886 நவம்பர் 1 ஆம் திகதியன்று நீதித்துறை ஆணையர் இவ்வழக்கு கலவரத்தை ஏற்படுத்தி சமூக அமைதியை சீர்குலைக்கும் எனவும் இந்துக்கள் இந்த இடத்தை உரிமை கோரமுடியாது என பைசாபாத் நீதிமன்றம் மனுவை நிராகரித்தது.

1934-இல் இந்துக்கள் தரப்பிலிருந்து ஆயிரக்கணக்கானோர் மதவாத சக்திகளால் திரட்டப்பட்டு மசூதியை தகர்க்க முற்பட்டனர். இதில் மசூதியின் ஒரு பகுதி தூண்கள் சேதமாகின. பிரிட்டிஷ் இந்திய அரசு சேதமடைந்த மசூதியை புனரமைத்து கொடுத்தது. 1949 ஆம் ஆண்டு டிசம்பர் 22, 23 திகதிகளில் ஒரு  கும்பல் மசூதிக்குள் புகுந்து ராமர் சிலைகளை வைத்தனர். இதையடுத்து இரு தரப்பிலும்  நீதிமன்ற வழக்குகள் தொடரப்பட்டன. கலவர சூழலையொட்டி மசூதிக்குள் வழிபாடு நடத்த அனுமதிக்கப்படாமல் பூட்டி  வைக்கப்பட்டது. 1986 ஆம் ஆண்டில் தான் வழி பாட்டிற்காக திறந்துவிடப்பட்டது.

இந்து மற்றும் இஸ்லாமிய அமைப்புக்களின் சார்பில் தொடரப்பட்ட வழக்குகள் நீண்ட காலத்திற்குப் பிறகு 2010 அலகாபாத் உயர்நீதிமன்றம் சர்ச்சைக்குரிய இடத்தை மூன்றாக பிரித்து உ.பி வக் போர்டு, இந்து மகாசபையின் ஆதரவு அமைப்பு ராம் லல்லா மற்றும் நிர்மோஹி அஹாரா ஆகிய மூன்று அமைப்புக்களுக்கும் மூன்றில் ஒரு பாகம் விகிதத்தில் பிரித்து தர உத்தரவிட்டது. மூன்று அமைப்புக்களும் ஏற்றுக் கொள்ளவில்லை. உச்சநீதிமன்றத்திற்கு மேல் முறையீடு செய்தன.

‘நம்பிக்கை’யை ஏற்றுக் கொண்ட நீதிமன்றம்

2019 நவம்பர் 9 ஆம் திகதியன்று 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு நீதிமன்றம், அலகாபாத் உயர்நீதிமன்ற உத்தரவுகளை ஏற்கவில்லை. சர்ச்சைக்குரிய 2.7 ஏக்கர் நிலத்தை மத்திய அரசு கையகப்படுத்தி ஒரு டிரஸ்ட் அமைத்து அதன் மூலமாக ராமர் கோவில் கட்டிக்கொள்ளலாம்.

இஸ்லாமியர்களுக்கு 5 ஏக்கர் நிலத்தை மாற்று இடத்தில் வழங்கி  அங்கு மசூதி கட்டிக்கொள்ளலாம் என்று ஒரு தீர்வை அளித்தது. இந்துக்கள் ராமர் பிறந்த இடம் அயோத்தி என்பதில் நம்பிக்கை கொண்டிருப்பதால் அது ராமரின்  பூமி என்பதில் எந்த சிக்கலும் இல்லை; எனவே நம்பிக்கையின் அடிப்படையில் அவர் தான் அந்த இடத்திற்கு சொந்தக்காரர் என உச்சநீதிமன்றம் குறிப்பிட்டது. சன்னி வக்போர்டு, உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பினையொட்டி 5 ஏக்கர் நிலம் வழங்கப்படுமானால் அங்கு மசூதியும், மருத்துவமனையும், நூலகமும், இந்தோ-இஸ்லாமிக் ஆய்வு மையமும் ஏற்படுத்துவோம் என 2020 பெப்ரவரியில் நடைபெற்ற வக்போர்டு முடிவு செய்தது.

ஆனால் அதன் தற்போதைய நிலை என்னவென்று தெரியவில்லை. அயோத்தியில் மேற்கொள்ளப்பட்ட பல்வேறு குழுக்களின் அகழாய்வு பணிகளின் முழு முடிவுகளையும் உச்சநீதிமன்ற பரிசீலிக்கவில்லை. குறிப்பாக 1883-83 ஆம் ஆண்டுகளில் அயோத்தியில் ஆங்கில அதிகாரியான கன்னிங்ஹாம் அகழ்வாராய்ச்சி மேற்கொண்டார்.

இவர் இந்திய தொல்லியல் துறையின் முதல் தலைவர் ஆவார். அவர் தன்னுடைய ஆய்வில் அயோத்தி நகரத்தின் மையப்பகுதியில் ராமர் பிறந்த ஜென்மபூமி இருக்கலாம் எனவும் அதேவேளையில் இராமாயண கதையின் வாய்வழி மரபுகளை பதிவு செய்தபோது ராமர் பிறந்த ஜென்மபூமி என்பதைக் காட்டிலும் பாபர் மசூதி, அழிக்கப்பட்ட கோவில் மீது  கட்டப்பட்டதாக எந்தவொரு மரபுவழி கதைகள் ஏதும் கிடைக்கப்பெறவில்லை என்று குறிப்பிட்டுள்ளார். ஆனால் உச்சநீதிமன்றம் கன்னிங்ஹாம் ஆய்வு மற்றும் அவரது சாட்சியங்களை தனது தீர்ப்பில் புறக்கணித்துள்ளது என்று தொல்லியல் அறிஞர்கள் கருத்துக்களை தெரிவித்துள்ளனர்.

சட்டத்தை அமுலாக்குங்கள்!

உச்சநீதிமன்ற தீர்ப்பின் ஒரு பகுதியில் 1996 மத  வழிபாட்டு இட சட்டத்தை பாராட்டியுள்ளது. அயோத்தியா பிரச்சனைகள் போல எதிர்காலத்தில் உருவாவதை தவிர்க்கும் வகையில் இந்த சட்டத்தை அமுலாக்குவதை உறுதிப்படுத்த வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மட்டுமே இதோடு இணைத்து கருத்து தெரிவித்தது. தற்போது காசி ஞானவாபி மசூதி விவகாரம் கிளப்பப்பட்டு நீதிமன்றத் தலையீட்டிற்கு பிறகு ஆய்வுப்பணி துவங்கியுள்ளது.

1947 அன்று நடைபெற்ற ஓகஸ்ட் 15 இற்கு முன்பான வழிபாட்டுத் தலத்தையும் முடக்கி மாற்றுவதை தடை செய்யும். 1996 ஆம் ஆண்டு சட்டத்தினை உறுதிப்படுத்த வேண்டும் என்ற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வேண்டுகோளின் முக்கியத்துவம், நீதிமன்றங்களின் கவனத்திற்கு இல்லாதது அடுத்தடுத்த மத வழிபாட்டு பிரச்சனைகள் மூலம்  வகுப்புவாத அரசியலுக்கு நீதிமன்றங்களே கதவுகள் திறக்க அனுமதிக்கின்றனவா என்ற கேள்வியை உருவாக்கியுள்ளது. இத்தகைய பின்னணியில், 22.01.2024 அன்று நடைபெற்ற ராமர் கோவில் திறப்புவிழா, ஒரு மத நிகழ்வு  அல்ல; மாறாக, ஆர்.எஸ்.எஸ் – பா.ஜ.கவின் அப்பட்டமான அரசியல் நிகழ்வே என்பதை நாடறியும்.

Tags: