பாரதிய ஜனதாக்கட்சிக்கு கோடி கோடியாய் நன்கொடை – பகுதி 1

விவேகானந்தன்

டந்த 5 ஆண்டுகளில் நாடு முழுக்க 30 கம்பெனிகள் சி.பி.ஐ, அமுலாக்கத்துறை, வருமான வரித்துறை போன்றவற்றின் ரெய்டு நடவடிக்கைகளுக்கு உள்ளானதற்குப் பிறகு பா.ஜ.கவிற்கு 335 கோடி ரூபாயை நன்கொடையாக அளித்திருப்பதாக நியூஸ் லாண்ட்ரி (News Laundry) மற்றும் தி நியூஸ் மினிட் (The News Minute) ஊடகங்கள் இணைந்து நடத்திய ஆய்வில் தெரிய வந்துள்ளது. தமிழ்நாட்டைச் சேர்ந்த பல நிறுவனங்களும் இந்த பட்டியலில் இடம்பெற்றுள்ளன.

ஐந்து ஆண்டுகளுக்கான தேர்தல் ஆணையத்தின் நிதி ஆவணங்கள் மற்றும் மத்திய புலனாய்வு அமைப்புகளின் விசாரணை அறிக்கைகள் உள்ளிட்டவற்றை ஆராய்ந்து இந்த விவரங்களை வெளிக்கொண்டு வந்திருக்கிறார்கள்.

ஆய்வின் முக்கிய முடிவுகள்

• இந்த 30 நிறுவனங்களில் 23 நிறுவனங்கள் அவர்களின் அலுவலகங்களில் ரெய்டு நடத்தப்படுவதற்கு முன்பு வரை பா.ஜ.கவிற்கு எந்த நன்கொடையும் அளித்ததில்லை. ரெய்டுகளுக்குப் பிறகு அவை 187.58 கோடியை பா.ஜ.கவிற்கு அளித்துள்ளன.

• 4 நிறுவனங்கள் மொத்தமாக 9.05 கோடி ரூபாயை ரெய்டு நடந்த 4 மாத காலத்திற்கு உள்ளாக அளித்துள்ளனர்.

• ஏற்கனவே பா.ஜ.கவிற்கு நன்கொடை அளித்துக் கொண்டிருந்த 6 நிறுவனங்கள் ரெய்டு நடவடிக்கைக்கு உள்ளான பிறகு, பெரிய தொகையினை பா.ஜ.கவிற்கு அளித்துள்ளன.

• இதற்கு முன்பு பா.ஜ.கவுக்கு நன்கொடை அளித்துவந்த 6 நிறுவனங்கள் இடையில் ஒரு ஆண்டு நன்கொடையை நிறுத்திய பிறகு மத்திய புலனாய்வு நிறுவனங்களின் நடவடிக்கைக்கு உள்ளாகியுள்ளன.

• இந்த 30 நிறுவனங்களைத் தவிர்த்து, பாஜகவிற்கு நன்கொடை அளித்துவரும் பிற 3 நிறுவனங்கள் ஒன்றிய அரசிலிருந்து சில சலுகைகளைப் பெற்றுள்ளன.

2018-19 நிதி ஆண்டிலிருந்து 2022-23 வரையிலான ஆவணங்களின் அடிப்படையில் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது. ஒருபுறம் நிறுவனங்கள் மீது ரெய்டு நடத்தப்பட்டதற்குப் பிறகு பா.ஜ.கவிற்கு நன்கொடைகள் அளிக்கப்பட்டிருக்கிறது. மற்றொருபுறம் பா.ஜ.கவிற்கு நன்கொடை அளிக்கும் நிறுவனங்கள் சில உரிமங்களையும் அனுமதிகளையும் பெற்றுள்ளன.

யார் அந்த நிறுவனங்கள்? எவ்வளவு கொடுத்தார்கள் விரிவாக பார்க்கலாம்

1) சோம் டிஸ்டில்லரிஸ் (Som Distilleries)

இது மத்தியப் பிரதேசத்தில் இயங்குகிற ஒரு மதுபான நிறுவனமாகும். ஜே.கே.அரோரா மற்றும் ஏ.கே.அரோரா சகோதரர்களுக்கு சொந்தமானது இந்நிறுவனம். இந்த நிறுவனம் 2018-19 இல் 4.25 கோடி ரூபாயை பா.ஜ.கவிற்கு நன்கொடையாக அளித்தது. ஆனால் அடுத்த ஆண்டு எந்த நன்கொடையும் அளிக்கவில்லை.

ஜூலை 2020 இல் 8 கோடி ரூபாய்க்கு ஆல்கஹாலில் தயாரிக்கப்படும் சானிடைசர்கள் விற்பனையில் வரி ஏய்ப்பு செய்ததாக அரோரா சகோதரர்கள் ஜி.எஸ்.டி. உளவுப்பிரிவு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டனர். இரண்டு முறை பிணை நிராகரிக்கப்பட்ட அவர்களுக்கு ஓகஸ்ட் மாதம் பிணை கிடைத்தது.

அவர்கள் விடுதலையான 10 நாட்களில் சோம் டிஸ்ட்டில்லரிஸ் நிறுவனத்தின் மூலம் பா.ஜ.கவிற்கு 1 கோடி ரூபாய் நன்கொடை அளிக்கப்பட்டுள்ளது. மேலும் 1 கோடி ரூபாய் இரண்டு தவணையாக அடுத்தடுத்த மாதங்களில் அளிக்கப்பட்டுள்ளது.

மே 2021 இல் 2 கோடி ரூபாய் நன்கொடை அளித்துள்ளனர். ஆனால் அதற்குப் பிறகு அவர்களின் விலை நிர்ணயத்தில் தவறு நடந்திருப்பதாக Competition Commission of India ரெய்டு நடத்தியது. அடுத்த ஆண்டு ஜூன் 2022 மேலும் 1 கோடி ரூபாய் பா.ஜ.கவிற்கு அளித்துள்ளனர். ஆனால் கடந்த நவம்பர் மாதத்தில் சட்டமன்றத் தேர்தலையொட்டி மீண்டும் அவர்களது அலுவலகங்களில் ரெய்டு நடத்தப்பட்டுள்ளது.

2). ஐ.ஆர்.பி இன்ஃப்ராஸ்ட்ரக்சர் டெவலப்பர்ஸ் லிமிடெட் (IRB Infrastructure Developers Ltd)

மும்பையை மையப்படுத்திய கட்டுமான உட்கட்டமைப்பு நிறுவனமான இந்நிறுவனம் விரேந்திர மைஸ்கர் என்பவருக்கு சொந்தமானது. இவர்கள் 2013-14 மற்றும் 2014-15 ஆகிய நிதி ஆண்டுகளிலேயே 2.3 கோடி ரூபாய் நிதி அளித்திருந்தாலும் அவர்களின் அலுவலகத்தில் நில அபகரிப்பு மற்றும் மோசடி வழக்கில் சி.பி.ஐ ரெய்டு நடத்தியதற்குப் பிறகு அவர்கள் அளிக்கும் நன்கொடையின் அளவு அதிகரித்திருக்கிறது.

2014 இல் இருந்து 2023 வரையிலான காலக்கட்டத்தில் இந்த நிறுவனத்தின் இரண்டு துணை நிறுவனங்களான மாடர்ன் ரோட் மேக்கர்ஸ் மற்றும் ஐடியல் ரோட் பில்டர்ஸ் மூலம் பா.ஜ.கவிற்கு 84 கோடி நன்கொடை அளிக்கப்பட்டிருக்கிறது.

3). அஸ்ட்ரால் லிமிடெட் (Astral Ltd)

அகமதாபாத்தை மையப்படுத்திய பைப் தயாரிக்கும் நிறுவனமான அஸ்ட்ரால் லிமிடெட் நிறுவனம் சந்தீப் என்பவருக்கு சொந்தமானதாகும். 24 நவம்பர் 2021 அன்று இந்நிறுவனம் சோதனைக்கு உள்ளாக்கப்பட்டது. அந்த சோதனை நடந்த இரண்டு மாதம் கழித்து அந்நிறுவனம் பா.ஜ.கவிற்கு 1 கோடி ரூபாய் நன்கொடை அளித்துள்ளது.

4). ஸ்ரீ சிமெண்ட்ஸ் (Shree Cements) 30

கொல்கத்தாவை மையப்படுத்திய இந்த நிறுவனம் இந்தியாவின் மூன்றாவது பெரிய சிமெண்ட் தயாரிக்கும் நிறுவனமாகும். ஹரி மோகன் பங்கூர் என்பவருக்கு சொந்தமானது இந்நிறுவனம். 2020-21 மற்றும் 2021-22 ஆகிய நிதி ஆண்டுகளில் இந்த நிறுவனம் மொத்தமாக பா.ஜ.கவிற்கு 12 கோடி ரூபாய் நிதி அளித்துள்ளது. ஆனால் 2022-23 இல் எந்த நிதியும் அளிக்கவில்லை. இந்த நிறுவனம் கடந்த ஜூலை மாதம் வரி மோசடி புகார்களுக்காக சோதனைக்கு உள்ளாக்கப்பட்டது. 23,000 கோடி ரூபாய்க்கு வரி மோசடி செய்துள்ளதாக வருமான வரித்துறை குற்றம் சாட்டியது.

கோர்ப்பரேட் விவகார அமைச்சகத்திலிருந்து ஸ்ரீ சிமெண்ட்ஸ் நிறுவனத்தின் பரிவர்த்தனைகள் குறித்து ஆய்வு நடத்துவதற்கும் ஆணை வெளியிடப்பட்டது.

இந்த ரெய்டு நடத்தப்பட்ட அடுத்த சில வாரங்களிலேயே சங்கி இண்டஸ்ட்ரீஸ் எனும் நிறுவனத்தை வாங்குவதற்கான போட்டியிலிருந்து ஸ்ரீ சிமெண்ட்ஸ் நிறுவனம் வெளியேறியது. சங்கி இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம் அதானிக்கு சொந்தமான அம்புஜா சிமெண்ட்ஸ் நிறுவனத்தால் வாங்கப்பட்டது.

மீண்டும் இந்த ஆண்டு ஜனவரி மாதம் வருமான வரித்துறை ஸ்ரீ சிமெண்ட்ஸ் நிறுவனம் 4000 கோடி வரி கட்ட வேண்டும் என்று கூறியுள்ளது.

5). யூ.எஸ்.வி பிரைவேட் லிமிடெட் (USV Pvt Ltd)

இது மும்பையை மையப்படுத்திய ஒரு மருந்து தயாரிக்கும் நிறுவனமாகும். சுதந்திரப் போராட்ட வீரரும் சமூக சீர்திருத்தவாதியுமான விட்டல் பாலகிருஷ்ண காந்தியால் உருவாக்கப்பட்ட நிறுவனம் இது. தற்போது அவரது பேத்தி லீனா காந்தி இந்நிறுவனத்தை நடத்தி வருகிறார்.

செப்டம்பர் 2017 இல் இந்நிறுவனத்துடன் தொடர்புடைய 20 இடங்களில் வருமான வரித்துறை சோதனைகளை நடத்தியது. சோதனை நடத்தப்பட்ட ஒரு மாத காலத்திற்குள்ளாக 9 கோடி ரூபாயை இந்நிறுவனம் பா.ஜ.கவிற்கு வழங்கியது.

6). யசோதா மருத்துவமனை (Yashoda Hospitals)

ஹைதராபாத்தை மையப்படுத்திய மருத்துவமனை குழுமமாக யசோதா மருத்துவமனைகள் இயங்கி வருகிறது. நான்கு மருத்துவமனைகள், நான்கு இருதய ஆராய்ச்சி மையங்கள், நான்கு புற்றுநோய் மருத்துவமனைகள் என இயங்கி வருகிறது இக்குழுமம். இந்நிறுவனம் தெலுங்கானாவின் முன்னாள் முதல்வரான சந்திரசேகர ராவின் உறவினர்களுக்கு சொந்தமான நிறுவனமாகும்.

2019-20 நிதி ஆண்டில் இந்நிறுவனம் பா.ஜ.கவிற்கு 2.5 இலட்சம் ரூபாய் நன்கொடையாக அளித்தது. டிசம்பர் 2020 இல் தெலுங்கானா முழுவதும் இந்நிறுவனத்தோடு தொடர்புடைய இடங்களில் சோதனைகள் நடத்தப்பட்டது. அடுத்த ஆண்டே (2021-22) பாஜகவிற்கு இந்நிறுவனம் 10 கோடி ரூபாயை நன்கொடையாக வழங்கியது.

7). ஹெட்டிரோ பார்மா (Hetero Pharma) 30 companies

இது பி.ஆர்.எஸ் கட்சியின் ராஜ்யசபா உறுப்பினரான பார்த்தசாரதி ரெட்டிக்கு சொந்தமான இந்நிறுவனம் இந்தியாவின் மிக முக்கியமான மருந்து தயாரிக்கும் நிறுவனமாகும். இந்நிறுவனம் 2019-20 நிதி ஆண்டில் 25 இலட்சம் ரூபாயை பா.ஜ.கவிற்கு அளித்தது. 2020-21 இல் இரண்டு தவணையாக 1 கோடி ரூபாயை அளித்தது. ஆனால் ஒக்ரோபர் 2021 இல் இந்நிறுவனத்தின் மீது வருமான வரி சோதனை நடத்தப்பட்டது. 550 கோடி ரூபாய்க்கு கணக்கு காட்டாத வருமானம் இருப்பதாகவும், 142 கோடி ரூபாய் பணம் கையகப்படுத்தப்பட்டதாகவும் வருமான வரித்துறையால் தெரிவிக்கப்பட்டது.

அடுத்த 4 மாதங்களில் பிப்ரவரி 2022 இல் 5 கோடி ரூபாயை ப்ரூடண்ட் ட்ரஸ்ட் மூலமாக பா.ஜ.கவிற்கு வழங்கியது ஹெட்டிரோ பார்மா. 2022-23 நிதி ஆண்டில் மேலும் 5.25 கோடி ரூபாயையும் அளித்தது. மேலும் 4.2 கோடி ரூபாயை ஹெட்டிரோ லேப்ஸ் மூலமாக வழங்கியது.

8). சிரிபால் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட் (Chiripal Industries Ltd)

ஆசியாவின் மிக முக்கியமான ஆடை உற்பத்தி நிறுவனமான இந்நிறுவனம் அகமதாபாத்தைச் சேர்ந்த வேத்பிரகாஷ் சிரிபால் என்பவருக்கு சொந்தமானது. அவர் இதுமட்டுமல்லாமல் பேக்கேஜிங் மற்றும் கல்வித்துறை தொடர்பான நிறுவனங்களையும் நடத்திவருகிறார்.

இந்நிறுவனம் 2019-20 இல் 2.25 கோடி ரூபாயை பா.ஜ.கவிற்கு நன்கொடையாக வழங்கியது. ஆனால் அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கு எந்த நிதியும் அளிக்கவில்லை. ஜூலை 2022 இல் அந்நிறுவனத்தோடு தொடர்புடைய இடங்களில் வரிமுறைகேடு புகாரில் சோதனைகள் நடத்தப்பட்டது. 10 கோடி ரூபாய் கணக்கில் வராத பணம் இருப்பதாக தெரிவிக்கப்பட்டது.

அதன்பிறகு அடுத்த ஆண்டிலேயே 2022-23 இல் 2.61 கோடி ரூபாயை பா.ஜ.கவிற்கு இந்நிறுவனம் அளித்தது.

9). அரோபிந்தோ ரியால்டி மற்றும் இன்ஃபிராஸ்ட்ரக்சர் பிரைவேட் லிமிடெட் (Aurobindo Realty and Infrastructure Pvt Ltd)

இந்நிறுவனம் 1986 இல் பி.வி.ராம்பிரசாத் ரெட்டியால் தொடங்கப்பட்டது. ஹைதராபாத்தை மையப்படுத்திய மருந்து தயாரிக்கும் நிறுவனமான அரோபிந்தோ பார்மா குழுமத்தின் ரியஸ் எஸ்டேட் நிறுவனமாக இந்நிறுவனம் செயல்படுகிறது.

2020-21 நிதி ஆண்டில் 9 கோடி ரூபாயை பா.ஜ.கவிற்கு அளித்தது. ஆனால் அடுத்த ஆண்டில் எந்த நிதியும் அளிக்கவில்லை. 2022 நவம்பர் மாதம் அமுலாக்கத்துறையால் அரோபிந்தோ பார்மா நிறுவனத்தின் இயக்குநரான சரத் சந்திரா ரெட்டி கைது செய்யப்பட்டார். டெல்லி மதுபானக் கொள்கை வழக்கில் அவருக்கு தொடர்பு இருப்பதாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது.

10).சிண்டெக்ஸ் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட் (Sintex Industries Ltd)

அகமதாபாத்தை மையப்படுத்திய இந்த ஆடை நிறுவனம் அமித் படேல் மற்றும் ராகுல் படேல் ஆகிய இருவருக்குச் சொந்தமானது. இந்த நிறுவனம் 2017 இல் அமுலாக்கத்துறையின் சோதனைக்கு உள்ளாக்கப்பட்டது. 48 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துகள் முடக்கப்பட்டன.

2019-20 நிதி ஆண்டில் இந்த நிறுவனம் பா.ஜ.கவிற்கு 1 கோடி ரூபாய் நிதி வழங்கியுள்ளது.

11). ஹல்திராம் ஸ்நாக்ஸ் பிரைவேட் லிமிடெட் (Haldiram Snacks Pvt Ltd)

உணவு மற்றும் திண்பண்டங்கள் தயாரிப்பு நிறுவனமான இந்நிறுவனம் பிரபு சங்கர் அகர்வால் என்பவருக்கு சொந்தமானது. 150 கோடி ரூபாய்க்கு வரி ஏய்ப்பு செய்ததாக டிசம்பர் 2018-ல் இந்நிறுவனத்தின் மீது சோதனைகள் நடத்தப்பட்டது.

இந்நிறுவனம் அதன்பிறகு 2019-20 இல் பா.ஜ.கவிற்கு 31.11 இலட்சம் ரூபாயும், 2020-21 இல் 25 இலட்சம் ரூபாயும் நன்கொடையாக அளித்துள்ளது.

12). எஸ்.பி.எம்.எல் ஓம் மெட்டல்ஸ் (SPML Om Metals)

இந்நிறுவனம் ஹைட்ரோ மெக்கானிக்கல் உபகரணங்கள் தொடர்புடைய நிறுவனமாகும். ரியல் எஸ்டேட், பொழுதுபோக்கு, ஓட்டோமொபைல்ஸ் என பல துறைகளில் புகழ்பெற்ற ஓம் கோத்தாரி குழுமத்திற்கு சொந்தமானது இந்நிறுவனம்.

இந்நிறுவனத்திற்கு 2018 இல் ராஜஸ்தானின் பனாஸ் நதியின் குறுக்கே அணை கட்டுவதற்கான 615 கோடி ரூபாய் மதிப்பிலான ஒப்பந்தம் வழங்கப்பட்டது. இந்நிறுவனத்தின் உரிமையாளர்கள் ராஜஸ்தானின் முன்னாள் முதல்வர் காங்கிரசைச் சேர்ந்த அசோக் கெலாட்டுக்கு நெருக்கமானவர்கள் ஆவர். ஆனால் 2020 ஜூலை மாதத்தில் இந்நிறுவனத்தோடு தொடர்புடைய இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

அதன்பிறகு 2021-22 இல் இந்நிறுவனம் பா.ஜ.கவிற்கு 5 கோடி நிதியினை அளித்தது.

13). மகாலட்சுமி குழுமம் (Mahalaxmi Group)

அசாமை மையப்படுத்திய இந்த நிறுவனம் நவீன் சிங்காலுக்கு சொந்தமானது. டிசம்பர் 2020 இல் நிலக்கரி ஊழல் வழக்கில் நவீன் சிங்காலுக்கு தொடர்புடைய இடங்கள் வருமான வரித்துறையினரின் சோதனைக்கு உள்ளாக்கப்பட்டது.

இந்நிறுவனம் 2020-21 நிதி ஆண்டில் பா.ஜ.கவிற்கு 2.85 கோடி ரூபாயும், 2021-22 இல் 7.45 கோடி ரூபாயும், 2022-23 இல் 1.49 கோடி ரூபாயும் அளித்தது. அதன்பிறகு அருணாச்சலப் பிரதேசத்தில் ஒரு மிகப்பெரிய நிலக்கரி சுரங்க ஒப்பந்தம் அவருக்கு வழங்கப்பட்டது. ஏற்கனவே நிலக்கரிச் சுரங்க முறைகேடு தொடர்பில் இரண்டு வழக்குகளில் அவர் பெயரை சி.பி.ஐ குறிப்பிட்டிருந்தபோதும் இந்த ஒப்பந்தம் வழங்கப்பட்டது.

14). பசுபிக் எக்ஸ்போர்ட்ஸ் (Pacific Exports)

உதய்பூரை மையப்படுத்திய குவாரி கம்பெனியான பசுபிக் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் துணை நிறுவனமாக பசுபிக் எக்ஸ்போர்ட்ஸ் நிறுவனம் இருக்கிறது. இந்நிறுவனத்தின் சார்பில் சில கல்வி நிறுவனங்களும் நடத்தப்பட்டு வருகின்றன.

2013-ல் சி.பி.ஐ-ன் ஊழல் ஒழிப்புப் பிரிவின் சார்பில் இந்நிறுவனத்தின் ஊழியர் மீது வழக்கு பதியப்பட்டிருந்தது. ஓகஸ்ட் 2015 இல் பசுபிக் குழுமத்தின் இடங்களில் சோதனை நடத்தப்பட்டது. 2019 இல் மீண்டும் சோதனைக்கு உள்ளாக்கப்பட்டது இந்நிறுவனம்.

அதன்பிறகு 2021-22 நிதி ஆண்டில் பசுபிக் குழுமத்தின் நிறுவனங்களிலிருந்து 12 கோடி ரூபாய் பா.ஜ.கவிற்கு அளிக்கப்பட்டுள்ளது. மேலும் 2022-23 இல் பசுபிக் எக்ஸ்போர்ட்ஸ் நிறுவனத்தின் சார்பில் 6 கோடி ரூபாய் அளிக்கப்பட்டுள்ளது.

15). மேகாலயா சிமெண்ட்ஸ் லிமிடெட் (Meghalaya Cements Ltd)

அசாமை மையப்படுத்திய சிமெண்ட் தொழிற்சாலையான இந்நிறுவனத்தின் தலைவராக கைலாஷ் சந்திரா லோகியா உள்ளார்.

2018-19 நிதி ஆண்டில் மேகாலயா சிமெண்ட்ஸ் 1.38 கோடி ரூபாயை பா.ஜ.கவிற்கு நன்கொடையாக வழங்கியுள்ளது. மேலும் அதே ஆண்டில் ஸ்டார் சிமெண்ட்ஸ் மற்றும் அம்ரித் சிமெண்ட்ஸ் ஆகிய நிறுவனங்களோடு இணைந்து மேகாலயா சிமெண்ட்ஸ் 4.27 கோடி ரூபாயை பா.ஜ.கவிற்கு வழங்கியது.

2019-20 நிதி ஆண்டில் 1.5 கோடி ரூபாயை மேகாலயா சிமெண்ட்ஸ் பா.ஜ.கவிற்கு வழங்கியது. மேலும் 2020-21 இல் 50 இலட்சம் வழங்கியது. நவம்பர் 2021 இல் வருமான வரித்துறை அதிகாரிகள் லோகியாவின் வீடு மற்றும் அலுவலகங்களில் சோதனை நடத்தப்பட்டது. அதே ஆண்டில் பா.ஜ.கவிற்கு மேகாலயா சிமெண்ட்ஸ் நிறுவனத்தால் 1.5 கோடி ரூபாய் வழங்கப்பட்டது.

இந்த பட்டியலில் தமிழ்நாட்டைச் சேர்ந்த நிறுவனங்கள் என்னென்ன இடம்பெற்றிருக்கின்றன? மேலதிக விவரங்களை அடுத்த பாகத்தில் பார்ப்போம்..!

(தொடரும்)

Tags: