நிதி கூட்டாட்சியை ஒழிக்க முனையும் நீச ஆட்சி!

-ஜி.ராமகிருஷ்ணன்

டுத்தடுத்து பல மாநில அரசுகள் ஒன்றிய அரசிடம் நிதி கோரி உச்சநீதிமன்றத்திற்கு வரக்கூடிய கட்டாயத்தை ஒன்றிய அரசு உருவாக்கிடக் கூடாது” என உச்சநீதிமன்ற நீதிபதி (08.04.2024) அறிவுறுத்தியிருக்கிறார். காங்கிரஸ் கட்சி தலைமையிலான கர்நாடக அரசு உச்சநீதிமன்றத்தில் தொடுத்த  வழக்கில் நீதிபதி மேற்கண்ட கருத்தை கூறியிருக்கிறார்.

வஞ்சிக்கப்படும்  பா.ஜ.க அல்லாத மாநில அரசுகள்

கர்நாடக மாநிலத்தில் மொத்தமுள்ள 236 வட்டங்களில் 223 வட்டங்கள் கடுமையான வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ளன.  இதனால் 2023 இல்  ரூ.35,162.05 கோடி மதிப்புள்ள குறுவை சாகுபடி முற்றாக அழிந்து கர்நாடக மாநில மக்கள் இதுவரையில் கண்டிராத அளவிற்கு மிகப்பெரிய நெருக்கடியில் உள்ளனர். இப்பின்னணியில் தேசிய பேரிடர் நிவாரண நிதியிலிருந்து ஒன்றிய அரசு கர்நாடக மாநிலத்திற்கு ரூ.18,171.44 கோடி நிதி அளித்திட வேண்டுமென ஆறு மாதத்திற்கு முன்னதாக ஒன்றிய அரசாங்கத்தை வலியுறுத்தியது. ஆனால், ஒன்றிய அரசு வாய் திறக்கவில்லை. இந்நிலையில், கர்நாடக அரசு உச்சநீதிமன்றத்தை அணுகியுள்ளது.

தமிழ்நாடு

தமிழகத்தில் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, தென்காசி ஆகிய எட்டு மாவட்டங்கள் அடுத்தடுத்து பெய்த பெருமழையால், வெள்ளத்தால் பெருத்த சேதத்தை, பாதிப்பை சந்தித்தது. வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுடைய துயர்  துடைக்க, அழிந்த கட்டமைப்பை மீண்டும் உருவாக்கிட, திமுக தலைமையிலான மாநில அரசு ரூ.37,000 கோடி நிதி அளித்திட ஒன்றிய அரசாங்கத்தை வலியுறுத்தியது. நிதி ஒதுக்கிட ஒன்றிய அரசாங்கம் மறுத்த நிலையில் தமிழ்நாடு மாநில அரசு உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளது.

கேரளா

கேரள அரசு தங்களுடைய தேவைக்காக கடன் மூலம் நிதி திரட்டும் நடவடிக்கைக்கு ஒன்றிய அரசு தடை  விதித்துள்ளது. இத்தடையை நீக்க வேண்டுமென்றும், மாநிலத்திற்கு ஒன்றிய அரசு போதுமான நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டுமென்றும் உச்சநீதிமன்றத்தில் வழக்கு  தொடுத்திருந்தது. இந்த வழக்கு உச்சநீதிமன்றத்தினுடைய அரசியலமைப்பு சட்ட அமர்வுக்கு விசாரணைக்கு அனுப்பப்பட்டுள்ளது. தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா என அடுத்தடுத்து மாநில அரசுகள் ஒன்றிய பா.ஜ.க அரசாங்கத்தினுடைய மாற்றாந்தாய் மனப்பான்மையை எதிர்த்து உச்சநீதி மன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளன.

29 பைசாவை வைத்து  என்ன செய்ய முடியும்?

மோடி தலைமையிலான ஒன்றிய அரசு பா.ஜ.க ஆளும் மாநிலங்களுக்கு கூடுதலாகவும், பா.ஜ.க  அல்லாத எதிர்க்கட்சிகள் ஆளக்கூடிய மாநிலங்களுக்கு மிகவும் குறைவாகவும் நிதி ஒதுக்கீடு செய்வது பற்றிய விபரங்கள் ஏற்கனவே வெளியாகி உள்ளன. மாநிலங்கள் வரி மூலம் ஒன்றிய அரசுக்கு  செலுத்தும் ஒரு ரூபாயில், ஒன்றிய அரசு மாநிலங்களுக்கு ஒதுக்கீடு செய்யும் விபரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

தமிழ்நாடு அரசு   –      29 பைசா
கர்நாடக அரசு    –      16 பைசா
தெலுங்கானா     –      40 பைசா
கேரளா          –      60 பைசா
உத்தரப்பிரதேசம்  –     ரூ.2.20
மத்தியப்பிரதேசம்  –     ரூ.1.70 
பீகார்         –      ரூ.7.26
பா.ஜ.க அல்லாத எதிர்க்கட்சி ஆளும் மாநிலங்களை ஒன்றிய அரசு எவ்வாறு வஞ்சிக்கிறது என்பதை மேற்கண்ட விபரம் உணர்த்துகிறது.

மோடி முழங்கியது என்ன?

குஜராத் மாநில முதலமைச்சராக இருந்த நரேந்திர மோடி கடந்த 2014 இல் பிரதமர் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட பொழுது மாநில உரிமைகளுக்காக “முழங்கினார்”. “கூட்டாட்சித் தத்துவத்தை ஆதரிப்பவன் நான். மாநில உரிமைகளை மதிப்பதும், மாநிலங்களை ஒருங்கிணைத்துத் திட்டங்களைத் தீட்டுவதும் எல்லாப் பிரச்சனைகளுக்கும் மாநில அரசுகள் டெல்லிக்கு காவடி தூக்கும் நிலைமையை மாற்றி அதிகாரப் பகிர்வுக்கு வழிகோலுவதும் தான் எனது அணுகுமுறையாக இருக்கும். “டெல்லியில் இருந்து இந்தியா முழுமைக்குமான திட்டமிடல் என்பது அகற்றப்பட்டு அந்தந்தப் பகுதிக்கு அது பற்றிய புரிந்துணர்வுள்ளவர் துணையோடு திட்டமிடுவது தான் என் அணுகுமுறை” என்று சொன்னவர்தான் மோடி. ஆனால், பிரதமராக பொறுப்பேற்ற பிறகு அவர் அளித்த மற்ற வாக்குறுதிகளைப் போல் இதையும் காற்றில் பறக்கவிட்டார்.

கூட்டாட்சியின் குரல்வளையை நசுக்கும் மோடி அரசு

இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் முக்கிய தூண்களில் ஒன்று கூட்டாட்சி முறை. மோடி பிரதமரான பிறகு தனது உண்மையான ஆர்.எஸ்.எஸ்.  முகத்தை வெளிப்படுத்தினார். கூட்டாட்சித் தத்துவத்தின் அனைத்து அம்சங்களையும் சிதைக்க ஆரம்பித்தார். திட்டக்குழு கலைக்கப்பட்டு நிதி  ஆயோக் உருவாக்கப்பட்டது. திட்டக்குழு முழுமையாக கூட்டாட்சி அமைப்புக்கு வழிவகுக்கவில்லையென்றாலும் மாநிலங்கள் தமது உரிமைகளை கோருவதற்கும் ஓரளவு அந்த கோரிக்கைகளை வெல்வதற்கும் வாய்ப்பு இருந்தது. குறிப்பாக மாநிலங்களும் ஒன்றிய அரசும் தமது நிதி பகிர்வு மற்றும் தேவைகளை விரிவாக விவாதிக்கும் சூழல்  அன்று இருந்தது. ஆனால் நிதி ஆயோக் உருவாக்கப்பட்ட பின்னர் இந்த விவாதங்கள் முற்றிலுமாக முடக்கப்பட்டுவிட்டன. 

நிதி கூட்டாட்சிக்கு வேட்டு

14வது நிதி ஆணையம் மொத்த வரிவருவாயில் 42%ஐ மாநிலங்களுக்கு பகிர்ந்தளிக்க வேண்டும் என பரிந்துரைத்தது. இதுவே குறைவு என்பது இடதுசாரிகள் உட்பட பல கட்சிகள் வலுவாக கருத்தை முன்வைத்தன. ஆனால் மோடி தலைமையிலான ஒன்றிய அரசு இதனை 32%ஆக குறைக்க வேண்டும் என கோரியது. நிதி ஆணையம் இதனை ஏற்றுக்கொள்ளவில்லை. தனது சூழ்ச்சியை நிறைவேற்ற மோடி அரசு சில புதிய சூழ்ச்சிகளை உருவாக்கியது. அதில் முக்கியமானது “செஸ் வரி” ஆகும். ஒன்றிய அரசு செயல்படுத்தும் அனைத்து வரிகளையும் மாநில அரசாங்கங்களுடன் பகிர்ந்துகொள்ள வேண்டும். ஆனால் செஸ் வரி வருவாயை பகிர்ந்து கொள்ள வேண்டியது இல்லை. இந்த உபாயத்தை கடைப் பிடித்து மோடி அரசு மாநிலங்களின் நிதி பகிர்வை பறித்தது. 

ஜி.எஸ்.டி (GST) – மிகப்பெரிய அடி

ஜி.எஸ்.டி. வரி கட்டமைக்கப்பட்ட விதம் மாநில  சுயாட்சிக்கு மிகப்பெரிய அடியாகும். மாநில அரசுகள் எந்த ஒரு வரியை விதிக்கவும் அல்லது வரியை விலக்கவும் இயலாது. அந்த அதிகாரங்களை மாநில அரசுகள் இழந்துள்ளன. ஏனெனில் ஜி.எஸ்.டி. கவுன்சிலில் ஒருபோதும் மாநில அரசுகள் பெரும்பான்மையைப் பெற இயலாது. குறிப்பாக பா.ஜ.க அல்லாத மாநில அரசுகளுக்கு அது சிறிது கூட சாத்தியமில்லை.  இத்தகைய பின்னணியில், நிதி ரீதியாகவும் அரசியல் ரீதியாகவும் ஆர்.எஸ்.எஸ் – பா.ஜ.க முன் வைத்து அமுலாக்க முனையும் ஒற்றை ஆதிக்க அரசியலமைப்பு என்பதும் அத்தகைய சமூக சூழலும் கோர்ப்பரேட்டுகளுக்கும் ஏற்றதாக உள்ளது. ஒருமுக சமூக அமைப்பில் தங்களது இலாபக்கொள்ளைக்கு மையப்படுத்தப்பட்ட ஒரே சந்தை என்பது மிகவும் பயன்படும் என கார்ப்பரேட்டுகள் கணக்கு போடுகின்றனர். எனவே கூட்டாட்சித் தத்துவத்தை மோடி அரசு சிதைப்பதை கோர்ப்பரேட்டுகள் வரவேற்கின்றனர். கடந்த காலத்தில் இதற்கு எதிர்ப்பு தெரிவித்த மாநில அளவிலான பெரும் கோர்ப்பரேட்டுகளும் இப்பொழுது வாய் திறப்பதில்லை என்பது புதிய பரிணாமம். எனவே கூட்டாட்சி தத்துவத்தைப் பாதுகாத்திட, மதவாத – கோர்ப்பரேட் கூட்டை முறியடிக்க வேண்டியது முதன்மை அவசியமாகும். மொழி உள்ளிட்ட பன்முக கலாச்சாரத்தை உள்ளடக்கிய கூட்டாட்சி முறை, ஜனநாயகம், மதச்சார் பின்மை, பொருளாதார இறையாண்மை ஆகிய அரசியல் சட்ட விழுமியங்களை பாதுகாத்திட பா.ஜ.கவை தோற்கடிப்போம்.

Tags:

Leave a Reply