இஸ்ரேலின் இன அழிப்புக்கு ஈரானின் பதிலடி

-ச.அருணாசலம்

இனியும் பொறுக்க முடியாது? 1,200 பேர் கொல்லப்பட்டதற்கு பதிலடியாக 40,000 பேரைக் கொல்வீர்களா? இன்னும் சுமார் 40,000 பேர் சாவின் விளிம்பிற்கு தள்ளப்படுவதா? இஸ்ரேலின் இன அழிப்பு பயங்கரத்தை பல உலக நாடுகள், ஐ.நா. சபை போன்றவை கண்டித்தாலும் நிறுத்தாத சூழலில் களம் இறங்கியது ஈரான்..!

கடந்த வாரம் (ஏப்ரல் 1 இல்), சிரியாவில் உள்ள ஈரான் நாட்டு தூதரகத்தை விமானம் மூலம் குண்டு வீசி தாக்கியது, இஸ்ரேல். இதில், இரண்டு இராணுவ உயரதிகாரிகள் கொல்லப்பட்டனர் . இஸ்ரேலின் கோழைத்தனமான தாக்குதலை கண்டித்த ஈரான், இதற்கு பதிலடி கொடுப்போம் என சூளுரைத்தது.

ஈரானின் பதிலடி தாக்குதல் எத்தன்மையுடையதாக இருக்கும் என பல செய்திகள் மேற்கத்திய நாடுகளில், குறிப்பாக அமெரிக்கா, பிரிட்டன், மற்றும் இஸ்ரேல் நாடுகளின் தலைநகரங்களில் வலம் வந்தன.

இஸ்ரேலின் ஆக்கிரமிப்புக் கெதிராக, 2023 ஒக்ரோபர் 7 இல், ஹமாஸ் தாக்குதலை தொடர்ந்து இஸ்ரேல் “காஸா” பகுதியை குண்டுகளை வீசியும், ஏவுகணைகளாலும் தரை மட்டமாக்கியது.

இஸ்ரேலிய துருப்புகள் 1,200 பேர் பலியானதிற்கு பழிவாங்க இஸ்ரேல் பலஸ்தீனிய மக்கள் 40,000 பேரை கடந்த மூன்றரை மாதங்களில் கொன்று குவித்தது! இதில் (இத்தாக்குதலில்) பலியானவர்களில் அப்பாவிக் குழந்தைகளும், பெண்களும் 90% அதிகமாக இருப்பதைக்கண்டு உலக நாடுகள் இஸ்ரேலை கண்டித்தன.

ஐக்கிய நாடுகள் சபையிலும் பலத்த கண்டனங்கள் எழுந்தன.

இஸ்ரேலின் மீது சர்வதேச நீதிமன்றத்தில் ( International Criminal Court -ICC) இனப்படுகொலை (genocide) குற்றம் சுமத்தப்பட்டு , வழக்கும் தொடுக்கப்பட்டது.

அமெரிக்கா மற்றும் வெள்ளையின நாடுகளின் எதிர்ப்பையும் மீறி தென்னாப்பிரிக்கா நாடு கொண்டுவரப்பட்ட இந்த முறையீடு நீதிமன்றத்தால் ஏற்கப்பட்டு , இஸ்ரேலின் நடவடிக்கைக்கு கண்டனமும் எச்சரிக்கையும், சர்வதேச நீதிமன்றம் ICC விடுத்தது.

இஸ்ரேல் தாக்குதலில் உருக்குலைந்து நிற்கும் பலஸ்தீனம்.

ஆனால், அதையும் மீறி இஸ்ரேல் அரசு காஸா பகுதியிலுள்ள மருத்துவமனைகளையும், ஐ.நா.வை சார்ந்த உதவி அமைப்புகளையும் கண்மூடித்தனமாக தாக்கியது உலக மக்களை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது!

நாற்பது இலட்சம் மக்கள் கடுமையான இடிபாடுகளில் சிக்கி உணவின்றி, தண்ணீரின்றி, மருந்துகளின்றி மெல்ல மெல்லச் சாகும் பயங்கரம் உலக மக்களின் மனசாட்சியை உலுக்கியது. இஸ்ரேலை ஆதரிக்கும் ஆட்சியாளர்களின் இரட்டைத் தன்மையை (Double speak) ஒவ்வொரு நாட்டு மக்களும் கண்டித்தனர்.

ஆனால், அமெரிக்காவும் மேற்கத்திய வெள்ளையர் அரசுகளும் – பிரிட்டன், கனடா, பிரான்ஸ், ஜெர்மனி போன்ற நாடுகளும் – இஸ்ரேல் நாட்டுத் தலைமைக்கு நிர்ப்பந்தங்கள் கொடுத்தாலும், அவற்றையெல்லாம் உதாசீனப்படுத்திவிட்டு, தனது இரக்கமற்ற, மனித குலத்திற்கெதிரான கண்மூடித் தாக்குதலை நிறுத்த முன்வரவில்லை.

அத்துடன், ஈராக், சிரியா, ஜோர்டான் பகுதிகளிலும் தனது அத்துமீறலை தொடர்ந்தது.

ஐ.நா சபை பொதுச் செயலரின் கோரிக்கைக்கும் செவி மடுக்கவில்லை. சீனாவும் மத்திய கிழக்கு நாடுகள் குறிப்பாக கட்டார் ஆகியவை பெரு முயற்சி செய்து சில நாட்கள் போர் நிறுத்தத்தை – மருத்துவ உதவிகளை காயம்பட்டோருக்களிக்க – நடைமுறைக்கு கொண்டு வந்தனர்.

இதைத் தொடர்ந்து காஸா பகுதியின் தென்கோடிப் பகுதியிலும் அழித்தொழிக்கும் வேலையை அப்பாவி பலஸ்தீனியர்கள் மேல் தொடுத்தது இஸ்ரேல்.

உலக நாடுகளில் பெரும்பான்மை நாடுகள் இஸ்ரேலின் இன அழிப்பு போரை கண்டித்தாலும், ஐ.நா. சபை ஆயிரம் தீர்மானங்கள் போட்டாலும், எதையும் கண்டுகொள்ளாமல் ஒரு நாடு இருக்க முடியுமென்றால் அந்த நாடு இஸ்ரேலாகத்தான் இருக்க வேண்டும்.

இதற்கு மூல காரணம், இஸ்ரேலுக்கு அமெரிக்கா கொடுத்து வரும் எல்லையற்ற ஆதரவும் உதவியுமே ஆகும்.

இத்தகைய ஆதரவும், உதவியும் அமெரிக்கா அளித்து வருவதற்கு காரணம் என்ன?

ஹிட்லரின் நாஜிப்படைகள் யூதர்களின் மீது இழைத்த கொடுமைக்கு எதிர்வினையா?

அதனால், ஐரோப்பாவிலிருந்து இடம் பெயர்ந்த யூதர்களுக்கு உதவ வேண்டும் என்ற பரிதாபமா?

யூதர்களை ஐரோப்பாவிலிருந்து விரட்டியடித்த ஹிட்லரின் கொடுமைகளை எதிர்த்து, அமெரிக்கா, பிரிட்டன் உள்ளிட்ட நேச நாடுகள் தங்களது நாடுகளில் மீண்டும் விரட்டப்பட்ட யூதர்களை குடியமர்த்த ஒரு துரும்பைக் கூட எடுத்துப் போடவில்லை.

மாறாக, கையைவிட்டு போகும் மத்திய கிழக்கு பகுதியை, எண்ணெய் வளமிக்க சொர்க்க பூமியை நாட்டாமை செய்வதற்கு தனக்கு கடன்பட்ட ஒரு கங்காணி தேவைப்பட்ட நேரத்தில் ஜியோனிஸ்டுகளின் யூதர்களுக்கான தனி நாடு (இஸ்ரேல்) கோரிக்கை வழி வகுத்தது என்பதே உண்மை.

தனி நாடு கேட்கும் யூத மத அரசியல் தலைவர்களுக்கோ, தங்களுக்கு இழைக்கப்பட்ட “இன வெறிக் கொடுமையை” தாங்களும் பலஸ்தீன மக்களுக்கு இழைக்கிறோமே என்ற மனசாட்சி ஏதுமற்ற மத வெறியர்களாக ஆளத் தலைப்பட்டனர். இது வரலாற்றின் ‘ நகை முரணுக்கு ‘ சீரிய எடுத்துக்காட்டு.

இன்று அமெரிக்காவும் மேலை நாடுகளும் அற நெறி ஏதுமின்றி , நியாய உணர்வுகள் ஏதுமற்ற ஆதிக்க மனப் போக்கிலும், சர்வதேச மற்றும் மனித உரிமைகளை மீறி பலஸ்தீனர்களை அவரது சொந்த நாட்டிலிருந்து முதலில் பலவந்தமாக விரட்டியடித்து, பின் அவர்களை நாடற்ற அகதிகளாக மாற்றி, இழந்த உரிமைகளுக்காக, நாட்டிற்காக போராடும் பாலத்தீனர்களை பயங்கரவாதிகள் என கட்டம் கட்டுவது, 1948 முதல் பலஸ்தீனத்தை ஆக்கிரமித்துள்ள இஸ்ரேல் சியோனிசவாதிகளின் இன வெறிக் கொள்கையை, அடக்கு முறையை “தற்காப்பு” நடவடிக்கைகள் என நியாயப்படுத்துவதன் மூலமாக தங்களின் சுய ரூபத்தை காட்டி வருகின்றனர்.

வல்லான் வகுத்ததே வாயக்கால் என்றும், வல்லானின் அடியாள் தொடுக்கும் இனப் படுகொலையை இஸ்ரேலின் “தற்காப்பு” நடவடிக்கையாக சித்தரிப்பதே அமெரிக்காவின் திட்டமும் “ கொள்கை”யுமாகும்.

இந்த திட்டத்தில், முதலில் எகிப்து பின்னர் ஜோர்டான், லெபனான், சிரியா, ஈராக், லிபியா போன்ற நாடுகளில் ஆட்சியாளர்களை மாற்றி, தனது கைப் பாவைகளை பதவியில் அமர்த்தியது அமெரிக்கா, அடுத்து வளைகுடா நாடுகளை அரவணைத்து அவர்களை இஸ்ரேலுடன் கைகுலுக்க வற்புறுத்தியது.

தனது திட்டங்களை முறியடித்து, 1979 முதல் அமெரிக்க ஆதிக்கவாதிகளுக்கு சிம்ம சொப்பனமாக, பரம வைரியாக திகழும் ஈரான் நாட்டை தனிமைப்படுத்தி, பொருளாதார தடைகளை Economic Sanctions ஏற்படுத்தி, பலவீனப்படுத்த கடந்த நாற்பது ஆண்டுகளாக அமெரிக்கா தலைகீழாக நிற்கிறது. இதற்கு அடிப்படையில் உதவுவதும், உந்துவதும் இஸ்ரேல் ஆட்சியாளர்களே!

இத்தகைய அரசியல் சதுரங்கத்தில் ஆதி முதல் நேர்மையான கொள்கையை வலியுறுத்திய முதல் தலைவர் அண்ணல் காந்தியடிகள் தான்!

1940 களிலேயே யூதர்களுக்கான தனி நாடு கோரிக்கை வலுப்பெற்ற போதும், அத்தகைய நாடு பலஸ்தீனத்தில் அமைய வேண்டும் என்ற நிலை எழுந்த போது , அதற்காக தன்னை சந்தித்த சியோனிஸ்ட் தலைவர்களிடம் அண்ணல் காந்தி வைத்த வாதம் ஒன்று தான்.

”யூதர்களுக்கு தனி நாடு தேவையாக இருக்கலாம், அவர்களை நாஜிகள் இனப் படுகொலை செய்வது நியாயம் அல்ல, ஆனால் அதற்காக பலஸ்தீனர்கள் (இக்கொடுமைகளில் சம்பந்தமில்லாத பலஸ்தீனர்கள்) கொடுமைக்கு ஆளாகக்கூடாது, அவர்களது நாட்டை பங்கு போடுவதில் எந்த நியாயமும் இல்லை. இனக் கொடுமைகளுக்காளான யூதர்கள் தங்களை நிலை நிறுத்திக் கொள்ள பலஸ்தீனர்களை அதே படுகொலைக்கு ஆளாக்குவதோ, அல்லது அவர்களை நாட்டைவிட்டு விரட்டியடிப்பதோ அறமல்ல, அதில் எனக்கு உடன்பாடில்லை” என்றும் வலியுறுத்தினார் என்பது வரலாறு!

1948 இல் இஸ்ரேல் நாடு உருவாக்கப்பட்டது. ‘அரசியல் சாணக்கியத்தில் அற நெறிக்கு இடமில்லை’ என்பதை மெய்ப்பிக்கும் பாணியில் ஐ.நா.வின் உந்துதலோடு இஸ்ரேல் உருவாக்கப்பட்டது.

ஆனால், சில வாரங்களிலேயே காந்தியடிகள் எதை மனதில் கொண்டு இஸ்ரேல் நாட்டை தோற்றுவிப்பதை எதிர்த்தாரோ, அதே துயர நிகழ்வுகள் 1948 இல் தொடங்கின

ஓம், பலஸ்தீனர்கள் அவரது இருப்பிடங்களிலிருந்து, நாட்டிலிருந்து விரட்டியடிக்கப்பட்டனர், இனப் படுகொலை துவங்கியது, அன்று துவங்கிய ஆக்கிரமிப்பு, படுகொலை, உரிமை பறிப்பு, இன்றும் தொடர்கிறது. இஸ்ரேலின் எல்லைகள் விரிந்து கொண்டும், பலஸ்தீனர்கள் வாழும் பகுதிகள் உரிமையற்ற காலனிகளாக மாற்றப்பட்டும் வருகின்றன!

ஐரோப்பிய நாடுகளான பிரிட்டன், பிரான்ஸ், அவுஸ்திரியா, மற்றும் கிழக்கு ஐரோப்பிய நாடுகளான போலந்து, ருமேனியா, செக்கஸ்லோவோக்கியா மற்றும் அமெரிக்கா உட்பட பல்வேறு  நாடுகளில் இருந்து யூதர்கள் இஸ்ரேலில் குடியேறினர், அங்கிருந்த பலஸ்தீனர்களின்  நிலங்களும், வீடுகளும், கல்விக் கூடங்களும், வணிக நிறுவனங்களும் பறிக்கப்பட்டன, சுருங்கக் கூறின், சொந்த நாட்டினர் வாழ்விழந்து, உடமையிழந்து, உரிமையற்ற அகதிகளாக , அடிமைகளைவிட கேவலமான நிலைக்கு தள்ளப்பட்டனர்,

வந்தேறிகளான யூதர்களுக்கு, பாதுகாப்பும், உரிமையும், உடமையும் கொடுத்து பேணி வளர்த்தது இஸ்ரேல் அரசு! இதுவே, அந்நாட்டின் அடிப்படை அரசியல் கொள்கை!

இதனால் தான் 1948 முதல் நேரு தலைமையிலான இந்திய அரசு பலஸ்தீன உரிமைகளை தூக்கிப் பிடித்தது மட்டுமின்றி, இஸ்ரேல் ஆக்கிரமித்துள்ள பகுதிகளை விட்டு வெளியேற அறைகூவல் விடுத்தது. பலஸ்தீன அரசை முதலில் அங்கீகரித்தது இந்திய அரசுதான்.

உரிமைகளுக்காக போரிடும் பலஸ்தீனர்களுடன் தோள் சேர்ந்து நிற்பது இந்திய அரசின் அடிப்படை அறநெறி சாந்த அரசியல் நடவடிக்கையாகும். இம் முறை 1990களின் இறுதி வரை தொடர்ந்தது எனலாம்.

இந் நிலைபாட்டில் சில மாற்றங்களை கொண்டு வந்தது வாஜ்பேயி அரசு! இன்று மோடி அரசு முற்றிலும் இஸ்ரேலின் ஆட்சியாளர்களுடன் தன்னை இணைத்துக் கொண்டுள்ளது. பலஸ்தீனர்களுக்கு ஆதரவளிப்பது போன்று நாடகமாடுகின்றது. அதுவும் வேண்டா வெறுப்பாக கபட நாடகம் நடக்கிறது.

ஆட்டைக் கடித்து மாட்டைக் கடித்து என்பது போல், இஸ்ரேல் தன்னை சுற்றியுள்ள எகிப்து, ஜோர்டான், லெபனான், சிரியா மற்றும் ஈராக் போன்ற நாடுகளின் ஆட்சியாளர்கள் பலஸ்தீன மக்கள் பக்கம் நின்று இஸ்ரேலை எதிர்ப்பதை, எதிர்த்து ஓரணியில் நிற்பதை கிட்டத்தட்ட முறியடித்த நிலை உள்ளது.

இந்த அரசியல் விளையாட்டில் அமெரிக்காவின் மறைமுக மற்றும் நேரடியான ஆதரவு இஸ்ரேலுக்கு கிடைத்தது. ஆனால், இதில் எஞ்சிய அல்லது வெல்லப்படாத நாடுகள் ஒன்று சவூதி அரேபியா மற்றொன்று ஈரான்.

சவூதி அரேபியா மன்னராட்சியில் இருந்த போதும், அமெரிக்க நாட்டினுடன் மிக நெருக்கமான நல்லுறவை வைத்தும் உள்ளது, எனவே சவூதி அரேபியாவை ‘ஆப்ரகாம் உடன்படிக்கையில் ‘ (Abraham Accord க்குள்) கொண்டு வர அனைத்து முயற்சிகளும் அமெரிக்காவும், இஸ்ரேலும் எடுத்தன. அதில் பெறுமளவு வெற்றியும் கண்டன, முழுவெற்றி அடையும் தருவாயில் உக்ரைன் யுத்தமும், அதைத் தொடர்ந்து ஹமாசின் ஒக்ரோபர் 7 தாக்குதலும் நிலைமையை தலைகீழாக புரட்டிப் போட்டன.

ஈரான் நாட்டின் நிலையோ முற்றிலும் வேறுபட்டது. அயத்துல்லா கோமெனி தலைமையில் 1979ல் வெடித்த இஸ்லாமியப் புரட்சி ஈரானின் தலையெழுத்தை மட்டுமின்றி, மத்திய கிழக்கின் தலையெழுத்தையும் முற்றிலும் புரட்டிப் போட்டது.

அமெரிக்காவின் செல்லப் பிள்ளையாக இருந்த மன்னர் ஷாவின் ஆட்சியை இப்புரட்சி தூக்கியெறிந்து, அமெரிக்க ஆதிபத்தியம் மற்றும் இஸ்ரேலின் ஆக்கிரமிப்பையும் ஒருசேர எதிர்க்க முனைந்தது.

இதை முறியடிக்க முயன்ற அமெரிக்காவை, இஸ்லாமிய மாணவரணியினர் ஈரான் தலைநகரில் உள்ள அமெரிக்க தூதரகத்தை முற்றுகையிட்டு கைப்பற்றிய போது , அமெரிக்கா இறங்கி வருவதைத் தவிர வேறு வழியில்லை, அமெரிக்க தூதரகத்தின் சதிச் செயல் அம்பலப்பட்டது! இது நடந்தது அதிபர் கார்ட்டரின் பதவிக் காலத்தில்.

அன்று முதல் ஈரான் நாடு ஒரு பலம் பொருந்திய நாடாக, சுயாதீனமுள்ள நாடாக, அணுசக்தியை கையாளும் நாடாக வளர்வதை அமெரிக்காவும், இஸ்ரேலும் விரும்பவில்லை.

ஆனால், தனது கொள்கைகளிலும், நடைமுறையிலும் உறுதியாகத் திகழ்ந்த ஈரான், பலஸ்தீனத்தில் இஸ்ரேல் இழைக்கும் அநீதிகளை எதிர்ப்பதில், போராடும் பலஸ்தீன போராளிகளுக்கு உதவுவதில் உறுதியாக இருந்தது.

இத்தகைய எதிரியின் மீது சர்வதேச தடைகளை விதித்ததையும் மீறி , ஆளில்லா விமானங்கள் தயாரிக்கும் தொழில் நுட்பத்திலும், அணுசக்தி தொழில் நுட்பத்திலும் தலைசிறந்து விளங்கிய ஈரான் நாடு இஸ்ரேலுக்கு எதிரான ஒரு முகாமாக வளர்ந்ததில் வியப்பில்லை.

ஹமாஸ் “தீவிரவாதிகளுக்கு” எதிரான போரில் இஸ்ரேல் கடந்த ஆறு மாதங்களாக ஈடுபட்டும், போரில் குறிப்பிடத்தக்க வெற்றியை எட்டவில்லை. பிணைக் கைதிகளாக ஹமாஸ் வைத்துள்ள 150 இஸ்ரேலியர்களை விடுவிக்க முடியவில்லை.

அப்பாவி பொதுமக்களை கொன்று குவித்தாலும், அனைத்து நகர கட்டுமானங்கள்- மருத்துவமனை, உணவுக் கிடங்கு, ஐ.நா. மற்றும் செஞ்சிலுவை உதவி மையங்கள், சுகாதாரக் கூடங்கள் ஆகியவற்றை- தரைமட்டமாக்கிய பின்னரும் ஹமாஸ் போராளிகளின் “பலம்” குறைந்த பாடில்லை!

உலக மக்களின் கண்முன்னே இதுவரை “பராக்கிரமசாலி” என்ற பெற்றிருந்த பெயரை இழந்து இஸ்ரேல் இன்று கொடூர அரக்கனாக காட்சி அளிக்கிறது!

ஓம், Perception War என்று அறியப்படும் போர் நடைமுறை தோற்றத்தில் இன்று இஸ்ரேல் மண்ணைக் கவ்வியுள்ளது.

உள்நாட்டில், கடுமையான பிளவுகளையும் எதிர்ப்புகளையும் எதிர் கொண்டுள்ள இஸ்ரேலிய பிரதமர் நெத்தன்யாகு, தன்னை நிலை நிறுத்திக் கொள்ள மேலும், மேலும் பதட்டத்தின் எல்லையை விரிவுபடுத்திக் கொண்டுள்ளார்.

இதனால் தமக்கு உதவும் அமெரிக்க அரசின் ஆலோசனைகளையும் செவிமடுக்காது ‘எடுத்தேன் கவிழ்த்தேன்’ என்ற பாணியில் செயல்படுகிறார். தன்னைவிட்டால் அமெரிக்க அரசின் நலன்களை காக்க வேறு ஆளில்லை என்ற நிலைக்கு இருநாட்டு உறவுகளை நகர்த்துகிறார்.

இஸ்ரேலை விட்டுக் கொடுக்காமல், அதே சமயம் பிராந்திய சிக்கல் பெரும் போராக வெடித்து விடாமலிருக்க ஏனைய நாடுகளை அமைதி காக்க அமெரிக்க அரசு வேண்டுகிறது. இத்தகைய அணுகுமுறை பிரச்சினைகளை தீர்க்க உதவப் போவதில்லை.

ஆக, இன்றைய நிலையில் இது வரை பொறுமை காத்து வந்த ஈரான் நாடு, இதுவரை நேரடியாக போரில் இறங்காத ஈரான் அரசு இந்த தாக்குதல் மூலம் சில செய்திகளை உலகிற்கும் குறிப்பாக இஸ்ரேல் மற்றும் அமெரிக்க ஆட்சியாளர்களுக்கு சொல்ல விரும்புகிறது எனலாம்.

கடந்த எழுபது ஆண்டுகளுக்கும் மேலாக ஒரு அநீதியை பலஸ்தீனத்தில் கட்டமைத்து வரும் இஸ்ரேலையும், அவற்றை முழுமையாக ஆதரித்து அரபு மக்களுக்கு அநீதி இழைக்கும் அமெரிக்காவையும் எச்சரிக்க இந்த தாக்குதலை ஈரான் நடத்தியுள்ளது.

ஒக்ரோபர் 7 ஹமாஸ் தாக்குதலுக்குப்பின், பலஸ்தீனர்களுக்கு தனி நாடு என்பதோ, ஆக்கிரமித்துள்ள பகுதிகளில் இருந்து இஸ்ரேல் பின் வாங்குவதோ ஒரு போதும் நடவாது என்று பல “ மேதாவிகள்” கருத்துக்களை கூறி, அதற்கு காரணமாக இஸ்ரேல் மக்களின், அரசியல் கட்சிகளின், பலஸ்தீன மக்களின் மீதான ஒட்டுமொத்த வெறுப்பை சுட்டிக் காட்டியுள்ளனர்.

இன்று ஈரானைத் தவிர்த்து யேமன், ஈராக், சிரியா, லெபனான் ஆகிய நாடுகளும் இஸ்ரேல் நாட்டின் மீது ட்ரோன்களையும், ஏவுகணைகளையும் செலுத்தியுள்ளது அரபு மக்களின் மன உறுதியைக் காட்டுகிறது.

‘பல்வேறு நாடுகளில் இருந்து வந்த வந்தேறிகளின் உணர்வும், உரிமையும் பெரிதா?’ அல்லது

‘தாய்நாட்டிலிருந்து விரட்டப்பட்ட மக்களின் உரிமைகளும், உணர்வுகளும் பெரிதா?’

என்ற எளிய கேள்விக்கு விடை காணும் நேரம் நெருங்கிவிட்டது என்பதையே ஈரானின் தாக்குதல் உணர்த்துகிறது எனலாம்.

Tags:

Leave a Reply