பலஸ்தீன ஆதரவு இலண்டன் பேரணி!

-ஆர்.சிங்காரவேலு

1948 இல் 7.5 இலட்சம் பலஸ்தீன மக்களை நிர்பந்தப்படுத்தி புலம் பெயரச் செய்த நாள் மே 21. பலஸ்தீனருக்கு பேரழிவை ஏற்படுத்திய இந்நாள் ‘நக்பா’ என பலஸ்தீனர் அழைக்கின்றனர். நக்பாவின் 76 ஆவது நினைவு நாள் அன்று, இலண்டன் மாநகரில் 2.5 இலட்சம் மக்கள், பெரும்பாலும் இளைஞர்கள் பேரணி நடத்தினர். உடனடி நிரந்தரப் போர் நிறுத்தம் வேண்டும், இங்கிலாந்தின் ரிஷி சுனக்  அரசு, இஸ்ரேலுக்கு இராணுவ உதவி செய்வதை நிறுத்த வேண்டும்; சுதந்திர பலஸ்தீனம்  அமைய வேண்டும்; ரிஷி சுனக்கின் கைகளில் இரத்தக் கறை படிந்துள்ளது. முதலாளித்துவத்திற்கு ‘பிளேக்’ என்னும் கொள்ளை நோய் பிடித்துள்ளது. ஆக்கிரமிப்பு இனியும் வேணாம்! இஸ்ரேல் ஒரு பயங்கரவாத நாடு! என பேரணியில் பங்கேற்றோர் முழக்கம் எழுப்பினர்.

ஜூலியன் அசாஞ்சே!

அவுஸ்திரேலியாவின் விக்கி லீக்ஸ் ஊடக நிறுவனர், ஜூலியன் அசாஞ்சே  2010 இல், ஆப்கானிஸ்தானிலும், இராக்கிலும் அமெரிக்க ஏகாதிபத்தியம் புரிந்த யுத்தக் குற்றங்களை அம்பலப்படுத்தினார். அமெரிக்காவின் இராணுவ இரகசியங்களை வெளிப்படுத்தியதற்காக  இலண்டன் பெல்மார்ஸ் சிறையில் கடந்த ஐந்து ஆண்டுகளாக கைதியாக உள்ள ஜூலியன் அசாஞ்சேவை, அமெரிக்காவிற்கு அழைத்துச் சென்று, அமெரிக்க வேவு பார்க்கும் சட்டத்தின் கீழ், பல குற்றங்களை புரிந்ததற்காக விசாரணை நடத்தி, 175 ஆண்டுகள் சிறைவாச தண்டனை தர அமெரிக்க அரசு முனைப்புடன் செயல்படுகிறது.

மே 20 இல் இலண்டன் உயர்நீதிமன்றத்தில் நாடு கடத்தும் வழக்கு விசாரணைக்கு வந்தது. நாடு கடத்தும் முயற்சிக்கு எதிராக மேல்முறையீடு செய்ய, ஜூலை வரை அசாஞ்சேவிற்கு  நீதிமன்றம் அவகாசம் வழங்கியுள்ளது. தொடர்ந்து சிறையில் வைத்திருப்பது பத்திரிகைச் சுதந்திரம், கருத்துச் சுதந்திரத்திற்கு எதிரானது என கூறி அசாஞ்சே ஆதரவாளர்கள், அசாஞ்சேவின் விடுதலையை கோரி வருகிறார்கள். மரண தண்டனை கூடாது, அவரது கருத்துச் சுதந்திரம் மதிக்கப்பட வேண்டும் என்பன போன்ற இலண்டன் உயர்நீதிமன்ற நிபந்தனைகளை  அமெரிக்க அரசு ஏற்கவில்லை.

பாகிஸ்தான்!

ஏப்பிரல் 29 இல் ஐ.எம்.எப்பிமிடருந்து 300 கோடி டொலர் கடனை பாகிஸ்தான் அரசு பெற்றது. ஐ.எம்.எப் நிபந்தனைகளால் மின்சாரம் மற்றும் உணவுப் பொருட்கள் விலைகள் உயர்ந்தன. பாகிஸ்தான் நிர்வாகத்திலே உள்ள ஜம்மு – காஷ்மீரில் உள்ள மக்கள் மே 14 இல் முழு அடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். மே 13 இல் பாதுகாப்புப் படையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 3 இளைஞர்கள் உயிரிழந்தனர். இறந்தவருக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் மே 14 இல் முழு அடைப்பு நடத்தப்பட்டது. ஆசாத் ஜம்மு – காஷ்மீர் என அழைக்கப்படும் பாகிஸ்தான் மாநிலத் தலைநகர் முசாபராபாத், ஜம்மு- காஷ்மீர் கூட்டு அவாமி நடவடிக்கை குழு, முசாபராபாத் நோக்கி பேரணி நடத்த அறைகூவல்  விடுத்தது.  மானிய விலையில் கோதுமை மாவு, மின்சாரக் கட்டணம் குறைப்பு, பணக்காரர்களுக்கு அளிக்கப்படும் சலுகைகளை நிறுத்த வேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி பேரணி நடைபெறும். அரசு சில கோரிக்கைகளை ஏற்ற போதிலும் அமுலாக்கவில்லை. மே 9, 10 இல் 70 தலைவர்கள் கைது செய்யப்பட்டனர். மே 10 இல் வேலை நிறுத்தம் நடத்தப்பட்டது. மே 11 இல் பாதுகாப்புப் படையின் அடக்கு முறையினால் 90 ஆர்ப்பாட்டக்காரர்கள் காயமுற்றனர். நடைபெற்ற இருதரப்பு மோதலில் ஒரு போலீஸ் அதிகாரி கொல்லப்பட்டார். மே 19 இல் ஒரு மூட்டை கோதுமை மாவு ஏழு டொலர், மின்கட்டணம் குறைப்புக்கு பாகிஸ்தான் அரசு உத்தரவிட்டது.

மாணவ போராளிகளுக்கு எதிரிகள் யார்? யார்?

அமெரிக்க நாடு முழுவதும் பலஸ்தீன  ஆதரவு இயக்கங்களை பல்கலைக்கழக மாணவர்கள், முகாம் அமைத்து, பல்கலைக்கழக வளாகங்களிலேயே, போராடி வருகிறார்கள். 2400 இற்கு மேல் மாணவர்கள் கைது செய்யப்பட்டனர். யூத இன மாணவர்களும் பலஸ்தீன ஆதரவு போராட்டங்களில் பங்கேற்று வருகிறார்கள். மாணவர்களிடையே உள்ள இஸ்ரேல் ஆதரவு மாணவர்கள், பலஸ்தீன ஆதரவு இயக்கத்தை சீர்குலைக்க, சுண்டெலிகள் அடங்கிய பைகள், கரப்பான் பூச்சிகளை போராடும் மாணவர் மீது தூக்கி வீசினர். முகாம்களை கலைக்க பட்டாசுகளையும் வெடித்தனர். கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில் (லொஸ் ஏஞ்சல்ஸ்) போராடும் மாணவர்கள் குறிவைத்து தாக்கப்படுகிறார்கள். மகா கோடீஸ்வரர்களும், அரசின் அதிகார வர்க்கமும், பலஸ்தீன ஆதரவு இயக்கத்திற்கு எதிராக செயல்பட்டு வருகிறார்கள். போராட்டத்தை எதிர்ப்பவர் ஒருவர் கூட கைது செய்யப்படவில்லை.

ஹைதி!

கியூபாவிற்கு அருகிலே உள்ள கரீபியன் கடல் பிராந்தியத்தில் உள்ள நாடு ஹைதி. டூசெயிண்ட் லூவெர்ச்சர்  என்ற ஹைதிய புரட்சி வீரர், 1743 முதல் 1803 வரை வாழ்ந்தவர். அடிமைத்தனத்திலிருந்து விடுதலை பெறவும், பிரெஞ்சு காலனி ஆதிக்கத்தை எதிர்த்து சுதந்திர ஹைதி அமைய போராடி வெற்றி பெற்ற மாபெரும் புரட்சிக்காரர் இவர். பிரெஞ்சு மற்றும் ஸ்பெயின் காலனி ஆதிக்க சக்திகளுக்கு எதிராகப் போராடியவர் இவர். தற்போது ஹைதி சுதந்திர நாடாக நீடிக்க மேற்கத்திய சக்திகள் அனுமதிக்கவில்லை.

பலஸ்தீனத்திற்கு அங்கீகாரம்!

அயர்லாந்து பிரதமர் சைமன் ஹாரிஸ் மே 23 இல் ஒரு முக்கியமான அறிவிப்பை வெளியிட்டார். “பலஸ்தீன அரசை இன்று அயர்லாந்து, நோர்வே, ஸ்பெயின் அங்கீகரிக்கிறது என அறிவிக்கின்றோம். இம்முடிவை அமுல் படுத்த, தேவையான நடவடிக்கைகளை நாங்கள் எடுப்போம். மற்ற நாடுகளின் தலைவர்கள், பிரதமர்களுடன் நான் பேசியுள்ளேன். எதிர்காலத்தில் வேறு பல நாடுகளும் இந்த முக்கிய முடிவை சில வாரங்களில் எடுக்கும் என நம்புகிறேன். இந்நாள் அயர்லாந்துக்கும், பலஸ்தீனத்திற்கும் மிக முக்கியமான நாள். 1919 ஜனவரி 21 இல் சுதந்திர நாடாக அயர்லாந்து திகழ, எங்களது உரிமைகளை அங்கீகரிக்க, உலக நாடுகளை அயர்லாந்து கேட்டுக்கொண்டது. எங்களது சுயநிர்ணய உரிமை, சுதந்திரம் சர்வதேச அளவில் அங்கீகாரம் பெற வேண்டும் என சுதந்திரமான நாடுகளை கேட்டுக் கொண்டோம். எங்களது தேசிய அடையாளம், வரலாற்றுப் புகழ்மிக்க போராட்டம், அங்கீகரிக்கப்பட விரும்பினோம். இன்று இதே திசைவழியில் பலஸ்தீனம் சுதந்திர நாடாக அங்கீகரிக்க ஆதரவை திரட்டுகிறோம். சர்வதேசச் சட்டத்தின்படி, சுதந்திரம், நீதி என்பவை அடிப்படை கோட்பாடுகள் என நம்புகிறோம். தேசங்களின்/ மக்களின் சுதந்திரம் உறுதிப்பட்டால் தான் உலகில் நிரந்தர அமைதியை ஏற்படுத்த முடியும் என நாங்கள் நம்புகிறோம் என்று கூறினார்.

சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்கு  எதிராக அமெரிக்கா!

மே 20 இல் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் தலைமை வழக்கறிஞர் கரீம் கான் இரண்டு இஸ்ரேலிய தலைவர்கள், மூன்று ஹமாஸ் தலைவர்கள் மீது கைது வாரண்டை பிறப்பித்தார். இஸ்ரேலின் பிரதமர் நேதன்யாகு மற்றும் இஸ்ரேலின் பாதுகாப்பு அமைச்சர் கேலண்ட் ஆகியோர் மனித குலத்திற்கு எதிராக யுத்த குற்றங்களை புரிந்துள்ளனர். சிவிலியன்களை பட்டினி போடும் யுத்த நடைமுறையுடன், சிவிலியன்களை கொடுமைப்படுத்தக்கூடிய, யுத்த குற்றங்களையும் செய்துள்ளனர் என குற்றம் சாட்டினார். கைது வாரண்டு நடவடிக்கைகள் குறித்து, சுயேச்சையான குழு ஒன்று ஆய்வு செய்யும். இது பழி வாங்குதல் அல்லது சூனிய வேட்டை அல்ல என கரீம் கான் தெரிவித்தார். சர்வதேச கிரிமினல் நீதிமன்றத்திற்கு எதிராக, தடைகள் விதிக்க, அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் கலந்து ஆலோசிக்க உள்ளதாக அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஆண்டனி பிளிங்கன் கூறியுள்ளார். அமெரிக்காவின் பிரதான இரண்டு கட்சிகளின் செனட்டர்களின் ஆதரவை பிளிங்கன் பெறுவார். அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனும், சர்வதேச கிரிமினல் நீதிமன்றத்தின் கைது வாரண்ட் என்ற உத்தரவை கண்டித்துள்ளார். இஸ்ரேலையும் ஹமாசையும் சமமாக பாவிக்கக் கூடாது. இஸ்ரேலின் பாதுகாப்புக்கு ஹமாசினால் ஏற்பட்ட அச்சுறுத்தலினால், அமெரிக்கா இஸ்ரேலுக்கு ஆதரவாகவே நிற்கும் என ஜோ பைடன் தெளிவுபடுத்தினார்.

பிரிட்டனில்  பொதுத்தேர்தல்!

கிரேட் பிரிட்டனில் பிரதமர் ரிஷி சுனக் மே 22 இல் எதிர்பாராத ஒரு அறிவிப்பை வெளியிட்டார். ஜூலை 4 இல் பொதுத்தேர்தல் என்பதே அந்த அறிவிப்பு. சில மாதங்கள் முன்னதாகவே தேர்தல் நடத்தும் முடிவை பிரதமர் வெளியிட்டார். பல்வேறு இடைத்தேர்தல்களில் கீர் ஸ்டார்மரின் தொழிலாளர் கட்சியை விட 20 % சுனக்கின் பழமைவாத கட்சி பின்தங்கியே இருந்தது. இந்த ஆண்டு இறுதிவரை சுனக் பிரதமராக நீடிக்க விரும்புவார் என பல ஆய்வாளர்கள் நம்பினார்கள். கடந்த 14 ஆண்டுகளாக பழமைவாத கட்சியே அதிகாரத்தில் உள்ளதால், அதன் செல்வாக்கு பெருகாது என்ற முடிவிற்கு சுனக் வந்ததாகத் தெரிகிறது. அரசின் இலக்குகளின் படியே, பணவீக்க உயர்வு உள்ளதாக பிரதமர் பெருமைப்பட்டுக் கொண்டாலும், பழமைவாதக் கட்சி பின்பற்றும் கொள்கைகளின் விளைவுகள் பிரிட்டனின் குடிமக்களுக்கு துயரங்களையே ஏற்படுத்தி வருகின்றன. உணவு முதல் வீட்டு வசதி வரை ரொக்கெட் வேகத்தில் விலைகள் உயர்ந்து வருகின்றன. தேச சுகாதார சேவை உள்பட பொது சேவைகள் தனியார்மயம் மற்றும் பட்ஜெட் நிதி ஒதுக்கீடு குறைப்பினால் பாதிக்கப்பட்டுள்ளன. தொழிலாளி வர்க்க உரிமைகள் மற்றும் வெளிநாடுகளில் இருந்து குடியேறியவர், அகதிகள் உரிமைகளும் பாதிக்கப்பட்டுள்ளன. இங்கிலாந்தில் தஞ்சம் புக வருபவரை ஆப்ரிக்க நாடான ருவாண்டாவிற்கு அனுப்புவது, அகதிகள் மத்தியில் பய உணர்வை அதிகப்படுத்தி உள்ளது. தொழிலாளர் கட்சி தலைவர் கீர் ஸ்டார்மர் தேர்தலில் மாற்றம் ஏற்படுத்த வாக்காளர்களை கேட்டுக் கொண்டுள்ளார். முன்னாள் தலைவர் ஜெர்மி கோர்பினைப்  போல் அமைதி மற்றும் விடுதலைக்காக, தற்போது தொழிலாளர் கட்சி குரல் எழுப்பவில்லை. ஐலிங்டன் வடக்கு தொகுதியை 40 ஆண்டுக்கு மேல் ஜெர்மி கோர்பின் பிரதிநிதித்துவப்படுத்தி வருகிறார்.  இம்முறை அவருக்கு தொழிலாளர் கட்சி சீட்டு வழங்காது. ஆனாலும் ஜெர்மி கோர்பின் சுயேச்சையாக போட்டியிடுவார்.

நியூ கலிடோனியா!

பிரான்ஸ் நாட்டிலிருந்து 17,000 கிலோ மீட்டருக்கு அப்பால், அவுஸ்திரேலியாவிற்கு கிழக்கே 1210 கிலோமீட்டர் தொலைவில் உள்ள சின்னஞ்சிறு தீவு நியூ கலிடோனியா. தலைநகரம் நௌமியா. 2,72,000 மக்கள் வாழ்கிறார்கள். நியூ கலிடோனியா பிரான்சுக்கு சேர்ந்தது. பிரெஞ்சு நாடாளுமன்றத்தின் செனட்டில் இரு உறுப்பினர்களும், நாடாளுமன்றத்தின் கீழ் அவையில் இரண்டு உறுப்பினர்களும் நியூ கலிடோனியாவிலிருந்து தேர்வாகின்றனர். 1998 இல் ஏற்பட்ட நவுமியா ஒப்பந்தப்படி, நியூ கலிடோனியா சுய நிர்ணய உரிமையை தீர்மானிக்கலாம். இதற்கு எதிராக வாக்குரிமை குறித்த புதிய விதிகள் உருவாக்கப்பட்டன. 1998 இற்கு பிறகு தீவுக்கு வந்தவருக்கும் குடியுரிமை அளிப்பதே விதிகள் மாற்றம். தீவில் ஏற்கனவே வாழ்ந்து வரும் கனக் இன மக்கள் 40% மேற்பட்டோரின் நலன்களுக்கு இது எதிரானது.

கனக் இன மக்கள், ஐரோப்பாவிலிருந்து நியூ கலிடோனியாவிற்கு குடியேறியவரை விட, மோசமான வாழ்க்கை வாழ்ந்து வருகின்றனர். கனக் மக்களிடையே வேலையின்மை, சிறைப்படுத்தப்படுவோர் எண்ணிக்கை   அதிகம். கடந்த 30 ஆண்டுகளில் அசமத்துவம் போக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டதாக பிரான்ஸ் அரசு கூறுகிறது. வாக்குரிமை திருத்தத்திற்கு எதிராக போராடிய நியூ கலிடோனியா மக்களை ஒடுக்கிட, 1000 பிரெஞ்சு இராணுவத்தினர் கூடுதலாக ஈடுபடுத்தப்பட்டனர். இராணுவத்தினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் ஆறு பேர் மாண்டனர். இளம் தொழிலாளர்கள் மற்றும் ஏழை எளிய மக்கள் சாலைகளை மறித்து, தடுப்புகளை ஏற்படுத்தி, போலீஸ் மற்றும் இராணுவத்தினருடன் மோதினர். நியூ கலிடோனியாவில் ஏராளமான நிக்கல் டெபாசிட் இருந்தும், தொழில்கள் சமீப ஆண்டுகளில் பாதிக்கப்பட்டுள்ளன. 

பாலஸ்தீனத்திற்கான மக்களின் மாநாடு- டெட்ராய்ட்!

அமெரிக்காவில் உள்ள பலஸ்தீன இளைஞர் இயக்கம், இதர பலஸ்தீன மற்றும் ஏகாதிபத்திய எதிர்ப்பு அமைப்புகளுடன் இணைந்து, மே 24- 26 இல் அமெரிக்காவின் மிச்சிகன் மாநிலம், டெட்ராய்டு மாநகரில், பலஸ்தீனத்திற்கான மக்களின் மாநாட்டை நடத்துகின்றன. அமெரிக்காவின் பல்வேறு நகரங்களில், கடந்த ஏழு மாதங்களாக பலஸ்தீன  ஆதரவு இயக்கங்களை, பேரணி /ஆர்ப்பாட்டங்களை மக்கள் நடத்தி வருகின்றனர். பல இலட்சக்கணக்கான மக்கள் இவற்றில் பங்கேற்று உள்ளனர்.

1975 ஒக்ரோபர் 18 இல் இஸ்ரேலின் நாசரத் நகரில், மிகப்பெரிய பலஸ்தீனர் சங்கமம் நடைபெற்றது. அரபு மக்களின் நிலங்களை சியோனிஸ்ட்கள் பறிப்பதற்கு எதிராக திட்டம் தீட்டப்பட்டது. நெருக்கடியான சூழ்நிலைகளில், மாநாடுகளை நடத்தி, பலஸ்தீனர் கருத்து ஒற்றுமை, அரசியல் தெளிவு பெறுகின்றனர். இப்பாரம்பரியத்தின் தொடர்ச்சியாக, 2024 மே 24-26 இல் அமெரிக்காவின் டெட்ராய்டு மாநகரில் 300 இற்கும் மேற்பட்ட அமைப்புகள் வட அமெரிக்காவில் பலஸ்தீனத்திற்கு ஆதரவாக பெருந்திரள் இயக்கங்களை நடத்திக் கொண்டிருக்கும் அமைப்புகள் உள்பட பலஸ்தீனத்திற்கான மக்கள் மாநாட்டை நடத்துகின்றனர். மாநாட்டை வெற்றிகரமாக நடத்த ஒரு இலட்சம் டொலர் நன்கொடை வசூலிக்கப்பட்டுள்ளது. கலாச்சாரம், ஊடகம், கல்வி, வழியாக சித்தாந்த போராட்டத்தை மாநாடு முன்னெடுக்கும்!

Tags:

Leave a Reply