நொவம்பர் 14: மக்களுக்கான வாய்ப்பு!

வ்வருடம் செப்ரெம்பர் மாதம் 11ஆம் திகதி இலங்கையில் நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலில் தேசிய மக்கள் சக்தி என்ற அமைப்பின் சார்பில் போட்டியிட்ட ஜே.வி.பி. கட்சியின் தலைவர் அனுர குமார திசாநாயக்க புதிய ஜனாதிபதியாகத் தெரிவானார்.

இலங்கையில் ஜனாதிபதி ஒருவர் தெரிவாவதிற்குத் தேவையான ஆகக்குறைந்த 51 சதவீத வாக்குகளை அனுர குமார பெறாது 44 வீதம் மட்டுமே பெற்ற போதும், போட்டியிட்டவர்களில் அதிகக்கூடிய வாக்குகள் பெற்றவர் என்ற வகையில் அவர் ஜனாதிபதியாகத் தெரிவானார். அந்த வகையில் அவரது தெரிவு அங்கீகரிக்கப்பட வேண்டிய ஒன்று என்பதில் சந்தேகம் இல்லை.

தேசிய மக்கள் சக்தி என்பது, ஜே.வி.பி. இரத்தக்கறை படிந்த தனது கடந்தகால இருண்ட வரலாற்றை மறைப்பதற்காக போட்டுக்கொண்ட ஒரு முகமூடி என்பது அனைவருக்கும் தெரிந்த விடயம். எனவே, சாராம்சத்தில் தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் என்பது நிசத்தில் ஜே.வி.பி. அரசாங்கம்தான்.

பொதுவாக ஒரு புதிய அரசாங்கம் தெரிவு செய்யப்பட்டால் அதன் போக்கை அவதானிப்பதற்கு குறைந்தது ஆறு மாதங்களாவது தேவை என்பது ஒரு பொதுவான கருத்தாக உள்ளது. அந்தக் கருத்து அனுர குமாரவின் அரசாங்கததுக்கும் பொருந்தும். ஆனால், மக்களுக்கு ஆறு மாதங்கள் தேவைப்படாது போய்விட்டது. அனுர குமார ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டு ஒரு மாதத்திலேயே அவரது அரசாங்கத்தின் போக்கை மக்கள் இனம்காண ஆரம்பித்துவிட்டார்கள்.

ஜே.வி.பி. வேட்பாளர் தனது ஜனாதிபதி தேர்தல் பிரச்சாரத்தின் போது, நாட்டின் இரண்டு பிரதான பிரச்சினைகளான பொருளாதாரப் பிரச்சினை குறித்தோ அல்லது இனப்பிரச்சினை குறித்தோ, எவ்வித கருத்துகளையும் நாட்டு மக்கள் முன்னால் முன்வைக்கவில்லை.

மாறாக, கடந்த காலங்களில் ஆட்சியில் இருந்தவர்கள் செய்த ஊழல்கள் பற்றியும், அதிகார துஸ்பிரயோகங்கள் குறித்துமே பெருமெடுப்பில் பிரச்சாரங்களை மேற்கொண்டார்கள். கடந்தகால ஆட்சியாளர்களின் தவறான பொருளாதாரக் கொள்கைகளினால் பாதிப்புக்குள்ளாகியிருந்த பொதுமக்கள் ஜே.வி.பி. மேற்கொண்ட பிரச்சாரத்தை நம்பி ஏற்றுக்கொண்டுதான் அவர்களது ஜனாதிபதி வேட்பாளருக்கு பெருமளவில் வாக்களித்து அவரை ஜனாதிபதி ஆக்கினார்கள்.

அத்துடன், தாம் ஆட்சிக்கு வந்தால் மக்களின் பொருளாதார நெருக்கடிகள் அனைத்தும் தீர்க்கப்படும் என்றும், சிறுபான்மை இனங்களின் பிரச்சினைகளுக்கு பூரணமான தீர்வு காணப்படும் என்றும், அவர்கள் செய்த பிரச்சாரங்களையும் மக்கள் நம்பினார்கள்.

ஆனால், அனுர குமார ஆட்சிக்கு வந்த ஒரு மாதத்துக்குள்ளாகவே அரிசி உட்பட அனைத்து அத்தியாவசிய உணவுப் பொருட்களினதும் விலைகளும் கிடுகிடுவென அதிகரித்து வருகின்றன. அதைக் கட்டுப்படுத்த
முடியாமல் அனுரவின் ஆட்சி திண்டாடி வருகின்றது.

தாம் ஆட்சிக்கு வந்தால் இலங்கைக்கு பாதகமாக சர்வதேச நாணய நிதியத்துடன் முன்னைய அரசினால் செய்து கொள்ளப்பட்ட உடன்படிக்கை இரத்துச் செய்யப்படும் அல்லது மறுபரிசீலனை செய்யப்பட்டு இலங்கைக்குச் சாதகமாக மாற்றியமைக்கப்படும் எனவும் சொன்னார்கள். ஆனால், முன்னைய அரசு சர்வதேச நாணய நிதியத்துடன் செய்து கொள்ளப்பட்ட உடன்படிக்கை அனுர அரசாங்கத்தாலும் அப்படியே தொடரப்படுகின்றது.

அதேபோல, தாம் ஆட்சிக்கு வந்தால் இனப்பிரச்சினைக்கு பூரணமானதொரு தீர்வு காணப்படும் எனவும் சொன்னார்கள். ஆனால் அதற்கான ஒரு சிறு முயற்சியையும் அனுர அரசு எடுப்பதாகத் தெரியவில்லை. மாறாக, தமிழ் மக்களுக்கு பாரபட்சம் இல்லாமல் வேலை வாய்ப்பிலும் அபிவிருத்தியிலும் சம வாய்ப்பு வழங்கினாலே போதும் என, ஜே.வி.பியின் பொதுச்செயலாளர் ரிஸ்வின் சில்வா இப்பொழுது கூறி வருகிறார். அவர்களது தமிழ் மக்கள் சம்பந்தமான கொள்கைக்கு ஒரு உதாரணம், நொவம்பர் 14ஆம் திகதி நடைபெறவுள்ள பாராளுமன்றத் தேர்தலுக்கான தேசிய பட்டியலில் ஜே.வி.பி. வடக்கு கிழக்கைச் சேர்ந்த ஒரு தமிழரைக்கூட உள் அடக்காததை உதாரணமாகக் கூறலாம்.

தமது அரசாங்கத்தை தூய்மையானதாக வைத்திருப்பதற்கு முன்னைய அரசாங்கங்களில் ஊழல்களில் ஈடுபட்டவர்களையும், அதிகார துஸ்பிரயோகத்தில் ஈடுபட்டவர்களையும் தமது அரசாங்கத்தில் உள்வாங்க மாட்டோம் என்று சொன்னவர்கள், இப்பொழுது அதே நபர்களையே தமது அரசாங்கத்திலும் நிர்வாகிகளாக நியமித்து வருகிறார்கள். அத்தகையவர்களில் பேரினவாத நடவடிக்கைகளில் ஈடுபட்டு, மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுகளுக்கு உள்ளானவர்களும் அடங்குவர். அதேநேரத்தில் கண்துடைப்புக்காக தமக்கு வேண்டாத அதிகாரிகள் சிலருக்கு எதிராக மட்டும் சில நடவடிக்கைகள் மேற்கொண்டுள்ளார்கள்.

ராஜபக்சாக்கள்தான் நாட்டைச் சீரழித்தவர்கள் என்றும், அவர்கள் கோடிக்கணக்கில் பணத்தைக் கொள்ளையடித்து வெளிநாடுகளில் பதுக்கி வைத்திருக்கிறார்கள் என்றும், தாம் ஆட்சிக்கு வந்தால் அவர்கள் அவ்வாறு பதுக்கிய பணத்தை மீட்டெடுத்து நாட்டுக்கு திரும்பவும் கொண்டு வருவோம் என தேர்தல் பிரச்சாரத்தின் போதும், அதற்கு முன்னரும் பிரச்சாரம் செய்தார்கள். ஆனால் இப்பொழுதோ, தாம் அவ்வாறு ஒருபோதும் சொல்லவில்லை என ஜே.வி.பியின் பொதுச்செயலாளர் ரிஸ்வின் சில்வா முழுப் பூசனிக்காயை ஒரு கவளம் சோற்றில் மறைக்க முயல்கிறார்.

தாம் அதிகாரத்துக்கு வந்தால், எந்தவொரு நபர் மீதும் அரசியல் பழிவாங்கல் மேற்கொள்ள மாட்டோம் எனச் சொன்னார்கள். ஆனால் இப்பொழுது தமது நிறைவேற்று அதிகாரத்தைப் பயன்படுத்தி பலரது பதவிகளைப் பறித்துள்ளதுடன், முன்னாள் ஜனாதிபதிகள், பிரதமர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள் ஆகியோருக்கு வழங்கப்பட்டிருந்த பாதுகாப்பு ஏற்பாடுகளையும் படிப்படியாக நீக்கி, தேசிய பாதுகாப்பை கேள்விக்குள்ளாக்கி வருகிறார்கள்.

ஜே.வி.பி. அரசாங்கத்தின் இத்தகைய மக்கள் விரோத, ஜனநாயக விரோத நடவடிக்கைகள் ஒருபுறமிருக்க, அவர்களது மிகவும் மோசமான, எதிர்காலத்தில் நாட்டை பாசிச வழியில் இழுத்துச் செல்லக்கூடிய கருத்துக்களும் வெளிவந்திருக்கின்றன.

அதாவது, நாட்டில் பல கட்சிகள் இருக்கக்கூடாது என்றும், பாராளுமன்றத்தில் எதிர்கட்சி என்று ஒன்று அவசியமில்லை எனவும் ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க கருத்துக்களைத் தெரிவித்துள்ளதாக வெளிவரும் செய்திகள், ‘யானை வரும் பின்னே, மணியோசை வரும் முன்னே!’ என்ற அபாய அறிவிப்புகளாக உள்ளன.

அத்துடன், நாட்டில் தொழிற்சங்கங்கள் இருப்பது தேவையில்லாதது என, ஜே.வி.பி. தலைவர்கள் கருதுவது உண்மையா என்பதை தெளிவுபடுத்த வேண்டும் என சில தொழிற்சங்கங்கள் ஜே.வி.பி. அரசைக் கோரியிருப்பதும், வரப்போகும் பாசிச அபாயத்தின் சமிக்ஞையாகும்.

மக்களுக்கு பல பொய்களைக் கூறி ஆட்சிக்கு வந்த பின்னர், அந்த மக்களின் தலைகளில் மண் அள்ளிப்போடும் ஜே.வி.பி. அரசின் செய்கை எந்த வகையிலும்
ஏற்றுக்கொள்ள முடியாதது. மக்களும் ஒருபோதும் இத்தகைய போக்கை அனுமதிக்க மாட்டார்கள்.

ஜே.வி.பி. அரசின் இத்தகைய போக்கை தடுத்து நிறுத்துவதற்கும், தாம் விட்ட தவறுக்கு பிராயச்சித்தம் தேடும் வகையிலும், மக்களுக்கு தற்பொழுது உடனடியாக உள்ள ஒரே வழி, நொவம்பர் 14ஆம் திகதி நடைபெறவுள்ள பாராளுமன்றத் தேர்தலில் ஜே.வி.பி. ஆட்சி அமைப்பதற்குத் தேவையான அறுதிப் பெரும்பான்மையை வழங்காமல் இருப்பதுதான்.

அது சாத்தியப்படாது போயின், ஜே.வி.பி. அரசை ஆட்சியில் இருந்து அகற்றுவதற்கான இன்னொரு ‘அரகலய’ போராட்டத்துக்குத் தயாராவதைத் தவிர மக்களுக்கு வேறு வழி இல்லை.

மூலம்: நொவம்பர் 14: மக்களுக்கான வாய்ப்பு!

Tags: