அமெரிக்க ஆதிக்கத்தை எதிர்க்க ஒன்றிணைவோம்: இந்தியாவுக்கு சீன வெளியுறவுத் துறை அமைச்சர் அழைப்பு

அமெரிக்காவின் ஆதிக்கத்தை எதிர்க்க நாம் ஒன்றிணைந்து செயல்படுவோம் என்று இந்தியாவுக்கு சீனா அழைப்பு விடுத்துள்ளது. ஆனால் இதுதொடர்பாக இந்தியாவின் சார்பில் எந்தப் பதிலும் இதுவரை தரப்படவில்லை.
அமெரிக்க நாடாளுமன்றத்தில் அண்மையில் நடைபெற்ற காங்கிரஸ் கூட்டுக் கூட்டத்தில் உரையாற்றிய அதிபர் டொனால்டு ட்ரம்ப், பரஸ்பர வரிகள் குறித்து கடுமையான கருத்துக்களை தெரிவித்தார். மேலும், அமெரிக்காவுக்கு எதிராக மற்ற நாடுகள் அதிக வரிகளை விதித்து வருவதாக ட்ரம்ப் கூறினார். இப்போது அந்த நாடுகளுக்கு எதிராக அவற்றை பயன்படுத்த வேண்டும் என்று குறிப்பிட்ட அவர், வரும் ஏப்ரல் 2 ஆம் திகதி முதல் இந்தியா, சீனா உள்ளிட்ட நாடுகளின் பொருட்கள் மீது அமெரிக்காவின் பரஸ்பர வரிகள் உடனடியாக அமுலுக்கு வரும் என்று அறிவித்தார். இதன்படி, சீனப் பொருட்களுக்கு முன்னர் விதிக்கப்பட்ட 10 சதவீத வரிகளை 20 சதவீதமாக அதிபர் ட்ரம்ப் உயர்த்தியுள்ளார். மேலும், அமெரிக்காவுக்கு ஃபென்டானில் (Fentanyl) உள்ளிட்ட வீரியமிக்க போதை மருந்துகள் கடத்தப்படுவதைத் தடுக்க சீனா போதுமான நடவடிக்கைகளை எடுக்கவில்லை என்றும் அதிபர் ட்ரம்ப் குற்றம் சாட்டினார்.
இதனிடையே அமெரிக்காவின் ஆதிக்கத்தை எதிர்ப்பதற்காக இந்தியாவும், சீனாவும் ஒன்றிணைந்து செயல்படவேண்டும் என்று அந்நாட்டின் வெளியுறவுத்துறை அமைச்சர் வாங் யி நேற்று அழைப்பு விடுத்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் மேலும் கூறியதாவது: அமெரிக்காவில் இறக்குமதியாகும் வெளிநாட்டுப் பொருட்களுக்கு அதிக வரியை விதிப்பதாக ட்ரம்ப் அறிவித்துள்ளார். எனவே, இதை எதிர்ப்பதற்காக டெல்லியும், பெய்ஜிங்கும் (இந்தியா, சீனா) ஒன்றிணைந்து செயல்படவேண்டும். அமெரிக்காவின் ஆதிக்கத்தையும் அதிகார அரசியலையும் எதிர்ப்பதில் முன்னணியில் நாம் இருக்கவேண்டும்.
மீண்டும் யானை நடனத்தையும் (இந்தியா), டிராகனையும் (சீனா) நடனமாட வைப்பதுதான் யதார்த்த நிலையாக இருக்கும். இந்தப் பிரச்சினைக்கு அதுவே ஒரு சரியான தேர்வாக இருக்கும்.
ஒருவரை ஒருவர் சோர்வடையச் செய்வதற்குப் பதிலாக, ஒருவரையொருவர் ஆதரிப்பதும், எதிர்ப்பதற்குப் பதிலாக, ஒத்துழைப்பை வலுப்படுத்துவதும், இரு நாடுகள் மற்றும் நாட்டு மக்களின் அடிப்படை விஷயங்களுக்கு நன்மை கிடைக்கும். இவ்வாறு அவர் தெரிவித்தார். சீனாவின் இந்த அழைப்புக்கு இதுவரை இந்தியாவில் சார்பில் எந்தப் பதிலும் அளிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
முன்னதாக நேற்று முன்தினம் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் கூறும்போது, “சீனாவுடன் மிகவும் கணிக்கக்கூடிய மற்றும் நேர்மறையான போக்கை இந்திய அரசு வகுக்க செயல்பட்டு வருகிறது. இதில் சீனாவின் கட்டுப்பாட்டில் உள்ள புனிதத் தலங்களுக்கு புனித யாத்திரைகளை மீண்டும் தொடங்குதல், நேரடி விமானங்கள், பத்திரிகையாளர்களை பரிமாறிக்கொள்ளுதல் ஆகியவை இதில் அடங்கும்” என்றார்.