பஹல்காம் தாக்குதலும், பா.ஜ.கவின் ஆதாய அரசியலும்!
-ச.அருணாசலம்

அனைத்து சிறப்பு அந்தஸ்துகளையும் பிடுங்கி,யூனியன் பிரதேசமாக்கி, காஷ்மீரையே தங்கள் நேரடிக் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் மத்திய அரசை மீறி இந்த தாக்குதல் எப்படி நடந்தது? பயங்கரவாதம் உருவாவதற்கான வழிமுறைகளை உருவாக்கும் அரசே, அதை அடியோடு வேரறுப்போம் என அறைகூவலும் விட்டவாறு, ஆதாய அரசியலையும் செய்வது முரண்;
யூனியன் பிரதேசமாக சுருக்கப்பட்ட ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் 22.04.2025, செவ்வாய் கிழமை மதியம் தீவிரவாதிகள் சுற்றுலாவுக்கு வந்தவர்களில் மகளிர் குழந்தைகளை ஒதுக்கிவிட்டு ஆண்களை மட்டும் குறி பார்த்து சுட்டு கொன்றுள்ளனர். சுற்றுலா பயணிகளின் அடையாள அட்டையை சோதித்த பின்னரே பலரும் சுடப்பட்டுள்ளதாக தெரிகிறது.
அப்பாவி சுற்றுலா பயணிகளை பதுங்கியிருந்தும் பிறகு அருகாமையில் வந்தும் சுட்டுக் கொலை செய்த தீவிரவாதிகள் உள்ளூர் இஸ்லாமிய சுற்றுலா பணியாளர்களையும் சுட்டுவிட்டு தப்பியோடி உள்ளனர்.
ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் கூடுமிடமான பஹல்காமில் – அமர்நாத் யாத்திரை வழித்தடத்தில்- ட்ரெக்கிங்கிற்கு பெயர்பெற்ற இப்பகுதியில் இந்த தீவிரவாதம் அரங்கேறி இருப்பது இந்திய மக்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.
சௌதி அரேபியாவிலிருந்து பிரதமர் நரேந்திர மோடியும், அமெரிக்காவிலிருந்து ராகுல் காந்தியும் தங்கள் பயணத்தை பாதியிலேயே துண்டித்துக் கொண்டு இந்தியா திரும்பி உள்ளார்.
காஷ்மீர் மாநில முன்னாள் முதல்வர் முப்தி முகமது சையது “இத்தாக்குதல் அப்பாவி சுற்றுலா பயணிகளின் மீது மட்டும் தொடுக்கப்பட்ட தாக்குதல் அல்ல, ‘காஷ்மீரியத்’ என்ற உன்னத உணர்வின் மீதான தாக்குதல், இதனால் நாங்கள் வெட்கபடுகிறோம்” என்று கூறியுள்ளார் .
இன்றைய முதல்வர் உமர் அப்துல்லா “ இது ஒரு கோழைத்தனமான தாக்குதல், “ எனக்கூறி நிலைமையை எதிர்கொள்ள அனைத்து கட்சி கூட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளார்.
அனைத்து எதிர்கட்சி (இந்தியா கூட்டணி) தலைவர்களும் இந்த படு பாதகச்செயலை கண்டித்ததோடு அல்லாமல், இத்தகைய தீவிரவாதத்தை ஒற்றுமையாக எதிர்கொள்ள வேண்டிய அவசியத்தையும் வலியுறுத்தி வருகின்றனர்.
பிரதமர் மோடியும் , பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங்கும், ’இந்த ஈனச்செயலை புரிந்தவர்கள் தப்ப முடியாது என்றும், அவர்கள் வேட்டையாடப்படுவார்கள் என்றும் அவர்களுக்கு பின்னால் இருப்பவர்களுக்கு நாங்கள் கொடுக்கும் பதிலடி உறுதியாகவும் உரத்தும் இருக்கும்’ என்று கூறியுள்ளனர்.

நாட்டின் உள் நாட்டு பாதுகாப்பை மட்டுமின்றி, காஷ்மீர் பிரதேச காவல் துறையையும் தன் பொறுப்பில் வைத்துள்ள உள்துறை அமைச்சர் அமீத் ஷா இத்தகைய தீவிரவாத தாக்குதல்எப்படி நடந்தது?, ஏன் நடந்தது? என்பதை பற்றி இதுவரை வாய் திறக்கவில்லை!
ஆனால், சட்டீஸ்கர் மாநில பா.ஜ.கவினர் X இணையதளத்தில் ஒரு விளம்பரத்தை வெளியிட்டுள்ளனர். அதில் செயற்கை நுண்ணறிவு மூலம் வரையப்பட்ட படத்தை வெளியிட்டு அதில் ‘ எந்த மதம் என கேட்டனர், ஜாதியை பற்றி கேட்கவில்லை’ என வாசகங்களையும் வெளியிட்டுள்ளது.
2019 இல் காஷ்மீரை துண்டாடி, சிறப்பு தகுதியை ரத்து செய்து, யூனியன் பிரதேசமாக தனித்தன்மை இழந்த பிரதேசமாக மோடி அரசு சிறுமை படுத்திய பிறகு “ காஷ்மீரில் அமைதி திரும்பி விட்டது, தீவிரவாதத்தை ‘இரும்புக் கரம் கொண்டு’ அடக்கிவிட்டோம் , ஊழலையும், குடும்ப அரசியலையும் வேரறுத்து புதிய காஷ்மீரை மோடி உருவாக்கி விட்டார் என சங்கிகளும், கோடி மீடியாவும் பிரச்சாரம் செய்தன! தேர்தலும் நடத்தப்பட்டது, ஆனால் காஷ்மீர் மக்கள் பாஜகவை நாடாளுமன்ற தேர்தலிலும், சட்ட மன்ற தேர்தலிலும் தோற்கடித்தனர்.
ஆனால், அதிகாரங்கள் அனைத்தையும் இன்றும் துணை நிலை ஆளுனர் வசமே – அதன் மூலம்- ஒன்றிய அரசிடமே உள்ளது என்றாலும் இந்த தீவிரவாத தாக்குதல் எப்படி நடந்தது?

இதற்கு யார் பொறுப்பு? என்ற கேள்விகளுக்கு பதில் ஏதும் கூறாமல், மக்களிடம் தெளிவு படுத்தாமல் பா.ஜ.வானது இந்து – முஸ்லீம் என்ற மத உணர்வை வன்மத்துடன் கூர்மைபடுத்துகிறது.
மத அடையாளத்தை தெரிந்த பின்னரே சுற்றுலா பயணிகள் சுடப்பட்டார்களாம், ஆடைகளை களைந்து உறுதிபடுத்திய பின்னரே சுட்டார்களாம்! எனவே, இந்துக்களை குறி வைத்தே இஸ்லாமிய பயங்கரவாதிகள் சுட்டுக்கொன்றார்களாம்..! என கற்பிதங்களை ஜோடித்து இஸ்லாமிய வெறுப்பை இந்திய மக்கள் மனதில் விதைக்கிறது, பாஜக. அதற்கு கோடி மீடியாக்களும் உதவுகின்றன என்பதே வேதனை!
”தகுந்த பதிலடி கொடுப்போம் , வாலை ஒட்ட நறுக்குவோம்” என கொக்கரிக்கும் இவர்கள், புல்வாமா தீவிரவாத தாக்குதல் எதனால் நடந்தது என்ற விசாரணையை முடித்து உண்மையை உலகிற்கு கூறியுள்ளார்களா…? என்றால் இல்லை.
விபத்து நடந்த தேசீய நெடுஞ்சாலையின் பாதுகாப்பு பொறுப்பாளராக இருந்த தேவேந்திர சிங் எனற காவல் அதிகாரி மீது எந்த நடவடிக்கையும் இல்லை, பின்னாளில் அவர் சில தீவிரவாதிகளுடன் டெல்லியில் கைது செய்யப்பட்டாலும், விசாரணை ஏதுமின்றி அவர் விடுதலை செய்யப்பட்டு சுதந்திரமாக வலம் வருகிறார்.
ஏன் , எதற்காக இத்தகைய தாக்குதல்?
அமெரிக்க துணை அதிபர் ஜே டி வான்ஸ் இந்தியா வந்திருக்கும் பொழுது இந்த தீவிரவாத தாக்குதல் நடந்துள்ளது.

சுடப்பட்டவர்களில் ஏழு பேருக்கும் மேலானவர்கள் காஷ்மீரில் பணியாற்றும் உளவுத் துறையை சேர்ந்தவர்கள் என்பது கூடுதலான ஒரு முக்கிய தகவல்.
இவற்றையெல்லாம் உற்று நோக்கும் பொழுது துல்லியமான தரவுகளின் அடிப்படையில், தெளிவான நோக்கங்களை முன்னிறுத்தி , தீவிர தயாரிப்புகளோடு இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக தெரிகிறது. இதில் பங்கேற்றவர்களின் எண்ணிக்கை ஆறு என்றும் அவர்களில் இருவரை இராணுவம் புதன் கிழமை சுட்டுக்கொன்றதாகவும் செய்திகள் கூறுகின்றன.
இந்த தாக்குதல்களுக்கு பொறுப்பேற்று தி ரெஸிஸ்டன்ஸ் பிரண்ட் (The Resistance Front)
செவ்வாயன்று ஒரு அறிவிப்பை X தளத்தில் பதிவிட்டு இருந்தது, பின்னர் அவ்வறிவிப்பு விலக்கி கொள்ளப்பட்டாலும், இந்திய அதிகாரிகள் டி ஆர் எஃப் (TRF) என்பது லஷ்கர் ஈ தாய்பாவின் துணை அமைப்பே என்றும் அவ்வமைப்பை 2023 இல் இந்திய அரசு தீவிரவாத இயக்கமென தடை செய்திருப்பதையும் சுட்டிக்காட்டுகின்றனர்.
இவ்வமைப்பு , ‘இந்திய அரசு கிட்டத்தட்ட 85,000 வெளி ஆட்களை காஷ்மீரில் வலிந்து குடியமர்த்தி அவர்களுக்கு குடியுரிமையும் வழங்கியிருக்கிறது, இதன் மூலம் காஷ்மீரின் மக்கள் தொகுப்பை (demography) மாற்ற இந்திய அரசு முயல்கிறது’ என குற்றஞ்சாட்டி உள்ளது.
இந்த நிலையில் சில ‘ மேதாவிகள்’ பாகிஸ்தான் மக்கள் மத்தியில் செல்வாக்கை இழந்துள்ள பாக். இராணுவம் தனது இழந்த மதிப்பை நிலை நாட்ட இத்தகைய எல்லை தாண்டிய பயங்கரவாத செயல்களை திட்டமிட்டு நடத்துகிறது, இந்தியா பதிலடி கொடுத்தால் அதை எதிர்க்கும் சாக்கில் தங்களது செல்வாக்கை கூட்டலாம் என்று பாக். இராணுவம் எண்ணுகிறது என்று கருத்து கூறி வருகின்றனர்.
உண்மையில் இத்தகைய பேரிடர்களை, மனிதப் படுகொலைகளை தங்களது அரசியல் ஆதாயத்திற்கு பயன்படுத்தி கொள்வதில் பாகிஸ்தான் இராணுவத்தை விட பாரதிய ஜனதா கட்சியே தலைசிறந்தவர்கள் என்பதை புல்வாமா தாக்குதல், மும்பை குண்டு வெடிப்பு, கோத்ரா ரயில் எரிப்பு போன்றவற்றின் மூலம் நிரூபித்தும் உள்ளனர்.

இத்தீவிரவாத தாக்குதலுக்கு மோடி அரசு தக்க பதிலடி கொடுக்கும் என்று ஊடக நெறியாளர்களும், பத்திரிக்கையாளர்களும் ஆவேசப்படுகின்றனர். சங்கப் பரிவாரங்களோ இந்தியா பாக் மீது தாக்குதல் நடத்தி, பாகிஸ்தான் வசமுள்ள காஷ்மீரை இந்தியா மீட்டெடுக்க வேண்டும் என போர் பரணி பாடுகின்றனர்.
இந்து – முஸ்லீம், இந்தியா – பாகிஸ்தான் என இரண்டு எதிர்நிலைகளை முன்னிறுத்தி அரசியல் செய்கின்றனர்.
உண்மையில் மோடி அரசு இதுவரை காஷ்மீரில் கடைபிடித்து வந்த கொள்கையினால்- இஸ்லாமிய வெறுப்பு மற்றும் தீவிர அடக்குமுறை- என்ற முரட்டு (மஸ்குலர் ) அணுகுமுறையால் காஷ்மீர் பிரச்சினை தீர்க்கப்பட்டதா? அமைதி திரும்பியதா?
விவேகத்தை மறுத்த வீராப்பினால் பிரச்சினைகள் முடிவுக்கு வருமா? பாகிஸ்தான் மீது முன்பு போல் இன்று சர்ஜிக்கல் தாக்குதல் நடத்த முடியுமா?
பாகிஸ்தானின் பொருளாதாரம் மிக மோசமான நிலையில் உள்ளது என்றும் பாக், மக்கள் பாகிஸ்தான் இராணுவத்தை முன்னெப்போதுமிருந்ததைவிட வெறுத்து ஒதுக்குகிறார்கள் என்று கூறி இந்தியா பதிலடி கொடுக்க இது தக்க தருணம் என்று சிலர் எண்ணுகின்றனர்.
ஆனால் இது 2025. 2014 இல் இருந்த நிலைமை இன்றில்லை, ஏன் 2019 இல் இருந்த சர்வதேச சூழல் இன்றில்லை.
# இந்திய பொருளாதாரமோ 2016 பண மதிப்பிழப்பில் தொடங்கிய சரிவில் இருந்து மீளாமல் இன்று மோசமான சூழலில் உள்ளது.
# இந்திய ராணுவமோ அக்னி பாத் கொள்கையினால் நிலைகுலைந்து உள்ளதாக இராணுவ வல்லுனர்கள் கூறுகின்றனர். போதிய ஆட்பலமோ (1,50,000 இராணுவ வீரர்கள் இடம் காலியாக உள்ளதாக தெரிகிறது) வேண்டிய தளவாடங்களோ இன்றி முப்படைகளும் தடுமாறுகின்றன.
# இந்திய எல்லைப் பகுதிகளில் (இந்திய-பாக்., மற்றும் இந்திய-சீன எல்லை பகுதிகளில்) மட்டுமின்றி, அண்டை நாடுகளான நேபாளம், பங்களா தேஷ் ,இலங்கை மற்றும் மியான்மர் போன்ற நாடுகளுடன் இந்தியா இன்று நல்லுறவில் இருக்கின்றதா என்றால் இல்லை என்பதே உண்மை.
# பிரிக்ஸ் கூட்டமைப்பு நாடுகளுடன் நமது உறவு வலுப்பெற்றுள்ளதா என்றால் இல்லை என்பதே பதிலாக உள்ளது. நமது நீண்ட கால நட்பு நாடான ரஷ்யாவுடன் நமது உறவு இன்று சீராக உள்ளதா என்பதும் கேள்விக் குறி.
# குளோபல் சௌத் (Global South) எனப்படும் ஏனைய ஆசிய, ஆபிரிக்க நாடுகளுடன் இந்தியா துணை நிற்கிறதா என்றால் அதற்கும் இல்லை என்பதே பதிலாக உள்ளது.
# இந்தியா இன்று நட்பு நாடாக போற்றுவது அமெரிக்காவை தான். ஆனால் டிரம்ப் தலைமையிலான அமெரிக்கா இந்தியாவை ஒரு சந்தையாக மட்டுமே பாவிக்கிறது, கூட்டாளியாக இல்லை. அமெரிக்காவின் “தொங்குசதையாக” மாற மோடி அரசு துடிக்கிறது.

இஸ்லாமியர் பெரும்பான்மையாக உள்ள ஒரே மாநிலமான காஷ்மீரை கூட்டு வைத்து கழுத்தறுத்தனர். பின்னர் குடியுரிமை சட்ட திருத்தம் மூலம் இஸ்லாமியரின் குடியுரிமையை பாதுகாப்பற்றதாக்கினர்.
அடுத்து முத்தலாக சட்டம் வந்தது , அதுவும் முஸ்லீம் பெண்களின் உரிமைக்காக மோடி அரசு கொண்டு வந்ததாக கதைக்கப்பட்டது. இப்பொழுது உள்நாட்டில் சமூகபிணக்குகள் மேலோங்கி ஒற்றுமையின்மை தலைவிரித்தாடுகிறது.
இத்தகைய சூழலில் இத்தீவிரவாத தாக்குதலை வரப்பிரசாதமாக்கி, குருட்டு சங்கிகளின் நம்பிக்கையை தக்க வைக்க பகிரத பிரயத்தனம் நடக்கிறது.
படையெடுப்போ, பதிலடியோ பிரச்சினைக்கு தீர்வல்ல, விவேகமும் நிதானமுமே தீர்வுகளை முன்னிறுத்தும், நாம் எதை கையிலெடுக்கப்போகிறோம்?