இந்தியா – பாகிஸ்தான்: மோதலின் வரலாறு
-இந்து குணசேகர்

காஷ்மீரின் பஹல்காம் பகுதியில், பாகிஸ்தான் ஆதரவுத் தீவிரவாதிகள் கடந்த மாதம் நடத்திய தாக்குதலைத் தொடர்ந்து, பாகிஸ்தான் தீவிரவாத முகாம்கள் மீது இந்தியா தாக்குதல் நடத்தியது. இதனால், கடந்த சில நாள்களாக எல்லையில் போர்ப் பதற்றம் அதிகரித்தது. இந்த நிலையில், தாக்குதலை நிறுத்துமாறு பாகிஸ்தான் வலியுறுத்தியதைத் தொடர்ந்து போர் நிறுத்தப்பட்டதாக இந்தியா தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பதற்றத்தின் மையம்: இந்தியா – பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையிலான நீண்ட காலப்பதற்றத்தின் மையமாக காஷ்மீர் உள்ளது. 1947 இல் இந்தியா – பாகிஸ்தான் சுதந்திரம் அடைந்த பிறகு, இரு நாடுகளும் காஷ்மீர் மீதான தங்கள் கட்டுப்பாட்டை அதிகரிக்கத் தொடங்கின. முஸ்லிம் மக்களை காஷ்மீர் அதிகம் கொண்டிருந்தாலும், அதன் அரசராக இந்து மதத்தைச் சேர்ந்த ஹரி சிங் இருந்தார். இதனால் சுதந்திரத்துக்குப் பிறகு இந்தியாவுடன் இணைவதா, பாகிஸ்தானுடன் இணைவதா என்கிற குழப்பம் அரசருக்கு ஏற்பட்டது.
இதற்கிடையில், 1947 ஒக்ரோபர் மாதம் காஷ்மீரைக் கைப்பற்றும் நடவடிக்கையில் பாகிஸ்தான் இறங்கியது. சில பழங்குடியின முஸ்லிம் அமைப்புகள் பாகிஸ்தான் இராணுவ உதவியுடன் காஷ்மீரின் சில பகுதிகளைக் கைப்பற்றின. ஆக்கிரமிப்பைத் தடுக்க காஷ்மீரை இந்தியாவுடன் இணைக்கும் ஒப்பந்தத்தில் ஹரி சிங் கையெழுத்திட்டார். ‘காஷ்மீர் மக்களின் எதிர்காலம் காஷ்மீரிகளால்தான் தீர்மானிக்கப்படும்’ என்று 1947 நவம்பர் 2 இல் அகில இந்திய வானொலியில் உரையாற்றிய அன்றைய பிரதமர் நேரு குறிப்பிட்டார்.
‘சட்டம் ஒழுங்கும் அமைதியும் நிலைநாட்டப்பட்ட பின்னர், ஐ.நா. போன்ற அமைப்பின் மேற்பார்வையில் பொது வாக்கெடுப்பு நடத்தப்படும்’ என்றும் அறிவித்தார். ஆனால், பொது வாக்கெடுப்பு எதுவும் நடத்தப்படவில்லை. இந்த ஒப்பந்தத்தை இறுதிசெய்து காஷ்மீரைத் தன் நிலப்பரப்புடன் இந்தியா இணைத்துக்கொண்டது.
1947 இல் இந்தியா – பாகிஸ்தான் இடையே ஏற்பட்ட மோதலின்போது ஐ.நா. அவை மத்தியஸ்தத்தில் ஈடுபட்டு நிறுத்தியது. தற்காலிகமாக எல்லைகள் பிரிக்கப்பட்டன. இதையடுத்து, இரு தரப்புக்கும் இடையே சண்டை நிறுத்தம் 1949 ஜனவரி 1ஆம் திகதி ஏற்பட்டது. அதன்படி, காஷ்மீரின் மூன்றில் இரண்டு பகுதிகள் இந்தியக் கட்டுப்பாட்டில் வந்தன.
ஒரு பகுதி பாகிஸ்தான் வசம் சென்றது எனினும், இரு நாடுகளும் காஷ்மீரின் முழுப் பகுதிக்கும் உரிமை கொண்டாடி வந்தன. இந்தியச் சட்டக்கூறு 370 இன்படி காஷ்மீருக்குச் சிறப்பு அந்தஸ்து வழங்கப்பட்டது. இதன்படி, ஜம்மு – காஷ்மீர் சட்டப்பேரவையின் ஒப்புதலுடன் மட்டுமே காஷ்மீருக்கான சட்டங்களை நாடாளுமன்றத்தில் நிறைவேற்ற முடியும் என உறுதிசெய்யப்பட்டது. இந்தச் சட்டம் 2019 இல் நீக்கப்பட்டது.
தொடர்ந்த பதற்றம்: எல்லைகள் பிரிக்கப்பட்ட பிறகும் இந்தியா பாகிஸ்தான் இடையே காஷ்மீர் சார்ந்து தொடர்ந்து மோதல்களும், பதற்றமான சூழலும் நீடித்தன. 1965 இல் ‘ஒபரேஷன் ஜிப்ரால்டர்’ (Operation Gibraltar) என்கிற படையெடுப்பை காஷ்மீர் மீது பாகிஸ்தான் தொடங்கியது. எனினும் அந்நாட்டின் முயற்சி தோல்வியடைந்தது. ஆனால், பாகிஸ்தானின் இந்தச் செயல் இரு நாடுகளுக்கும் இடையே மோதல் வலுப்பெற வழிவகுத்தது. இரு தரப்பிலும் ஆயிரக்கணக்கான இராணுவ வீரர்கள் கொல்லப்பட்டனர். ஐ.நா. அவை மீண்டும் தலையிட்டதைத் தொடர்ந்து, போர் நிறுத்தம் ஏற்பட்டது.
1971 இல் நடந்த இந்தியா – பாகிஸ்தான் போரின் முடிவில் கிழக்கு பாகிஸ்தான், வங்கதேசம் என்னும் தனிநாடாக உருவானது. இந்தியா – பாகிஸ்தான் உறவை மீட்டெடுக்க ஜூலை 1972 இல் சிம்லா ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டது. இதன் மூலம் காஷ்மீரில் தற்காலிக எல்லையாக எல்லைக் கட்டுப்பாட்டுக் கோடு (Line of Control) வரையறுக்கப்பட்டது. இந்த ஒப்பந்தத்தின் முக்கிய அம்சமாக இரு நாடுகளும் மூன்றாம் நாடுகளின் தலையீடு இல்லாமல் காஷ்மீர் விவகாரத்துக்குப் பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண உறுதிகொண்டன. இதே காலக்கட்டத்தில் ‘தி ரெசிஸ்டன்ஸ் ஃபிரண்ட்’ (TRF) என்கிற புதிய தீவிரவாதக் குழு உருவாகித் தாக்குதல் நடத்திவந்தது.
தேர்தல் மோசடி: இந்திய நிர்வாகத்துக்கு உள்பட்ட காஷ்மீர் பகுதிகளில் 1987 இல் சட்டப்பேரவைத் தேர்தல் நடந்தது. இதில் ஜம்மு – காஷ்மீர் தேசிய மாநாட்டுக் கட்சியின் தலைவரான பரூக் அப்துல்லா வெற்றிபெற்றார். எனினும், தேர்தலில் மோசடி நடந்ததாகக் குற்றச்சாட்டு எழுந்தது. இதன் காரணமாக அரசியல் – ஜனநாயகச் செயல்முறைகளில் காஷ்மீர் மக்கள் ஏமாற்றம் அடைந்ததாகக் கூறப்படுகிறது. இந்த அதிருப்தியின் வெளிப்பாடாக, காஷ்மீரில் தீவிரவாத அமைப்புகள் அதிகரித்தன.
குறிப்பாக, பாகிஸ்தானின் ஆதரவு பெற்ற குழுக்கள் இந்தியாவிலிருந்து காஷ்மீரைப் பிரிக்கச் சண்டையிட்டன. இதன் ஓர் அங்கமாக ஜம்மு – காஷ்மீர் விடுதலை முன்னணி (JKLF – Jammu and Kashmir Liberation Front) நிறுவப்பட்டது. 1990களின் இறுதியில் இந்த அமைப்பு காஷ்மீரின் சுதந்திரத்துக்காக இந்தியாவுக்கு அழுத்தம் கொடுக்கத் தொடங்கியது. மற்றொருபுறம், பாகிஸ்தான் ஆதரவு பெற்ற லஷ்கர்-இ-தொய்பா தொடர்ந்து இயங்கிவந்தது. 1990களில் காஷ்மீரில் தொடர்ச்சியான தீவிரவாதச் செயல்களில் ஈடுபடும் இயக்கமாக லஷ்கர்-இ-தொய்பா மாறியது. 1999 இல், பாகிஸ்தான் இராணுவத்தினரும், காஷ்மீர் தீவிரவாதிகளும் கார்கில் பகுதியில் ஊடுருவியதைத் தொடர்ந்து நடந்த போரில் இந்தியா பெரும் வெற்றியடைந்தது.
2001 இல், லஷ்கர்-இ-தொய்பா, ஜெய்ஷ்-இ-முகமது ஆகிய தீவிரவாத அமைப்புகள் இணைந்து, இந்திய நாடாளுமன்றத்தின் மீது நடத்திய தாக்குதல், 2008இல் லஷ்கர்-இ-தொய்பா அமைப்பு மும்பையில் மக்கள் மீது நடத்திய கொடூரத் தாக்குதல், 2016 இல் காஷ்மீரின் உரி ராணுவ முகாம் மீது நடத்தப்பட்ட தீவிரவாதத் தாக்குதல், 2019 இல் காஷ்மீரின் புல்வாமாவில் ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாத அமைப்பு நடத்திய தாக்குதல் என இந்தியாவை அவ்வப்போது சீண்டிக்கொண்டே இருந்தன பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாத அமைப்புகள்.

ஒபரேஷன் சிந்தூர்: காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் 2025 ஏப்ரல் 22 ஆம் திகதி பாகிஸ்தான் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் சுற்றுலாப் பயணிகள் 26 பேர் பலியாகினர். இதற்கு எதிர்வினையாக பாகிஸ்தானுக்கு முதன்மை நீராதாரமான சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை இரத்துசெய்வதாக இந்தியா அறிவித்தது; சிம்லா ஒப்பந்தம் ரத்துசெய்யப்படுவதாக பாகிஸ்தான் அறிவித்தது.
இரு நாடுகளுக்கும் இடையே போர் மூளும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், ‘ஆபரேஷன் சிந்தூர்’ என்கிற பெயரில் பாகிஸ்தான் தீவிரவாதப் பயிற்சி முகாம்களின் மீது இந்தியா தாக்குதல் நடத்தியது. இதில் 9 தீவிரவாத முகாம்கள் தாக்கப்பட்டன. மே 10 அன்று போர் நிறுத்தத்தை இரு நாடுகளும் அறிவித்தன.
பிரச்சினை இல்லாமல் பாகிஸ்தான் இருக்க வேண்டுமென்றால், நாட்டில் உள்ள பயங்கரவாதக் கட்டமைப்புகளை அகற்ற வேண்டும் என இந்தியா கூறியுள்ளது. தீவிரவாதச் சதிச் செயல்களின் முகமாக அறியப்படுகிற பாகிஸ்தான், பயங்கரவாதத்துக்குச் சிறிதும் இடமளிக்காமல் இருப்பதே அந்நாட்டை வளர்ச்சிப் பாதைக்கு அழைத்துச் செல்லும்; இல்லையேல் தீவிரவாதத்தால் அண்டை நாடுகள் பாதிக்கப்படும்; பாகிஸ்தானும் நிர்மூலமாகும் என அரசியல் நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.