வெனிசுவேலா ஜனாதிபதியைக் கடத்திய அமெரிக்கா!  நள்ளிரவில் முக்கிய நகரங்கள் மீது குண்டுகளை வீசியும் சர்வதேச பயங்கரவாதம்!

2026 ஆம் ஆண்டின் விடியல், உலக வரலாற்றில் ஒரு கறுப்புப் பக்கமாக எழுதப்பட்டிருக்கிறது. ஒரு இறையாண்மை கொண்ட நாட்டின் மீது, சர்வதேச விதிகளைத் துச்சமாக மதித்து, அமெரிக்க ஏகாதிபத்தியம் தனது இழிவான முகத்தைக் காட்டியுள்ளது.

ஜனவரி 3 அதிகாலை, தென் அமெரிக்க நாடான வெனிசுவேலாவின் தலைநகர் காரகஸ் மீது அமெரிக்கப் படைகள் குண்டுகளை வீசித் தரைமட்டமாக்கி யதோடு, அந்நாட்டின் ஜனாதிபதி நிக்கோலஸ் மதுரோ மற்றும் அவரது மனைவி சிலியா புளோரஸைக் கடத்திச் சென்றுள்ளதாக டொனால்ட் ட்ரம்ப் அறிவித்திருப்பது உலகையே அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

இது ஒரு தேசத்தின் மீதான தாக்குதல் மட்டுமல்ல, உலக ஜனநாயகத்தின் மீதும், இலத்தீன் அமெரிக்க மக்களின் சுயநிர்ணய உரிமையின் மீதும் நடத்தப்பட்டுள்ள நேரடிப் போராகும்.

இருளில் நிகழ்ந்த கோழைத்தனமான தாக்குதல்

அமைதி உறங்கிக் கொண்டிருந்த அதிகாலை 2 மணியளவில், காரகஸ் நகரின் வானில் அமெரிக்கப் போர் விமானங்களும் ஹெலிகாப்டர்களும் அத்து மீறி நுழைந்தன. தலைநகரின் மையப் பகுதியான புயர்டே தியூனா இராணுவத்தளம், ஹிகுவெரோட் விமான நிலையம் மற்றும் மிராண்டா, அரகுவா, லா குவைரா ஆகிய மாநிலங்களில் உள்ள முக்கிய இராணுவ நிலைகள் மீது அமெரிக்கா சரமாரியாகக் குண்டுகளை வீசியது.

மக்கள் வசிக்கும் குடியிருப்புகள் மீதும் ஏவுகணைகளை ஏவி, அப்பாவிப் பொதுமக்களைக் கொன்று குவித்த அமெரிக்காவின் இந்த இரக்கமற்ற செயல், சர்வதேசப் பயங்கரவாதத்தின் உச்சக்கட்டமாகும். கட்டடங்கள் இடிந்து விழுந்து, காரகஸ் நகரமே புகை மண்டலமாகக் காட்சியளிக்கும் நிலையில், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை இன்னும் சரியாகக் கணக்கிடப்படவில்லை என வெனிசுவேலா பாதுகாப்புத்துறை அமைச்சர் விளாடிமிர் பத்ரினோ லோபஸ் வேதனையுடன் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் கூறுகையில், “இந்த படையெடுப்பு, நாடு சந்தித்த மிகப்பெரிய அவமானத்தை பிரதிநிதித்துவப்படுத்துகிறது. வெனிசுலா மண்ணில் வெளிநாட்டுப் படைகளின் இருப்பை நாங்கள் இறுதிவரை எதிர்த்துப் போராடுவோம்,” என்று சூளுரைத்துள்ளார்.

எண்ணெய் வளத்தைக் கொள்ளையடிக்க ஒரு கிரிமினல் திட்டம்

அமெரிக்காவின் இந்த ஆக்கிரமிப்பிற்குப் பின்னால் இருப்பது ‘போதைப் பொருள் ஒழிப்பு’ என்ற போர்வையில் ஒளிந்து கொண்டிருக்கும் ‘எண்ணெய் தாகம்’ மட்டுமே. உலகிலேயே அதிக கச்சா எண்ணெய் இருப்பைக் (303 பில்லியன் பரல்கள்) கொண்டுள்ள நாடு வெனிசுவேலா. அமெரிக்காவை விட 5 மடங்கு அதிக எண்ணெய் வளம் கொண்ட இந்த நாட்டைத் தனது கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரவும், அங்கிருக்கும் தங்கம் உள்ளிட்ட கனிம வளங்களைச் சுரண்டவும் அமெரிக்கா பல ஆண்டுகளாகத் துடித்துக் கொண்டிருக்கிறது.

2023 ஆம் ஆண்டு கணக்கெடுப்பின்படி வெனிசுவேலா முதலிடத்தில் இருக்க, சவூதி அரேபியா மற்றும் ஈரான் அடுத்தடுத்த இடங்களில் உள்ளன. ஆனால், வெறும் 55 பில்லியன் பரல்கள் கையிருப்புடன் 9 ஆவது இடத்தில் இருக்கும் அமெரிக்கா, தனது வல்லாதிக்கத்தைத் தக்கவைக்க வெனிசுவேலாவின் இயற்கை வளங்களை அபகரிக்கத் துடிக்கிறது. இதற்காகவே கடந்த ஆண்டு முதல், ஜனாதிபதி நிக்கோலஸ் மதுரோ தலைமையிலான அரசாங்கத்தைத் தகர்க்க எதிர்க்கட்சித் தலைவர் என்ற பெயரில் உலா வரும் அமெரிக்க சி.ஐ.ஏ கைக்கூலியான மரியா கோரினா மச்சோடாவிற்குப் பல கோடி ரூபாய் நிதி வழங்கி அமெரிக்கா சதி செய்து வந்தது. அதன் தொடர்ச்சியாகவே, எவ்வித ஆதாரமுமின்றி மதுரோவை, போதைப்பொருள் கடத்தல் கும்பலுடன் தொடர்புபடுத்தி, பொய்ப் பிரச்சாரங்களை அவிழ்த்து விட்டது ட்ரம்ப் நிர்வாகம்.

திட்டமிடப்பட்ட கடல்சார் பயங்கரவாதம்

நேரடித் தாக்குதலுக்கு முன்பாகவே, கடந்த செப்டம்பர் மாதம் முதல் கரீபியன் கடல் பகுதியில் அமெரிக்கா தனது கடற்படையை நிலைநிறுத்தி ஒரு போர்க்காலச் சூழலை உருவாக்கியிருந்தது. ‘கடல்சார் பாதுகாப்பு’ என்ற பெயரில் வெனிசுவேலாவின் சுமார் 30 படகுகள் மீது குண்டு வீசப்பட்டது. இதில் மீனவர்கள் மற்றும் தொழிலாளர்கள் என 110-க்கும் மேற்பட்டோர் படுகொலை செய்யப்பட்டனர். இது சர்வதேசக் கடற்படை விதிகளுக்கு எதிரானது மட்டுமன்றி, அப்பட்டமான கடல் கொள்ளையாகும். குறிப்பாக, 2025 டிசம்பர் 10 மற்றும் 20 ஆகிய திகதிகளில் வெனிசுவேலாவிலிருந்து கச்சா எண்ணெய் ஏற்றிச் சென்ற ‘ஸ்கிப்பர்’ உள்ளிட்ட டேங்கர் கப்பல்களை அமெரிக்க இராணுவம் வழிமறித்துக் கடத்தியது. இந்த பொருளாதாரத் தடைகளும், வளங்களைத் திருடும் நடவடிக்கைகளுமே இன்று ஒரு முழுமையான போராக உருவெடுத்துள்ளது.

ஜனாதிபதி கடத்தல்: ஜனநாயகத்தின் மீதான வன்முறை

இந்நிலையில், ஜனவரி 3 சனிக்கிழமை அதிகாலை தாக்குதல் தொடங்கிய சில மணி நேரங்களிலேயே, அமெரிக்க இராணுவத்தின் சிறப்புப் படையான ‘டெல்டா’ பிரிவு, ஜனாதிபதி நிக்கோலஸ் மதுரோவையும் அவரது மனைவி சிலியா புளோரஸையும் கடத்திவிட்டதாக ட்ரம்ப் தனது சமூக வலை தளத்தில் வெட்கமின்றிப் பெருமை பேசியுள்ளார். ஒரு நாட்டின் சட்டப்பூர்வமான தலைவரை, மற்றொரு நாடு இராணுவத்தை அனுப்பிக் கடத்துவது என்பது 1990-களில் பனாமாவில் அமெரிக்கா நிகழ்த்திய அதே அராஜகத்தின் தொடர்ச்சியாகும்.

வெனிசுவேலா துணை ஜனாதிபதி டெல்சி ரோட்ரிக்ஸ், “எங்கள் ஜனாதிபதி எங்கே இருக்கிறார் என்று தெரியவில்லை, அவர் உயிருடன் இருப்பதற்கான ஆதாரத்தை அமெரிக்கா உடனடியாக வழங்க வேண்டும்” என்று கோரிக்கை விடுத்துள்ளார். மதுரோ கடத்தப்படுவதற்கு முன்னதாகவே நாட்டில் தேசிய அவசர நிலையைப் பிரகடனப்படுத்தி, “அமெரிக்க ஆக்கிரமிப்பிற்கு எதிராக மக்கள் வீதிகளில் திரள வேண்டும்” என்று விடுத்த அழைப்பு, இப்போது வெனிசுவேலா முழுவதும் ஒரு புரட்சி நெருப்பாகப் பற்றி எரிந்து கொண்டிருக்கிறது.

உலக நாடுகளின் கொந்தளிப்பும் கண்டனக் குரல்களும்

அமெரிக்காவின் இந்த அராஜகத்திற்கு எதிராக உலகம் முழுவதும் கண்டனக் குரல்கள் வலுத்து வருகின்றன. கியூபா, கொலம்பியா, ரஷ்யா, ஈரான், சிலி மற்றும் டிரினிடாட்-டொபா கோ உள்ளிட்ட நாடுகள் இது ஐ.நா. சபையின் விதிகளை மீறிய செயல் என்றும், பிராந்திய அமைதிக்கு விடுக்கப்பட்ட மிரட்டல் என்றும் சாடியுள்ளன. கியூப ஜனாதிபதி மிகுவல் தியாஸ்- கேனல் இத்தாக்குதலை “மன்னிக்க முடியாத கிரிமினல் குற்றம்” என்று சாடியுள்ளார்.

இந்தியாவில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் எம்.ஏ.பேபி, இது அமெரிக்கா தலைமையிலான ஏகாதிபத்தியத்தின் சர்வதேசப் பயங்கரவாதம் என்று கடுமையாகச் சாடியுள்ளார். அவர் தனது ‘எக்ஸ்’ தளத்தில், “வெனிசுவேலா ஜனாதிபதியையும் அவர் மனைவியையும் கடத்தியிருப்பது சர்வதேசச் சட்டத்தின் அப்பட்டமான மீறல். ட்ரம்ப் தன்னை ஒரு ‘அமைதிக்கான ஜனாதிபதி’ என்று கூறிக்கொள்வது எவ்வளவு பெரிய பொய் என்பதை இந்த நடவடிக்கை முழு உலகிற்கும் அம்பலப்படுத்தியுள்ளது. வெனிசுவேலா மக்களுடன் நாங்கள் ஒற்றுமையாக நிற்கிறோம்; வாய்ப்புள்ள இடமெல்லாம் போராட்டங்களை முன்னெடுக்க வேண்டும்” என்று அழைப்பு விடுத்துள்ளார்.

வெனிசுவேலா கம்யூனிஸ்ட் கட்சியும் தனது கண்டன அறிக்கையில், “அமெரிக்காவின் இந்த ஏகாதிபத்திய ஆக்கிரமிப்பை வன்மையாகக் கண்டிக்கிறோம். இலத்தீன் அமெரிக்காவைத் தனது பின்தோட்டம் என்று நினைக்கும் அமெரிக்காவின் கனவு ஒருபோதும் பலிக்காது. உலகெங்கிலும் உள்ள தொழிலாளர் அமைப்புகள் இந்த அநீதிக்கு எதிராகத் திரள வேண்டும்” என்று வலியுறுத்தியுள்ளது.

மண்டியிடாது வெனிசுவேலா!

அமெரிக்கா நினைப்பது போல, ஒரு தலைவரைக் கடத்துவதன் மூலம் ஒரு சித்தாந்தத்தையோ அல்லது ஒரு நாட்டின் விடுதலையையோ முடக்கிவிட முடியாது. இலத்தீன் அமெரிக்காவின் சிம்மசொப்பனமாகத் திகழ்ந்த சைமன் பொலிவாரின் இரத்தம் ஓடும் அந்த மண்ணில், மக்கள் தங்கள் ஜனாதிபதியை மீட்கவும், தங்கள் இறையாண்மையைக் காக்கவும் ஆயுதமேந்திப் போராடத் தயாராகி வருகின்றனர். அமெரிக்காவின் பொருளாதாரத் தடைகள், கடல் கொள்ளைகள் மற்றும் நேரடி இராணுவத் தாக்குதல்கள் ஆகியவற்றைத் தாண்டி, வெனிசுவேலா மக்கள் இந்த ஏகாதிபத்திய ஆக்கிரமிப்பை முறியடிப்பார்கள் என்பதில் சந்தேகமில்லை. சர்வதேச சமூகம் மவுனம் கலைத்து, அமெரிக்காவின் இந்தப் போர்க்குற்றத்தை நிறுத்த அழுத்தம் கொடுக்க வேண்டிய தருணம் இது.

வெனிசுவேலாவின் இறையாண்மையைப் பாதுகாப்போம்!

Tags: