இந்தியப் பிரதமர் மோடியின் மௌனம் கலையுமா?

ஷ்யாவிடமிருந்து இந்தியா கச்சா எண்ணெய் வாங்குவது தொடர்பாக தாம் மகிழ்ச்சியாக இல்லை என்றும், தம்மை மகிழ்ச்சிப்படுத்துவது மோடியின் பொறுப்பு என்றும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் உத்தரவு போட்டிருந்தார். இதைத் தொடர்ந்து ரஷ்யாவிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்குவதை இந்தியா கொஞ்சம் கொஞ்சமாக குறைத்துக் கொண்டு வருகிறது.

ஈரானிடமிருந்து இந்தியா எண்ணெய் வாங்கக் கூடாது என்று ட்ரம்ப் மிரட்டினார். இதற்கும் இந்திய ஒன்றிய அரசு இணங்கி இருப்பதாகவே தெரிகிறது. 

அடுத்து வெனிசுவேலா ஜனாதிபதி மதுரோவை அமெரிக்க வல்லரசு அராஜகமாக கடத்திக் கைது செய்து, அந்த நாட்டின் எண்ணெய் கிணறுகளையும் கைப்பற்றியுள்ள நிலையில், இனி வெனிசுவேலாவிடமிருந்து இந்தியா எண்ணெய் வாங்கும் என்றார் ட்ரம்ப். இதுவும் கூட நடப்பதற்கான சாத்தியக்கூறு உள்ளது. மேலும்  பிரதமர் மோடியின் கோர்ப்பரேட் கூட்டாளியான அம்பானியின் நிறுவனம் வெனிசுவேலாவில் எண்ணெய் கிணறுகளை கைப்பற்ற இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகின.

இந்தப் பின்னணியில்தான் மாநிலங்களவை யில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்  கட்சியின் உறுப்பினர் ஜோன் பிரிட்டாஸ் (John Brittas) இந்தியாவின் எரிபொருள் துறை அமைச்சராக டொனால்ட் ட்ரம்ப் செயல்படுகிறாரா என்று கேள்வி எழுப்பினார். 

இந்தியாவுக்கும், பாகிஸ்தானுக்கும் இடையிலான மோதலை நான்தான் நிறுத்தினேன் என்று ட்ரம்ப் பல முறை சொன்னபோதும், பிரதமர் மோடி மறுப்பு தெரிவிக்கவில்லை. மோடி அமெரிக்காவில் இருந்தபோதே இந்தியர்களுக்கு கைவிலங்கு பூட்டி நாடு கடத்தியது ட்ரம்ப் நிர்வாகம். இதற்கு இந்திய ஒன்றிய அரசு கண்டனம் தெரிவிக்கவில்லை.

இந்திய இறக்குமதி பொருட்களுக்கு ட்ரம்ப் நிர்வாகம் வரி மேல் வரி போட்டாலும் எதிர்ப்பதற்கு பதிலாக தாஜா செய்வதிலேயே நரேந்திர மோடி அரசு கவனம் செலுத்தியது. இந்தியாவுக்கும், அமெரிக்காவுக்கும் இடையிலான வர்த்தக உடன்பாடு இந்தியப் பொருளாதாரத்தின் மீது பேரிடியாக இறங்கியுள்ளது. ஆனால் இதையே சாதனையாக மோடி அரசு பீற்றிக் கொள்கிறது. 

இந்த நிலையில், ‘மோடி என்னை நேசித்துத் தான் ஆக வேண்டும். இல்லையெனில் நான் அவரின் அரசியல் வாழ்க்கையையே அழித்து விட முடியும்’ என்று ட்ரம்ப் மிரட்டியுள்ளார். எப்ஸ்டீன் கோப்புகள் வெளியாகியுள்ள நிலையில், ட்ரம்ப்பின் இந்த மிரட்டல் பல்வேறு கேள்விகளை எழுப்புகிறது. இவ்வாறு ட்ரம்ப் மிரட்டியுள்ளது குறித்து பிரதமர் மோடி வாய் திறந்து விளக்கம் அளிப்பாரா என்ற கேள்வி எழுந்துள்ளது. இது இரு தனிநபர்களுக்கு இடையிலான விவகாரம் அல்ல, இந்தியாவின் இறையாண்மை தொடர்புடையது. பிரதமர் மோடி இப்போதாவது மௌனம் கலைப்பாரா?

-தீக்கதிர் ஆசிரியர் தலையங்கம்
2026.02.09

Tags: