அமெரிக்காவின் வரி மிரட்டல்களை எதிர்க்க நாடுகள் ஒன்றிணைய வேண்டும்

மெரிக்காவின் தன்னிச்சையான இறக்குமதி வரிகளுக்கு எதிராகப் பாதிக்கப்பட்ட நாடுகள் தனித்தனியாகப் போராடுவதைத் தவிர்த்து,  வலிமையான கூட்டமைப்புகளை உருவாக்கி ஒன்றிணைந்து பேச்சுவார்த்தை நடத்த வேண்டும்” என்று பிரேசில் ஜனாதிபதி லூலா அழைப்பு விடுத்தார்.

சர்வதேச ‘ஏஐ தாக்கம் குறித்த உச்சி’ மாநாடு மற்றும் இருதரப்பு ஒப்பந்தங்களுக்காக இந்தியா வந்திருந்த லூலா, 22.02.2026 அன்று டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது சர்வதேச வர்த்தகம் மற்றும் அரசியல் சூழல் குறித்து அவர் பேசினார்.

தொழிற்சங்க அனுபவமும் சர்வதேச வர்த்தகமும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் நிர்வாகத்தின் வரி விதிப்புகளைத் தனது தொழிற்சங்க அனுபவத்துடன் ஒப்பிட்டு லூலா பேசினார். “ஒரு தனிப்பட்ட தொழிலாளி முதலாளியுடன் பேச்சுவார்த்தை நடத்தினால் அது தோல்வியில்தான் முடியும்; தொழிலாளர்கள் அனைவரும் ஒன்றிணைந்து நின்றால் மட்டுமே நிறுவனத்தின் கொள்கையை மாற்ற முடியும். அதுபோலவே, சிறிய நாடுகள் பெரிய நாடுகளுடன் தனித் தனியாகப் பேசும்போது அவை பாதகமான ஒப்பந்தங்களையே பெறுகின்றன. அமெரிக்காவை எதிர்கொள்ள இந்தியா, பிரேசில் உள்ளிட்ட பாதிக்கப்பட்ட நாடுகள் ஓரணியில் திரள வேண்டும்” என்றார்.

இந்தியா – பிரேசில் எதிர்கொள்ளும் சவால்கள் அமெரிக்காவால் அதிக வரிச்சுமையை எதிர்கொள்ளும் நாடுகளாக இந்தியாவும் பிரேசிலும் உள்ளன என்பதை சுட்டிக்காட்டிய லூலா, “எங்கள் இரு நாடுகளின் ஏற்றுமதிக்கும் 50 சதவீத வரி விதிக்கப்பட்டுள்ளது. பிரிக்ஸ் (BRICS) கூட்டமைப்பில் இருப்பதாலும், ரஷ்யா மற்றும் ஈரானுடனான வர்த்தக உறவுகளாலும் டொனால்ட் ட்ரம்ப் நிர்வாகத்திடமிருந்து கூடுதல் மிரட்டல்களை எதிர்கொள்கிறோம். எங்களுக்கு மீண்டும் ஒரு புதிய பனிப்போர் வேண்டாம்; அனைத்து நாடுகளும் சமமாக நடத்தப்பட வேண்டும்” என்று வலியுறுத்தினார்.

ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் சீர்திருத்தம் ஐக்கிய நாடுகள் சபையின் தற்போதைய நிலையை விமர்சித்த லூலா, “ஐ.நா. சபையால் நோயைக் கண்டறிய முடிகிறது, ஆனால் அதற்கான சிகிச்சையை அளிக்க முடிவதில்லை” என்றார். 140  கோடி மக்கள் தொகை கொண்ட இந்தியாவிற்கும், பிரேசிலுக்கும் பாதுகாப்பு கவுன்சிலில் ஏன் நிரந்தர இடம் இல்லை என்று கேள்வி எழுப்பிய அவர், ஜெர்மனி, மெக்சிகோ, நைஜீரியா, எகிப்து போன்ற நாடுகளையும் உள்ளடக்கிய விரிவான சீர்திருத்தம் அவசியம் என்றார்.

ஐக்கிய முன்னணி அரசுக்கு பாராட்டு இந்தியாவின் பொருளாதார மேலாண்மை தமக்குச் சில பாடங்களைக் கற்றுக் கொடுத்ததாகக் குறிப்பிட்ட லூலா, முன்னாள் பிரதமர்  மன்மோகன் சிங் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசின் செயல்பாடுகளைப் பாராட்டினார்.

2005 இல் இந்தியா பின்பற்றிய அந்நியச் செலாவணி கையிருப்பு முறையைப் பிரேசிலிலும் செயல்படுத்தி, சர்வதேச நாணய நிதியத்திடம் (IMF) கடன் வாங்கும் நிலையிலிருந்து கடன் கொடுக்கும் நிலைக்குத் தனது நாட்டை உயர்த்தியதை லூலா நினைவு கூர்ந்தார். தனது இந்தப் பயணத்தின் மூலம் இந்தியாவுடன் கனிம வள ஒத்துழைப்பு, எஃகு சுரங்கம் மற்றும் டிஜிட்டல் கூட்டாண்மை ஆகிய ஒப்பந்தங்களில் அவர் கையெழுத்திட்டுள்ளார்.

Tags: