ஈரான் போரில் ட்ரம்ப்புக்கு கிட்டியது என்ன?

-பாரதி ஆனந்த்

ரானும் அமெரிக்காவும் ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தத்தை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கின்றன. எல்லாம் சரியாகச் சென்றால் வெள்ளிக்கிழமை (ஜூன் 19) ஈரானும் அமெரிக்காவும் போரை நிறுத்திக் கொள்ளும் அந்த ஒப்பந்தம் சுவிட்சர்லாந்தில் கையெழுத்தாகிவிடும். அதை அமைதி ஒப்பந்தம் என்பதைவிட புரிந்துணர்வு ஒப்பந்தம் என்றே சம்பந்தப்பட்ட நாடுகள் அழைக்கின்றன. காரணம் அமைதி ஒப்பந்தம் சட்டப்பூர்வமான பிணைப்பு கொண்டது. ஆனால், புரிந்துணர்வு ஒப்பந்தம் அப்படியானது அல்ல.

ஒப்பந்தம் எந்த வகையிலானதாக இருந்தாலும் சரி. அது நிறைவேறட்டும் என்று உலக நாடுகள் எதிர்பார்த்து நோக்கிக் கொண்டிருக்கின்றன. காரணம், நவீன உலகம் சமீப காலங்களில் கண்ட போர்களைப் போல் அல்லாது இந்தப் போர் எரிசக்தி விநியோகத்தில் உலகின் கிழக்கு – மேற்கு; வடக்கு – தெற்கு என பாரபட்சமின்றி பாதிப்புகளை ஏற்படுத்தியதே!

மிகுந்த எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ள அந்த ஒப்பந்தத்தில் என்னவிருக்கிறது என்று இதுவரை பொதுவெளியில் தகவல்கள் வெளியாகவில்லை. ஆனால், ஒப்பந்தம் முறைப்படி கையெழுத்தான பின்னர்தான் போர் நிறுத்தம் அமலுக்கு வருமென்று ஈரான் திட்டவட்டமாக தெரிவித்து ஒரு சந்தேகப் புள்ளியை வைத்திருக்கிறது.

ஒரு சின்ன ‘ரீவைண்ட்

4 மாதங்களுக்கு முன்னர் இஸ்ரேலும் அமெரிக்காவும் ஈரான் மீது தாக்குதலைத் தொடங்கின. ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை நிறுத்துவதற்காகவே இந்தத் தாக்குதல் என்று விளக்கமும் அளிக்கப்பட்டது.

முதல் தாக்குதலில் ஈரானின் பள்ளிக்கூடத்தில் 170+ குழந்தைகள் உயிரிழந்தனர். ஈரான் – இஸ்ரேலின் தாக்குதலுக்கான காரணத்துக்கும், பள்ளிக்கூடம் தாக்கப்பட்டதற்குமான தொடர்பு என்னவாக இருந்துவிட முடியும் என்ற கேள்வி இன்றளவும் நீடிக்கிறது.

ஈரானின் உச்சத் தலைவராக இருந்த அயதுல்லா அலி கமேனி, பெப்ரவரி 28, 2026 அன்று போர் தொடங்கிய முதல் 12 மணி நேரத்துக்குள் கொல்லப்பட்டார். இனி அடுத்து யார் உச்ச தலைவராக வந்தாலும் கொல்லப்படுவார் என்ற எச்சரிக்கையையும் விடுத்தது.

தொடர்ந்து ஈரானின் பாதுகாப்பு கவுன்சில் செயலர் அலி லாரிஜானி, இஸ்லாமிய புரட்சிகர படையின் தளபதி எனப் பலரையும் தீர்த்துக் கட்டியது அமெரிக்கா. இஸ்ரேலும், அமெரிக்காவும் கூட்டாக தாக்குதல் நடத்த ஈரானும் பதிலடி கொடுக்கத் தொடங்கியது.

உலகத்துக்கு அதிர்ச்சி கொடுக்கும் வகையில் சர்வதேச எண்ணெய் வர்த்தகத்தில் 25% நடக்கும் முக்கிய மார்க்கமான ஹார்மூஸ் நீரிணையை மூடியது ஈரான். கச்சா எண்ணெய் விலை விர்ரென ஏறியது. இந்தியா உள்பட உலக நாடுகள் ரஷ்யாவிடம் எண்ணெய் வாங்கிக் கொள்ளலாம் என்று முந்தைய உத்தரவில் சிறிய தளர்வையும் சகாயமாக நல்கியது அமெரிக்கா.

பக்கவாட்டுச் சேதாரமாக, ஈரானுக்கு ஹிஸ்புல்லாக்கள் ஆதரவு கொடுக்க இன்றளவும் லெபனானை சிதைத்துக் கொண்டிருக்கிறது இஸ்ரேல்.

அமெரிக்க இராணுவக் கட்டமைப்புகளுக்கு இடம் கொடுத்திருந்ததற்காகவே ஓமன், குவைத், சவுதி அரேபியா என வளைகுடா நாடுகளை ஈரான் அவ்வப்போது தாக்கியது. மேற்காசிய முழுவதும் பதற்றம், பிற நாடுகளில் எரிசக்தி தட்டுப்பாடு என பொருளாதார பாதிப்புகளைப் பரவலாக்கியது.

இந்தப் போர், எரிசக்தி துறையில் ஈரானின் பொருளாதார செல்வாக்கு என்னவென்பதை உலகுக்கு உணர்த்தியுள்ளது. அதனால்தான் ஹார்மூஸ் நீரிணையைப் பயன்படுத்தி இனி சுங்கம் கட்டுங்கள் என்ற கெடுபிடியையும் ஈரான் அறிவித்தது.

இந்தச் சூழலில்தான் பாகிஸ்தானின் மத்தியஸ்த முயற்சியால் ஏப்ரல் 8 முதல் இரு வார கால தற்காலிக போர் நிறுத்தம் நடைமுறைக்கு வந்தது. தற்காலிக அமைதி உடன்பாடுகள் 60 நாட்கள் வரை நீட்டிக்கப்பட்டு, ஜூன் மாத மத்தியில் போர் முடிவுக்கு வருவதாக அறிவிக்கப்பட்டது. இப்போது ஜூன் 19-ஐ நாம் எதிர்நோக்கிக் கொண்டிருக்கிறோம். மேற்காசியப் போர் என்ன செய்யும் என்ற பயத்தை உலகம் உணர்ந்திருக்கிறது.

இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலையுயர்வும், சமையல் எரிவாயு விலை உயர்வும் ஏற்பட்டிருக்கிறது. உலகளவில் ஏற்பட்டுள்ள பொருளாதார பாதிப்புகள் சரியாக இன்னும் சில மாதங்கள் ஆகலாம் என்றே பொருளாதார நிபுணர்கள் கணிக்கின்றனர்.

போரில் வென்றது யார்?!

போரில் வெற்றி, தோல்வியென்று ஏதுமில்லை. என்றாலும், ட்ரம்ப் – நெதயான்குவிடமிருந்து வெற்றி அறிக்கையும், ஈரானிடமிருந்தும் அதனுடைய வெர்ஷன் அறிக்கையும் எதிர்பார்க்கப்படுகிறதுதான். இழப்புகள் யாருக்கு அதிகம் என்று எப்போதுமே கணக்கிடப்படும் வழக்கமே.

அந்த வகையில் ஈரான், லெபனானில் உயிரிழப்புகள் அதிகமாக இருந்திருக்கின்றன. அமெரிக்க இராணுவ பராக்கிரம அடையாளங்களான எஃப் 15 (F15) போர் விமானம், அப்பாச்சி ஹெலிகாப்டர்களை ஈரான் சுட்டுவீழ்த்தியது.

அமெரிக்க இராணுவத் தலைமையகமான பென்டகன் அண்மையில் வெளியிட்ட தகவலின்படி, ஈரானின் ஏவுகணைகள், ட்ரோன்கள், கடற்படை தளங்கள், தொழில் தளங்களில் 80% அழிக்கப்பட்டுவிட்டதாகக் கூறப்படுகிறது.

இதற்கிடையில் இஸ்ரேலையும் நாம் கருத்தில் கொண்டுவர வேண்டும். ஈரான் எவ்வளவுக்கு எவ்வளவு பலவீனமாகிறதோ அந்த அளவுக்கு இஸ்ரேல் பாதுகாப்பு உறுதியாகும். அதனால்தான் ட்ரம்ப்பை ஒப்பிரேஷன் எபிக் ஃப்யூரி என்ற இந்த கோரத் தாண்டவத்துக்கு நெதன்யாகு தூண்டிவிட்டிருக்க வேண்டும் என்று சர்வதேச போர் நிலவர ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

2025-ல் அமெரிக்கா ஒப்பிரேஷன் மிட்நைட் ஹேமர் (Operation Midnight Hammer) என்று ஈரானை 12 நாட்கள் தாக்கவும் நெதன்யாகுவின் தூண்டுதலையே அவர்கள் காரணமாகக் கூறுகின்றனர்.

உலகமே காசா போர் பற்றி பேச, நெதன்யாகு சாதுர்யமாக ஈரானை பலவீனப்படுத்துதல், லெபனானை இன்னும் அதிகமாகத் தாக்கிக் கொள்ளுதல், காசா மீதான சர்வதேச கவனத்தைத் திருப்புதல், உள்நாட்டில் தனக்கு எதிர்க்கும் இருக்கும் எதிர்ப்பை ஆறப்போடுதல் என பல காய்களை நகர்த்தியிருக்கிறார் என்கின்றனர் அவர்கள்.

-இந்து தமிழ்
2026.06.16

Tags: