உலகை மிரட்டும் போர்ப் பதற்றமும் எரியும் எரிசக்தி நெருக்கடியும்!

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் அமை தியை நிலைநாட்டுவதற்காகப் போடப்பட்ட இஸ்லாமாபாத் புரிந்துணர்வு ஒப்பந்தத்தை அமெரிக்க ஏகாதிபத்தியம் தனது எதேச் சதிகாரப் போக்கால் முற்றிலும் சிதைத்துள்ளது.
ஈரான் மீதான அமெரிக்காவின் புதிய துறைமுக முற்றுகை மற்றும் தொடர் வான்வழித் தாக்குதல்களால் பிராந்தியத்தில் அமைதிப் பேச்சு வார்த்தைக்கான வாய்ப்புகள் முற்றிலுமாக முடக்கப்பட்டுள்ளன.
அமெரிக்காவின் இந்த ஏகாதிபத்திய ஆக்கிரமிப்பு நடவடிக்கைகளுக்குப் பதிலடியாக, “எண்ணெய் மற்றும் எரிவாயு விநி யோகம் என்பது அனைவருக்கும் இருக்க வேண்டும் அல்லது யாருக்கும் இருக்கக்கூடாது” என்று ஈரான் பகிரங்க எச்சரிக்கை விடுத்துள்ளது.
ஹோர்முஸ் நீரிணையைச் சுற்றியுள்ள பந்தர் அப்பாஸ், கெஷ்ம் தீவு, பந்தர் இமாம் கொமேனி ஆகிய துறைமுகப் பகுதிகளில் அமெரிக்க ராணு வம் நடத்திய கொடூரமான குண்டுவீச்சில், ஈரா னின் ஒரே சிவிலியன் அணுமின் நிலையம் அமைந் துள்ள புஷெஹ்ர் நகரும் பாதிக்கப்பட்டுள்ளது.
கடந்த வாரம் முதல் அமெரிக்கா நடத்திய கொடூரத் தாக்குதல்களில் குறைந்தது 40 ஈரானிய குடிமக்களும், 15.07.2026 அன்று தாக்குதலில் 7 இராணுவ வீரர்களும் கொல்லப்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. அமெரிக்காவின் இந்த அராஜகப் போக்கிற்குப் பதிலடியாக, பஹ்ரைனில் உள்ள அமெரிக்காவின் ஐந்தாவது கடற்படை தளம் மற்றும் குவைத் கடற்படைக் கப்பல்களை இலக்காக்கி ஈரானின் புரட்சிகரக் காவல் படை ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதல்களை நடத்தியுள்ளது. இதில் குவைத் கப்பல் தாக்கப்பட்டதில் அதன் பணியாளர்கள் நால்வர் காயமடைந்துள்ளனர். மேலும், ஓமன் கடற்கரை யில் நார்வே நாட்டின் எண்ணெய் ஏற்றிச் செல்லும் கப்பல் ஒன்றும் இனம் தெரியாத வெடி பொருளால் தாக்கப்பட்டு சேதமடைந்துள்ளது.
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் ஹோர்முஸ் நீரிணையைப் பயன்படுத்தும் கப்பல்களுக்கு விதிக்கத் திட்டமிட்டிருந்த 20 சதவீத வரியைத் திரும்பப் பெற்றாலும், ஈரானிய துறை முகங்கள் மீதான கொடூரமான பொருளாதார முற்றுகையைத் தொடர்ந்து தீவிரப்படுத்தி வருகிறார். இதன் விளைவாக, உலகளவில் பிரெண்ட் கச்சா எண்ணெய் விலை ஒரு பேரலுக்கு 84.61 டொலராக உயர்ந்து, 85 டொலரை நெருங்கி பெரும் எரிசக்தி நெருக்கடியை உருவாக்கியுள்ளது.
சர்வதேச நாணய நிதியத்தின் நிபுணர்களான ஆசிம் சாதிகோவ் மற்றும் ஜான்-மார்க் நடால் எச்சரித்துள்ளபடி, கச்சா எண்ணெய் உபரி மூலம் இதுவரை உலகச் சந்தை பெற்று வந்த சமநிலை தற்போது முழுமையாகக் குறைந்துவிட்டது. அமெரிக்காவின் இந்தத் தன்னிச்சையான ஆக்கிரமிப்பு, உலகப் பொருளாதாரத்தைப் படுபாதாளத்திற்குத் தள்ளுவதோடு மட்டுமல்லாமல், பிராந்திய அமைதியையும் அச்சுறுத்தலுக்கு உள்ளாக்கியுள்ளது. ஏழை எளிய நாடுகளின் வாழ்வாதாரத்தைச் சீர்குலைக்கும் அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் இந்தத் தொடர் அராஜகப் போக்கினை நிறுத்துவதே தீர்வுக்கு முதல் படி.
-தீக்கதிர் ஆசிரியர் தயைங்கம்
2026.07.16