டெல்லியில் வெடித்துள்ள மாபெரும் மாணவர் போராட்டம் மோடி ஆட்சியை ஏன் உலுக்கியுள்ளது? 

– ராகினி

தேர்வுத் தாள்கள் கசிந்ததை எதிர்த்து இணையத்தில் தொடங்கிய கொந்தளிப்பு தற்போது தங்களை அவமதிக்கும் ஒரு அரசின் செயல்பாடுகளுக்கு எதிராகத் திரண்டிருக்கும் ஒட்டுமொத்த தலைமுறை எழுச்சியாக மாறியுள்ளது. பிரதமர் நரேந்திர மோடியை நேரிடையாகப் பொறுப்பேற்கச் செய்வதன் மூலம், டெல்லியின் வீதிகளில் இந்த மாணவர்கள் அதிகாரத்தை கேள்விக்குள்ளாக்கியுள்ளனர். அரசியல் விழிப்புணர்வு பெற்றுள்ள புதிய தலைமுறை இளைஞர்களின் தலைமையில் நடந்துவரும் இந்த நாடாளுமன்ற நோக்கிய பேரணி, ஒட்டுமொத்த ஆட்சிமுறை மற்றும் நிறுவனங்களின் வீழ்ச்சிக்கு எதிரான ஒரு விரிவான குற்றப்பத்திரிகையாக மாறியுள்ளது.

1. தர்மேந்திர பிரதானைத் தாண்டி இப்போது மோடியை நோக்கிய கோபம்

தேர்வு விவகாரத்தில் ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும் என்ற கோரிக்கையுடன் இது தொடங்கினாலும், தற்போது வீதிகளில் வெளிப்படும் கோபம் கடந்த 12 ஆண்டுகால பிரதமர் நரேந்திர மோடியின் ஆட்சிமுறையை நோக்கியே திரும்பியுள்ளது. அமைச்சர் பதவியில் இருந்தாலும் இல்லாவிட்டாலும் அது முக்கியமில்லை என்று கருதும் இளைஞர்கள், மோடியின் தனிப்பட்ட தலைமைப் பாணியையே நேரடியாக கேள்விக்குள்ளாக்கியுள்ளனர்.

2. சுயேச்சையாக திரண்டெழுந்த இளைஞர்கள்

‘காக்ரோச் ஜனதா கட்சி’ (CJP) போன்ற வைரலான கேலிச்சித்திரப் பிரச்சாரங்கள் மூலம் ஆரம்பத்தில் விழிப்புணர்வு ஏற்பட்டாலும், தற்போதைய ஜந்தர் மந்தர் போராட்டமும் நாடாளுமன்ற நோக்கிய பேரணியும் எந்தவொரு தனிப்பட்ட அமைப்பின் தலைமையைக் கொண்டது அல்ல. வாடகைப் பேருந்துகளில் அழைத்து வரப்பட்டவர்கள் அல்லாமல், முற்றிலும் சொந்த விருப்பத்தின் பேரில் வந்துள்ள இளைஞர்களின் மாபெரும் எழுச்சியாக இது உருவெடுத்துள்ளது.

3. அரசின் வழக்கமான ‘தேசவிரோத’ முத்திரைக் குத்தும் உத்தி தோல்வி

குடியுரிமை திருத்தச் சட்டப் போராட்டம் (CAA) அல்லது விவசாயிகள் போராட்டம் போன்றவற்றின் மீது முந்தைய காலத்தில் அரசும் ஊடகங்களும் ‘முஸ்லிம்கள்’ அல்லது ‘காலிஸ்தானிகள்’ என்ற மத மற்றும் பிராந்திய முத்திரைகளைக் குத்தின. ஆனால், வேலைவாய்ப்பின்மை, தேர்வு முறைகேடுகள் போன்ற ஒட்டுமொத்த இளைஞர்களின் பொதுவான பிரச்சனைகளை அடிப்படையாகக் கொண்டுள்ள இந்தப் போராட்டத்தில் சாதி, மத எல்லைகளைத் தாண்டி அனைத்துத் தரப்பு மாணவர்களும் இணைந்துள்ளனர். அமைதியான முறையில் போராடுவதால், இவர்களை வன்முறையாளர்கள் என முத்திரைக் குத்துவது அரசுக்குக் கடினமாகியுள்ளது.

4. நீதிமன்றங்கள் மற்றும் நாடாளுமன்றம் மீதான நம்பிக்கை இழப்பு

உயர்நீதிமன்றங்களின் சில கருத்துகளும், தேர்வு கசிவுகள் தொடர்பான வழக்குகளில் முறையான நீதி கிடைக்காததும், பாரம்பரிய ஜனநாயக அமைப்புகள் மீது இளைஞர்களுக்கு இருந்த கொஞ்ச நஞ்ச நம்பிக்கையையும் தகர்த்துள்ளன. பெரிய ஊடகங்களும் தொலைக்காட்சிகளும் இந்தப் போராட்டங்களை மூடி மறைக்க முயலும் நிலையில், தங்களின் குறைகளைத் தீர்க்க வேறு வழியின்றி மாணவர்கள் நேரடியாக வீதிகளுக்கு வர நேரிட்டுள்ளது.

5. அரசியல் பொறுப்புக்கூறலைத் தட்டிக்கழிக்க முடியாத சூழல்

கடந்த ஒரு மாதமாக எந்தவொரு அமைச்சரையோ அதிகாரியையோ அனுப்பி பேச்சுவார்த்தை நடத்தாமல் மாணவர்களை அரசு தவிர்க்க முயன்றது. ஆனால், மீண்டும் மீண்டும் நடைபெறும் தேர்வுத் தோல்விகளுக்கும் முறைகேடுகளுக்கும் யார் பொறுப்பு என்ற கேள்வியை இளைஞர்கள் உறுதியாக எழுப்பி வருகின்றனர். நாடாளுமன்றத்தை நோக்கித் திரண்டுள்ள இந்த மாணவர் படை, மோடி அரசாங்கத்தை அரசியல் பொறுப்புக்கூறலுக்கு உட்படுத்தியுள்ளது.

6. நிலைகுலைந்து போன அரசாங்கம்

மிரட்டல்கள் மற்றும் மௌனம் காக்கும் உத்திகள் மூலம் கடந்த காலப் போராட்டங்களை ஒடுக்கிய அரசுக்கு, இந்த அமைதியான மாணவர் – இளைஞர் எழுச்சி எதைச் செய்வது என்று தெரியாத ஒரு நிலையை ஏற்படுத்தியுள்ளது. ஒடுக்க முடியாத இந்த மக்கள் திரள், ‘வலிமையான தலைவர்’ என்ற மோடியின் பிம்பத்திற்குப் பெரும் சவாலாக மாறியுள்ளது.

7. அச்சத்தின் சுவர்களைத் தகர்த்தெறிந்த மக்கள்

காவல்துறையின் அடக்குமுறைகள், கண்காணிப்பு கேமராக்கள் மற்றும் கண்ணீர்ப்புகைக் குண்டுகளை மீறி, சாதாரண குடிமக்கள் எவ்வித அச்சமுமின்றி வீதிகளுக்கு வந்துள்ளனர். தங்களைப் பிரிக்கவோ, முத்திரை குத்தவோ அனுமதிக்காமல், தனிநபர் மௌனத்தைக் கலைத்து ஒட்டுமொத்தக் குரலாக ஒன்றுதிரண்டுள்ளனர். இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க மாணவர் போராட்டம் மோடி ஆட்சியின் அஸ்திவாரத்தை ஆட்டம் காணச் செய்துள்ளது என்பதே உண்மை.

மூலம்: Seven Reasons Why This Massive Students’ Protest in Delhi is Different and Has Rattled the Modi Regime
தமிழில் சுருக்கம்:
ராகினி

Tags: