2027 இல் எல் நினோவின் காலநிலை தாக்கங்கள் மேலும் மோசமடையும்

வரும் மாதங்களில் எல் நினோ (El Niño) நிகழ்வு தீவிரமடைந்து, மிகவும் வலுவான நிலையை அடையும் என உலக வானிலை அமைப்பு (WMO) தெரிவித்துள்ளது. இதனால் வெள்ளம், வறட்சி மற்றும் கடுமையான வெப்பம் போன்ற பாதிப்புகள் அதிகரிக்கும் அபாயம் உள்ளது.
வெப்பமண்டல பசிபிக் பெருங்கடல் பகுதியில் வழக்கத்திற்கு மாறாக அதிகரித்துள்ள கடல் வெப்பநிலை காரணமாக எல் நினோ உருவாகி வருகிறது. WMO-வின் எல் நினோ/லா நினா அறிக்கையின்படி, இந்த நிகழ்வு இந்த ஆண்டின் இறுதியில் உச்சத்தை அடையக்கூடும். மேலும், இது 2027 பெப்ரவரி வரை நீடிப்பதற்கான வாய்ப்பு கிட்டத்தட்ட 100% என WMO தெரிவித்துள்ளது.
ஐ.நா. பொதுச் செயலாளர் அன்டோனியோ குட்டெரெஸ், “எல் நினோ நம் கண்முன்னே மிகப்பெரிய அளவில் தீவிரமடைந்து வருகிறது” என்று எச்சரித்தார். கடல் மேற்பரப்பு வெப்பநிலை தொடர்ந்து உயர்ந்து வருவதுடன், உலக வெப்பநிலையும் அதிகரித்து வருவதால், உலகம் தீவிர வானிலை நிகழ்வுகளின் ஆபத்தான கட்டத்தில் இருப்பதாக அவர் கூறினார்.
WMO பொதுச் செயலாளர் செலஸ்டி சவுலோ கூறுகையில், “தற்போதைய நிலை தொடர்ந்தால், கடந்த நான்கு தசாப்தங்களாக வானிலை கண்காணிப்பில் பதிவான எல் நினோ நிகழ்வுகளிலேயே இது மிகவும் வலுவானதாக இருக்கக்கூடும்” என்றார்.
அனைத்து நாடுகளும் எல் நினோவின் வளர்ச்சியைத் தொடர்ந்து கண்காணித்து, அதற்கேற்ற நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என WMO வலியுறுத்தியுள்ளது. வறட்சி மற்றும் வெள்ளத்தால் ஏற்கனவே பாதிப்புகள் ஏற்பட்டு வருவதாகவும், எல் நினோ தீவிரமடையும் நிலையில் இத்தாக்கங்கள் மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்ப்பதாகவும் சவுலோ தெரிவித்தார்.
எல் நினோ என்றால் என்ன?
எல் நினோ என்பது ஒரு இயற்கையான காலநிலை நிகழ்வு. மத்திய மற்றும் கிழக்கு பூமத்திய ரேகைப் பசிபிக் பெருங்கடலில் கடல் மேற்பரப்பு வெப்பநிலை வழக்கத்தைவிட அதிகரிப்பதே இதன் முக்கிய அம்சமாகும்.
இது பொதுவாக 2 முதல் 7 ஆண்டுகளுக்கு ஒருமுறை ஏற்பட்டு, சுமார் 9 முதல் 12 மாதங்கள் நீடிக்கும். எல் நினோ உருவான ஆண்டை விட, அதற்குப் பிந்தைய ஆண்டில் உலக வெப்பநிலையில் அதன் தாக்கம் அதிகமாகக் காணப்படுவது வழக்கம்.
மிகவும் வலுவான எல் நினோ நிகழ்வு உலகின் பல பகுதிகளில் மழைப்பொழிவு, வெப்பநிலை மற்றும் வளிமண்டல சுழற்சியில் பெரிய மாற்றங்களை ஏற்படுத்தும் வாய்ப்பை அதிகரிக்கிறது. இருப்பினும், இதன் தாக்கம் எந்தப் பகுதியில், எந்தப் பருவத்தில் உள்ளது என்பதைப் பொறுத்து மாறுபடும். மேலும், இந்தியப் பெருங்கடல் மற்றும் அட்லாண்டிக் பெருங்கடலின் நிலை உள்ளிட்ட பிற காலநிலை காரணிகளும் எல் நினோவின் தாக்கத்தை மாற்றக்கூடும்.