அதிகார அத்துமீறல்களில் உச்சம் தொட்ட ஞானேஸ்வரன்!

-ச.அருணாச்சலம்

சமீபத்தில் வெளியான இரண்டு தேர்தல் ஆணையர்களின் எதிர்ப்பும், மனக் குமுறல்களும் பல அநீதிகளை அம்பலப்படுத்தியுள்ளன. தேர்தல் ஆணையர் ஞானேஸ்வரனின் அதிகார அத்துமீறல்கள் இனியும் தொடரக் கூடாது என எதிர்கட்சிகள் போர்க்கோலம் பூண்டுள்ளன..! 13 கோடி வாக்காளர்களை நீக்கும் அளவுக்கு தேர்தல் ஆணையர் துணிவு பெற்றதன் பின்னணியில் மோடி – அமித்ஷா கூட்டணி செய்த சதிதிட்டம் தான் முக்கியமானது;

ஆட்சியில் அமர்ந்த நாள்முதலே அதிகாரத்தையும் பதவியையும் தக்க வைத்து கொள்வது ஒன்றையே குறிக்கோளாக கொண்ட இந்த காவி கும்பல், தனது மோசடிச் செயல்களுக்கு சட்ட அங்கீகாரம் அளித்து அவற்றை நியாயப்படுத்துவதில் இதுவரை பெற்ற வெற்றிகளனைத்தும் கேள்விக்குறியாகியுள்ளது.

கடந்த பத்து மாதங்களில் 14 முறை விவேக் ஜோஷி, மற்றும் சுக்பீர் சிங் சந்து ஆகிய இரண்டு தேர்தல் ஆணையர்கள், தேர்தல் ஆணையத்தின் – தலைமை தேர்தல் ஆணையரான கியானேஷ் குமாரின்- நடவடிக்கைகளை, முடிவுகளை கேள்வி கேட்டுள்ளனர், எதிர்த்து உள்ளனர் என்ற செய்தி காட்டுத்தீயாக நாடெங்கும் எதிரொலிக்கிறது.

கடந்த 2025 ஒக்ரோபர் மாதத்தில் தொடங்கி 2026 ஓகஸ்டு வரையில்  தேர்தல் ஆணையர்கள் கூட்டம் நடத்தி முடிவெடுப்பதே இல்லை என்ற நிலை ஏற்பட்டுள்ளது. ஆணையர்களின் பூர்வாங்க அல்லது எழுத்து பூர்வமான ஒப்புதல் இன்றியே ஆணைய முடிவுகள் வெளியாகி நடைமுறைக்கு வந்துள்ள அவலமும் இன்று அம்பல பட்டுள்ளது.

படிவம் 6 ஐ திருத்துவதை எதிர்த்து , குரல் கொடுத்துள்ள ஆணையர்கள், சட்டபடி பெற வேண்டிய நாடாளுமன்ற அனுமதி இன்றி திருத்தப்பட்ட படிவம் 6ஐ நடைமுறைக்கு கொண்டு வந்த  ஞானேஷ் குமாரின் செயலை அம்பலப்படுத்தியுள்ளனர்.

வாக்காளர் டேட்டா அமைப்பை இ.சி.ஐ நெட் (ecinet) என்ற அமைப்பை கொண்டே மாநிலங்களில் உள்ள இ.ஆர்.ஓக்களை ஆணையத்தின் இணையதளத்தை அணுகவிடாமல் செய்த சட்டவிரோத செயலும் இதில் ஆணையர்களால் அம்பலத்திற்கு வந்துள்ளது .

இதன் மூலம் வாக்காளர்களை நீக்குவதையும், சேர்ப்பதையும் டெல்லி அலுவலகத்தில் அமர்ந்துள்ள ஒரு சில நபர்களின் மூலம் செய்ய முடியும் என்பதை இது உறுதிபடுத்தி உள்ளது. சட்டத்திற்கு உட்பட்டு வாக்காளர் பட்டியலில் தீவிர சிறப்பு திருத்தம் செய்யப்படவில்லை என்பது தெளிவாகிறது.

இதற்கெல்லாம் காரணம் தேர்தல் ஆணையர்களை தேர்ந்தெடுத்த வழிமுறை சரி இல்லாதது தான்!

2023 இல் அனூப் பரன்வால் வழக்கில்  உச்சநீதிமன்றம் ஒரு தீர்ப்பு அளித்தது. அரசியல் சாசன பிரிவு 324 இல் கூறியபடி ஒரு இடைக்கால முன்னேற்பாடாக உச்சநீதிமன்றம் ஒரு தேர்வுக் குழுவை ஏற்படுத்தியது. தேர்தல் ஆணையர்களை நியமிக்கும் அதிகாரம் கொண்ட இந்த குழுவில் பிரதமர், நாடாளுமன்ற எதிர்கட்சி தலைவர் மற்றும் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ஆகியோர் இடம் பெறுவர். நாடாளுமன்றம் இதற்கான சட்டம் இயற்றும் வரையில் இக் குழுவே நியமனக் குழுவாக செயல்படும் என்று தீர்ப்பு அளித்தது.

மேலும் உச்சநீதிமன்றம் நடுநிலையான, சுதந்திரமான தேர்தல் ஆணையத்தின் தேவையை சுட்டிக் காட்டி தேர்தலை நடத்தும் ஆணையர்கள் ஆட்சியாளர்களின் கைப்பாவைகளாக இருக்கக் கூடாது என்பதை உறுதி செய்யவே மேற்படியான ஒரு தேர்வுக் குழுவை வலியுறுத்தியது.

ஆனால் “நீ என்ன சொல்வது, நான் என்ன கேட்பது? “ என்ற அகங்காரத்தில் மோடி அரசு தேர்தல் ஆணையர்கள் மசோதா 2023 வை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்து, தேர்வுக் குழுவில் தலைமை நீதிபதிக்கு பதிலாக பிரதமரால் நியமிக்கப்படும் காபினட் அமைச்சர் ஒருவரை நியமித்தது. இதன்மூலம் ஆட்சியாளர்கள் மட்டுமே பெரும்பான்மையாக உள்ள குழுவின் மூலம் தேர்தல் ஆணையர்களை நியமிக்கும் மோசடியை சட்டமாக்கியது.

உச்சநீதிமன்ற அறிவுறுத்தலையும் மீறிய மோடி அரசின் இந்த பித்தலாட்டத்தை  உச்சநீதிமன்றம் தடுக்கவில்லை. இதையெதிர்த்து கிளம்பிய முறையீட்டை உடனடியாக விசாரணைக்கும் உச்சநீதிமன்றம் எடுத்து கொள்ளவில்லை. எதிர்கட்சிகளும், சிவில் சமூகத்தினரும், முன்னாள் தேர்தல் ஆணையர்கள் பலரும், நடுநிலையாளர்களும் தங்களது கண்டனத்தை, எதிர்ப்பை அப்பொழுதே பதிவு செய்தனர்.

ஆளுவோர்கள் இதை சாக்காக வைத்தே, தற்போது தலைமை தேர்தல் ஆணையராக உள்ள ஞானேஸ்வர் குமாரை நியமித்தது நினைவிருக்கலாம். இந்த நபர் மத்திய அரசில், உள்துறை அமைச்சர் அமீத் ஷாவின் அமைச்சகத்தில் பணிபுரிந்து  தனது விசுவாசத்தை  வெளிப்படுத்தியுள்ளார். எதிர்கட்சிகளும், நல்லோரும் அப்போதும் அதை எதிர்த்து குரல் எழுப்பினர், கேள்வி கேட்டனர்.

ஆனால் எல்லா எதிர்ப்பையும் உச்சநீதிமன்றம் தலையிடாததை சாக்காக வைத்து , அதையே உச்சநீதிமன்றத்தின் அங்கீகாரம் என்ற போர்வையில் மோடி அரசு ஒதுக்கி தள்ளியது!

தான் வந்த நோக்கத்தை நிறைவேற்றுவதில் கண்ணுங்கருத்துமாக செயல்பட்ட  ஞானேஷ் குமார் , மோடி அரசின் நிரந்தர வெற்றியை உறுதி செய்ய வாக்காளர் பட்டியலில் சட்டத்திற்கு புறம்பாக விரும்பியபடி  வாக்காளர்களை நீக்கினார். ஆளுகின்ற பா.ஜ.க வின் வெற்றியை உறுதி செய்ய வாக்காளர் பட்டியலில் சிறப்பு தீவிர திருத்தங்களை (Special Intensive Revision – SIR) நடைமுறை படுத்தினார் .

அப்பொழுதும் எதிர்கட்சிகள் எதிர்த்துக் குரலெழுப்பினர், தேர்தல் நடைமுறையை பாதுகாக்க சமூக ஆர்வலர்கள்  ஜெகதீப் சொக்கர், அஞ்சலி பரத்வாஜ், யோகேந்தர் யாதவ், மற்றும் வழக்கறிஞர் பிரசாந்த் பூஷன் , நாடாளுமன்ற உறுப்பினர் மகுவா மொய்த்ரா போன்றோர் உச்சநீதிமன்றத்தை நாடி SIR மோசடியை எதிர்த்து முறையிட்டனர்.

உச்சநீதிமன்றம் என்ன செய்தது?

தலைமை நீதிபதி சூர்யகாந்த் மற்றும் ஜாய்மாலா பக்சி அடங்கிய அமர்வு வழக்கை விசாரிக்கிறது ! SIR மூலம் 70 இலட்ச வாக்காளர்களை பட்டியலில் இருந்து நீக்கியும், அதிகப்படியான அனாமதேய வாக்காளர்களை சேர்த்தும் தேர்தல் ஆணையம் செய்த பல தில்லுமுல்லுகள் நாட்டை அதிர வைத்தது.

தனது அறிவுறுத்தலை கூட நடைமுறைபடுத்தாத தேர்தல் ஆணையத்தை கண்டிக்காமல் தட்டி கொடுத்து உச்சநீதிமன்றம் . அதன் விளைவாக பீகார் தேர்தலே திருடப்பட்டதையும் நாடறியும்!

ருசி கண்ட பூனையாக தேர்தல் ஆணையம் இந்த மோசடியை மேற்கு வங்கத்தில் மேலும் தீவிரமாக அரங்கேற்றியது. கிட்டதட்ட 90 இலட்சம் வாக்காளர்கள் முதலில் நீக்க பட்டனர்.

உச்சநீதிமன்றம் வழங்கிய உத்திரவாதங்கள் தேர்தல் ஆணையத்தால் காற்றில் பறக்கவிடப்பட்டன. உரிய காரணங்களை கூறாமலேயே இலட்சக்கணக்கானார் சந்தேக பட்டியலில் வைக்க பட்டனர். அவர்களுக்கு வாக்களிக்கும் உரிமையும் சட்டத்திற்கு புறம்பாக மறுக்க பட்டது. இதற்கு உச்சநீதிமன்றமே துணை நின்றது!

இறுதியில் SIR சட்ட விரோதமானது அல்ல என்ற தீர்ப்பையும் உச்சதீதிமன்றம் வழங்கியது.

இதனால் மேலும் துணிவு பெற்ற தேர்தல் ஆணையம் மூன்றாவது பகுதியாக பிற மாநிலங்களிலும் தீவிர சிறப்பு திருத்தம் என்ற அரக்கனை ஏவி விட்டுள்ளது . இதன்மூலம் இதுவரை 13 கோடி மக்கள் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர்.

மூன்று தலைமுறைகளாக வாக்களித்து வரும் அரசியல் தலைவர்கள், முதலமைச்சர், இராணுவத்தினர் உட்பட பலரும் இந்த அயோக்கிய நடைமுறைக்கு பலியாகி உள்ளனர்.

புது டெல்லியில் சென்ற முறை வாக்களித்த மக்களின் எண்ணிக்கையை விட மொத்த வாக்காளர் எண்ணிக்கையே சுருக்கப்பட்டுள்ளது பலரை ஆச்சரியமூட்டியுள்ளது. சிறப்பு தீவிர திருத்தம் அறிவிக்கப்படுவதற்கு முன்பாகவே சட்டத்திற்கு புறம்பாக 11 இலட்சம் வாக்காளர்கள் டெல்லியில் இரகசியமாக நீக்கப்பட்டுள்ள செய்தியும் அனைவரையும் திடுக்கிட வைத்தது.

தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஸ்வரனின் கொடும்பாவியை எரிக்கும் காங்கிரசார்.

தேர்தல் ஆணையத்தின் இத்தகைய தான்தோன்றிதனத்தை கண்டு ஊரே கொந்தளிக்கும் நிலையில் நேற்று வந்துள்ள செய்தி பல அதிர்ச்சிகளை நாட்டு மக்களுக்கு கொடுத்துள்ளது. இதன் விளைவே இன்று நாட்டில் நடந்துள்ள போராட்டங்கள்!

தேர்தல் ஆணையத்தின் முடிவுகள் ஒருமனதாகவோ அல்லது பெரும்பான்மை சார்ந்த முடிவாகவோ தான் இருக்க வேண்டும் என்பது சட்டம். இப்பொழுது இவ்விரண்டு ஆணையர்களும் ஆணைய முடிவுகள் தங்களுக்கு தெரியாமலே, தங்களது ஒப்புதல் இன்றியே செயல்பாட்டிற்கு வந்துள்ளதாக கூறுவதால் தேர்தல் ஆணையத்தின் முடிவு சட்டபூர்வமானதுதானா?  என்ற கேள்வி எழுகிறது. இரண்டு ஆணையர்களும் மத்திய அரசின் தலைமை செயலருக்கு- கேபினட் செக்ரட்டரி சோமநாதனுக்கு- இது குறித்து தாக்கீதும் அனுப்பி உள்ளதாக தெரிகிறது.

இந்த நிலையில் தேர்தல் ஆணையர்கள் ஏன் கடந்த பத்து மாதங்களாக வெளிப்படையாக வரவில்லை, ஏன் தங்களது சுயாதிகாரத்தை விட்டு கொடுத்து அடங்கி உள்ளனர்? ஏன் இவர்கள் எதிர்ப்பை ஆணைய கூட்டங்களில் தெரிவிக்காமல், மத்திய அரசின் தலைமை செயலருக்கு கடிதம் எழுத வேண்டும்? என பல கேள்விகள் எழுந்துள்ளன.

இதிலிருந்து நாம் புரிந்து கொள்வது என்னவென்றால், இதுவரை அதிகாரவர்க்கத்தை ஆட்டிவைத்த “மனோபயம்” , ஆட்சியாளர்கள் என்ன செய்வார்களோ? என்ற பதட்ட நிலை இன்று அதிகாரவர்க்கத்தினரால் உதறி எறியப்படத் தொடங்கியுள்ளது என்பது தான்.

இதுவரை நாட்டு மக்களில் கணிசமானோரும், பா.ஜ.க தவிர்த்த அனைத்து எதிர்கட்சிகளும், சமூக ஆர்வலர்களும் சொல்லி வந்ததைத் தான் இரண்டு தேர்தல் ஆணையர்களும் உறுதிபடுத்தி உள்ளனர்.

பாரதீய ஜனதா கட்சியின் அதிகாரத்தை, ஆதிக்கத்தை நிலைநாட்டவே மோடி அரசு அரசியல் மோசடிகளை செய்து அதற்கு சட்டவடிவமும் கொடுத்துள்ளது என்பது ஐயத்திற்கிடமின்றி தெளிவாகிறது. இத்தகைய மோசடிதனத்தை, தட்டி கேட்க வேண்டிய உச்சதீதி மன்றம் தனது கடமையிலிருந்து தவறியுள்ளது.

கட்சி சாராத பொதுமக்களும், படித்த நடுத்தர வகுப்பினரும் இந்த ஜனநாயக சீரழிவை கண்டும் காணாமல் ஒதுங்கி இருந்ததை உணரத் தொடங்கி உள்ளனர்.

ராமர் கோவில் நன்கொடை திருட்டு விவகாரமும், மாணவர்களின் போராட்டமும், கரப்பான் பூச்சி கட்சியின் வரவும் மோடி அரசின் உண்மை முகத்தை உலகிற்கு காட்டியுள்ளது. அனைவரும் தேர்தல் ஆணையத்தின் மீது நம்பிக்கை வைக்க வேண்டும் என இதுகாறும் அறிவுறுத்தி வந்த உச்சநீதிமன்றம் இன்று தேர்தல் ஆணையத்தில் நடக்கும் குளறுபடிகளை, சட்டவிரோத நடைமுறைகளை தானே முனவந்து விசாரிக்குமா?

தேர்தல் ஆணையர்களை நியமிக்கும் சட்டத்தை எதிர்த்த வழக்கில்  நீதிபதி திபாங்கர் தத்தா, ஆணையர்களை நியமிக்கும் தேர்வுகுழுவில் உச்சதீதிமன்ற தலைமை நீதிபதிக்கு பதிலாக அமைச்சர் ஒருவரே இருப்பது முறையானது அல்ல, இது ஒரு மோசமான தோற்றத்தை கொடுக்கிறது என்று கூறியுள்ளார். இந்த வழக்கின் தீர்ப்பு வரும் வரை நாடு பொறுத்திருக்க வேண்டுமா? என்பது தான் இன்றுள்ள கேள்வி.

வாக்காளர்களின் பெயர்களை எந்தவித சரிபார்ப்பும் இன்றி வாக்காளர் பட்டியலில் இருந்து தேர்தல் ஆணையம் நீக்குவது சட்டவிரோதமாகும். அவ்வாறு நீக்கியவர்கள் தேர்தல் ஆணையம் நிர்ப்பந்திக்கும் இல்லாத ஆவணங்களை கொடுத்து தங்களை உண்மையான குடிமகன்கள் என நிரூபிக்க வேண்டும் என்று கூறுவது அதைவிட கொடியது, அரசியல் சாசனத்திற்கு எதிரானதும்கூட!

2024 தேர்தலின் போது  SIR ஐ கொண்டுவந்து 13 கோடி நபர்களை நீக்கி உள்ளது. அந்த நிலைப்பாடு உண்மையானால் அதனடிப்படையில் 240  தொகுதிகளை மட்டுமே வென்ற மோடி அரசு வீட்டுக்கு போக வேண்டும்.

2024 பட்டியல் தான் உண்மையானது என்றால் அதன் பின்னர் திருத்தங்களுடன் நடந்த பீகார் மேற்கு வங்க தேர்தல்கள் இரத்து செய்யப்பட வேண்டும் .

ஏழை பணக்காரன் என்ற வித்தியாசமின்றி, சாதி மத பேதமின்றி இந்த நாட்டு மக்கள் அனைவருக்கும் உள்ள – ஒரு மனிதன் ஒரு வாக்கு – என்ற அடிப்படை உரிமையை காப்பாற்ற மக்கள் என்ற வாக்காளர்கள்தான் ஆளுவோரை தேர்ந்தெடுக்க வேண்டும்.

எதிர்கட்சிகளும், நாட்டுநலனில் அக்கறையுள்ளோரும் ஜனநாயக ஆர்வலர்களும் இளைய சமூகத்தினரும் நாட்டின் எதிர்காலத்தை காப்பாற்ற யாரையும் எந்த அமைப்பையும் நம்பாமல் தெருக்களில் ஒற்றுமையாக இறங்க வேண்டிய தருணம் இது!

நாம் இழந்ததை மீட்டெடுக்க நாம் தான் களத்தில் இறங்க வேண்டும்.

Tags: