சிறுமைப்பட்டுத் தனிமைப்பட்ட இஸ்ரேல் 

-விஜய் பிரசாத்

2026 செப்டம்பர் 24 அன்றுஐக்கிய நாடுகள் பொ துச்சபையில் உரையாற்றபெஞ்சமின் நேதன்யாகு மேடையேறியபோது, காதுகொடுத்துக் கேட்க ஆளில்லாமல் காலியாகக் கிடந்த இருக்கைகளே அவர் பேசுவதற்கு முன்பாகவே உண்மையை உரக்கக்கூறின. தூதர்கள், தூதரகஅதிகாரிகள் வெளிநடப்புச் செய்தனர், மற்றவர்களோ தொடக்கத்திலிருந்தே கூட்டத்தைப் புறக்கணித்துவிட்டு வராமலேயே இருந்தனர். இஸ்ரேலியத் தரவுகளின்படி, கூட்டத்திற்கு வராத அல்லது வெளிநடப்புச் செய்த தூதுக்குழுக்களின் எண்ணிக்கை 77 என்று செய்தி அறிக்கைகள் தெரிவிக்கின்றன. இது ஐ.நா.வின் பதிவுசெய்யப்பட்ட வாக்கெடுப்பு அல்ல, அந்த 77 நாடுகளும் ஒருங்கிணைந்து வெளிநடப்புச் செய்ததும் கிடையாது. இருப்பினும், காலியாக இருந்த இருக்கைகளுக்கு மத்தியில் இஸ்ரேலியப் பிரதமர் உரையாற்றும் காட்சி ஒரு எதார்த்தமான அரசியல் உண்மையை உலகிற்கு உணர்த்தியது: காசா மீதான அழித்தொழிப்புமற்றும் ஆக்கிரமிப்பை வலுப்படுத்தியதன் மூலம் இஸ்ரேல் உலகின் பெரும்பகுதியிலிருந்து படிப்படியாகத் தனிமைப்படுத்தப்பட்டு வருகிறது என்பதே.

ஐக்கிய நாடுகள் சபையின் கூட்டத்தைப் புறக்கணித்த அல்லது வெளிநடப்புச் செய்த தூதர்கள் மற்றும் தூதரக அதிகாரிகளில் பெரும்பாலோர் ஆபிரிக்கா, ஆசியா, அரபு உலகம் மற்றும் இலத்தீன் அமெரிக்காவைச் சேர்ந்தவர்கள் ஆவர். இருப்பினும் ஸ்பெயின் மற்றும் அயர்லாந்து போன்ற ஐரோப்பியநாடுகளும் இந்த உரையைப் புறக்கணித்தன. பிரேசில் மற்றும் தென்னாப்பிரிக்கா இந்தக் கூட்டத்தில் கலந்து கொள்ளவில்லை; அதேசமயம் இந்தோனேசியா, பாகிஸ்தான், செனகல், சூடான் மற்றும் துருக்கியும் இதில் பங்கேற்பதைத் தவிர்த்தன. இந்த நாடுகள் அனைத்தும் ஒரே காரணத்திற்காக இந்தக் கூட்டத்தைப் புறக்கணித்தன என்று கூற முடியாது. எவ்வாறாயினும், அவற்றுள் பலநாடுகளுக்கு பலஸ்தீனம் என்பது சம்மந்தமில்லாத ராஜீய விவகாரம் அல்ல; மாறாக காலனித்துவ ஆட்சிக்கு எதிராகவும் இறையாண்மையை மீட்டெடுக்கவும் தாங்கள் நடத்திய விடுதலைப் போராட்டங்களைப் போன்றே அதுவும் ஒரு விடுதலைப் போராட்டம் என்பதைச் சுட்டிக்காட்டுவது அவசியமாகும். ஆக்கிரமிப்பு, இன – நிறவெறி, இனப்படுகொலை மற்றும் நிலப்பறிப்பு ஆகியவை வெளிப்படையாக நடந்து கொண்டிருக்கும் நிலையில் நேதன்யாகுவின் சொற்களைக் கேட்க அவர்கள் மறுத்துவிட்டனர்.

இந்தக் கண்டனம் சரியான நேரத்தில் வந்துள்ளது. தனது உரையில், நேதன்யாகு தங்கள் மீதான அனைத்து இனப்படுகொலைக் குற்றச்சாட்டுகளையும் நிராகரித்தார். இருப்பினும், ஜூன் 2026 இல், ஐ.நா.வின் சுயேச்சையான ஆணையம் ஒன்று, இஸ்ரேலிய அதிகாரிகளும் படைகளும் பலஸ்தீனக் குழந்தைகள் மீது இனப்படுகொலை மற்றும் பிறகொடூரக் குற்றங்களைத் தொடர்ந்து இழைத்து வருவதாகத் தெரிவித்தது. இஸ்ரேல் இனப்படுகொலையில் ஈடுபட்டு வருவதாக இந்த ஆணையம் முன்னதாக 2025 ஆம் ஆண்டிலும் பதிவு செய்திருந்தது. இவை பன்னாட்டு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள இனப்படுகொலை வழக்கின் இறுதியான தீர்ப்பு அல்ல, மாறாக ஒரு ஐ.நா. புலனாய்வுக் குழுவின் கண்டறிதல்களாகும். ஒரு ஆணையத்தின் கண்டுபிடிப்புகளுக்கும் நீதிமன்றத்தின் இறுதித் தீர்ப்புக்கும் இடையே உள்ள வேறுபாடு சட்டப்பூர்வமாக முக்கியமானதுதான்; ஆனால் அது இஸ்ரேலிய வன்முறை மற்றும் பலஸ்தீன மக்களின் துயரமான சாட்சியங்களை ஒருபோதும் மறைத்துவிட முடியாது.

நிரந்தர இனப்படுகொலை

ஒக்ரோபர் 10, 2025 இல் அறிவிக்கப்பட்ட போர்நிறுத்தம் என்பது இனப்படுகொலைக்கோ அல்லது மக்களின் துயரங்களுக்கோ எத்தகைய முற்றுப்புள்ளியையும் வைக்கவில்லை. செப்டம்பர் 2026 இல் வெளியிடப்பட்ட ஐ.நா.வின் மனிதத்துயர அறிக்கையானது, காசாவில் தொடரும் உயிரிழப்புகள், அவசியமான அத்தியாவசியப் பொருட்களுக்கு மறுக்கப்படும் அனுமதி, பெருமளவிலான இடப்பெயர்வுகள் மற்றும் தரைமட்டமாக்கப்பட்ட வீடுகள் மற்றும் பொதுச்சேவைகளின் சீரழிந்த நிலையை விவரிக்கிறது. இந்த அறிக்கை வெளியிடப்படுவதற்குச் சற்று முன்பு, செப்டம்பர் 16 அன்று, ரல் அல்-ஹவாவில் இஸ்ரேலியத் தாக்குதல்களால் சேதமடைந்த கட்டிடம் ஒன்று திடீரெனச் சரிந்து விழுந்ததில் எட்டுகுழந்தைகள் உட்பட குறைந்தது 21 பேர் கொல்லப்பட்டனர். ‘இஸ்ரேலிய வான்வழித் தாக்குதல்கள், பீரங்கித்தாக்குதல்கள், ஆளில்லா விமானத் தாக்குதல்கள் மற்றும் தரைவழி நடவடிக்கைகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன, மேலும் பலஸ்தீனர்களின் உயிரிழப்புகளும் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன’ என்று ஐ.நா. புலனாய்வாளர்கள் எழுதுகின்றனர். ‘காசாவில் தோராயமாக மூன்றில் இரண்டு பங்கு பகுதிகள் அணுக முடியாதவையாக அல்லது கடுமையான கட்டுப்பாடுகளுக்கு உட்பட்டவையாக உள்ளன; இதனால் பலஸ்தீன பொதுமக்கள் நெரிசல் நிறைந்த மற்றும்பாதுகாப்பற்ற பகுதிகளில் முடங்கிக் கிடக்கும் சூழலுக்குத் தள்ளப்பட்டுள்ளனர்’.

காசாவில் உள்ள ஐ.நா.வளர்ச்சித் திட்டத்தின் சிறப்புப் பிரதிநிதியான ஜாகோசிலியர்ஸ் கூறுகையில், ‘காசாவில் உள்ள மொத்தக்கட்டட இடிபாடுகளின் மதிப்பீடு 6.1 கோடி தொன்கள்ஆகும். கடந்த பதினெட்டு ஆண்டுகளில் உலகெங்கிலும் உள்ள அனைத்துப் போர்களிலும் உருவான இடிபாடுகளைப் போல இது தோராயமாக இருபது மடங்கு அதிகமாகும்’ என்றார்.இனப்படுகொலைக்கு எதிரான உலகளாவிய சீற்றம் என்பது போர் நிறுத்தத்திற்கு முந்தைய ஆண்டுகளில் அரங்கேறிய பேரழிவுகளைப் பற்றிக் கவலைப்படுவதோடு நின்றுவிடவில்லை. மாறாக, பலஸ்தீன மக்கள்தொடர்ந்து வன்முறை, வறுமைமற்றும் அரசியல் அடிமைத்தனத்திற்கு ஆளாக்கப்படும் தற்காலச் சூழலையும் அது எதிர்க்கிறது.

ஆக்கிரமிக்கப்பட்ட பலஸ்தீனப் பிரதேசத்தின் (OPT) மூன்று பகுதிகளில் காசாவும் ஒன்றாகும், மற்ற இரண்டு பகுதிகள் கிழக்கு ஜெருசலேம் மற்றும் மேற்குக் கரை ஆகும். ஜூலை 2024 இல், பன்னாட்டு நீதிமன்றம் வழங்கிய ஆலோசனைக் கருத்தில், ஆக்கிரமிக்கப்பட்ட பலஸ்தீனப் பிரதேசத்தில் இஸ்ரேலின் தொடர்ச்சியான இருப்பு சட்டவிரோதமானது என்றும், மேற்குக் கரையில் உள்ள இஸ்ரேலியக் குடியேற்றங்களும், கிழக்கு ஜெருசலேமில் கட்டடங்கள் மற்றும் நிலங்களைக் கைப்பற்றுவதும் பன்னாட்டுச் சட்டங்களை மீறுவதாகும் என்றும் குறிப்பிட்டது. இந்தக் கருத்தின் அடிப்படையில், ஒரு வருடத்திற்குள் தனது சட்டவிரோத இருப்பை இஸ்ரேல் முடிவுக்குக் கொண்டுவர வேண்டும் என்று ஐக்கிய நாடுகள் பொதுச்சபை கோரிக்கை விடுத்தது.

ஐ.நா. வை மதிக்காததைப் போல, ஏப்ரல் 2025 இல் இஸ்ரேல் தனது நில ஆணையத்திற்குள் மேற்குக் கரையில் ‘சட்டவிரோத’ பலஸ்தீனக் கட்டுமானங்களை அடையாளம் காண ஒரு புதிய அமுலாக்கப் பிரிவை நிறுவியது; தன் நோக்கம் அவற்றை இடித்துத் தள்ளிவிட்டு மேலும்பல சட்டவிரோதக் குடியேற்றங்களை உருவாக்குவதாகும். ஐ.நா. பொதுச்சபையின் கெடு முடிந்து ஒரு வருடத்திற்குப் பிறகும் எந்த மாற்றமும் நிகழவில்லை என்பதை ஐ.நா. பொதுச் செயலாளரின் செப்டம்பர் 2025 அறிக்கை வெளிப்படுத்தியது. பன்னாட்டுச் சட்டநெறிமுறைகளுக்கும் கள எதார்த்தங்களுக்கும் இடையே உள்ள இடைவெளியானது, காலவரையின்றி தள்ளிப்போடப்பட்ட அமைதி முயற்சிகளின் மூலம் மறைக்க முடியாத அளவுக்கு பெரிதாக மாறியுள்ளது.

இனவெறி மூலம் ஈட்டப்படும் இலாபம்

செப்டம்பர் 25 அன்று, இஸ்ரேலின் சட்டவிரோதக் குடியேற்றங்களுடன் தொடர்புடைய குறிப்பிட்டநடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ள வணிக நிறுவனங்களின் தரவுத்தளத்தை ஐ.நா. மனித உரிமைகள் அலுவலகம் புதுப்பித்தது. அதன் சமீபத்திய அறிக்கையான A/HRC/63/20, 2025 ஆம் ஆண்டுப் பதிப்பில் இருந்த 158 நிறுவனங்களுடன் ஒப்பிடுகையில், தற்போது 11 நாடுகளில் தளங்களைக் கொண்டுள்ள 214 நிறுவனப் பட்டியலை வெளியிட்டுள்ளது. மனித உரிமைகள் பேரவையின் ஆணையின் கீழ் அடையாளம் காணப்பட்ட நடவடிக்கைகளுக்கு மட்டுமே இந்தப் பட்டியல் வரம்பிடப்பட்டுள்ளது என்று ஐ.நா. கூறுகிறது, எனவே இது இஸ்ரேலுடன் வணிகத் தொடர்பைக் கொண்ட ஒவ்வொரு நிறுவனத்தின் பட்டியலும் அல்ல, அல்லது பட்டியலிடப்பட்ட ஒவ்வொரு நிறுவனமும் குற்றமிழைத்துள்ளது என்ற நீதித்துறை கண்டறிதலும் அல்ல. இஸ்ரேலியக் குடியேற்றங்களின் பொருளாதார ஏற்பாட்டை வெளிச்சம் போட்டுக் காட்டுவதே இதன் நோக்கமாகும். இது 2025 ஆம் ஆண்டில் பிரான்செஸ்கா அல்பானீஸின் அறிக்கையான ‘ஆக்கிரமிப்புப் பொருளாதாரம் முதல் இனப்படுகொலைப் பொருளாதாரம் வரை: 1967முதல் ஆக்கிரமிக்கப்பட்ட பலஸ்தீனப் பிரதேசங்களில் மனித உரிமைகள் நிலை குறித்த சிறப்பு அறிக்கையாளர் அறிக்கை’ என்ற தலைப்பில் ஏற்கனவே பதிவுசெய்யப்பட்டுள்ளது.

இந்த அறிக்கைகள் பலஸ்தீனப் பகுதிகளில் இஸ்ரேலியக் குடியேற்றங்கள் என்பதையும் தாண்டி, கட்டுமானம், நிதி, தொலைத்தொடர்பு, சேவைகள் மற்றும் சந்தைகளை வழங்கும் நிறுவனங்கள் வரை விரிவடைந்துள்ளது என்பதைக் காட்டுகின்றன. இந்த நிறுவனங்களின் செயல்பாடுகளின் மூலமாகவே குடியேற்றங்களின் ‘தற்காலிக’ தன்மை என்பது நிரந்தரமானதாக மாற்றப்படுகிறது. குடியேற்றங்களுக்கும் இந்த நிறுவனங்களுக்கும் இடையிலான உறவுகளைக் கண்டறிய இந்தத் தரவுத்தளம் நடைமுறை மற்றும் உறுதியான பட்டியலை வழங்குகிறது, மேலும் இந்த உறவுகள் குறித்து அரசாங்கங்களும் முதலீட்டாளர்களும் என்ன செய்யப் போகிறார்கள் என்ற கேள்வியையும் எழுப்புகிறது.

பட்டியலிடப்பட்ட பெரும்பாலான நிறுவனங்கள் இஸ்ரேலிய நிறுவனங்களாகும், இருப்பினும் வெளிநாட்டு நிறுவனங்களில் பெரும்பகுதி ஐக்கிய நாடுகள் சபை மற்றும் பல ஐரோப்பிய நாடுகளில் தலைமையகத்தைக் கொண்ட வணிக நிறுவனங்களும் அடங்கும். ‘விதிமுறைகளை அடிப்படையாகக் கொண்ட ஒழுங்கமைப்பை’ வலியுறுத்தும் இந்த அரசாங்கங்கள், அப்பட்டமாகச் சட்டவிரோதமான இத்தகைய குடியேற்றப் பொருளாதாரத்தில் தங்களது சொந்த நிறுவனங்கள் பங்கேற்பதை சாதாரண வணிக விவகாரமாக ஒதுக்கிவிட முடியாது. பட்டியலில் நிறுவப்பட்டுள்ள உண்மைகள், பலஸ்தீனப் பகுதியில் குடியேற்றங்களுக்கு எதிரான தங்களது வெளிப்படையான எதிர்ப்புக்கு மாறாக தங்களது நிறுவனங்களை குடியேற்றப் பொருளாதாரத்தில் தொடர அனுமதிக்கும் அரசுகளுக்கு (குறிப்பாக கனடா, பிரான்ஸ் மற்றும் பிரிட்டன்) கூடுதல் அழுத்தத்தைக் கொடுக்க வேண்டும். பெயரிடப்பட்ட நிறுவனங்களுக்கு எதிராக ஐ.நா. தரவுத்தளம் தானாகவே தடைகளை விதிக்கவில்லை, ஆனால் அது அலட்சியத்தை நியாயப்படுத்துவதை தடுக்க முயல்கிறது.

முழுமையற்ற தனிமைப்படுத்தல்

இஸ்ரேலை இராஜதந்திர ரீதியாக தனிமைப்படுத்தல் என்பது குறிப்பிடத்தக்கதுதான், என்றாலும்அது முழுமையானதாக இல்லை. நேதன்யாகு உரையாற்றும்போது காலியாக இருந்த இருக்கைகள் வன்முறையைக் நிறுத்தவோ அல்லது ஒரு குடியேற்றத்தையாவது அகற்றவோ இல்லை; அதேசமயம் நியூயார்க்கில் விடுக்கப்படும் வலுவான அறிக்கைகள் தற்போதைய நிலையைத் தொடரச் செய்யும் வர்த்தகம், ஆயுத பரிவர்த்தனை மற்றும் முதலீடுகளுடன் இணைந்து இஸ்ரேல் பயணிக்க முடியும். ஐ.நா.பொதுச்சபையில் எதிர்ப்பு வலுத்து வந்தாலும் கூட, அமெரிக்காவும் பிற சக்திவாய்ந்த கூட்டாளிகளும் இஸ்ரேலைப் பாதிப்புகளில் இருந்து பாதுகாப்பதற்கான வழிகளைத் தொடர்ந்து கொண்டுள்ளன. பலஸ்தீனர்களைப் பொறுத்தவரை, அடையாள ரீதியான நிராகரிப்பு என்பது பாதுகாப்பு, பொறுப்புக்கூறல், சட்டவிரோத ஆக்கிரமிப்பின் முடிவு மற்றும் சுயநிர்ணய உரிமைக்கான தொடர்ச்சியான அழுத்தமாக மாறினால் மட்டுமே அர்த்தமுள்ளதாக இருக்கும்.

ஐ.நா.பொதுச்சபையின் காட்சிகளும் வணிகத் தரவுத்தளத்தின் வெளியீடும் ஒரே கதையின் இரண்டுபக்கங்களாகும். ஒன்று இஸ்ரேல் தனது வெறியாட்டத்திற்கு அரசியல் ஒப்புதலை இழப்பதைக் வெளிப்படுத்தியது, மற்றொன்று அது பிழைத்திருக்க அனுமதிக்கும் பொருளாதார உறவுகளில் சிலவற்றை வெளிப்படுத்தியது. கூட்டத்திற்கு வராத அல்லது வெளிநடப்புச்செய்தவற்றில் உலகளாவிய தெற்கு நாடுகளின் மிகப்பெரிய பங்கேற்பு என்பது, பலஸ்தீனர்களின் பெருமளவிலான துயரங்களை ஏற்றுக்கொள்ளும் மனநிலைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படுவதைக் குறிக்கிறது. அந்த மறுப்புக்கு உறுதியான பலத்தைக் கொடுப்பதே தற்போதைய பணியாகும். 

மூலம் : The Greater Isolation of Lesser Israel
தமிழில் சுருக்கம் : எஸ்பிஆர்

Tags: