நாட்டின் நிர்வாகம் சீர்குலைந்துள்ளதாலேயே பயங்கரவாதிகள் இலகுவாக தாக்குதல் நடத்த முடிந்தது

-பிரதீபன்

இலங்கையில் கிறிஸ்தவ மக்களின் உயிர்த்த ஞாயிறு (ஈஸ்டர்) தினமான ஏப்ரல் 21 – ம் திகதி கிறிஸ்தவ தேவாலயங்களிலும், கொழும்பிலுள்ள சொகுசு ஹோட்டல்களிலும் நடத்தப்பட்ட தொடர் குண்டுத் தாக்குதல்களில் 350 இற்கும் அதிகமானோர் பலியானதுடன், 500 இற்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். இவர்களில் சுமார் 40 வரையிலான வெளிநாட்டுப் பிரசைகளுடன் குழந்தைகள், பெண்கள், முதியோர்களும் அடங்குவர்.

இந்த மனிதப் பேரழிவு காரணமாக நாடு முழுவதும் கதிகலங்கிப் போயிருக்கிறது. இன்னும் குண்டுத் தாக்குதல்கள் நடக்கலாம் என்ற அச்சம் மக்கள் மத்தியில் நிலவுகின்றது. மக்கள் சந்தைகள், பஸ் நிலையங்கள், சினிமா கொட்டகைகள் போன்ற சனசந்தடிமிக்க இடங்களில் கூடுவதைத் தவிர்த்து வருகின்றனர். சில பெற்றோர்கள் அச்சம் காரணமாக தமது பிள்ளைகளை பாடசாலைகளுக்கு அனுப்பாமல் நிறுத்தி வைத்துள்ளனர். திடீர் திடீர் என வாந்திகள் வேறு பரவி மக்களை அச்சத்தில் ஆழ்த்துகிறது.

இஸ்லாமிய பயங்கரவாதிகள் சிலரால் மேற்கொள்ள இந்தத் தாக்குதல்களுக்கான புறக்காரணிகள் என்ன, அகக்காரணிகள் என்ன என்பதை ஆராய்வதில் பலரும் மண்டையைப் பிய்த்து வருகின்றனர்.

ஒரு சின்னஞ்சிறிய நாட்டுக்குள் எவருக்கும் தெரியாமல் பயங்கரவாத குழுவொன்று எப்படி உருவாகியது என்பதும், அவர்கள் இவ்வாறான மிகப்பெரிய தாக்குதலை நடத்தும் அளவுக்கு எவ்வாறு பயிற்சி பெற்றார்கள் என்பதும், அவர்களுக்கு சக்திவாய்ந்த வெடிப்பொருட்கள் எவ்வாறு கிடைத்தன என்பதும் பெரும் கேள்விக்குறிகளாகும்.

இந்த தாக்குதல்களுக்கு ஐ.எஸ். (இஸ்லாமிய அரசு) என்ற உலகின் மிகப்பெரிய பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றாலும், அதற்கும் அப்பால் அல்லது அந்த அமைப்புக்குப் பின்னால் வேறு சக்திவாய்ந்த சர்வதேச அல்லது பிராந்திய சக்திகள் இருந்துள்ளனவா என்ற கேள்வியும் இருக்கின்றது.

அத்துடன், இந்தத் தாக்குதலின் நோக்கம் வெறுமனே மத வெறுப்பா அல்லது இலங்கையில் இன – மத நல்லுறவைக் குலைப்பதா அல்லது இலங்கையின் பொருளாதாரத்தை சீர்குலைப்பதா அல்லது அதற்கும் அப்பால் பிராந்திய ரீதியிலான அரசியல் – இராணுவ தந்திரோபாயங்களை நிறைவேற்றுவதா என்பவையும் ஆராயப்பட வேண்டிய கேள்விகளாகும்.

ஆனால், இதை நேரடியாகச் செய்தவர்களுக்கும், பின்னால் இருந்து செய்வித்தவர்களுக்கும் என்னதான் பல்வேறு நோக்கங்கள் இருந்தாலும், இந்தத் தாக்குதல்களை இலகுவாகச் செய்யும் அளவுக்கு நாட்டின் அரசியல் மற்றும் பாதுகாப்பு சூழல் இருந்துள்ளதுதான் காரணம் என்பதை யாரும் புறந்தள்ளிவிட முடியாது.

2009 – ல் போர் முடிவுக்குக் கொண்டுவரப்பட்ட பின்னர், நாட்டின் பாதுகாப்பை தொடர்ந்தும் இறுக்கமாக வைத்துக்கொண்டே மக்களின் போர்க்கால அச்ச நிலையை படிப்படியாகப் போக்கி இயல்பு வாழ்க்கையை உருவாக்கவும், போரால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் துரித பொருளாதார அபிவிருத்தியை ஏற்படுத்தவும் அப்போதைய அரசால் முடிந்தது. அந்த நிலை நீடித்திருக்குமாக இருந்தால் நாடு பொருளாதார ரீதியாக வளச்சி கண்டிருப்பதுடன், மக்களின் பாதுகாப்பும் பாதுகாக்கப்பட்டிருக்கும்.

ஆனால், யுத்தம் முடிவுக்கு கொண்டு வந்ததை சில சக்திகள் விரும்பவில்லை. அவர்களில் ஒரு சாரார் புலம்பெயர் நாடுகளில் வாழும் தீவிர தனித்தமிழ் நாட்டுப் பற்றாளர்கள், இன்னொரு சாரார் இலங்கையில் போர் நடைபெறுவதை ஊக்குவித்து வந்த சில மேற்கத்தைய சக்திகள். அடுத்த தரப்பினர் மனித உரிமைப் போர்வையில் செயற்படும் அரசசார்பற்ற அமைப்புகள். இந்த மூன்று தரப்பினரும் ஆறிக்கொண்டிருந்த யுத்த ரணத்தை மீண்டும் கிளறி லாபம் பெற முயன்றனனர்.

இதற்காக அவர்கள் பெரும் பிரச்சாரங்களை நாட்டுக்கு உள்ளேயும் வெளியேயும் நடத்தி அப்போதைய அரசுக்கு எதிரான சக்திகளை ஓரணியில் திரட்யதுடன், ஐ.நா. மனித உரிமைப் பேரவை போன்ற சர்வதேச அமைப்புகளையும் பயன்படுத்தினர். போர்க்குற்ற விசாரணை, காணாமல் போனோரை கண்டுபிடிக்கும் போராட்டம், இராணுவத்தின் வசமுள்ள காணிகளை மீட்கும் போராட்டம், சிறைகளில் உள்ள அரசியல் கைதிகளை மீட்கும் போராட்டம், வடக்கு கிழக்கில் பௌத்த விகாரைகளைக் கட்டுவதற்கெதிரான போராட்டம் என பல தொடர் போராட்டங்களையும் நடத்தினர்.

இவற்றின் விளைவாக போரை வெற்றிகரமாக முடிவுக்குக் கொண்டுவந்த அப்போதைய அரசாங்கம் 2015 ஜனவரி 8 ஜனாதிபதி தேர்தலின் மூலம் தூக்கியெறியப்பட்டது. அதன் பின்னர் நாட்டின் எல்லாத்துறைகளிலும் பாரிய மாற்றங்கள் ஏற்படத் தொடங்கின.

பொருளாதார மற்றும் அரசியல்துறைகளில் மட்டுமின்றி, பாதுகாப்புத்துறையிலும் பெரும் மாற்றங்கள் செய்யப்பட்டன. நாடு முழுவதும் சில தேவைகளைக் கருதி அமைக்கப்பட்டிருந்த பொலிஸ் – இராணுவச் சோதனைச் சாவடிகள் மூன்றில் ஒன்றாகக் குறைக்கப்பட்டன. வீதி ரோந்துச் சோதனைகளும் குறைக்கப்பட்டன. போரை முடிவுக்கு கொண்டுவந்த பாதுகாப்புப் படையினர் மீது அவர்களை மன உளைச்சல் கொள்ளும் வகையில் அவர்களுக்கு எதிராகப் பிரச்சாரங்கள் மேற்கொள்ளப்பட்டன.

ஜனாதிபதி ஒரு கட்சியைச் சேர்ந்தவராகவும், பிரதமர் இன்னொரு கட்சியைச் சேர்ந்தவராகவும் இருந்ததால், அரச நிர்வாகம் ஒருமுகப்பட்டு இயங்கவில்லை. ஜனாதிபதியும் பிரதமரும் தன்னிச்சையாக முடிவுகளை எடுக்க, ஒருவர் இன்னொருவருக்கு தெரியாமல் மற்றவரது முடிவுகளை மாற்றியமைப்பது தொடர்கதையானது. இந்தச் சூழ்நிலைகளால் நிர்வாகத்தை கொண்டு நடத்திய அரச அதிகாரிகளும், நாட்டின் பாதுகாப்பை மேற்கொண்ட படை அதிகாரிகளும் குழப்பநிலைக்கு ஆளானார்கள்.

முக்கியமாக, வெளிநாட்டு சக்திகள் கொடுத்த நிர்ப்பந்தம் காரணமாக, மக்களின் இயல்பு வாழ்க்கையை மேம்படுத்துவது, நாட்டில் நல்லிணக்கத்தை ஏற்படுத்துவது என்ற போர்வையில் நாட்டின் பாதுகாப்பு வெகுவாக தளர்த்தப்பட்டது. ரணில் விக்கிரமசிங்க அரசின் இத்தகைய போக்கால் ஏற்பட்ட அதிருப்தி காரணமாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அரசுக்கு கொடுத்து வந்த ஆதரவை மீளப்பெற்றதுடன், அவரது சிறீலங்கா சுதந்திரக் கட்சியும் பிரதமர் ரணில் தலைமையிலான ஐக்கிய தேசியக் கட்சியுடனான கூட்டரசிலிருந்து விலகிக் கொண்டது.

அரசாங்கத்தில் ஏற்பட்ட இந்தப் பிளவு வெளிநாட்டு சக்திகள் தமது பிடியை இலங்கையில் இறுக்குவதற்கு வழி ஏற்படுத்திக் கொடுத்ததுடன், சர்வதேச நாசகார சக்திகள் இலகுவாக நாட்டுக்குள் ஊடுருவவும் செயற்படவும் வழி ஏற்படுத்திக் கொடுத்தது. எனவே வெளிநாட்டு சக்திகளின் நோக்கங்களுக்கும் ஏப்ரல் 21 – ம் நடாத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதல்களுக்கும் ஒரு மறைமுகமான ஒருங்கிணைப்பு உள்ளது என்பதை அனுமானிக்க முடிகிறது.

இந்த அபாயகரமான போக்கை இனம்கண்டு வேரோடு கிள்ளியெறியாதவரையில் நாட்டில் இதுபோன்ற பயங்கரவாதத் தாக்குதல்கள் தொடர்வதும். அதைப் பயன்படுத்திக் கொண்டு வெளிநாட்டு சக்திகள் தமது வலையை ஆழமாகவும் அகலமாகவும் விரிப்பதும் தொடரத்தான் போகின்றது. இந்தப் பாதூரமான நிலையை தேசப்பற்றுள்ள சக்திகள் கவனத்தில் எடுத்துக்கொண்டு செயற்படுவது காலத்தின் கட்டாயமாகும்.

Tags: