இயற்கையுடன் மனிதன் பகைத்து கொண்டதன் விளைவே கொரோனா!

பேராசிரியர் இ.சிவகணேசன்

பேராசிரியர் இ.சிவகணேசன் (BVSc .PhD. FSLCVS. FCBSL) பேராதனை பல்கலைக்கழக மருத்துவ பீடத்தில் 42 வருடங்கள் விரிவுரையாளராகக் கடமையாற்றியவர். முதுகலை மாணவர்கள் 71 பேரின் ஆராய்ச்சியை மேற்பார்வை செய்து 100க்கும் மேற்பட்ட ஆராய்ச்சிக் கட்டுரைகளை எழுதியுள்ளார். விஞ்ஞான ஆய்வரங்குகளில் இவர் சமர்ப்பித்த ஆராய்ச்சி சுருக்கவுரைகள் 248 ஆகும். இவர் கொரோனா தொற்று தொடர்பாக ‘தினகரன்’ பத்திரிகைக்கு வழங்கிய பேட்டி:

கேள்வி: கொரோனா தொற்றுத் தொடர்பாக என்ன சொல்ல விரும்புகின்றீர்கள்?

பதில்: நாம் யாவரும் சிந்திக்க வேண்டிய ஒரு விடயம் யாதெனில், இறைவன் இந்தப் பிரபஞ்சத்தை எதற்காகப் படைத்தான் என்பதுதான். இறைவன் மனிதன், விலங்குகள், தாவரங்கள், பறவைகள், நுண்ணுயிர்கள் என்று பலவிதமான உயிர்களை சிருஷ்டித்தார். அத்தோடு இறைவன் ஒரு இயற்கை நியதியையும் ஏற்படுத்தி இருந்தார். இப்புவியில் தோன்றிய சகல உயிரினங்களும் சமமாகவும் புரிந்துணர்வுடனும் வாழ வேண்டும் என்பதே அந்த நியதி. மனிதர்களாகிய நாம் இந்த உலகத்தில் எதற்காக படைக்கப்பட்டோம் என்ற கேள்விக்கு பதிலைத் தேட வேண்டியது காலத்தின் கட்டாய தேவை. மனிதன் தன் ஆறறிவைக் கொண்டு பல திடகாத்திரமான செயல்களைச் செய்தான் என்பதில் ஐயமில்லை. விமானமும் அவற்றில் ஒன்று. அது எமக்கு கிடைத்த வரப்பிரசாதம். மேலும் ஒரு நாட்டில் கிடைக்காத பொருட்களை பிற நாடுகளில் இருந்து கொண்டு வரவும் வழிகோலியது. எனினும் அதே விமானம்தான் நுண்ணுயிர்களையும், நோய்களையும் காவி உலகெங்கும் பரப்ப வர வழி செய்தது.

கப்பல் என்பதும் விஞ்ஞானத்தின் ஒரு கண்டுபிடிப்பு. ஆனால் அதிலும் தீங்குகள் உள்ளன. உதாரணமாகஅண்மையில் எமது நாட்டுக்கு அருகாமையில் ஒரு கப்பல் தீப்பற்றி அக்கினியில் சாம்பலாகியதைக் குறிப்பிடலாம். நாம் பிறக்கும் போது இந்துவாகவோ, இஸ்லாமியராகவோ, பௌத்தராகவோ, கிறிஸ்தவர்களாகவோ பிறக்கவில்லை. நாம் பிறந்த சூழலே அதை நிச்சயிக்கின்றது. மனிதன் பயணம் செய்ய வாகனங்களை அதிகம் தயாரிப்பதால் இயற்கை கனிய வளங்கள் நாளுக்கு நாள் குறைந்து கொண்டே செல்கின்றன. இவற்றை இயக்க, நிலத்துக்கு அடியில் இருந்து பெட்ரோல், டீசல், வாயு போன்ற திரவியங்கள் எடுக்கப்படுகின்றன. பல இலட்சக்கணக்கான இயந்திரங்களில் இருந்து வெளியாகும் புகையும், கழிவுகளும் வளிமண்டலத்தை மாசுபடுத்துகின்றன. இத்தகைய நிகழ்வுகளால் பூமியின் தன்மை மாற்றம் அடைந்து கொண்டு செல்கின்றது. இப்புவியில் வாழும் ஜீவராசிகள் யாவும் சுவாசிக்கும் போது, நச்சுத்தன்மையான பொருட்கள் உட்புகுவதால் பலவித நோய்கள் ஏற்படுகின்றன. நீர் வாழ்வனவும், வான் பறவைகளும் மனிதனுக்கு தீங்கு விளைவிக்காத நிலையில் மனிதனோ நிலத்தை தனக்கு வேண்டிய விதத்தில் மாற்றி அமைத்துக் கொண்டான். அதனால் காடுகள் அழிந்தன. வானுயர கட்டடங்களை எழுப்பிய மனிதன் இதனால் எதிர்காலத்தில் ஏதாவது தீமை ஏற்படக் கூடிய சாத்தியக் கூறுகள் உண்டா என யோசிக்கவில்லை. மனித நடவடிக்கைகளால் வளமான சாகுபடி நிலங்கள் காலப்போக்கில் குறைந்து கொண்டே செல்கின்றன. காடுகளின் பெரிய பகுதிகள் இப்போது தீவிரமாக சீரழிந்துள்ளன. நீர்நிலைகள் அருகி வருகின்றன. மண்ணின் வளம் குறைந்து விட்டது. நகர்ப்புற விரிவாக்கம் நில சீரழிவின் முக்கிய வடிவமாக மாறியுள்ளதால்,சிறந்த விவசாய நிலத்தின் பெரும் பகுதிகள்உணவு உற்பத்தியில் இருந்து நீக்கப்பட்டு விட்டன. மனிதன் மதங்களைத் தோற்றுவித்தான். வெவ்வேறு மதங்களைச் சார்ந்தவர்கள் மனதில் வெவ்வேறு மத வழிபாடு, மத நம்பிக்கை ஏற்பட மதஉரிமைப் போராட்டங்கள் உருவாகின. அவை மனித உயிர்களை அழிக்கின்றன.

கேள்வி: இயற்கை மீண்டு எழுகிறதா?

பதில்: அது உண்மை என்றே நாம் கணிக்க வேண்டும். சென்ற வருடம்)இந்தியா தனது நாட்டை முழுமையாக முடக்க முடிவெடுத்த நிலையில் ஊரடங்கு அமுல் செய்யப்பட்டது. இந்த புத்திசாதுரியமான முடிவினால் வாகனங்களில் இருந்து எழும் இரைச்சல் மற்றும் வெளிவிடும் புகை பெருமளவில் குறைந்ததால் காற்று மாசு, ஒலி மாசு என்பன கணிசமாக குறைந்தன. இதனை மக்கள் உணரத் தொடங்கினர். பஞ்சாபில்ஜலந்தர் நகரத்தில் இருந்து 213கிலோ மீட்டர் அப்பால் உள்ள மலைகளை ஊர் மக்கள் பார்க்க முடிந்ததது. இதை அந்த ஊர் மக்களாலேயே நம்ப முடியவில்லை. மலைகளைப் பார்த்து தலைமுறைகள் தாண்டி விட்டதாக அவர்கள் கூறினர். மக்கள் கொரோனா வைரஸ் அச்சத்தினால் பொதுஇடங்களிலிருந்து பின்வாங்கி தங்கள் குடும்பத்தினருடன் வீட்டிலேயே தங்கியிருந்தனர். அதன் காரணமாக இயற்கை அதன் இடத்தை மீட்டெடுக்கத் தொடங்கியது. இத்தாலிய நாட்டின் வடகிழக்குப் பகுதியில் மக்களின் உல்லாசபுரியாக கணிக்கப்படும் வெனிஸ் நகர கால்வாய்களை ஆக்கிரமித்திருந்த ‘கொன்டோலாக்கள்’ முடங்கிய நிலையில், அன்னப் பறவைகள் நீரில் சுதந்திரமாக சுற்றித் திரிந்தன. பயணக் கட்டுப்பாடு காரணமாக இஸ்ரேலில் உள்ள ‘டெல் அவி’ விமான நிலையத்தின் ஓடு பாதையில் எகிப்திய வாத்துக் கூட்டம் வரிசையாக நடந்து சென்றது. படகுகளும் கப்பல்களும் ஓய்ந்த நிலையில் டொல்பின்கள் இத்தாலிய கடற்கரையில் சுதந்திரமாக துள்ளி விளையாடின. ஐக்கிய இராச்சியத்தின் வடக்கு ‘வேல்ஸில்’ உள்ள ‘லாண்டுட்னோ’ நகரில் வெறிச்சோடிய தெருக்களில் ஆடுகள் கூட்டமாகத் திரிந்தன.இந்நிகழ்வுகள் மூலம் நாம் கற்றுக்கொள்ள வேண்டிய பாடம் என்னவென்றால் நாம் ஆக்கிரமித்துக் கொண்டிருக்கும் பூமி, கடல், ஆகாயம் என்பன எமக்கே சொந்தம் என்ற நிலைப்பாட்டில் இருந்து மாறி, சகல உயிர்களும் சமமாக இந்த பூளோகத்தில் தங்களது கடமைகளை செய்வதற்கு நாம் இடம் அளிக்க வேண்டும் என்பதே ஆகும்.

கேள்வி: இது தொடர்பில் மக்களது நம்பிக்கைகளும் நடைமுறையும் எந்தளவு உள்ளன?

பதில்: இந்தியாவில் கொரேனாவின் இரண்டாம் அலையின் தாக்கத்திற்கு ஈடு கொடுக்க முடியாத நிலையில் மக்கள் பல்வேறு வழிமுறைகளைக் கையாண்டனர். கொரோனா அச்சத்தால் கோயம்புத்தூர் மதுக்கரை மரப்பாலம் பகுதியில் உள்ள மக்கள் தெருக்கள் முழுவதும் வேப்பிலை தோரணம் கட்டியதோடல்லாமல், வேப்பிலையை நீரில் கலந்து கிருமிநாசினியாக வீதி முழுவதும் தெளித்தனர். கொரோனா போன்ற கொடிய நோயை விரட்டி பாதுகாத்துக் கொள்ள தங்களின் நம்பிக்கைக்காக இவ்வாறு செய்ததாக அறியப்படுகிறது. கோயம்புத்தூர் அருகே காமாட்சிபுரி ஆதீனத்தில் கொரோனாதேவி சிலை ஒன்று பிரதிஷ்டை செய்யப்பட்டது. மக்கள் தொற்றில் இருந்து விடுபட்டு ஆரோக்கியமாகவும் நிம்மதியாகவும் வாழ வழிவகுக்கும் என்று ஆதீனத்து நிர்வாகிகள் நம்பினர். மருத்துவ விஞ்ஞானம் வியக்கத்தகு பல சாதனைகளைப் படைத்துமக்களின் ஆரோக்கியத்தையும் சுக வாழ்வையும் பராமரித்து வந்த போதிலும், கண்ணுக்கு புலப்படாத ஒரு நுண்ணுயிர் மருத்துவத்துக்கு சவாலாக அமைந்ததால், மக்கள் இறைவனை நம்ப வேண்டிய சூழ்நிலைக்கு ஆளானார்கள். இலங்கையிலும் மதகுருவானவர்கள் எமது நாட்டை கொரோனா நோயிலிருந்து காப்பாற்ற இறைவழிபாடு செய்கின்றனர். நமது மூதாதையர்கள் வீட்டு வளவில் வேப்பிலை மரத்தை வளர்த்ததன் நோக்கம் தற்பொழுதுதான் நமக்கு புலப்படுகிறது. ஆதலால் நாம் கடைப்பிடித்த வழிமுறைகளுக்கு கட்டாயம் திரும்ப வேண்டியது என்பதே காலத்தின் தேவை.

கேள்வி: இதற்காக எம் முன்னோர்களின் அறிவுரைகள் என்ன?

பதில்: ஒளவைப் பிராட்டியார் திருவாய்மலர்ந்தருளிய தமிழ் நீதிநூல் மூதுரையில் எட்டாம், ஒன்பதாம் வெண்பாக்கள் நமக்கு தந்த அறிவுரைகளை தருகின்றன. அவற்றை மீண்டுமோர் கணம் நோக்குவது சாலச் சிறந்தது. புத்தபெருமான் அனைவருக்கும் வழங்கிய அறிவுரையாகிய, தீமையிலிருந்து விலகுவது, நல்லதை வளர்ப்பது, ஒருவரின் மனதைத் தூய்மைப்படுத்துவது என்பன எமக்கு என்றோ எடுத்துரைக்கப்பட்டு விட்டது. மனிதன் இத் தூய சிந்தனைகளைப் பின்பற்ற தயக்கம் காட்டுவது புரியாத புதிராகவிருக்கின்றது. நமது சிந்தனைகளாலும், செயல்களாலும் பிறருக்கு நாம் தீமை ஏற்படுத்தாமல் இயற்கையோடு ஒன்றி வாழ்வோமானால் அதுவே எம்மைக் காப்பற்றுமென நம்பிக்கையில்தான் இந்த அறிவுரைகள் எமக்கு எடுத்தியம்பப்பட்டன என நாம் கருதலாம்.

மனிதன் இயற்கை நியதியை கவனத்தில் கொள்மையினாலேயே இந்த நிலைமை எமக்கு ஏற்பட்டது. இவ்வுலகம்கொரோனா நோயினால் இதுவரை 3.75 மில்லியன் உயிர்களை இழந்துவிட்டது.உயிர் நீத்தவர்களின் சராசரி உடல் நிறையை 50 கிலோ கிராம் என்று கருதினால், இதுவரை 187.5 மெகா தொன் நிறையுள்ள மனித உடல்கள் சமூக, மத முறைப்படி அடக்கம் செய்யப்பட்டு சாம்பலாகவும் மாறின.பிறிதொரு கோணத்தில் இதை நோக்கினால் இந்த 3.75 மில்லியன் மனிதர்கள் தங்கள் வாழ்நாளில் உட்கொண்ட உணவு, சுவாசித்த பிராணவாயு என்பவற்றின் அளவு எவ்வளவாக இருக்கும் என்று நாங்கள் ஊகிக்கலாம். அவற்றால் ஏது பயன்? இவர்களின் மறைவு நமக்கு பல விடயங்களையும், பாடங்களையும் கற்றுத் தந்தாலும் அவர்களின் பிறப்புக்கு அர்த்தம் என்னவென்பதை தெளிவாக உணர்த்தத் தவறி விட்டது. அரிது அரிது மானிடராய் பிறப்பது அரிது என்ற வாக்கியத்தை உற்று நோக்கும் பொழுது இந்த அற்புதமான உயிர்கள் இன்று நம்மிடத்தில் இல்லை என்பது மிகவும் ஆழ்ந்த கவலையை ஏற்படுத்துகின்றது. இவர்கள் இல்லை என்ற வெற்றிடம் இயற்கையில் பாரியதொரு மாற்றத்தை ஏற்படுத்திவிட்டது. இது இயற்கையின் நியதியின்படி நிகழ்கின்றது என்பதை நாங்கள் உணர வேண்டும். எந்தப் பிறவியாக இருந்தாலும், அது தன் உயிர் மீது ஆசை வைத்துத் தன்னைக் காத்துக் கொள்ளவே முயலும். இது இயற்கையின் நியதி. உரிய நேரத்தில் மனிதன் தன்னைத்தானே காக்கத் தவறி விட்டான். மனிதன், இயற்கையின் நியதியை கவனத்தில் கொள்ளாததால் இவ்வளவு இழப்புகள் நேரிட்டன. இதனை மனிதன் எதிர்காலத்தில் சிந்தித்து செயற்படுவானா என்பது ஒரு கேள்விக்குறியாகவே அமையப் போகின்றது.

இயற்கையால் படைக்கப்பட்டவனங்களும் அவற்றை உறைவிடமாகக் கொள்ளும் விலங்குகளும் அழிவதால் பூகோளத்தின் இயற்கைச் சமன்பாட்டில் திரிபு ஏற்படுகிறது. இது உலகிற்கு நல்லதல்ல. மரங்களும் விலங்குகளும் நமது சொத்து, அவை நம் நல்வாழ்வின் வித்து என்று அனைவரும் எண்ணி உறுதியேற்க வேண்டும். நாம் இயற்கையைப் பாதுகாக்க வேண்டும்.

பேட்டி கண்டவர்:இக்பால் அலி
2021.06.22

Tags: