மரணமடைந்தது ஸ்டான் சுவாமி மட்டுமல்ல!
காவல் அடைப்பில் அடைக்கப் பட்டிருந்த 84 வயதுள்ள அருட்தந்தை ஸ்டான் சுவாமி பல்வேறுவிதமான சித்திரவதைகளுக்கு உள்ளாக்கப்பட்டு, அவற்றின் விளைவாக இறுதியில் இறந்திருப்பது, மோடி ஆட்சியின் கீழ் குற்றவியல் நீதிபரிபாலன அமைப்பின் வக்கிரத் தன்மையின் பல்வேறு அம்சங்களை வெளிப்படுத்தி இருக்கின்றன.
அரக்கத்தனமான சட்டவிரோத நடவடிக்கைகள் தடைச் சட்டத்தை அரசியல் மற்றும் சமூக செயற்பாட்டாளர்களுக்கு எதிராகப் பயன்படுத்துதல், ஆளும் கட்சியின்அரசியல் நிகழ்ச்சி நிரலை நிறைவேற்றுவதற்காகத் தேசியப் புலனாய்வு முகமையையும், மத்திய புலனாய்வு முகமைகளையும் பயன்படுத்துதல், நீதித்துறையில் ஒரு பிரிவானது “ஆட்சியாளர்களின் அங்கமாகவே” (“executive judiciary”) செயல்படுவதுடன் குடிமக்களின் அடிப்படை உரிமைகள் மறுக்கப்படுவதை வேண்டுமென்றே கண்டு கொள்ளாமல் இருப்பது மற்றும் சிறைக்கைதிகளின் அடிப்படை மனித உரிமைகளை மீறும் மனிதாபிமானமற்ற சிறை அமைப்பு முறை. பீமா கோரேகான் வழக்கில் சதி செய்ததாகக் குற்றம் சாட்டப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள ஸ்டான் சுவாமி மற்றும் பதினைந்து பேர் மீதும் இவ்வாறான அனைத்துக் காரணிகளும் செயல்பட்டிருக்கின்றன.
பிணை நிராகரிப்பு
தேசியப் புலனாய்வு முகமையின் சிறப்புநீதிமன்றம் இருமுறை ஸ்டான் சுவாமியின் இடைக்கால மற்றும் முறையான பிணை கோரிதாக்கல் செய்திட்ட பிணை விண்ணப்பங்களை நிராகரித்திருந்தது. அப்போது அவ்வாறு நிராகரித்த நீதிபதி என்ன சொல்லியிருந்தார் என்று பாருங்கள்: “… ஓர் இனத்தின் கூட்டு நலன்விண்ணப்பதாரரின் தனிநபர் சுதந்திரத்தைவிட முக்கியமாகும். அவருடைய வயது முதிர்ச்சியோ அல்லது உடல்நலமின்றி இருக்கிறார் என்று கூறப்படுவதோ அவருக்கு ஆதரவாக அமைந்திடாது.” (“….collective interest of the community would outweigh the right of personal libertyof the applicant and as such old ageor alleged sickness would not go inhis favour”) இதுதான், ஒரு நீதிபதியால்84 வயதுள்ள ஒருவர் குறித்து, பார்க்கின்சன்என்னும் நடுக்குவாதத்தால் பாதிப்புக்கு உள் ளாகி, நடப்பதற்கும் உணவு அருந்துவதற்குமே சிரமப்பட்டுக் கொண்டிருந்த ஒருவர் குறித்து,எழுதப்பட்டுள்ளவைகளாகும். முன்பு, இதேநீதிமன்றம்தான் நீராகாரம் அருந்துவதற்கு “உறிஞ்சுகுழாய்” (“sipper”)அளிப்பதற்குக் கூட உத்தரவு பிறப்பிக்க மறுத்திருந்தது. இந்தவெட்கக்கேடான சம்பவம் நம் நீதித்துறை அமைப்பில் ஒரு கறையாக இருந்திடும்.
அரசாங்கத்திற்கு எதிராகக் கருத்துக் கூறுபவர்கள் மற்றும் எதிர்க்கட்சியினரின் குரல்களை நசுக்குவதற்கு சட்டவிரோத நடவடிக்கைகள் தடைச் சட்டம் பயன்படுத்தப்படுவது என்பது பீமா கோரேகான் வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ளவர்கள் வழக்கில் மிகவும் பட்டவர்த்தனமாகத் தெரிகிறது. ஆனந்த் டெல்டும்டே, சுதா பரத்வாஜ் போன்ற புகழ்பெற்ற அறிவுஜீவிகள் மற்றும் சமூகச் செயற்பாட்டாளர்கள் இந்தப் பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்தைத் துஷ்பிரயோகம் செய்துசிறையில் அடைக்கப்பட்டிருக்கிறார்கள். சட்டவிரோத நடவடிக்கைகள் தடைச் சட்டத்தின்கீழ் ஒருவர் அவ்வளவு எளிதாகப் பிணையில் வெளிவந்திட முடியாது. நீதிபதி, குற்றம்சாட்டப்பட்டவர்மீது முதல் நோக்கிலேயே குற்றமற்றவர் என நம்பினால்தான் அவரைப் பிணையில் விடமுடியும். அவ்வாறு கருதாத எவரையும் பிணையில் விட முடியாது. இத்தகு மிகமோசமான சட்டத்தில் ஓர் உடைப்பை ஏற்படுத்தும் விதத்தில் சென்றமாதம் டெல்லி உயர்நீதிமன்றத்தின் அமர்வாயம் ஒன்று வடகிழக்கு டெல்லிக் கலவர வழக்கில் சட்டவிரோத நடவடிக்கைகள் தடைச் சட்டத்தின்கீழ் சிறையில் அடைக்கப்பட்டிருந்த மூன்று மாணவர் செயற்பாட்டாளர்களுக்கான பிணை மனுக்கள் மீது அவர்களைப் பிணையில் விடுவித்து உத்தரவு பிறப்பித்தது.
இந்தத்தீர்ப்பு நீதித்துறையில் இதரர்களும் பின்பற்றுவதற்கு எடுத்துக்காட்டாக இருந்திட வேண்டும். எனினும், “ஆட்சியில் இருப்பவர்களின்” குணமே உச்சநீதிமன்ற நீதிபதிகளிடம் மேலோங்கியிருப்பதை, டெல்லி உயர்நீதிமன்றத்தின் உத்தரவை அவர்கள் கண்டித்திருப்பதிலிருந்தும், அதனை இதர நீதிமன்றங்கள் முன்மாதிரியாக எடுத்துக் கொள்ளக்கூடாது என்று கூறியிருப்பதிலிருந்தும் காண முடியும். மேலும், கொடூரமான இந்தச் சட்டப்பிரிவு எந்தெந்த வழிகளில் எல்லாம் துஷ்பிரயோகம் செய்யப்பட்டிருக்கிறது என்று கூறியுள்ள உயர்நீதிமன்றத் தின் தீர்ப்பை மறு ஆய்வுக்கு உட்படுத்தவும் உச்சநீதிமன்றம் முடிவு செய்திருக்கிறது.
கணினியில் புகுந்து…
ஆனாலும் இந்த ஒட்டுமொத்த சம்பவத்திலும் மிகவும் மோசமான அம்சங்கள் இப்போது வெளி வந்திருக்கின்றன. இவற்றைக் கண்ணுறும்போது மிகவும் அதிர்ச்சி அளிக்கின்றன. பீமா கோரேகான் வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ள ஸ்டான் சுவாமியும் மற்றவர்களும் மாவோயிஸ்ட்டுகளின் நடவடிக்கைகளுடன் தொடர்புடையவர்கள் என்றுகாட்டுவதற்காக எப்படியெல்லாம் பொய்யாகப் பிணைக்கப்பட்டிருக்கிறார்கள் என்ற விவரங்கள் இப்போது வெளிச்சத்திற்கு வந்திருக்கின்றன. ஸ்டான் சுவாமி மரணம் அடைந்தபின்னர் அடுத்தநாள், அமெரிக்க டிஜிடல் தடயஅறிவியல் நிறுவனமான ‘அர்சனல் கன் சல்டிங்’ (‘Arsenal Consulting’) என்னும் நிறுவனம் மூன்றாவது அறிக்கை ஒன்று வெளியிட்டிருக்கிறது. இவ்வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள ரோனா வில்சன் மற்றும் சுரேந்திரா கேட்லிங் ஆகிய இருவரின் வழக்குரைஞர்கள் அமெரிக்க வழக்கறிஞர்கள் சங்கத்தின்உதவியுடன் அவர்களுடைய கணினிகள் ஆய்வு செய்யப்பட்ட விவரங்களைப் (harddrives of their computers examined) பெற்றிருந்தார்கள். முதல் இரண்டு அறிக்கைகளில் ரோனா வில்சன் கணினியில் திட்டமிட்டு தவறான விபரங்கள் செருகப்பட்டது குறித்து கூறுகிறது. அவரது கணினியில் குற்றஞ்சாட்டப்பட்டவர்களைக் குற்றத்துடன் பிணைக்கும் விதத் தில் விவரங்களை பதிவேற்றம் செய்திட்ட வேலைகள் 2016இல் தொடங்கியிருந்தன. அதாவது அவர் கைது செய்யப்படுவதற்கு இரண்டு ஆண்டுகளுக்கு முன்பாகவே இதுநடந்துவிட்டது. அவர் மாவோயிஸ்ட் ஊழியர்களுக்கிடையே தகவல்களைப் பரிமாறிக்கொண்டிருந்தார் என்று அவருடைய கணினியில் அவருக்கே தெரியாமல் தகவல் பரிமாற்றங்கள் விதைக்கப்பட்டன.
மூன்றாவது அறிக்கை, இதேபோன்ற நடைமுறையை குற்றஞ்சாட்டப்பட்டுள்ள மற்றொருவரான சுரேந்திரா காட்லிங் என்பவர் கணினியிலும் தீம்பொருள் விதைக்கப்படுவதற்காக மேற்கொள்ளப்பட்டது என்று காட்டுகிறது. ஸ்டான் சுவாமி கைது செய்யப்படுவதற்கு முன்பு அவர் அளித்துள்ள காணொளி நேர்காணலில் சுவாமி கூறியிருந்ததை இது விளக்குகிறது. தேசியப் புலனாய்வு முகமை அதிகாரிகள் அவரிடம் மாவோயிஸ்ட்டுகளுக்கிடையேயான மின்னஞ்சல்களில் அவருடைய பெயர்குறிப்பிடப்பட்டிருப்பது குறித்து அவரிடம் கேட்டிருந்தனர். அப்போது அவர், தன்னுடைய கணினியில் இக்கடிதப்போக்குவரத்து எப்படி செருகப்பட்டது என்பது குறித்து தனக்கு எதுவும் தெரியாது என்று மறுத்திருந்தார்.
சட்டவிரோத நடவடிக்கைகள் தடைச் சட்டத்தின்கீழ் சுவாமி கைது செய்யப்பட்டது மட்டுமல்ல, அவருக்கு எதிரான சாட்சியமும் தடய அறிவியல் ஆய்வின்படி பொய்யாகப் புனையப்பட்ட ஒன்றேயாகும். இதுபோன்றதொரு தொழில்நுட்பம் நிறைந்த மற்றும் விரிவான வேலையை இரண்டு ஆண்டுகள் அல்லது அதற்கும் மேலாக அரசின் முகமையைத் தவிர வேறுஎதனால் மேற்கொள்ள முடியும்? இவ்வாறு அரசு எந்திரம் மிகவும் கொடூரமான முறையில் துஷ்பிரயோகம் செய்யப்பட்டிருக்கிறது. தேசியப் புலனாய்வு முகமை நீதிமன்றத்தில், கணினிகளில் தில்லுமுல்லுகள் (hacking) எதுவும் செய்யப்பட்டதற்கான சாட்சியம் இல்லை என்று புனேயில் உள்ள மண்டலதடய அறிவியல் ஆய்வுக்கூடம் (Regional Forensic Science Laboratory) கண்டிருப்பதாகக் கூறியிருக்கிறது.
ஆனால், ‘அர்சனல் கன்சல்டிங்’ (Arsenal Consulting) தாக்கல்செய்துள்ள மிகவும் முக்கியமான அறிவியல்பூர்வமான ஆய்வுகளைக் கருத்தில் கொண்டு, பம்பாய் உயர்நீதிமன்றம் இவ்வாறு வழக்கில் தாக்கல் செய்யப்பட்டுள்ள கணினிகள் குறித்தும் அதில் உள்ள வன்பொருள்கள் (hard drives) குறித்தும் சுதந்திரமான வல்லுநர்களைக் கொண்டு ஆய்வினை மேற்கொள்ள வேண்டியது அவசியமாகும். குறைந்தபட்சம் இதையாவது உயர்நீதிமன்றம் செய்து, நீதித்துறையின் வக்கிரத் தன்மையைத் தடுத்து நிறுத்திட முன்வர வேண்டும்.
மூலம்: The Persecution of Stan Swamy
பீப்பிள்ஸ் டெமாக்ரஸி தலையங்கம்
தமிழில்: ச.வீரமணி
ஜூலை 7, 2021