இரசாயனத்திலிருந்து இயற்கைக்கு திரும்புவோம்

-ஆர்.சுகந்தினி

இயற்கையோடிணைந்த வாழ்வியல் முறைமையும் இயற்கை விவசாயமும் சேதனப் பசளைப் பயன்பாடும் வெற்றி அளிக்க வேண்டும். அதனால் நாடும் நாமும் எம்மைச் சுற்றியுள்ள இயற்கைச் சூழலும் நலம் பெற வேண்டும் என்பதே எமது ஆதங்கமாகும்……

இரசாயன பசளை பயன்பாடு காரணமாக, புற்றுநோய், சிறுநீரகநோய், தோல் நோய் உள்ளிட்ட இன்னும் பல வகையான நோய்கள் ஏற்படுகிறது எ கருதப்படுகின்றது. ஆனால், சேதனப் பசளையைப் பயன்படுத்தி இயற்கை விவசாயத்தை மேற்கொள்வதனால் தொற்றாநோய்த் தாக்கங்களிலிருந்து பாதுகாப்பு பெற முடியும் என்பது நம் முன்னோர்களின் வாழ்க்கை முறையிலிருந்து நிரூபிக்கப்பட்டிருக்கின்றது என்று கூறுகின்றார் ஏறாவூர் விவசாய விரிவாக்கல் பிரிவின் விவசாயப் போதனாசிரியை எம்.எச்.முர்ஷிதா ஷிரீன்.

விவசாயப் போதனாசிரியை எம்.எச்.முர்ஷிதா ஷிரீன்

கடந்த எட்டு வருடங்களாக இப்பிரிவில் விவசாயப் போதனாசிரியையாககடமையாற்றி வரும் அவர், சேதனப் பசளையின்; பயன்பாடு மற்றும் இயற்கையோடு இணைந்த வாழ்க்கை முறை பற்றிய கருத்துக்களை தினகரன் வாசகர்களோடு பகிர்ந்து கொள்கின்றார். பொதுவாக விவசாயச் செய்கையில் பசளையின் பயன்பாடு முக்கியமாகும். ஆனால் தற்போதைய விவசாயச் செய்கையும் பசளைப் பயன்பாடும் பெரும்பாலும் இரசாயனத்திலேயே தங்கியுள்ளதால் உடல் ஆரோக்கியம் சீர்கெட்டுள்ளதோடு இயற்கையும் நச்சுச் சூழலுக்குள் மாற்றப்பட்டு விட்டது என்றகிறார்.இரசாயனப் பசளைகளும், ஏனைய பூச்சிக் கொல்லிகளும், கிருமிநாசினிகளும் வெளிநாடுகளிலிருந்து தரப்படுகின்றன, இதனால் நமது பொருளாதாரமும் வீணாகிறது. இரசாயனப் பசளையின் பயன்பாடு காரணமாக, பல்வேறு தீமைகள் உண்டாகின்றன. செலவு அதிகமாகக் காணப்படுவது ஒருபுறமிருக்க, மண்ணின் வளமும் குறைந்து செல்கின்றது. மண் மலட்டுத் தன்மை பெறுகின்றது.

மண்அங்கிகளின் எண்ணிக்கையும் குறைகின்றது. உயிர் பல்வகைமைபாதிக்கப்படுகின்றது. நீர்நிலைகளுக்கும் அதில் வாழும் மீன்கள் உட்பட இயற்கைக்கு நன்மை பயக்கும் பல உயிரினங்களுக்கும் பாதிப்பு ஏற்படுகின்றது.ஒட்டுமொத்தத்தில் மனித செயற்பாடுகளால், மலட்டுத் தன்மையாக மாறியுள்ள மண்ணை அதிலிருந்து புத்துணர்ச்சி பெற வைப்பதற்காக, நாம் மாற்றத்திற்காக செயற்பட வேண்டியுள்ளது.

ஆனால், நாம் எப்போது எமது மண்ணை இயற்கை வளமிக்கதாக மாற்றப்போகிறோம் என்ற காலவரையறையை எம்மால் கூற முடியாது.

சேதனப் பசளையைப் பாவிப்பதனூடாக விளைச்சல் அதிகரிக்கும், மண் வளம் பெறும், மண்ணில் சேதனப் பதார்த்தங்கள் அதிகரிக்கும், இரசாயனப் பசளையால் வழங்க முடியாத விட்டமின்கள்,ஹோர்மோன்கள் மற்றும் தாவரங்களுக்குத் தேவையான நொதியங்கள் போஷணைகள் போதியளவு கிடைக்கும், மண்ணின் வீரியம் மாறாது பேனப்படும், மண் நுண்ணங்கிகள் பெருகும். அதேவேளை சேதனப் பசளையை பயன்படுத்தி பயிர்ச்செய்கையில் ஈடுபடும்போது மூன்றாவது பயிர்ச் செய்கையில் மண் மலட்டுத் தன்மையிலிருந்து விடுபடுவதற்கான வாய்ப்புகளும் அதிகமாக உள்ளன. ஆறு மாதங்களுக்கு ஒருமுறை பயிர்ச் செய்கைச்சுழற்சிக்கான காலமாகும்.

மூன்றாவது பயிர்ச் செய்கைக் காலத்தில் சேதனப் பசளையின் உச்சப் பயன்பாட்டை அடையமுடியும்.

சேதனப் பசளைகளில் திண்மப் பசளை, திரவப் பசளை என இரு வகைகளுண்டு. திண்மப் பசளை தயாரிப்பிற்காக பச்சை இலைகள், காய்ந்த சருகுகள், வைக்கோல், மாட்டு எரு, ஆட்டு எரு, கோழி எரு என்பனவற்றைப் பயன்படுத்தலாம். திரவப் பசளை தயாரிப்பில் மீன் கழிவுகள், பழக்கழிவுகள்,மண்புழு ஆகியன உள்ளடங்குகின்றன. திண்மப் பசளையை மண்ணுக்குள் பயன்படுத்த முடியும். திரவப் பசளையை தாவரங்களின் மீது தெளிக்க முடியும்.

எமது விவசாயச் செய்கைக்கான சேதனப் பசளையை நாம் குளியல் முறை, குவியல் முறை, பீப்பாய் முறை, கூட்டு முறை என நான்கு முறைகளில் தயாரிக்க முடியும். கழிவுப் பொருள்களை சேதனப் பசளையாக மாற்றுவதால், சூழல் சுத்தமாக்கப்படுவதுடன், திண்மக் கழிவுகள் அகற்றுவதற்கு சிறந்த வாய்ப்பாக அமைகின்றது. அத்துடன், மாநகரசபை, நகரசபை, பிரதேச சபை கூட திண்மக் கழிவுகளை அகற்றுவதற்குரிய சிரமத்தை எதிர்க்காள்ளநேரிடாது..

எமது அன்றாட பாவனைக் கழிவுப் பொருள்களைக் கொண்டு சேதனப் பசளை தயாரிப்பதால், சூழல் மாசடைவிலிருந்து பாதுகாத்துக் கொள்ளலாம்.மேலும், விவசாயத் திணைக்களம் சேதனப் பசளையின் பயன்பாடு தொடர்பில் கடந்த 2010ஆம் ஆண்டிலிருந்தே கரிசனையுடன் இயங்கத் தொடங்கியுள்ளது. அதனால் சேதனப் பசளையின் பயன்பாட்டை விவசாயிகள் ஏற்றுக்கொண்டு வருகின்றனர்.

இதுவரையில் 85 முதல் 90 சதவீதமான விவசாயிகள், சேதனப் பசளையின் பயன்பாட்டை ஏற்றுக்கொண்டுள்ளனர். ஆனால் விவசாயிகளினால் சடுதியான மாற்றத்திற்கு இசைவாக்கமடைய முடியாமலுள்ளது என்பது யதார்த்தமே.காலப்போக்கில் சேதனப் பசளை பயன்பாட்டில் சிறந்ததொரு மாற்றம் ஏற்படும் என்பதை திடமாக நம்பலாம். வீட்டுத்தோட்ட விவசாயத்தில் பெண்களே அதிகம் ஈடுபாடு காட்டுவதை எம்மால் காணமுடிகிறது. சுமார் 80 சதவீதமான பெண்கள் வீட்டுச் தோட்டச் செய்கையிலும் ஈடுபட்டு வருகின்றார்கள் என்பதும் மகிழ்ச்சிக்குரியதாகும்.தேநீருக்கு பயன்படுத்திய தேயிலைக் கழிவு, மரக்கறிக் கழிவுகள், பழக்கழிவுகள், முட்டைக் கோது இவற்றைப் பிரித்து, சேதனப் பசளையை தயாரிப்பதுடன், அதனை வீட்டுத் தோட்டச் செய்கைக்கும் பயன்படுத்தி வருகின்றார்கள் விவசாயத் திணைக்களம், மாகாண அமைச்சின் கீழ் இருக்கின்றது. அதனடிப்படையில் மாகாண அமைச்சினூடாக ஐம்பது வீத மானிய அடிப்படையில் விவசாயிகளுக்கு விவசாய உள்ளீடுகளை வழங்குகின்றோம். தற்போது புதிய அரசின் ‘சௌபாக்கியா’ திட்டத்தின் கீழும் முழுமையான மானிய அடிப்படையிலும் விவசாயிகளுக்கான விவசாய உள்ளீடுகளை வழங்குகின்றோம்.

நீர்ப்பம்பி, உப உணவுப் பயிர்ச் செய்கைக்கான விதைகள், மா அரைக்கும் இயந்திரம், நகர வீட்டுத் தோட்டத்துக்கான பயிர் வளர்ப்பு பக்கெற்றுகள், கூட்டெரு, விவசாயக் கிணறு, முட்கம்பி, குழாய்கள், பசுமைப் பாதுகாப்புக் கூடாரங்கள், நீண்டகால பயன் தரும் மரக் கன்றுகள் என்பன உள்ளீடுகளில் அடங்கும்.

விவசாயத் திணைக்களத்தினால் மாதாந்தம் இரண்டு விவசாய பயிற்சி வகுப்புகள் நடத்தப்படுகின்றன. ஆண், பெண் இரு பாலாரும் பங்குபற்றுகின்றனர். மாதத்திற்கு ஒரு முறை பயிர்ச் செய்கை முகாம் நடத்தப்படுகின்றது. இதில் பயிர்களுக்கு ஏற்படும் நோய்த் தாக்கம் தொடர்பான அதன் மாதிரிகளை பயிர்ச் செய்கையாளர்கள் எங்களுக்கு கொண்டு வந்து காண்பிக்கும் பட்சத்தில், அதற்குரிய பரிகாரங்களும் எம்மால் வழங்கப்படுகின்றன. அறுவடை விழா நடத்தப்படும்போது, புதியதொரு அறுவடை மேற்கொள்ளப்படும் பட்சத்தில், அதன் விளைச்சலின் அளவை எமக்கு விவசாயிகள் தெரியப்படுத்தவேண்டும். அதுவே அறுவடை விழாவின் தாற்பரியமாகும். விவசாயச் செய்கை தொடர்பான விழிப்புணர்வுகளும் விவசாயிகளுக்கு அவ்வப்போது வழங்கப்படுகின்றன.

பயிர்களுக்கு ஏற்படும் நோய்த்தாக்கம் தொடர்பான அதன் மாதிரிகளை பயிர்ச் செய்கையாளர்கள் எங்களுக்கு கொண்டுவந்து காண்பிக்கும் பட்சத்தில், அதற்குரிய பரிகாரங்களும் எம்மால் வழங்கப்படுகின்றன. அறுவடை விழா நடத்தப்படும்போது, புதியதொரு அறுவடை |மேற்கொள்ளப்படும் பட்சத்தில் அதன் விளைச்சலின் அளவை எமக்கு விவசாயிகள் தெரியப்படுத்த வேண்|டும். அதுவே அறுவடை விழாவின் தாற்பரியமாகும். விவசாயச் செய்கை தொடர்பான விழிப்புணர்வுகளும் விவசாயிகளுக்கு அவ்வப்போது வழங்கப்படுகின்றன.

இரசாயனப் பசளையை பயன்படுத்தி உற்பத்தி செய்யப்படும் மரக்கறி உள்ளிட்ட விவசாய உற்பத்திகளை கொள்வனவு செய்வதைக் காட்டிலும், சேதனப் பசளையை பயன்படுத்தி உற்பத்தி செய்யப்படும் மரக்கறி வகைகள் உள்ளிட்ட விவசாய உற்பத்திகளை கொள்வனவு செய்வதில் மக்கள் தற்போது அதிக ஆர்வம் காட்டி வருகின்றார்கள். இதன்போது சேதனப் பசளை மற்றும் விவசாய உற்பத்திகளுக்கான கேள்வியும் அதிகரித்து வருகின்றது என்கிறார்.

Tags: